காந்தளூர்ச்சாலையின் கலைஞன்

தேசிகவினாயகம் பிள்ளை தமிழ் விக்கி

ராஜராஜசோழனின் மெய்கீர்த்திகளில் முக்கியமானது ‘காந்தளூர்ச்சாலை கலமறுத்தளி’ என்ற புகழ்மொழி. ராஜராஜன் பதவி ஏற்ற நான்காவது ஆட்சி ஆண்டிலிருந்து (கி.பி. 988) இந்த அடைமொழி இராஜராஜனின் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. ’காந்தளூர்சாலை கலமறுத்தளிய கோராஜகேசரி வன்மரான ஸ்ரீ ராஜராஜ தேவன்” “காந்தளூர்ச் சாலை கலமறுத்தருளிய ஸ்ரீ ராஜராஜ தேவன்” என்று அவர் குறிப்பிடப்படுகிறார்.

இந்த காந்தளூர்ச்சாலை என்பது என்ன என்பதைப்பற்றி சோழவரலாற்றாசிரியர்கள் நடுவே தொடர்ச்சியான விவாதம் நடந்து வந்துள்ளது. அத்தனை முக்கியமான ஒரு வெற்றியாக அது குறிப்பிடப்படுவதனால் அது சேரநாட்டில் இருந்த ஒரு முக்கியமான துறைமுகமாக இருக்கவேண்டும் என்றும் கலம் என்பது கப்பல்களை குறிக்கிறது என்றும்தான் சொல்லப்பட்டுவந்தது. ஆனால் விழிஞம் என்ற துறைமுகத்தை ராஜராஜன் வென்றது தனியாகவே சொல்லப்படுவதனால் காந்தளூர்ச்சாலை ஒரு துறைமுகமாக இருக்க வாய்ப்பில்லை என்று ஆய்வாலார் நினைத்தார்கள்.

இந்த ஆய்வில் முதல் வெளிச்சத்தை பரப்பியவர் கல்வெட்டாராய்ச்சியாளரான கவிமணி தேசிகவினாயகம் பிள்ளை அவர்கள். காந்தளூர்சாலை விழிஞம் அருகே இருந்திருக்கக்கூடிய ஒரு வேதபாடசாலைதான் என்றும் கலம் என்பது ஒரு மாணவருக்கான உணவுச்செலவைக் குறிக்கும் சொல்லாக இருக்கலாம் என்றும் ஆதாரங்களுடன் வாதிட்டார். இன்றுவரை இந்தக்கோணத்திலேயே ஆய்வுகள் மேலெடுக்கப்படுகின்றன.

கேரள ஆய்வாளர்கள் கேரளப்பின்னணியில் விரிவாக ஆராய்ந்திருக்கிறார்கள். கேரளத்தில் தாந்த்ரீக முறையிலான பூசைகளே கோயில்களில் நடைமுறையில் இருந்தன. அந்த தாந்த்ரீகமுறைகளுக்கு உகந்தமுறையில் தாந்த்ரீகவேதமான அதர்வண வேதத்தையும் சேர்த்து கற்பிக்கும் வேதபாடசாலைகள் இப்பகுதியில் பல இருந்தன. தென்திருவிதாங்கூரில் இருந்த பார்த்திவசேகரபுரம் சாலை காந்தளூரைவிட தொன்மையானது. தாந்த்ரீகமுறை நடைமுறையில் இல்லாத பகுதிகளில் அதர்வ வேதம் கற்பிக்கப்படுவதில்லை என்பதனால் இச்சாலைகள் முக்கியமானவை. இவற்றின் நடைமுறைகளும் தனித்தன்மை வாய்ந்தவை. இங்கே ஆயுதப்பயிற்சிக்கும் இடமிருந்தது.

ராஜராஜசோழன் தான் வென்ற நிலப்பகுதிகளில் முழுக்க சீரான ஆகமமுறை பூசையை ராணுவபலத்தால் கொண்டுவந்தான். அதவ வேதம் கற்பிக்கப்பட்ட வேதபாடசாலைகளை நிறுத்தம் செய்தான். காந்தளூர்சாலையில் அக்காலத்தில் இருந்த முக்கியமான வேதசாலையை அவன் அழித்ததையே மெய்கீர்த்தி குறிப்பிடுகிறது. மேலும் இந்த தகவலை அவன் தன் ஆட்சி நிலவிய எல்லா நிலப்பகுதிக்கும் கொண்டுசெல்லவேண்டியிருந்தது. ஆகமமுறைக்கு எதிரான வழிபாட்டுமுறைகளை தமிழக நிலப்பகுதிகளில் இருந்து அழிக்க அவனுக்கு அது தேவையாகியது.

