[ 16 ]
இளமழைச்சாரல் புதரிலைகளின் மீது ஓசையின்றி இறங்கிக்கொண்டிருந்த முன்னுச்சிவேளையில் முழவைத் தோளிலேந்தி சிறிய தாவல்களாக மலைச்சரிவுப்பாதையில் ஏறிச்சென்ற சண்டனுடன் நெஞ்சுக்கூடு உடையத்தெறிக்கும்படி மூச்சுவாங்கி நடந்து வந்த பைலன் தொலைவிலேயே காற்றில் படபடத்த அந்த செந்நிறக் கொடியை பார்த்தான். சண்டன் “அதுதான்…” என்றான். “அருகநெறியர்களின் அன்னசாலைகள் பொதுவாக வெற்றுப்பாறைகளின் மடிப்பிலுள்ள குகைகளிலேயே அமையும். அவர்கள் படைக்கலம் பயில்வதில்லை என்பதனால் ஊனுண்ணிகள் உலவும் காடுகளை ஒழிவது அவர்களின் மரபு. ஆயினும் இங்கு அவர்களின் அன்னசாலை அமைந்துள்ளது நமது நல்லூழ்.”
பைலன் முழங்கால்கள் மேல் கைகளை ஊன்றி கண்களுக்குள் ஒளி அலையடிக்க விழிமூடி நின்றான். உடலெங்கும் குருதி கொப்பளித்தது. காதுகளில் உள்ளனல் வெம்மைபூசியது. இழுமூச்சின் விசையால் தொண்டை வரண்டு உடல் தவித்தது. சண்டன் “அங்கு அணையாது எரியும் அடுமனை நெருப்பாலேயே ஊனுண்ணிகளை அவர்கள் விலக்குகிறார்கள்” என்றான். பைலன் நிமிர்ந்து மீண்டும் தசை இறுகி அசைவற்றதென ஆகிவிட்டிருந்த கால்களை தூக்கி வைத்து அவனைத் தொடர்ந்தான்.
அவர்கள் இருவரும் பசித்து விழியொளி மயங்கும் நிலையை காலையிலேயே அடைந்துவிட்டிருந்தனர். பைலனால் தொடர்ந்து பத்து காலடிகளைக்கூட வைக்க முடியவில்லை. “என்னால் முடியாது… என் உடல் முற்றிலும் அனலணைந்துவிட்டது” என்று அவன் பின்காலையிலேயே சொன்னான். “இன்னும் சற்று தொலைவுதான்… எனக்கு அப்படித்தான் சொல்லப்பட்டது” என்று சண்டன் அவனை அழைத்து வந்தான். முற்றாக உடல் தளர்ந்து நின்று, நின்றிருக்கமுடியாதென்பதை உணர்ந்து மீண்டும் எஞ்சிய துளி ஆற்றலை தேடித் திரட்டிக் குவித்து உடல்செலுத்தி முன் சென்றனர்.
துளித்தூறல் என்றாலும் ஒழியாது பெய்தமையால் பைலன் அணிந்திருந்த மரவுரி ஈரத்தில் ஊறி குருதியும் நிணமுமாக உரித்தெடுக்கப்பட்ட ஊன்படிந்த தோல்போல எடை கொண்டிருந்தது. தோலுறைக்குள் வைக்கப்பட்டிருந்த சண்டனின் முழவின் தோற்பரப்பும் நைந்திருந்தது. மரத்தடி கிடைத்ததும் அவன் அதை எடுத்து தொட்டு வருடி “தளர்ந்துவிட்டது” என்றான். “தாளம் எழாதா?” என்றான் பைலன். “தளர்தாளம் எழும்” என்றான் சண்டன்.
“என்னால் முடியவில்லை… விழுந்துவிடுவேன்” என்றான் பைலன் ஒரு மரத்தைப் பற்றிக்கொண்டு குனிந்து நின்றபடி. “இன்னும் சற்று தொலைவுதான்” என்று சண்டன் சொன்னான். “அதோ தெரிகிறதே கொடி… இனி என்ன?” ஆனால் அவர்கள் நடக்க நடக்க அந்தக் கொடி மாறாது அங்கேயே இருந்து கொண்டிருந்தது.
புதர்களுக்குள் அது மறைந்து மீண்டும் தோன்றியபோது “அது நம்முடன் விளையாடுகிறது என்று தோன்றுகிறது. பிளவுப்பாறைக்கு அடியிலிருந்து கிளம்பியபோதிருந்து அதை நோக்கிக் கொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது” என்றான் பைலன் சலிப்புடன். “இன்னும் சற்று தொலைவுதான்” என்றான் சண்டன். “கடந்து வந்த தொலைவுடன் ஒப்பிட்டால் மிக அண்மை.” பைலன் மூச்சை ஊதி வெளியிட்டு “காடேகுதல் இத்தனை கடினம் என்று நான் எண்ணியிருக்கவில்லை. ஊரில் பாண்டவர்களின் காடேகுதல் கதைகளைக் கேட்டபோது என்றேனும் ஒருநாள் நானும் பிறவிநகர் துறந்து அறியாக் காடேகுவேன் என்று கனவு கண்டேன்” என்றான்.
