‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 12

[ 14 ]

யக்‌ஷவனத்திலிருந்து பதினெட்டுகாதம் தொலைவிலிருந்த அஸ்வபக்ஷம் என்னும் சோலை நடுவே நீர் நிறைந்திருந்த அஸ்வபாதம் என்னும் சுனைக்கு புலரியெழும் வேளையில் அர்ஜுனன் வந்தான். தனது வில்லையும் அம்புகளையும் அங்கிருந்த பாறை மேல் வைத்துவிட்டு சேறு வழுக்கிய சுனை ஓரம் மெல்ல நடந்து நீர்நுனி அலையும் விளிம்பை அடைந்து குனிந்து அள்ளி முகம் கழுவிவிட்டு அருந்துவதற்காக மீண்டும் ஒருமுறை நீரை அள்ளியபோது சுனைநீர் கொப்பளித்து அலையெழுந்து வந்து அவன் கால்களை நனைத்தது.

வியந்து அவன் விழிதூக்க நீருக்குள்ளிருந்து கூப்பிய கைகளுடன் சித்ரசேனன் எழுந்து நின்றான். அவனருகே அவன் தேவி சந்தியை பொன்னிறவடிவில் நின்றாள். கந்தர்வன் “இளைய பாண்டவரே, உங்களால் அடைக்கலம் அளிக்கப்பட்ட கந்தர்வனாகிய சித்ரசேனன் நான். என்னைக் கொன்றழிக்க இளைய யாதவர் படையாழியுடன் வந்துவிட்டார். உயிரஞ்சி உங்கள் வில்நிழல் தேடி வந்துள்ளேன்” என்றான். அர்ஜுனன் “நன்று, என் சொல் அவ்வண்ணமே உள்ளது” என்றான். “நீங்கள் இளைய யாதவரின் துணைவர் அல்லவா?” என்றாள் சந்தியை. “நான் தனியன்” என்று அவன் சொன்னான்.

“இச்சுனைக்குள் மறைந்திருங்கள், கந்தர்வரே. உங்கள் தேவியும் உடனிருக்கட்டும். இக்காட்டை என் வில்லால் அரணமைத்துக் காப்பேன். என்னைக் கடந்து இதற்குள் எவரும் நுழைய முடியாது என்று உறுதி கொள்ளுங்கள்” என்றான். அவனை வணங்கி மீண்டும் நீருக்குள் புகுந்து நிழலென அசைந்து மறைந்தான் சித்ரசேனன். சுனையின் நீர்வாயில்கள் மூடின. அது வானை தன்மேல் பரப்பிக்கொண்டது.

அர்ஜுனன் தன் அம்புத்தூளியைத் தோளிலிட்டு வில்லை ஏந்தியபடி வந்து அஸ்வபக்ஷத்தின் முகப்பில் இருந்த பாறை ஒன்றின்மீது ஏறி கீழ்த்திசையை நோக்கியபடி இளைய யாதவரின் வரவுக்காக காத்திருந்தான். அவன் குழலை காற்று அசைத்தது. அவன்மேல் காலைவெயில் ஒளிமாறிக் கடந்துசென்றது. அசையா மரமென அவன் தொலைவில் நின்று நோக்குகையில் தோன்றினான். அவனருகே காண்டீபம் துணைவன் என நின்றிருந்தது. அதில் அவன் கைபட்ட இடம் தேய்ந்து தழும்பாகி ஒளிகொண்டிருந்தது.

மரங்களின் நிழல்கள் காலடியில் தேங்கிக்கிடந்த உச்சிப்பொழுதில் மலைச்சரிவில் இளைய யாதவர் புதர்ச்செறிவிலிருந்து வெளிவருவதை அர்ஜுனன் கண்டான். வெயிலுக்கு மயங்கி சோலைகளுக்குள் ஒண்டியிருந்த பறவைகள் எழுந்து சிறகடித்து வானில் சுழன்றன. ஒரு காட்டுநாய் ஊளையிட அதன் தோழர்கள் ஏற்றுப்பாடின. அவர் கால்பட்டு உருண்ட பாறைகள் கீழே மலைப்பள்ளத்தில் விழும் ஒலிகள் கேட்டன.

குரல் எட்டும் தொலைவு வரை இளைய யாதவர் வருவதற்காக காத்தபின் தன் வில் தூக்கி நாணொலி எழுப்பி உரத்த குரலில் அர்ஜுனன் சொன்னான் “இளைய யாதவரே, நீங்கள் தேடி வரும் கந்தர்வன் இக்காட்டுக்குள் எனது பாதுகாப்பில் உள்ளான். அடைக்கலம் கோரியவருக்காக உயிரும் இழப்பது மறவனின் அறம்.  இது போர் எச்சரிக்கை, திரும்பிச்செல்க!”