அக்காலத்தில் நிலங்கள் கோயில்களுக்குச் சொந்தமானதாக இருந்தன. நிதி,நீதி நிர்வாகங்கள் கோயில்களை மையமாக்கிச் செய்யப்பட்டன. கோயில்களை அடிப்படையாகக் கொண்டே அரச அதிகாரம் கட்டி எழுப்பப்பட்டது. ஆகவே கோயிலதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பது மிகமுக்கியமான அரசியல்செயல்பாடாக இருந்தது. கேரளத்தில் பதினெட்டாம்நூற்றாண்டு வரையிலும்கூட அந்நிலை நீடித்தது. ஆகவே ராஜராஜனின் இச்செயல் மிகுந்த முக்கியத்துவத்துடன் அவனாலும் பிறராலும் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டது.

பத்மநாபசாமி கோயில் திருவனந்தபுரம்

கேரளத்தில் சோழர் ஆட்சி இல்லாமலானதுமே தாந்த்ரீக முறை மீண்டும் வந்து இன்றும் நீடிக்கிறது. மீண்டும் அதர்வ வேதம் கற்பிக்கப்படும் வேதபாடசாலைகள் பல இடங்களில் அமைந்தன. கோழிக்கோடு அருகே உள்ள வலியதளி வேதபாடசாலை அவற்றில் மிக முக்கியமானதாக பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை நீடித்தது. வலியதளி வேதபாடசாலையில் நம்பூதிரிகளுக்கு ஆயுதப்பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. காலப்போக்கில் ஆயுதமில்லாமல் வெறும் உடற்பயிற்சிக்கலையாகவும் அனுஷ்டானகலையாகவும் அது உருமாறியது. காந்தளூர்ச்சாலை எப்படி இருந்திருக்கும் என்பதற்கு வலியதளி சாலையே சிறந்த உதாரணமாகும். இதுவே கேரள ஆய்வாளர்களின் பொதுவான ஊகம்.

காந்தளூர்ச்சாலை எங்கே இருந்தது? விழிஞம் -நெய்யாற்றின்கரை சாலையில் உள்ள காந்தளூர் என்ற இடம் இருக்கிறது அதுதான் என்று ஒரு தரப்பு உண்டு. ‌ திருவனந்தபுரம் தொல்லியல்கழக நிறுவனர் கெ.வி.சுப்ரமனிய அய்யர் இந்த ஊகத்தை முன்வைத்திருக்கிறார். ஆனால் அங்கே போதிய புராதன அடையாளங்கள் இல்லை. இன்னொரு வலுவான தரப்பு திருவனந்தபுரத்தில் பத்மநாபசாமி கோயிலின் முன்னாலிருந்து நேராக பிரிந்து வரும் ஆரியசாலை அல்லது வலியசாலை என்ற தெருவில்தான் என்று சொல்கிறது. ஆய்வாளர் டி கோபிநாதராவ் அவர்கள் இந்த தரப்பில் முக்கியமானவர்.

பதினான்காம் நூற்றாண்டில் அனந்தபுரி வர்ணனம் என்ற சம்ஸ்கிருத நூல் இயற்றப்பட்டது. இந்நூலில் ஆரியசாலையின் வர்ணனை உள்ளது. அப்போது இப்பகுதி இன்றிருப்பது போல ஒரு வணிகப்பகுதியாக இருக்கவில்லை. பிராமணர்கள் புழங்கிய பகுதியாகவே சுட்டப்படுகிறது. ஆரியசாலை,செந்திட்டை,வலியசாலை ஆகிய பகுதிகளுக்கு நடுவே காந்தளூர்ச்சாலை வேதபாடசாலை இருந்தது என்று ஆய்வாளார் கெ.சிவசங்கரன்நாயர் சொல்கிறார்[அனந்தபுரி நூற்றாண்டுகளினூடே]

சாலை, திருவனந்தபுரம்

திருவனந்தபுரத்தின் வரலாறு கெ.சிவசங்கரன்நாயரால் விரிவாகவே எழுதப்பட்டுள்ளது. அவற்றில் திருவனந்தபுரம் ஆரியசாலை,வலியசாலை ஆகியவற்றின் பரிணாமம் அளிக்கப்பட்டிருக்கிறது. அனந்தன்காடு என்று ஏதோ ஒருகாலத்தில் இப்பகுதி அழைக்கப்பட்டிருந்தது. அப்போது இங்கே பத்மநாபசாமி கோயிலும் அரசரின் அரண்மனையும் கோட்டைகளும் ஒன்றும் இல்லை. அனந்தன்காட்டுக்கு அருகே காந்தளூர்ச்சாலை வேதசாலைமட்டுமே இருந்தது. மிக ஒதுக்குபுறமான இடம்.