“அந்தக் காடு இனியது. நான் அறிந்த அனைத்துக்கும் இனிய மாற்று. மகவென நானறிந்த அனைத்துடனும் அன்னையின் அங்கல்ல, அதுவல்ல, அதுவரை என்னும் சொற்கள் இணைந்திருந்தன. அச்சொல் இல்லாத சூழ்பெருக்கு என்று நான் காட்டை நினைத்திருந்தேன். ஆனால் இக்காடு நம்மைச் சூழும் இருள் எனத் தோன்றுகிறது. நாம் சரிவதை எதிர்நோக்கிக் காத்திருக்கும் பசித்த விலங்கு. நம் எல்லைகள் அனைத்தையும் முன்னரே அறிந்த ஆழுலகத் தெய்வம்” என்றான் பைலன்.
“காடு நம் உப்பை விரும்புகிறது” என்றான் சண்டன். “பழைய ஒன்றின் உப்பு புது முளைக்கும் தளிருக்கும் உரிய உணவு என்றே அது நினைக்கிறது. நாம் விழுந்தால் காடு நம்மை அள்ளிப்பற்றி வேர்கவ்வி உறிஞ்சி உண்ணத்தொடங்கிவிடும்.” பைலனுக்கு அச்சொற்கள் உள்நடுக்கை உருவாக்கின. சூழ்ந்திருந்த காட்டின் ஒவ்வொரு இலையும் நாவென ஒவ்வொரு மலரும் விழியென மாறியது. “காட்டை நாம் உண்கிறோம். அது காட்டால் உண்ணப்பட்ட நம் முன்னோடிகளே” என்றான் பாணன். “இங்கே விழுந்து மறைந்தால் நமது உப்பை உண்டு இவை தளிரும் மலருமாக பொலியும். தொலைவிலிருந்து நோக்கி கவிதை எழுதும் பாணர்கள் மகிழ்வார்கள். அவர்களின் சொல் வலையென நகர்கள்மேல் படியும். அங்கிருந்து மேலும் இளைஞர்கள் காடேக கிளம்பிவிடுவார்கள்.”
பைலன் அவ்வேளையில் அந்த இடக்கை விரும்பும் மனநிலையில் இல்லை. “இனி என்னால் ஓரடிகூட எடுத்து வைக்க முடியாது, சண்டரே. நீர் செல்க! மீண்டால் எனக்கு கைப்பிடி உணவுடன் திரும்பி வருக!” என்றான். “அண்மையில்தான்… இதோ கொடியின் முக்குடை முத்திரையே தெரியத்தொடங்கியிருக்கிறது” என்று அப்பால் நின்றபடி சண்டன் சொன்னான். “நெடுந்தூரம் கடந்துவிட்டோம். எஞ்சியிருப்பவை சில அடிகள் மட்டுமே.” அடிமரத்தில் உடல்சாய்த்து “என்னால் இயலும் என்று தோன்றவில்லை” என்றான் பைலன். “எப்போதும் எழும் மாயை இது, உத்தமரே. இலக்கை நெருங்கும் இந்த இறுதித் தருணத்தின் குறுகியதொலைவின் எதிரழுத்தத்தை நின்று நேர்கொள்ளும் வல்லமையை அடைந்தவரே வென்றவர். வீழ்பவர் அனைவரும் இலக்குக்கு சற்று முன்னால் உளம் தளர்பவர்கள்தான்.”
“இல்லை… சென்று வாருங்கள்” என்றபடி மெல்ல கைகளை ஊன்றி மண்ணில் கால்மடித்து பைலன் அமர்ந்தான். காற்று கடந்த சென்றபோது அவன் தலைக்கு மேல் நின்ற மரக்கிளை ஒசிந்து அவனுக்கென பெருநீர்த் துளிமழை ஒன்று பெய்தது. உடல் சிலிர்த்துக் குலுங்கி மெய் கூசியது. “என் எல்லை இதுதான்” என்றான். “உங்கள் எல்லை இதுதான். ஆனால் தன் எல்லை கடந்து ஓரடியேனும் வைக்காமல் அரியதென எதையும் எவரும் அடைவதில்லை” என்றான் சண்டன். “இன்சொற்கள்” என்று பைலன் தனக்குள் என சொன்னான். “இத்தருணத்தில் எத்தனையோ சொற்களை உளம் உருவாக்கிக்கொள்ளும். உடல்வரை அவற்றை கொண்டுசெல்ல முடியாது.”