இளைய யாதவர் அக்குரலைக் கேட்டதாகத் தெரியவில்லை. சீரான காலடிகளுடன் அவர் வந்துகொண்டிருந்தார். அப்பால் காட்டுப்புதருக்குள் காலவரும் அவர் மாணவர்களும் வருவதை அவன் கண்டான். நாணொலியை மீண்டும் எழுப்பி “யாதவரே, அதோ அந்த இரட்டைப்பாறை எனது எல்லை. அதைக் கடந்து இதற்குள் வரும் எவரும் என்னால் கொல்லப்படுவார்கள். திரும்புக! இப்புவியில் என்னை வெல்ல எவரும் இல்லை” என்று அர்ஜுனன் கூவினான்.

இளைய யாதவர் அழுக்குபடிந்த தோலாடை அணிந்திருந்தார். புழுதி சூடி திரிகளாக ஆன குழலை நாரால் முடிந்து பின்பக்கம் விட்டிருந்தார். அவர் தலையில் என்றும் விழிதிறந்திருக்கும் பீலி அன்று இருக்கவில்லை. இடையில் எப்போதும் அவர் சூடியிருக்கும் குழலும் இல்லை. வலக்கையில் கதையும் இடக்கையில் படையாழியும் ஏந்திய கரிய உடல் புழுதியும் அழுக்கும் கொண்டு ஒளி அணைந்திருந்தது.

அணுகிக்கொண்டிருந்த இளைய யாதவரை நோக்கி சினமெழுந்த பெருங்குரலில் அர்ஜுனன் கூவினான் “யாதவரே! மீண்டும் சொல்கிறேன். நேற்றுவரை உங்கள் மேல் நான் கொண்டிருந்த அனைத்து அன்பையும் முற்றறுத்து இங்கு வந்து நின்றுள்ளேன். களம் புகுந்தபின் குருதியோ நட்போ பொருட்டென ஆகக்கூடாது என்று கற்ற போர்வீரன் நான். நமது போரால் இருவரும் அழிவோம் என்றே கொள்க… தங்கள் இலக்கு நான் எனறால் மட்டுமே அணுகுக!”

ஒருகணமும் தயங்காத காலடிகளுடன் இளைய யாதவர் அணுகி வந்தார். அவர் விழிகள் தன்மேல் பதிந்திருப்பதை அர்ஜுனன் உணர்ந்தான். அவர் இரு கைகளும் இரு சிறகுகள்போல காற்றில்  வீசின. கால்கள் உருண்டபாறைகள் மேல் எடையுடன் பதிந்து மேலேறின. இரைநோக்கி இறங்கிவரும் பருந்தின் அலகென கூர்ந்திருந்தது அவர் முகம்.

அர்ஜுனன் தன் நாணை முற்றிறுக்கி இழுத்து விம்மலொலியெழுப்ப மரக்கூட்டங்களிலிருந்து பறவைகள் கூச்சலிட்டபடி எழுந்து பறந்தன. வில்லை வளைத்து அவன் அம்பு தொடுப்பதற்குள் கண்தொடா விரைவுகொண்ட கையால் ஏவப்பட்ட இளைய யாதவரின் படையாழி ஒளிக்கதிரென அவனை நோக்கி வந்தது. உடல்சரித்து அதை தவிர்த்தான். அருகிருந்த மரம் அலறலுடன் முறிந்து கிளையோசையுடன் மண்ணில் சரிந்தது.

துடித்தெழுந்து அதிர்வோசையுடன் திரும்பிச் சென்ற படையாழியுடன் இணைந்து சென்றது அவன் தொடுத்த அம்பு. அதை உடலொசிந்து இளைய யாதவர் தவிர்த்தார். மறுகணம் சுழன்றெழுந்து மீள வந்தது அவர் படையாழி. விழிமின்னி வண்டென ஒலித்துக் கடந்துசென்று அவர் அருகே நின்ற மரக்கிளையை முறித்தது பாண்டவனின் பிறையம்பு. அவனருகே ஒரு பாறை ஓசையுடன் பிளந்து விழ துள்ளித் துடித்தபடி திரும்பச்சென்றது படையாழி.

எய்தும் தவிர்த்தும் அவர்கள் நின்றாடினர். சூழ்ந்திருந்த மரங்கள் முறிந்து விழுந்தன. பாறைகள் பொறியனல் சீறி பொடி உதிர்ந்தபடி வெடித்தன. காற்று கிழிபட்டு கிழிபட்டு அதிர்ந்தது. ஊடே பறந்த பறவைகள் அறுபட்டு விழுந்து துடித்தன. அனல் உமிழ்ந்த இளைய பாண்டவனின் அம்பு பட்டு பசுமரம் ஒன்று பற்றிக்கொண்டது. படையாழி வந்து சீவிச் சென்ற பொறிதட்டி பைம்புற்கள் அனல் கொள்ள அர்ஜுனனைச் சூழ்ந்திருந்த காடு நெருப்பாகியது.