பின்னர் இங்கே பத்மநாபசாமி கோயில் சிறிய அளவில் கட்டப்பட்டது. அனேகமாக சோழர் காலத்திலேயே பத்மநாபசாமி கோயில் இருந்திருக்கலாம். அது காந்தளூர்ச்சாலை வைதிகர்கள் வழிபடுவதற்கான கோயிலாக இருந்திருக்கிறது. காந்தளூர்ச்சாலை அழிக்கப்பட்டபோது காந்தளூர்ச்சாலைக்கும் கோயிலுக்குமுரிய அதிகாரம் சோழர்களால் எட்டுவீட்டு பிள்ளைகள் என்ற நிலப்பிரபுக்களுக்கு அளிக்கப்பட்டது. மன்னர் மார்த்தாண்ட வர்மா மகாராஜா 1740 ல் எட்டுவீட்டுப்பிள்ளைகளை அழித்து கோயிலைக் கைப்பற்றி இன்றுள்ளவகையில் விரிவாக்கி கட்டி மீண்டும் தாந்த்ரீகமுறை பூஜைகளை நடைமுறைப்படுத்தினார்.

சாலை,பழையபடம்
மார்த்தாண்டவர்மா காலகட்டத்தில் ஆரியசாலைக்கும் வலியசாலைக்கும் நடுவே கோயிலுக்கு தேவையான பொருட்களை விற்கும் ஒரு சிறு சந்தைக்கூடல் உருவாகி வந்தது. இது சாலைக்கம்போளம் [சாலைசந்தை] என்று சொல்லப்பட்டது. மெல்ல மெல்ல அரண்மனைக்கும் பிற குடிமக்களுக்கும் உரிய பொருட்களை விற்கும் இடமாக இது வளர்ந்து திருவனந்தபுரத்தின் முக்கியமான வணிக மையமாக ஆகியது.

அக்காலம் முதல் இன்றுவரை திருவனந்தபுரத்துக்கு தேவையான முக்கியமான பொருட்கள் பெரும்பாலும் தமிழகத்தில் இருந்தே வந்தன. நெல்லும் . காய்கறிகளும் நாஞ்சில்நாட்டில் இருந்து வந்தது. வத்தல்மிளகாய், மஞ்சள்,மல்லி போன்ற மளிகைப்பொருட்கள் தமிழ்நாட்டில் இருந்து வந்தன. புகையிலை போன்றவை தூத்துக்குடிக்கு வந்து அங்கிருந்து வந்தன.

இப்பொருட்களை திருவனந்தபுரத்திற்காக கொள்முதல்செய்வதற்காக ஒரு சந்தை நாகர்கோயிலில் கோட்டாறில் செயல்பட்டது. இது மிகமிகப்புராதனமான சந்தை. அனேகமாக சங்ககாலத்திலேயே இருந்திருக்கலாம். கோட்டாறு என்பது இன்றைய நாகர்கோயில் ரயில்நிலையம் அருகே பழையாறு என்று இன்று அழைக்கப்படும் ஆறு வளைந்து செல்லும் இடத்தில் இருந்தது. வளைந்து செல்வதனால் இதன்பெயர் கோட்டாறு. இது பாண்டியநாடும் சேரநாடும் சந்தித்துக்கொள்ளும் முக்கியமான வணிகமுனையாக விளங்கியது.’கோட்டாறும் வெள்ளாறும் புகையால் மூட’ சேரநாட்டை குலோத்துங்க சோழன் வென்றான் என்று கல்வெட்டு சொல்கிறது.