“நன்று, முடிவெடுக்கவேண்டியவர் தாங்களே. அந்தணரே, இலக்கை விழிகளால் தொட்டுவிட்டீர். சித்தம் அறிந்த ஒன்றை செயல் சென்று தொடுவது அரிதல்ல. கடக்க வேண்டியது உங்களைக் குறித்த உங்கள் கணிப்புகளையும் ஐயங்களையும்தான்” என்றபின் சண்டன் திரும்பி நடந்தான். அவன் திரும்பிப்பார்ப்பான் என பைலன் எதிர்பார்த்தான். அவன் போய்மறைந்த காட்டுத்தழைப்பு சொல் முடிந்த வாய் என மூடிக்கொண்டதும் அவன் திரும்பிப்பாராததே இயல்பு என உணர்ந்து நீள்மூச்சுவிட்டான்.
சூழ்ந்திருந்த காட்டின் நோக்கை மீண்டும் உணரத் தொடங்கினான். பசுமை இருளாக ஆகியது. இருள் மத்தகம் கொண்டது. காதசைவு கொண்டது. உடலூசல் ஆகியது. பைலன் எண்ணியிரா ஒரு கணத்தில் உளம் கலங்கி அழத்தொடங்கினான். குளிர்மழை வழிவிற்குள் கண்ணீரின் வெம்மையை கன்னங்களில் உணர்ந்ததுமே அதுவரை உணர்ந்திராத நாணம் ஒன்றை அவன் அடைந்தான். முழு ஆற்றலையும் திரட்டி கைகளை ஊன்றி உடலை உந்தி எழுந்து முன்னால் விழுபவனைப்போல காலெடுத்து வைத்து விரைந்தான். எடை மிக்க மூச்சின் அழுத்தத்தால் உடற்தசைகள் ஒன்றொன்றாக விடுபட்டு அவிழ்ந்து விழுந்தன. நெஞ்சு ஒலிக்க சண்டனைக் கடந்து சென்று அங்கே நின்றிருந்த சிறிய மரமொன்றைப் பிடித்தபடி நின்று குனிந்து வாயால் மூச்சுவிட்டான்.
அவன் தொங்கிய குழலில் இருந்து மழைத்துளிகள் மண்ணில் உதிர்ந்தன. அவன் அருகே வந்த சண்டன் ஒரு சொல்லும் சொல்லாமல் கடந்து சென்றான். மீண்டும் கைகளால் மரத்தை உந்தி மூச்சுவிட்டு திசையில் விழுந்து எழுந்து உடலெங்கும் குருதி நின்று துடிக்க சண்டனைக் கடந்து சென்றான். சண்டன் அவனை அறியாதவன்போல் கடந்து சென்றான். மீண்டும் ஒருமுறை சென்றபோது மிக அருகிலென எதிரில் அன்னசாலை தெரிந்தது. பைலன் அக்காட்சியைக் கண்டதுமே மீண்டும் உளம் கரைந்து அழத்தொடங்கினான்.
அவன் அருகே வந்த சண்டன் “திரும்பிப் பாருங்கள், உத்தமரே! நீங்கள் வந்த தொலைவு இவ்வளவுதான்” என்றான். பிடித்திருந்த மரக்கிளையை விட்டுவிட்டு வலி தெறித்த இடையில் கைவைத்து பைலன் உடல் திருப்பி அவன் வந்த தொலைவைப் பார்த்தான். பத்து எட்டுகளில் அங்கு சென்றுவிடமுடியும் என்று தோன்றியது. ஏறி வருகையில் வானிலிருந்து தொங்கும் திரையில் வரையப்பட்ட ஓவியப்பாதை எனத் தோன்றியது அப்போது மிகச்சீரான வளைவெனத் தெரிந்தது. “அது ஒரு தெய்வம். அவள் பெயர் விஷாதை” என்று சண்டன் சொன்னான். “மானுடரின் வெற்றிக் கணங்களுக்கு முன்பு அவள் அமர்ந்திருக்கிறாள். அவன் அணுகுவதைக் கண்டதும் வஞ்சப் புன்னகையுடன் தன் கைகளை விரித்து குறுக்கே நிற்கிறாள். உச்சிமலைப்பாறையைப் பற்றி ஏறுபவனின் நெஞ்சில் கைவைத்து ஓங்கி தள்ளுகிறாள். நுனிவிளிம்பை தொற்றிக்கொள்பவனின் தலையில் மிதிக்கிறாள். அவளைக் கடந்துசென்ற பின் திரும்பிப்பார்த்தால் அவள் நம்மை வாழ்த்துவது தெரியும்.”
