டின்னிடஸ் – கடிதங்கள் 2

index

ஜெ

‘டின்னிடஸ்’ தொடர்பாக கடிதங்கள் இன்னமும் வந்துகொண்டுதானிருக்கிறது. அதில் டின்னிடஸால் பாதிக்கப்பட்டவர்களும் அதிகம். இந்தியாவிலேயே டின்னிடஸால் இத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. அது ஏதோ மனோ வியாதி என்று யாருக்கும் சொல்லாமல் தங்களுக்குள் வைத்திருக்கிறார்கள். பாவம். நீங்கள் செய்திருக்கும் உதவி எத்தனை பெரியது என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களா என்று எனக்குத் தெரியவில்லை. நானும் தினமும் இரவு நேரங்களில் அதற்காக நேரம் ஒதுக்கிக் கடிதங்களுக்கு பதில் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

மிக்க நன்றி ஜெயமோகன்.

மாதவன் இளங்கோ

***

சார் வணக்கம்

மாதவனின் Tinnitus பதிவைக் கண்டதும் உடன் ஏற்பட்டது ஒரு குற்ற உணர்வே.. அந்த medical condition குறித்தும் (அது ஒரு வியாதி/நோய் அல்லவே அல்ல) அதற்கானதோர் சிகிச்சையாய் Ginkgo Biloba எனும் தாவரத்தையும் குறித்து சில வருடங்களாகவே பாடம் நடத்தி வருகிறேன் என்றாலும், அந்த வகுப்பில் Tinnitus என்பதை விளக்கும் போதே மாணவர்கள் அனைவருமே பெரும்பாலும் சிரிப்பார்கள். நானும் அந்த சிரிப்பை ஒரு புன்னகையுடன் கடந்து சென்றபின்னரே அடுத்த பகுதிக்கு சென்றிருக்கிறேன்

அந்த மரத்தைக் குறித்தும் அந்த medical condition குறித்தும் எத்தனை விரிவாக விளக்க முடியுமோ இதுவரை விளக்கி பாடமெடுத்திருக்கிறேன் ஆனால் இந்த கடிதத்தைப் பார்த்த பின்னரே Tinnitus எனும் காதிற்குள் கேட்கும் இரைச்சலால் சம்பந்தப்பட்டவர்களின் உடலும் உள்ளமும் படும் வேதனையை உணர்ந்தேன். கூடவே அதுகுறித்த எந்த சிந்தனையும் இன்றி சிரிக்கும் மாணவர்களை புன்னகையுடன் வேறு எதிர்கொண்டிருந்திருக்கிறேன் எனும் குற்ற உணார்வில் வருந்தினேன்.

மாதவனுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன்.. Ginkgo Biloba மருந்துகள் அவருக்கும் பரிந்துரைக்கப்பட்டதாகவும் ஆனால் அவருக்கு அது ஒவ்வாமை ஏற்படுதியதால் தற்போது எடுத்துக் கொள்வதில்லை எனவும் பதிலளித்திருந்தார்

Tinnitus மனம் தொடர்பானதோ அன்றி உடல் தொடர்பானதோ அன்றி மூளையின் பல்லாயிரம் மடிப்புகளில் ஒன்றின் ஒரு சிறுபிறழ்வே அது என்கிறார்கள். மருத்துவம் இன்னும் சரியாக கண்டடைய வேண்டியவற்றில் இதுவும் ஒன்று. மாதவன் வாழ்வின் சாதகபாதகங்களில் வேண்டுமென்பதை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவற்றை தூக்கிபோட்டுவிட்டு மிகுந்த positive ஆக வாழ்வை எதிர்கொள்வது மிக்க மகிழ்ச்சியை தருகிறது