அன்றைய நிலக்காட்சியை ஊகித்து இந்த இடத்தை கற்பனைசெய்ய வேண்டும். அன்று கோட்டாறில் நிறைய நீர் இருந்தது. ஆகவே கடலில் இருந்து மணக்குடி பொழி எனப்படும் காயல் வழியாக பழையாறு வழியாக இந்த இடம் வரை பெரிய தோணிகள் வந்திருக்கும். தமிழ்நிலப்பகுதியில் இருந்து வண்டிகளில் வந்துசேரும் பண்டங்கள் இங்கே கொள்முதல்செய்யப்பட்டு மணக்குடி பொழி வழியாக கடலுக்குள் சென்று திருவனந்தபுரம் கொல்லம் முதலிய ஊர்களை அடைந்தன. மணக்குடிபொழி பத்தொன்பதாம்நூற்றாண்டு வரைக்கூட முக்கியமான வணிகவழியாக இருந்திருக்கிறது. பின்னர் திருவனந்தபுரத்தை நாகர்கோயிலுடன் இணைக்கும் உள்நாட்டு நீர்வழியான அனந்த விக்டோரியா கால்வாய் வெட்டப்பட்டது.

இந்தக்காலகட்டத்தில்தான் திருவனந்தபுரத்துடனான வணிகத்தில் தமிழர்களின் கை ஓங்க ஆரம்பித்தது. தமிழ்நிலப்பகுதிகளில் இருந்து கொள்முதல்செய்யப்பட்ட பொருட்களை திருவனந்தபுரத்தில் வணிகம்செய்வது பெரும்பாலும் தமிழர்களின் ஏகபோகமாகவே இருந்தது. சாலைத்தெரு முழுக்க அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. அரிசி போன்ற உணவுப்பொருட்களின் வணிகத்தில் வேளாளர்களும் புகையிலை, கருப்பட்டி போன்றவற்றில் நாடார்களும் முழு ஆதிக்கம் செலுத்தினர். இந்த வணிக ஆதிக்கம் இன்றும் நீடிக்கிறது. சாலைத்தெரு என்பது இன்றும் தமிழர்தெருவே. திருவனந்தபுரம் பாராளுமனற தொகுதியிலேயே தமிழர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட பாதியளவு உள்ளது.

சாலைத்தெரு முழுக்க இன்று தமிழர்களின் கடைகள். கூலவணிகம் இன்றும் மைய இடத்தில் உள்ளது. ஆனால் அதற்கு நிகராக விற்பவை பிளாஸ்டிக் பொருட்ஜள். அலுமினியப்பானைகள் தெருவெல்லாம் கொட்டிக்கிடக்கின்றன. இத்தனை கலங்கள் எதற்கு என்ற துணுக்குறல் ஏற்படுகிறது. ஆச்சரியம்தான். ராஜராஜசோழன் கலமறுத்தருளிய இடத்தில் தமிழர்கள் இன்று கலம்விற்கிறார்கள். நகரின் இதயம் என்று சொல்லப்படும் வலியசாலை வழியாக நடக்கையில் அங்கே ஒலிக்கும் பேச்சுத்தமிழ் சோழனின் முரசொலியாகவே காதுக்குக் கேட்கிறது.

ஆ.மாதவன்

சாலைத்தெருவின் தமிழ்ப்பண்பாட்டின் இலக்கிய அடையாளம் என்று ஒரு தனிமனிதர் குறிப்பிடப்படுகிறார். ஆ.மாதவன். கிட்டத்தட்ட அரைநூற்றாண்டாக தமிழ் நவீன இலக்கியப்பரப்பில் செயல்பட்டு வரும் ஆ.மாதவனின் அனைத்துப் படைப்புகளும் இந்த ஒரே தெருவை, இதன் சுற்றுவட்டங்களை மட்டுமே களமாகக் கொண்டவை. இந்தத்தெருவின் மக்கள் வரலாற்றை அவர் எழுதிக்கொண்டே இருக்கிறார் எனலாம்.

எழுபதுகளில் வெளிவந்த கடைத்தெருக்கதைகள் என்ற தொகுதி தமிழிலக்கிய உலகில் பெரும் கவனத்தை ஈர்த்தது. ஒரு தொகுதியின் அனைத்துக்கதைகளும் ஒரு தெருவைப்பற்றியவை என்பது அபூர்வமான ஒரு இலக்கியநிகழ்வு. இவ்வாறு ஒரு சாலையை மட்டுமே எழுதிய பிறிதொரு படைபபளி இந்திய மொழிகளில் வேறு எவரும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆ.மாதவன் ஒரு தெருவின் கதையாசிரியர். அவர் இலக்கியக்கலைஞர் என்பதனால் அந்த தெருவை மானுட வாழ்க்கையாகவே மாற்றிவிட்டிருக்கிறார்

முந்தைய கட்டுரைநூல்கள்,கடிதங்கள்
அடுத்த கட்டுரைதஞ்சை கடிதங்கள்