“நாம் செல்வோம்” என்று புன்னகையுடன் பைலன் சொன்னான். சண்டன் நடந்து அன்னசாலையின் அருகே சென்றான். அவன்பின் சென்ற பைலன் நின்று அன்னசாலையை அறிவிக்கும் முக்குடையும் பீலியும் பொறிக்கப்பட்ட குத்துக்கல்லை நோக்கினான். அங்கிருந்து அன்னசாலை வரை செல்வது ஒரு எண்ணம் அளவுக்கே எளிதாக இருந்தது. பறந்துசென்றுவிடமுடியும் என்பதுபோல. அவன் புன்னகையுடன் மிகமெல்ல கால்வைத்து நடந்தான். சேற்றில் அவன் காலடிகள் விழும் ஒலியையே அவனால் கேட்கமுடிந்தது.
காட்டுமரத்தால் தூண்நாட்டப்பட்டு மரப்பட்டைக் கூரையிடப்பட்ட அன்னசாலையின் வலப்பக்கம் சரிந்தெழுந்த கற்பாறையில் அருகர்களின் சிற்றாலயம் ஒன்று குடையப்பட்டிருந்தது. இருபக்கமும் சாமரங்கள் சூடி காவல் யட்சர்கள் நின்றிருந்தனர். உள்ளே முழுதுடல் நிமிர்த்தி விழிகள் ஊழ்கமயக்கில் பாதிமூடியிருக்க முதல்அருகர் ஐவர் நின்றிருந்தனர். அவர்களின் காலடியில் வைக்கப்பட்டிருந்த கல்லகலில் ஒளிமுத்துக்கள் அசையாது நின்றிருந்தன. பைலன் அருகே சென்று முழந்தாளிட்டு அருகர்களின் கால்களைத் தொட்டு சென்னி சூடினான். “வழித்துணையாக அமைக, மலர்மிசை ஏகியவர்களே! சொற்றுணையாக அமைக, வாலறிவர்களே! ஆசிரியர்களாகுக, அறிவிலமைந்தவர்களே!” என்று வேண்டிக்கொண்டான்.
அப்பால் தன் மூட்டையை தோள் மாற்றியபடி ஆலயத்தை பார்க்காததுபோல உடல் திருப்பி சண்டன் நின்றிருந்தான். பைலன் எழுந்து வந்து “தாங்கள் அருகர்களை வணங்குவதில்லையா?” என்றான். “நான் எந்த தெய்வத்தையும் வணங்குவதில்லை.” “ஏன்?” என்று பைலன் கேட்டான். “ஏனெனில், நான் ஒரு தெய்வம். தெய்வம் ஒன்று தன்னை வணங்குவதை தெய்வங்கள் விரும்புவதில்லை” என்றான். “மேலும் நான் ஊனுண்ணித்தெய்வம். அவர்களோ விகாலஉணவுண்டு சுவைமறந்த கூடுதேய்ந்த தெய்வங்கள். என் மேல் அவர்களுக்கு பொறாமை இருக்கக்கூடும்.”
பைலன் சிரித்து “ஆணவத்திற்கு ஓர் அளவுண்டு” என்றான். “அடுத்த வேளை உணவுக்கும் அன்றிரவு துயிலுக்கும் வழியற்றவன் மட்டும் கொள்ளும் ஆணவம் ஒன்றுண்டு, உத்தமரே. அவ்வாணவத்தால் நான் தெய்வம்” என்றான் சண்டன். உள்ளிருந்து வெண்ணிற ஆடை அணிந்து வாய்மறைத்த அருகநெறியர் ஒருவர் கைகூப்பியபடி வெளிவந்து “அமுது கொண்டு இளைப்பாறுக, விருந்தினரே! அருகனருள் உங்கள்மேல் பொழிக!” என்றார். பைலன் அருகே சென்று அவர் காலடியைத் தொட்டு சென்னிசூடி “நற்பேறால் இங்குற்றோம், தூயவரே” என்றான்.
[ 17 ]
உணவுச்சாலையில் இருந்து வெளிவந்தபோது பைலனின் விழிகள் சொக்கத் தொடங்கின. உணவுக்கூடத்திற்கு வெளியே அப்போதுதான் வணிகர்களின் குழு ஒன்று வந்திறங்கியது. அவர்களின் உரத்த குரல்கள் அத்திரிகளும் கழுதைகளும் எழுப்பிய கனைப்பொலிகளுடன் கலந்து கேட்டன. அன்னசாலையின் அருகநெறியினர் இருவர் வெளியே சென்று கைகூப்பி முகமன் உரைத்து அவர்களை உணவுண்ணும்படி அழைத்தனர். அவர்கள் வணக்கமுரைத்து அடிதொழுது அருகே ஓடிய நீரோடைகளை நோக்கி சென்றனர். அடுமனைக்குமேல் நீலப்புகை இலைதழைத்த மரம்போல எழுந்து வான்பரவி நின்றது. இளஞ்சாரல் அதை கரைக்கவில்லை.