ஒருதழலை மறுதழல் தழுவ அவர்களைச் சூழ்ந்தது பேரனல். மேலே எரிந்து சுழன்றது அனலாழி. ஐந்து நெருப்புகள் சூழ அவர்கள் போரிட்டனர். சோமக்கணையால் இளைய யாதவரைத் தாக்கி அவரை பித்தெழச் செய்தான். காற்றுக்கணையால் இலைச்சுழல் எழுப்பினான். இந்திரக்கணையால் முகில் பிளந்து மின்னெழச் செய்தான்.

ஒருவரை ஒருவர் முற்றறிந்திருந்தனர் இருவரும். அர்ஜுனன் கையெடுப்பதற்குள் அவன் எண்ணிய அம்பை இளைய யாதவர் அறிந்தார். அவர் விழி திரும்புவதற்குள் அங்கே அர்ஜுனன் நோக்கினான். ஒவ்வொரு இலக்கையும் ஒவ்வொரு எண்ணத்தையும் அவர்கள் ஒன்றென அறிந்தனர். ஒற்றைப்பெருஞ்சினம். ஓருருவாகிய ஆணவம். ஒன்றென்றே ஆன தன்னிலை. பார்த்தனாகி நின்று இளைய யாதவர் தன்னுடன் போரிட்டார். கிருஷ்ணனாக மாறி அர்ஜுனன் தன்னை தாக்கினான்.

இருபாதியெனப் பிரிந்து தங்களுக்குள் போரிட்டனர். ஒருகணத்தின் ஒருகோடியின் ஒருதுளியில் அவர்களின் போர் இதோ இதோ என முன்னகர்ந்தது. அனலாகி கரியாகி காடு அவர்களைச் சூழ்ந்து புகைந்தது. வெம்மை உமிழ்ந்த பாறைகள் மணியோசையுடன் வெடித்துருண்டன. வானிலெழுந்த பறவைகள் கூச்சலிட்டு தவித்தன. கொன்றும் வென்றும் கடந்தும் மீண்டும் ஒரு கொடுங்கனவில் நின்று களியாடினர்.

பின் ஒரு கணத்திரும்பலில் அர்ஜுனன் அறிந்தான், அங்கெழுந்து அறியா முகம் சூடிநின்ற பிறிதொரு இளைய யாதவரை. அவன் உள்ளம் திடுக்கிட அம்பெடுத்த கை தளர்ந்தது. அணுக்கத்தின் எல்லைக்கும் அப்பால் அங்கு அறியாது கரந்திருந்தவன் எவன்? முகம் சூடி ஆடியது எம்முகம்? அத்தனை நாள் ஒன்றே காலமென, உடலென்று பிறிதிலாததுபோல வாழ்ந்தபோதே அது அங்கிருந்ததா?

சிறுதுளி. இன்மையை விட சற்றே பெரிது. ஆனால் கணம்கணமென அது பேருருக்கொண்டது. ஆயிரம் பல்லாயிரம் கைகள் முளைக்க, ஒன்றன்மேல் ஒன்றென விழிகள் வெறிக்க, முகம் மீதேறிய  முகங்கள். நகைக்கும் ஒரு வாயும், சினந்து பிளந்ததொரு வாயும், அறைகூவுமொரு வாயும், வசைபாடி வெறுக்குமொரு வாயுமென திசை சூழ்ந்தது. அவனறியாத பேருருவத்தைக் கண்டு அஞ்சியும் அதிர்ந்தும் அவன் எய்த அம்புகள் இலக்கழிந்தன. ஆழி வந்து அவனை நக்கி குருதி உண்டு மீண்டது. சுவைகண்டு வெறிகொண்டு விம்மி மீண்டும் வந்தது.

குருதி தெறிக்க அவன் பின்னால் விழுந்து கையூன்றி எழுந்து கால் வைத்து பின்னடைந்தான். அவன் முன் வந்து விழுந்து நிலத்தை ஓங்கியறைந்து மண்கிளறிச் சுழன்றெழுந்தது கொலைத்திகிரி. அர்ஜுனன் திரும்பி ஓடினான். முழங்கியபடி அவனை காற்றில் துரத்திவந்தது அது. எழுக என் அம்புகள். உயிர்கொள்க நான் கற்ற நுண்சொற்கோவைகள். இதோ என் படைக்கலங்கள். இதோ என் தவத்தின் கனிகள். என்னை நானென உணரவைத்த என் அறிதல்கள்.

ஆனால் அவையனைத்தையும் முன்னரே அவன் இளைய யாதவர் மேல் ஏவியிருந்தான். இல்லத்து நாய்க்குட்டிகள் என அவரை அணுகி குலவிக்குழைந்து உதிர்ந்தன அவை. அவர் அறியாத ஒன்று எழுக! அவர் அறியாதது என்றால் தானும் அறியாதது. அறியாது கரந்து ஆழத்திலிருக்கும் ஒன்று. வெறிக்கூச்சலுடன் அவன் நின்றான். தன் இருளுக்குள் இருந்து அந்தச் சொல்லை எடுத்து அம்பில் ஏற்றி திரும்பி நின்று எய்தான். நச்சுமிழ்ந்தபடி சென்று அவர் நெஞ்சில் தைத்தது அது.