இனிமேலான Ginkgo Biloba வகுப்புகளில் காது இரைச்சல் சிரிக்கும் நிலை அல்லவென்பதையும் அந்த இரைச்சல் ஒருவரை எத்தனை உளைச்சலுக்குள்ளாக்குகிறதென்றும் மாதவன் எப்படி அதை மிகுந்த நெஞ்சுரத்துடன் எதிர்கொள்கிறார் என்றும் சொல்லவேண்டுமென அந்த வகுப்புகளுக்காய் காத்துக்கொண்டிருக்கிறேன்

உங்களுக்கு வரும் பல கடிதங்களில் எப்படி பலதரப்பினரையும் சென்றடைய வேண்டிய முக்கிய கடிதங்களை தவறாமல் தேர்ந்தெடுத்து பிரசுரிக்கிறீர்கள் என்ற வியப்பு எப்பொதும் போல இப்போதும் ஏற்படுகின்றது

அன்புடன்

லோகமாதேவி

*

அன்புள்ள ஜெ

டின்னிடஸ் பற்றிய கடிதங்களை வாசித்தேன். எனக்கும் அந்தப்பிரச்சினை பல ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தது. காதில் இரைச்சல். ஆனால் காதொலி நிபுணர்களால் சரிபண்ண முடியவில்லை. புகழ்பெற்ற சாமிகிரி சித்தரிடம்கூட சிகிச்சை பெற்றேன். கொஞ்சநாளில் அது தானாகவே சரியாகப்போயிற்று. கிட்டத்தட்ட நான்குவருடம் அது என்னைச்சித்திரவதை செய்தது. ஒருகட்டத்தில் தற்கொலை செய்துகொள்ள வெள்ளியங்கிரி மலைக்கெல்லாம்கூடச் சென்றிருக்கிறேன். தானாகவே சரியாகப்போனாலும் நான் அதைப்பற்றி நிறையவே வாசித்து அறிந்தேன். தானாகவே சரியாகப்போயிற்று என்பதைக்காட்டிலும் நான் முழுக்கவே இடம் மாற்றிக்கொண்ட பிறகுதான் சரியாகப்போயிற்று. நான் கர்நாடகத்திலே குடியேறினேன். செய்துகொண்டிருந்த தொழிலை விட்டுவிட்டு விவசாயம் செய்ய ஆரம்பித்தேன். அதனால் குணமாகியிருக்கலாம்

காதில் சத்தம்கேட்பது பலவகை. எல்லாருக்குமே தூக்கம் வந்து சொக்கும்போதோ அதே போன்ற நிலையிலோ சத்தம் கேட்கும். அது ஒரு மூளைச்செயல்பாடு. சிலருக்கு காதில் குரும்பி இருப்பதனாலோ நரம்பில் பிரச்சினை இருப்பதனாலோ சத்தம் கேட்கும். 99 சதவீதம் அது அப்படித்தான். ஆயிரத்திலோ பத்தாயிரத்திலோ ஒருத்தருக்கு சத்தம் பேச்சுக்குரலாகக் கேட்க ஆரம்பிக்கும். அது ஸ்கிஸோபிர்னியாவாக இருக்கலாம். பேச்சுக்குரலாக இல்லாமல் தொடர்ச்சியாக நெடுநாட்களாக சத்தம் கேட்டுக்கொண்டே இருப்பதுதான் டின்னிடஸ். அதிலே வாசனை, அல்லது நடுக்கம் எல்லாம் இருக்காது. வெறும் சத்தம் மட்டும்தான். டின்னிடஸிலே 99 சதவீதமும் கொஞ்சநாளிலே சரியாகிவிடும். கொஞ்சம் மனசிகிச்சை கொஞ்சம் உடல்சிகிச்சை செய்தால் போதுமானது. போலியான டாக்டரிடம் போகவேண்டாம். ஆனால் அதைவிட முக்கியம் மந்திரவாதிகள் சாமியார்களிடம் போகவே வேண்டாம்

கன்னியப்பன்

 

டின்னிடஸ்

டின்னிடஸ் கடிதங்கள்

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 15
அடுத்த கட்டுரைஅறம் – மனிதரும் எதிரீடும்