துயில்கொட்டகைகளை நோக்கி காலடிகள் எடுத்து வைப்பதே கடினம் என்று பைலனுக்குத் தோன்றியது. உண்ட உணவு பலமடங்கு எடை கொண்டுவிட்டது. அதன் சாறு ஊறி எண்ணங்கள் அனைத்திலும் படிந்து ஒவ்வொரு சொல்லையும் இரும்பாலானவை என ஆக்கி விட்டது. சண்டன் கொட்டகையை அடைந்ததுமே தோல் உறையைப் பிரித்து உள்ளிருந்து முழவை எடுத்து காற்றில் காயவைத்தான். “அதை ஏன் உடனே செய்யவேண்டும்?” என்றான் பைலன் களைப்புடன். “அது தளர்கையில் என் சொல்லும் தளர்கிறது” என்றபடி அவன் முழவின் தோலை துடைத்தான்.
அவன் அருகே சென்று நின்ற பைலன் “தோலுறைக்குள் எப்படி நனைந்தது?” என்றான். “துளை விழுந்திருக்கும். துளை விழுந்த பகுதிதான் மேலே இருக்கும். ஏனெனில் அது மேலே இருப்பதனால் துளை விழுகிறது” என்றான் சண்டன். “சொல்லும் அனைத்தையும் தத்துவமென ஆக்கவேண்டியதில்லை, சூதரே” என்று சொன்னபடி பைலன் அங்கு இருந்த மூங்கில் அடுக்கிலிருந்து தூய்மைசெய்யப்பட்ட பாய் ஒன்றை எடுத்து உதறி கீழே விரித்து ஈரமான மரவுரியுடன் அப்படியே அதில் படுத்தான்.
“ஆடை மாற்றிக்கொள்ளுங்கள், உத்தமரே” என்றான் சண்டன். “மாற்றாடை என்னிடம் இல்லை. அதைக் கேட்டு வாங்கும் அளவுக்கு என்னுடலில் ஆற்றலும் இல்லை” என்றான் பைலன். சண்டன் எழுந்து தன் மூட்டையின் உள்ளிருந்து புலித்தோல் ஆடை ஒன்றை எடுத்து உதறி அவனிடம் “இதை அணிந்து கொள்ளுங்கள்” என்றான். பைலன் “இதையா?” என்றான். “ஆம், இதையணிந்தோர் கனவில் தலைமேல் வெண்பிறையும் குளிர்நதியும் எழக்காண்பார்கள்” என்றான் சூதன். “வேண்டாம்” என்றான் பைலன். “தாழ்வில்லை. நான் அளிப்பதனால் நீங்கள் இதை அணியலாம்” என்றான் சூதன். “ஏன்?” என்றான் பைலன். “சிவமேயாம்!” என்று அருட்கை காட்டி அவன் உரக்க நகைத்தான்.
பைலன் சிரித்துக்கொண்டு “நன்று. ஆனால் அதை அணியும் பொருட்டு பாயிலிருந்து எழுவதற்கு அலுப்பாக இருக்கிறது” என்றான். “இலக்கை அடைந்தபின் வரும் அலுப்பு அது. அங்கே இரண்டாவது தேவதை குடியிருக்கிறாள். எய்திவிட்டோம் என்று எண்ணியதுமே அவள் வந்து தழுவிக்கொள்கிறாள். பின்பு மெல்லிய புதைசேற்றிலென இழுத்து வைத்துக் கொள்கிறாள்” என்றான் சண்டன். “அழகியவள். தேன்கதுப்பு போன்றவள். நீ நீ நீ என நம்மிடம் பேசிக்கொண்டே இருப்பதனால் அவளுக்கு சுஃபாஷிணி என்று பெயர்.”
“இன்னும் ஒரு நாள் உம்முடன் இருந்தால் தத்துவம் பேசுபவர்களின் சங்கைக் கடித்து குருதியுண்ணத் தொடங்கிவிடுவேன்” என்றான் பைலன். கையூன்றி உடற்தசைகள் இழுபட்டு வலிக்க எலும்புகள் சொடக்குவிட்டு விலக எழுந்து தன் இடைமரவுரியைக் கழற்றி காயவைத்தபின் தோலாடையை அணிந்து பாயில் அமர்ந்தான். சண்டன் திரும்பிநோக்கி “சொல்லெல்லாம் பித்தென ஆகும். புலித்தோல் அணிந்துவிட்டீர்” என்றான். கண்கள் சரிய பைலன் படுத்துக் கொண்டான்.