அவர் திகைத்து கையோய்ந்து நிற்பதைக் கண்டான். தன்னுள் எழுந்த பெருங்களிப்பின் ஊற்றென்ன என அக்கணத்திலும் உள்வியந்தான். “யாதவனே, கொள்க! இது நீயறியா பார்த்தன். இதோ நீ காணா நஞ்சு. நீ அணுகாத ஆழத்து இருளில் ஊறியது” என்று கூவியபடி அம்புகளை எய்துகொண்டு அணுகினான். காலெடுத்து காலெடுத்து பின்வாங்கிய இளைய யாதவர் நின்று பேரலறலுடன் வானுருக்கொண்டெழுந்தார். அவர் கையில் இருந்தது காண்டீபம். அவர் தோளெழுந்தது அவன் சூடிய அம்புத்தூளி. அவர் இடப்பக்கம் நின்றிருந்தாள் அவள்.

“நீ?” என்று அவன் திகைத்தான். வெறியுடன் நகைத்தபடி அவள் அவர் பின்னால் மறைந்தாள். விழியுமிழ்ந்த நஞ்சு. நகைப்பில் நிறைந்த நஞ்சு. அவள்தான். என் நெஞ்சுதுளைக்கும் வாளியின் கூர்முனையென அமைவது அவள் நஞ்சேதான். இளைய யாதவர் கையிலெழுந்த காண்டீபம் உறுமியபடி அர்ஜுனன் மேல் அம்புக்குமேல் அம்பெனத் தொடுத்தது. அது அவனை நன்கறிந்திருந்தது.

அம்பு ஒன்று அர்ஜுனன் தொடையை தைக்க அவன் சரிந்து மண்ணில் விழுந்தான். அவன் உருண்டு சென்ற நிலமெங்கும் அம்புகள் வந்து நட்டுச் செறிந்து வயலென நின்றன.  அவன் நன்கறிந்த குரல்களை கேட்டான். அன்னையென குருதியென காதலென கடமையென அவனைச் சூழ்ந்திருந்த விழிகளெல்லாம் அம்புமுனைகளென ஒளிகொண்டெழுந்து விம்மி வந்து தைத்து நின்று நடுங்கின.

KIRATHAM_EPI_12

பெருவஞ்சத்துடன் கையூன்றி எழுந்து அவன் கைநீட்டியபோது சுட்டுவிரலில் இருந்தது யாதவரின் படையாழி. “செலுத்துக! செலுத்துக என்னை!” எனத் துடித்தது அது. “இது என் வஞ்சம்! ஆம், என் வஞ்சம் இது” என்றது. “படைநின்ற தெய்வம் கொண்ட வஞ்சம் இது. செலுத்துக என்னை!” அவனே ஒருகணம் அதன் வெறிகண்டு திகைத்தான். அவன் அதை விடுவதற்குள்ளாகவே எழுந்து பறந்து சென்றது. அதிலிருந்து குருதித்துளிகள் வீசப்பட்ட செம்மொட்டுமாலையெனத் தெறித்தன.

உடலெங்கும் எழுந்த வெறியால் உலைந்தாடி கைவீசி  நகைத்து “கம்சரின் பொருட்டு. யாதவனே, இதோ கம்சரின் பொருட்டு!” என்று அர்ஜுனன் கூவினான். திகைத்து கையோய்ந்து நின்ற இளைய யாதவரின் தலையறுக்கச் சென்று இறுதிக்கணத்தில் அவர் தலைசரிக்க அவர் முடித்திரளை வெட்டிவீசி மீண்டது.

“நில் நில்!” என அவர் கூவ மீண்டும் சீறி அவரை அணுகியது. வஞ்சமெழுந்த விழியென இளைய யாதவர் அதை கண்டார். “நீயா?” என்று கூவியபடி பின்னால் திரும்பி ஓடினார். அவரைத் தொடர்ந்து வந்து குதிகாலை வெட்டியது நற்காட்சி. குருதியுடன் மண்ணில் விழுந்த அவர்மேல் வந்து சுழன்று இழைவெளியில் புரண்டகன்ற அவர் தோள்தசையைச் சீவி திரும்பிச்சென்றது. குருதிசுவைத்த அதன் நாக்கு மின்னொளி சிதற காட்டில் சுழன்றது. “சிசுபாலனுக்காக! சிசுபாலனுக்காக!” என்று அர்ஜுனன் கூவினான்.

எரிபுகை எழுந்து இருண்ட வானுக்குக் கீழே அவர்கள் மட்டுமே இருந்தனர். விழிகள் மயங்கி மறைய உடலறிந்த காட்சியில் ஒருவரை ஒருவர் கண்டு போரிட்டனர். ஆயிரம் முறை ஆரத்தழுவிய தோள்கள், அன்புகொண்டு பின்னியாடிய விரல்கள் ஒன்று பிறிதை தான் என அறிந்தன. ஒன்று புண்பட்டபோது பிறிதும் வலிகொண்டது. அவ்வலியால் வெறிகொண்டு மேலும் எழுந்தது. மேலும் குருதி என கொந்தளித்தது. தன் குருதி உண்டதுபோல் சுவையறிந்து திளைத்தது.