சண்டன் தனது முழவில் தோல் பரப்பை தட்டிப்பார்த்தான். நீருக்குள் பெரிய மீன் ஒன்று வாலை அடிப்பது போன்ற ஓசை எழுந்தது. மென்மணலில் என அந்த தாழைப்பாயில் அவன் புதைந்து சென்றுகொண்டே இருந்தான். மிக ஆழத்தில் அவன் ஏதோ ஒன்று கிடப்பதைப்போல் உணர்ந்தான். வெள்ளியால் ஆன ஒரு நாணயம்போல் இருந்தது. மீண்டும் உடலை அழுத்தி அமிழச்செய்தான். அது பொன்னெனத் தெரிந்தது. பின்பு அது மணியென ஆயிற்று. பின்பு அடிப்பரப்பைத் துளைத்து அப்பால் இருக்கும் முடிவுலகுக்குள் செல்லும் துளையெனத் தோன்றியது.
அதை நோக்கி செல்லச் செல்ல அடியில் அழுத்தம் பைலனை மேலே தள்ளியது. இன்னும் ஒரு அடி இன்னும் ஒரு அடி என்று தன் உடலை உந்தி உந்திச் சென்றான். அத்துளையில் எழுந்த ஒளிக்கொப்புளம் ஒன்று அவனை அறைந்து மேலே தூக்கியது. மீண்டும் சரிந்து நீருக்குள் தன்னை அமிழ்த்தினான். அவன் உடல் கரையத்தொடங்கியது. கைகளும் கால்களும் மறைந்தன. நீரென்றே ஆனபோது அந்த அழுத்தம் மறைந்தது. அவன் புலித்தோலாடை மட்டும் கீழே சென்றுகொண்டே இருந்தது. அவிழ்ந்த ஆடையாக அல்ல. அவன் அணிந்த வடிவில். அவ்வடிவில் அவன் அதில் இருந்தான்.
அவன் விழித்துக்கொண்டபோது அந்தக் கொட்டகை முழுக்க மெல்லிய குரல்முழக்கமும் உடல்எழுப்பும் நீராவியும் பரவியிருந்தது. பெரும்பாலானவர்கள் ஈர ஆடைகளை காயவைத்து மாற்றுடை அணிந்து நாரிழுத்துக் கட்டப்பட்ட கட்டில்களில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். பல மொழிகள் ஒரே சமயம் ஒன்று கலந்து ஒலித்த முழக்கம் கொட்டகையை நிரப்பியது. அவன் அந்த ஓசையை முதலில் அலைகளாக கண்களால் பார்த்தான். பின்னர்தான் புலன்கள் திரண்டு அவனென்றாயின. அவன் எழுந்துகொண்டான். தன் உடல் முழுக்க தசைகள் வலி கொண்டிருப்பதை அறிந்தான். ஆனால் களைப்பு அகன்று உள்ளம் தெளிந்திருந்தது. விழிகள் ஒளி கொண்டிருந்தன. அங்கிருந்த ஒவ்வொருவரையும் அவன் உள்ளம் சென்று தழுவி மீண்டது.
பாயைச் சுருட்டி வைத்துவிட்டு வெளியே வந்து முற்றத்தைப் பார்த்தான். மழைத் திரைக்குள் பொழுது விரைவிலேயே இருண்டு கொண்டிருந்தது. வண்ணங்கள் தங்கள் ஒளியை இழந்து கருமையை நோக்கி சென்றுகொண்டிருந்தன. இலைப்பரப்புகள் முன்னரே ஈரமான இருளொளியாக ஆகிவிட்டிருந்தன. மலர்களும் செம்மண் தரையும் மரப்பட்டைச் சுவர்களின் வண்ணங்களும் மட்டுமே வண்ணமென எஞ்சியிருந்தன.
உடல் முழுக்க தேங்கி நின்ற இனிய சோர்வில் அவன் திண்ணையில் அமர்ந்து அம்முற்றத்தை நோக்கிக்கொண்டிருந்தான். நீரூறிய சதுப்பில் பல்லாயிரம் கால்தடங்கள். குளம்புத்தடங்கள். ஒவ்வொன்றிலும் வான்துளி. அடுமனையிலிருந்து வெண்ணிற ஆடையுடன் வந்த அருகநெறியினர் அவனை நோக்கி புன்னகைத்து “அடுமனைக்கு வருக, உத்தமரே!” என்றார். மறுமொழி சொல்ல எண்ணியும் அச்சொல் நாவில் எழாமல் அவன் புன்னகைத்தான்.
அவர் கொட்டகைக்குள் நுழைந்து உரக்க அருகர் வாழ்த்தைக் கூறியதும் ஓசைகள் அவிந்தன. வணிகர்கள் அனைவரும் உரையாடலை நிறுத்திவிட்டு அவரை திரும்பி நோக்கினர். “அருகனருள் சூடுபவர்களே, அருகமுறைப்படி அந்தி எழுந்தபின் இங்கு உணவளிக்கப்படுவதில்லை. ஆகவே சமைத்த உணவை உண்ண விரும்புவோர் இப்போதே அடுமனை புகுந்து உண்ணும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இருளெழுந்த பின் வருபவர்களுக்கு அனலும் அரிசியும் கலமும் மட்டுமே அளிக்கப்படும் என்பது இங்குள்ள முறைமை” என்றார்.
“ஆம், உணவுண்பதே நல்லது! உண்கிறோம்! உண்போம்!” என்று வெவ்வேறு குரல்கள் எழுந்தன. வணிகர்கள் சிறுகூட்டங்களாக ஆடைகள் ஒலிக்க அணிகள் குலுங்க அடுமனை நோக்கி சென்றனர். பைலன் எழுந்து உள்ளே சென்று வெறுந்தரையில் மல்லாந்து வாய்திறந்து துயில்கொண்டிருந்த சண்டனின் தோளைத்தொட்டு “சண்டரே” என்று எழுப்பினான். அவன் கையூன்றி எழுந்து “விடிந்துவிட்டதா?” என்றான். “இருளப்போகிறது” என்றான் பைலன். “அடுமனையில் இன்னும் சற்று நேரத்தில் உணவு அளிப்பதை நிறுத்திவிடுவார்கள். இரவில் இங்கு உணவளிக்கப்படுவதில்லை” என்றான்.
“ஆம், நான் படுக்கும்போதே அதை எண்ணினேன்” என்றபடி சண்டன் எழுந்து ஆடையை சீரமைத்தபடி வெளியே சென்றான். பைலன் “முகம் கழுவிக்கொண்டாவது உணவுகொள்ளலாம்…” என்றபடி தொடர்ந்தான். அவர்கள் வெளியே சென்றபோது களைத்த காலடிகளுடன் ஒரு சிறுவன் முற்றத்தில் நுழைவதைக் கண்டனர். அவன் உடல் மழைநீர் வழிந்து நடுங்கிக்கொண்டிருந்தது. “வழிநடையர். உங்களைப்போலவே சிறுவர், அந்தணர்” என்றான் சண்டன். “களைத்திருக்கிறார்… உணவுண்ண அழைக்கலாம்” என்றபின் பைலன் இளஞ்சாரலில் இறங்கி அவனருகே சென்றான்.
அவன் கைகூப்பி “வணங்குகிறேன், உத்தமரே. சாமவேத மரபின் ஜைமின்ய குருவழியைச் சேர்ந்த என்பெயர் சத்வன்” என்றான். “வணங்குகிறேன், உத்தமரே” என பைலன் தன்னை அறிமுகம் செய்துகொண்டான். “களைத்து வந்திருக்கிறீர்கள். பெரும்பசி தெரிகிறது. இங்கு இன்னும் சற்று நேரத்தில் உணவளித்தலை நிறுத்திவிடுவார்கள்” என்றான் பைலன். அவனுக்கு தன்னைவிட ஓரிரு அகவை மூப்பிருக்கலாம் என்று தோன்றியது. அவனால் பேசமுடியவில்லை. பலமுறை உதடுகளை அசைத்தபின் நாவால் ஈரப்படுத்திக்கொண்டு “நான் பொழுதிணைவு வணக்கம் செய்யாமல் உணவருந்துவதில்லை” என்று மிக மெல்லிய குரலில் சொன்னான்.
“அதற்கு நேரமில்லை. அந்திக்குப்பின் இங்கே இவர்கள் சமைத்த உணவை அளிப்பதில்லை. இந்த மழையில் உணவை சமைப்பதும் எளிதல்ல” என்று பைலன் சொன்னான். “நான் என் முறைமைகளை எந்நிலையிலும் மீறுவதில்லை” என்றான் அவன். சண்டன் “அவர் தூய அளவைவாதி என நினைக்கிறேன். அவர்களுக்கு முறைமைதான் முக்கியம். முறைமை மீறுவதற்குரிய முறைமை ஏதேனும் இருந்தால் அதைக் கடைப்பிடிப்பார்கள்” என்றான். பைலன் அவனை திரும்பிநோக்கி சீற்றத்துடன் ஏதோ சொல்ல வாயெடுக்க “நான் உணவருந்தச் செல்கிறேன். நீங்கள் வருகிறீர்களா இல்லையா?” என்றான் சண்டன். “இல்லை, இவரை நான் தனியாக விடமுடியாது. நீர் செல்லலாம்” என்றான் பைலன்.