எரிந்த காட்டுக்குள் நிகழ்ந்த போர் இருளுக்குள் எதிராடிப்பாவைத் தொடர்பெருக்கு என எழுந்தது. தொலைகாடுகளில் இடியெனப் பிளிறி தலைகுலுக்கி ஓடிவந்து மத்தகம் அறைந்தன இணைக்களிறுகள். கொம்புகள் மோதின எருதுகள். சீறி வளைந்து தாவி அறைந்து கைபின்னிப் புரண்டன வேங்கைகள். கவ்விக்கிழித்து தசைதெறிக்க குருதிசீற ஒன்றையொன்று கடித்துண்டன ஓநாய்கள். வானில் சுழன்று கொத்தி சிறகுதிர்த்து தசைத்துண்டுகள் என மண்ணில் விழுந்து துள்ளித்தாவின சிட்டுகள். நீள்கழுத்து பின்னி அறைந்து சிறகடித்து எழுந்து விழுந்து நீர்சிதறப் போரிட்டன அன்னங்கள். ஒன்றை ஒன்று விழுங்கின நாகங்கள். போர்வெளியாகியது உலகம். குருதிச் சாந்தணிந்தாள் மண்மகள்.

உடலெங்கும் செங்குருதி வழிய மண்ணில்புரண்டு தன்னைச் சூழ்ந்து அதிர்ந்த படையாழிச் சுழற்பெருக்கைக் கடந்து எழுந்த அர்ஜுனன் இளைய யாதவரின் அருகே நிழல் சுருண்டசைவதை கண்டான். பெண்ணுருக்கொண்ட பெருநிழல் நான்கு கைகளும் நீண்டுபறக்கும் குழலும் கொண்டு எழுந்தது. அஞ்சி அவன் எழுவதற்குள் அவன் காண்டீபத்தை வெட்டி எறிந்தது ஆழி. அவன் அருகிருந்த பாறையை எடுத்தபடி எழுந்ததும் அவனை அணுகி ஓங்கி அறைந்து தெறிக்கச்செய்தது கதை.

அவன் முழுவிசையாலும் பாய்ந்து அவர் மேல் முட்டி பின்னால் சரிந்தான். இருவரும் உடல்தழுவி மலைச்சரிவில் உருண்டனர். அவர்கள் உடல்பட்டு எழுந்த பாறைகள் உருண்டு முட்டி மலையாழத்தில் பொழிந்தன. அவர் கையமர்ந்த படையாழியை அவன் உதைத்து வீசினான். கதையைப் பற்றியபடி சுழன்று  எழுந்து அறைந்து தெறிக்கச்செய்தான். அவர் தோளை கடித்தான். உடலை கைநகங்களால் கிழித்தான்.

இரு உடல்களும் தழுவியறிந்தன முன்பு தழுவியபோது அறியாத அனைத்தையும். வழிந்த இரு குருதிகளும் கலந்து ஒன்றென மணத்தன. ஒன்றென வாயில் சுவைத்தன. தசையிறுகப் பற்றி இறுகி அசைவிழந்து நின்ற கணத்தில் இளைய யாதவரின்  விழித்த கண்களை அருகே கண்டான். அவை நோக்கிழந்து பிறிதொரு கனவில் இருந்தன.

“யாதவரே” என்று அவன் அழைத்த ஒலி அவனுள் புகுந்து மூலாதாரத்தை அடைந்தது. அவன் உடல் தசைவிதிர்த்து நடுங்கிக்கொண்டிருந்தது. அவன்  கைகளைப்பற்றி நிறுத்தி கால்களால் தொடையை அழுத்தி நெஞ்சில் தோளூன்றி மேலெழுந்தார் இளைய யாதவர். பிறிதெங்கோ எழுந்த கொலைநகைப்பு ஒன்றை அவன் கேட்டான். அனல் சூழ்ந்த வான்வெளியில் என அம்முகத்தை கண்டான். அனைத்து எண்ணங்களும் மறைய விழிமட்டுமேயாகி கிடந்தான்.

அக்கணத்தில் நீருக்குள் இருந்து சித்ரசேனன் கைகூப்பியபடி எழுந்தான். “யாதவரே, என்னைக் காக்கவந்த வீரர் அவர். அவர்மேல் அளிகொள்க! இதோ நான் வந்து நிற்கிறேன். என்னைக் கொன்று முனிவரின் வஞ்சினம் நிறைவுறச் செய்க!” என்று கூவியபடி ஓடிவந்தான். “நான் இனி உங்கள் அடைக்கலம் அல்ல, பாண்டவரே. இனி எனக்கு கடன்பட்டவரல்ல நீங்கள்” என்று அலறினான்.

மறுஎல்லையில் இருந்து காலவர் தன் மாணவர் சூழ கூவியபடி ஓடிவந்தார். “யாதவரே, வேண்டாம்! என் வஞ்சினத்தில் இருந்து விலகுக. சொல்பேணி நான் எரிபுகுகிறேன். எனக்கென இப்பேரழிவு நிகழவேண்டியதில்லை.” உறுமியபடி திரும்பிநோக்கியது சிம்மம். அவர் திகைத்து நின்று “நானறிந்திலேன்! யாதவரே, நான் அறியாது பிழையிழைத்தேன்” என்று கைகூப்பினார்.

மறுபுறம் ஓடிவந்த சித்ரசேனன் “கொல்க என்னை… என் பொருட்டெழுந்த இவ்வீரனுக்காக இறக்கிறேன்” என்றபடி அணுக நுதல்விழி சீற நோக்கியது பைரவம். அவன் கைகூப்பி நிற்க அவன் துணைவி உருவழிந்து வரிகொண்ட வலிகையாக ஆகி மண்ணில் படிந்தாள்.

“எங்கள் பகை அழிந்தது. நிறுத்துங்கள் போரை” என சித்ரசேனனும் காலவரும்  இணைந்து குரலெழுப்பினர். அர்ஜுனன் மீதிருந்து எழுந்த இளைய யாதவர் உடலெங்கும் குருதி வழிய வெற்றுடலுடன் அக்கணம் கருவறைக்குள் இருந்து வந்தவர் போலிருந்தார். கால்கள் நிலைகொள்ளாது அசைய  கண்களை மூடி தன்னை திரட்டினார். பின்னர் வாயிலூறிய குருதியை ஓங்கி துப்பினார். மூச்சில் சிதறின குருதிமணிகள்.

“யாதவரே, குளிர்க… நிறுத்துக போரை!” என்றார் காலவர். குருதிச்சரடு தெறிக்க அவர் தன் கைகளை உதறிக்கொண்டார். அவர்களை எவரென்பதுபோல நோக்கியபின் தளர்ந்த நடையுடன் திரும்பிச்சென்றார். அவர் செல்வதை சொல்லற்று நோக்கி நின்றபின் இருவரும் அர்ஜுனனை நோக்கி ஓடிச்சென்றனர்.

கிழித்துண்ண முயன்ற பருந்தின் உகிரலகில் இருந்து நழுவி விழுந்த பறவைக்குஞ்சு போல அர்ஜுனன் அங்கே கிடந்தான். சித்ரசேனன் “எழுக, இளையவரே! என் பொருட்டு நீங்கள் அளித்தவற்றுக்காக என் குலம் கடன்பட்டிருக்கிறது” என்றான். காலவர் “இளையவரே, வென்றவர் நீங்கள். இது என்ன ஆடலென்று இப்போது அறியமாட்டீர்” என்றார்.

[ 15 ]

எரிதழலில் அவியிட்டு விண்ணுலாவியாகிய நாரதரை அழைத்து தான் செய்யவேண்டியதென்ன என்று காலவர் கேட்டார். செய்த பிழைக்காக சித்ரசேனன் தன் நாவரிந்து இடட்டும் என்றார் நாரதர். தன் சொல்பேணுவதற்காக அந்நாவை எரித்து அச்சாம்பலைப் பூசட்டும் காலவர் என வகுத்தார். இருவரும் அதை ஏற்றனர். “என் விரல்கள் யாழைத் தொடுகையில் நாவாகின்றன. இந்நாவால் நான் அடைவதொன்றுமில்லை” என்றான் சித்ரசேனன். அதை எரித்த சாம்பலை தன் நெற்றியிலிட்டு நீராடி எழுந்து மீண்டும் தவம்புகுந்தார் காலவர்.

“அர்ஜுனன் மட்டும் அதிலிருந்து மீளவில்லை” என்றான் சண்டன். அவர்கள் தண்டகாரண்யத்தின் நடுவே ஓடிய பிரபாவதி என்னும் சிற்றோடையின் கரையிலிருந்த பாறைமேல் அமர்ந்திருந்தனர். “ஏன்?” என்றான் பைலன். “அஸ்வபக்ஷத்தில் இருந்து திரும்பிய அர்ஜுனன்  இருளிலேயே தன் குடிலுக்குள் சென்று படுத்துக்கொண்டான். அவன் உடலெங்குமிருந்த புண்களை மறுநாள்தான் சகதேவன் கண்டான். நகுலனை அழைத்து அவற்றுக்கு மருந்திடும்படி கோரினான்.”

திகைப்புடன் “மூத்தவரை இப்படி உடல்நைந்து குருதிவழியச் செய்யும்படி வென்றவர் எவர்?” என்று நகுலன் கேட்டான்.  “பிறிதெவர்?” என்றான் சகதேவன். நகுலன் பிறகேதும் சொல்லவில்லை. அர்ஜுனன் உடல்தேறி மீண்டெழ நாற்பத்தொரு நாட்களாயின. அவன் உடல் ஒளி மீண்டது. ஆனால் அவன் விழிகள் முற்றிலும் மாறிவிட்டிருந்தன. பிறிதெங்கோ நோக்கி அவை அலைபாய்ந்துகொண்டிருந்தன. யுதிஷ்டிரர் மலையிறங்கி வருவதுவரை அவன் அங்கிருந்தான். அதன் பின் தன் உடன்பிறந்தாரிடம் சொல்லிவிட்டு கிளம்பமுற்பட்டான்.