“நன்று” என்றபின் சண்டன் திரும்பி நடந்து அடுமனைக்குள் நுழைந்தான். அவன் செல்வதை நோக்கியபின் பைலன் “அவர் கட்டற்றவர்” என்றான். “ஆம், சூதர்கள் எரியிலெழும் பொறிகள். எரியின் வெம்மையால் அலைக்கழிக்கப்படுபவர்கள். எரியை அணுகவும் முடியாதவர்” என்றான் சத்வன். பைலன் புன்னகைத்தான். சத்வன் “நான் என் முறைமைகளை முடிக்க நெடுநேரமாகும். அதன்பின் உணவு சமைத்து உண்பதென்றால் இரவாகிவிடும்” என்றான். பைலன் “ஆகட்டும், நான் உங்களை தனியாக விடமுடியாது” என்றான். “வருக, நீராட்டுக்கு நானும் வருகிறேன்” என்றான்.
அவர்கள் செல்லும்போது “நீங்கள் பொழுதிணைவு வணக்கங்களை செய்துவிட்டீர்களா?” என்றான் சத்வன். “இல்லை, நான் முப்போதும் தவறாது செய்பவன் அல்ல.” சத்வன் புரியாமல் “எப்போது செய்வதில்லை?” என்றான். “என் உள்ளத்தில் கனவு நிறைந்திருக்கையில்” என்றான் பைலன். அவன் சொன்னதென்ன என்று சத்வனுக்கு புரியவில்லை. “நீங்கள் புலித்தோலாடை அணிந்திருக்கையிலேயே எண்ணினேன். ருத்ரமரபினர் போலும்” என்றான். பைலன் குனிந்து தன் ஆடையை நோக்கிவிட்டு ஒருகணம் தயங்கி “ஆம்” என்றான்.
“ருத்ரமரபினருக்கு வேதமுழுமை கைப்படுவதில்லை. அவர்கள் ஒளியிருக்க இருள்வழியே செல்ல விழைபவர்கள். நெறிகளை மீறுபவர்களுக்கு இலக்குகள் எய்தப்படுவதில்லை” என்றான் ஜைமினி. பைலன் “அளவை வைதிகருக்கு ருத்ரம் மீதிருக்கும் விலக்கை அறிவேன்” என்றான். ஜைமினி “ஆம், நான் முதல் ஜைமினி முனிவர் அமைத்த அளவைமரபின் வழிவந்தவன். சடங்குநெறிகளை ஒருபோதும் மீறலாகாது என்று எந்தையரிடமிருந்தும் ஆசிரியர்களிடமிருந்தும் கற்றவன். இதுவரை ஒருமுறையேனும் கடந்தவன் அல்ல” என்றான்.
“நான் நெறிகளை கனவுகளால் கடக்கிறேன்” என்றான் பைலன். “இளையவரே, நெறியில்லையேல் இங்கு எதுவுமில்லை. இந்த மரங்கள் தங்களுக்குள் நெறிகளை பேணுவதனாலேயே இவை காடாகி நின்றுள்ளன. நாம் பேசும் ஒலிகள் சந்தஸும் வியாகரணமுமாக நெறிசூழ்வதாலேயே மொழியென்றாகின்றன” என்றான் சத்வன். “ஜைமின்யரே, ஒலியமைவையும் பொருளமைவையும் கடக்கும்போதே சொல் அனல்கொள்கிறது. கனவு சுமக்கையில் கவிதையாகிறது. மெய்மையெனக் கனிந்து வேதமாகிறது” என்றான் பைலன். “பெருவழிச்செல்லும் சொற்களால் அரசமுறைமையையும் உலகியல் வழமைகளையும் மட்டுமே கையாளமுடியும். எழுந்துபறக்கும் உயிர்களுக்குரியது வானம்”
அவன் சொன்னதென்ன என்று புரியாத திகைப்பு தெரிந்த விழிகளுடன் “வேதமென்பது ஒலியாலும் பொருளாலும் கரை கட்டப்பட்ட பெருக்கு” என்றான் ஜைமினி. “முகிலென்றிருக்கையில் அது கரைகளற்றது. ஆனால் நதியாக அதை ஆக்குவது கரைகளே.” . பைலன் “ஆம், ஆனால் கரையைக்கொண்டு நாம் நதியை பொருள்கொள்ளலாகாது. முகிலைக்கொண்டே பொருள்கொள்ளவேண்டும்” என்றான். “நாம் இணையப்போவதில்லை” என்றான் ஜைமினி. “வருக, நீராடியபடியே பேசலாம்… நாம் பேச நிறைய இருக்கும் போலிருக்கிறது” என்று பைலன் சொன்னான்.