யக்‌ஷவனத்திலிருந்து அவர்கள் கிளம்பும் தருணம் அது. அர்ஜுனன் அவன் கிளம்பிச் செல்லவிருப்பதை தமையனிடம் சொன்னபோது பீமன் திடுக்கிட்டு “தனியாகவா? எங்கே?” என்றான். “அறியேன். ஆனால் நான் சென்று அடையவேண்டியவை பல உள்ளன. அவை நான் மட்டுமே செல்லக்கூடிய இடங்கள்” என்றான் அர்ஜுனன். “மீண்டும் ஒருவர் தனித்துச் செல்வதை ஒப்பமுடியாது…” என்று பீமன் உரக்க சொன்னான். “செல்பவருக்கு ஒன்றுமில்லை. இங்கிருப்பவர்கள் சென்றவரை ஒவ்வொரு கணமும் எண்ணி துயர்கொள்ளவேண்டியிருக்கிறது.”

“இளையவனே, நீ செல்வது எதை அடைவதற்காக?” என்றார் யுதிஷ்டிரர். “அம்புகளை” என்று அவன் சொன்னான். “நாம் போரிடப்போவதில்லை, இளையோனே. போரிடுவதென்றால் நம் உடன்பிறந்தவரை எதிர்கொள்ளவேண்டும். நான் அதற்கு ஒருபோதும் ஒப்பமாட்டேன்” என்றார் யுதிஷ்டிரர்.

அர்ஜுனன் “வில்வீரன் அம்புகளைத் தேடுவது தன்னை நிறைத்துக்கொள்வதற்காக மட்டுமே” என்றான். சினத்துடன் கைகளைத் தட்டியபடி அருகே வந்த பீமன் “வீண்சொற்கள் வேண்டாம். நீ அம்புகள் தேடுவது எதற்காக? இளைய யாதவருக்கு எதிராகவா?” என்றான். அவன் விழிகளை ஏறிட்டு நோக்கி “ஆம்” என்றான் அர்ஜுனன். பீமன் கடும் சினத்துடன் அறையும்பொருட்டு கையோங்கி அணுகி “மூடா, இன்று இப்புவியில் நமக்கு நண்பர் என பிறரில்லை” என்றான்.

யுதிஷ்டிரர் கைநீட்டி அவனை தடுத்தபின் அர்ஜுனனிடம் “பார்த்தா, நீ அவருக்கு எதிராக படைநிற்கப்போவதில்லை. இது என் ஆணை!” என்றார். “நாம் அவர் கருவிகள். நம்  பிறவிப்பெருநோக்கம் அதுமட்டுமே.” சகதேவன் “ஆம், மூத்தவரே நம் ஊழ் அவருடன் பிணைந்தது” என்றான்.

அர்ஜுனன் “என்றும் நான் அவர் நண்பனே. அதை நன்கறிவேன்” என்றான். “ஆனால் அடிமை அல்ல. பணியாள் அல்ல. மாணவனும் அல்ல. இணையானவனே நண்பனாக அமைய முடியும். நண்பனாக அமைந்தால் மட்டுமே அவர் எனக்கு ஆசிரியராக நிற்கவும் இயலும்” என்றான். பீமன் இகழ்ச்சியுடன் நகைத்து “அவருடன் போரிட்டுத்  தோற்ற சிறுமை உன்னை எரியவைக்கிறது” என்றான்.

அர்ஜுனன் “இல்லை மூத்தவரே, நான் அவரிடம் தோற்கவில்லை” என்றான். “அக்கணத்தில் அவரால் என்னை வெல்லமுடிந்தது, கடக்கமுடியவில்லை என்று அறிந்தேன். அங்குதான் என் உள்ளம் சிறுமைகொண்டு சுருங்கியது.” அவன் சொல்வதென்ன என்று அறியாமல் அவர்கள் நோக்கினர். தானே அதை தெளிவுற உணராதவன் போல அர்ஜுனன் தலையை குலுக்கிக்கொண்டான்.

“முதல்வனாக அன்றி நின்றிருக்கமுடியாத ஆணவம் இது. பார்த்தா, இவ்வாறு தருக்கிய எவரும் முழுவெற்றி அடைந்ததில்லை” என்றான் பீமன். அர்ஜுனன் நிலைமாறாத மொழியில் “மூத்தவரே, நீங்கள் இதை புரிந்துகொள்ளமுடியாது. ஆழியும் பணிலமும் ஏந்திய அண்ணலின் கதைகளிலேகூட அவன் முன் நிகரென எழுந்து நின்றவர்களே அவனருளுக்கு உரியவர்களானார்கள். தென்னிலங்கைக் கோமகனோ இரணியனோ எவராயினும் அதுவே வீரர்களின் வழி” என்றான்.

பீமன் அலுப்புடன் தலையை அசைத்து “நீ முடிவுசெய்துவிட்டாய். ஆணவம் கொண்டவர்களிடம் பேசிப் பயனில்லை. நூறுகோணங்களில் சிந்தனைசெய்து அனைத்து விடைகளையும் கண்டடைந்திருப்பாய்” என்றான். “ஆம், என் ஆணவம் அடிபட்டது, இல்லையென்று மறுக்கவில்லை. ஆனால் அது நான் அவர் முன் தோற்றதனால் அல்ல. நானறியாத ஒன்று அவரில் பேருருக்கொண்டு எழுந்ததைக் கண்டேன். அதனெதிர் நிகரென ஒன்று என்னுள்ளும் எழுவதைக் கண்டேன். அதனால்தான்” என்றான் அர்ஜுனன்.

“அந்த ஆழுலகை அறியாது இனி இங்கிருக்க என்னால் இயலாது. மூத்தவரே, அம்பு என்பது ஒரு சொல் மட்டுமே. இப்புடவி கொண்டுள்ள ஆழ்மெய்மை ஒன்றே அம்பென உருக்கொண்டு என்னை வந்தடைகிறது. நான் அறிந்து அதை கைக்கொண்டாகவேண்டும். மறுமுறை அவர்முன் சென்று நின்றிருக்கையில் என் அம்புத்தூளியில் அது இருந்தாகவேண்டும்.”

யுதிஷ்டிரர் பெருமூச்சுடன் “அவன் சென்றுமீளட்டும், மந்தா. நாம் தடைசொல்ல வேண்டியதில்லை” என்றார். பீமன் “ஆம், நாம் சொல்வதற்கொன்றும் இல்லை” என்றான். யுதிஷ்டிரர் அர்ஜுனனிடம் “இளையோனே, நாம் நோக்காது ஒழிந்த காட்சிகளாலானது இப்புவி நின்றிருக்கும் பீடம். நாம் கேளாது  ஒளிந்துகொள்ளும் ஒலிகளாலானது நமைச் சூழ்ந்த வானம். ஒளிந்திருப்பவற்றை தேடிச்செல்பவன் விரிந்து விரிந்து சூழும் பேரிருளை மட்டுமே அறியமுடியும் என்கின்றன நூல்கள்” என்றார்.

அர்ஜுனன் “ஆம் மூத்தவரே, நான் அதை அறிவேன்” என்றான். “நான் தேடிச்செல்வது முழுமையை அல்ல, என்வயமாகி என்னில் அடங்கும் அதிலொரு துளியை மட்டுமே.” யுதிஷ்டிரர் “கரியிருள் சூழும் என்கிறார்கள். அதன் தோலுரித்து எழும் ஒளிக்கு நீ உகந்தவனாக ஆகுக!” என்று வாழ்த்தினார். அர்ஜுனன் அவர் காலடிகளைத் தொட்டு சென்னி சூடினான்.

யுதிஷ்டிரர் திரும்பி  இளையவனாகிய சகதேவனிடம் “நன்று சூழுமா, இளையோனே?” என்றார். “நிகரென நின்று மட்டுமே அறியும் சொல் ஒன்று அவருக்காகக் காத்துள்ளது, மூத்தவரே” என்றான் சகதேவன்.

“அர்ஜுனன் தன் உடன்பிறந்தார் நால்வரிடமும் விடைபெற்றான். விழிநோக்காது திரௌபதியிடம் சொல்கொண்டான். யக்‌ஷவனத்திலிருந்து காண்டீபத்தை மட்டும் கையில் கொண்டு திரும்பிநோக்காமல் நடந்து வடக்குத்திசையேகினான். அவன் காலடிகள் பட்டு வளைந்த புல்நுனிகள் மெல்ல நிமிர்வதை உடன்பிறந்தார் நோக்கி நின்றனர்” என்றான் சண்டன்.

“அவன் பயணத்தை அயோத்திநாட்டுக் கவிஞராகிய சம்விரதர் அர்ஜுனேந்திரம் என்னும் காவியமாகப் படைத்தார். அதை இன்று சூதர் பாடியலைகின்றனர். அர்ஜுனன் கதை நன்று. அது எப்போதும் பெண்களிடமிருந்து அரிசியும் நெய்யும் பெற்றுத்தருவது. இளம்பெண்கள் மட்டும் தனித்தமர்ந்து கேட்பார்களென்றால் மெல்ல அவர்களின் கைவளைகளையோ குழைகளையோகூட கழற்றி வாங்கிக்கொள்ள முடியும்.” அவன் தன் மடிச்சீலையை அவிழ்த்து ஒரு பொன்வளையையும் ஒற்றைக்காதணியையும் காட்டினான். பைலன் புன்னகைத்தான்.

முந்தைய கட்டுரைமன்னிப்பு -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஈராக் போர் அனுபவங்கள்