‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 9

[ 6 ]

முந்நூறாண்டுகளுக்கு முன்பு விருஷ்ணிகுலத்தின் ஒரு பிரிவாகிய  கோகிருதம் என்னும் தன் தொல்குடியிடமிருந்து ஏழு பசுக்களையும் மூன்று காளைகளையும் பங்குச்செல்வமாக பெற்றுக்கொண்டு மதனர் என்னும் யாதவர் வடக்காகக் கிளம்பினார். அப்போது அவருக்கு இருபத்தெட்டு வயது. அவர் மணந்த சுதமைக்கு இருபத்தொன்பது.  அவர்களுக்கு ஏழு குழந்தைகள் இருந்தன. அவர்கள் நோக்கிய நிலமெல்லாம் முன்னரே குடியேறிய யாதவர்களுக்குரியவை என மரங்களில் இலச்சினை பொறிக்கப்பட்டிருந்தது. இன்னும் இன்னும் என விலக்கி இருக்கும் இருக்கும் என நம்பி அவர்கள் சென்றுகொண்டிருந்தனர்.

யாதவகுடிகள் விரிந்து  கன்று பெருகிய காலம் அது. மேய்ச்சல்நிலங்களுக்கான பூசல்கள் தொடங்கிவிட்டிருந்தன. கோகிருதத்தின் குடியவை கூடி அவர்களுக்குரியதென அமைந்த காட்டில் எங்கு எவர் தங்கள் கன்றுகளை மேய்க்கவேண்டும் என்று நெறியமைத்தது. கன்றுகளின் காதில் அவற்றின் உரிமையாளர்கள் மணிகோத்து அடையாளம் பொறிக்கவும் முறைவைத்து காடுகளை மாற்றிக்கொண்டு எல்லைக்குள் மட்டுமே மேய்க்கவும் ஆணையிட்டது.

மதனர் வளர்த்த காராம்பசு ஒன்று கட்டவிழ்த்துக்கொண்டு அவர் உடன்பிறந்த மூத்தவரின் பசுக்களுக்காக வகுக்கப்பட்டிருந்த புல்வெளியில் புகுந்தது. அது அங்கு மேய்வதைக்கண்ட மூத்தவர் அதை பிடித்திழுத்துச்சென்று பெருமரம் ஒன்றில் கழுத்து இறுகக் கட்டினார். பகலெல்லாம் பசுவைக் காணாது அலைந்த மதனர் அந்தியில் அதை கண்டுகொண்டார். நீரும் புல்லுமின்றி குரலெழுப்ப இயலாது கழுத்திறுகித் தொங்கி நின்ற பசுவைக் கண்டதும் அழுதபடி ஓடிச்சென்று கட்டை அவிழ்த்து பசுவை விடுவித்தார். அதன் கண்களில் வழிந்திருந்த கண்ணீரின்தடம் அவர் நெஞ்சை கொந்தளிக்கச் செய்தது.

சினத்தால் நடுங்கும் உடலுடன் அவர் சென்று தன் தமையன் முன் நின்று “இது முறையா? குலம்புரக்கும் அன்னை உணவும் நீருமின்றி நிற்கச்செய்ய நமக்கு என்ன உரிமை?” என்றார். அவ்வுணர்வை புறக்கணித்து “என் எல்லைக்குள் வந்தது உன் பசு” என்று தமையன் சொன்னார். “பசு எவருக்கும் உரிமையல்ல. யாதவர்கள்தான் பசுக்களுக்கு உரிமையானவர். மூத்தவரே, நிலத்தை நாம் பகுக்கலாம், பசுவுக்கு அது ஒற்றைப்பெருவெளியே” என்றார். “நான் என்ன செய்யவேண்டும் என நினைக்கிறாய்?” என்றார் மூத்தவர். “எழுந்து என் பசு முன் தலைவணங்கி பொறுத்தருளும்படி கோருக! பசுவின் பழிகொண்ட குலம் வாழ்வதில்லை” என்றார் மதனர்.

சினம் கொண்ட மூத்தவர் “விலகிச்செல் அறிவிலியே, நீ எனக்கு அறிவுரை சொல்கிறாயா?” என்று கூவியபடி இளையவனை கையால் பிடித்துத் தள்ளினார். மல்லாந்து விழுந்த மதனர் சினம் தலைமீற அருகிருந்த கல்லை எடுத்து தமையன் தலைமேல் ஓங்கி அறைந்தார். அதன்பின்னரே தான் செய்ததென்ன என்று அறிந்து அழுதபடி தமையன் காலில் விழ முன்னால் சென்றார். அவரை உதைத்து உதறிவிட்டு “தந்தைப்பழி கொண்டவனே, நீ இனி இங்கிருக்கலாகாது” என்று தமையன் கூவினார்.

குருதி வழிய தமையன் ஓடிச்சென்று குலமூத்தார் கூடிய அவையில் நின்று கதறி முறையிட்டார். நிலம் வகுத்த எல்லையை மீறியதும் அதைத் தடுத்த தமையனை தாக்கியதும் பெரும்பிழை என அவை வகுத்தது. பங்குச்செல்வத்தைப் பெற்று குலம்விட்டு விலகிச்செல்லும்படி மதனருக்கு ஆணையிட்டது. அவருக்கு தந்தையின் செல்வமெனக் கிடைத்தது பதினேழு பசுக்கள். அவற்றில் பத்து பசுக்களை அடிபட்ட தமையனுக்கு பிழையீடாக அளித்துவிட்டு எஞ்சியவற்றுடன் இரவெழுவதற்குள் குடிநீங்கும்படி சொன்னார்கள் மூத்தார்.

பதினேழு நாட்கள்  ஊர்கள் வழியாகவும் குறுங்காடுகள் வழியாகவும் தனக்கென நிலம் தேடி நடந்து களைத்த மதனர் ஒருநாள் மாலையில்  ஓர் அத்திமரத்தின் அடியில் தங்கினார். இளமழை சொரிந்த  குளிர்மிக்க அவ்விரவில் பாளைக்குடிலை தலைக்குமேல் அமைத்து மரவுரிகளைப் போர்த்தியபடி மனைவியை அணைத்துக்கொண்டு துயின்றார். அவரைச் சூழ்ந்து அவர் அழைத்துச்சென்ற பசுக்கள் நின்றன. அவற்றைச் சூழ்ந்து எருதுகள் நின்றன. காட்டுவிலங்குகள் அணுகாதிருக்க தறியறைந்து மணிகோத்துக் கட்டிய சரடு அவர்களை சூழ்ந்திருந்தது.

காலையில் அவர் கண்விழித்தபோது அவரைச் சூழ்ந்து ஏழு கனிந்த அத்திப்பழங்கள் விழுந்துகிடக்கக் கண்டார். அவ்விடம் திருமகள் உறையும் நிலம் என அவர் உணர்ந்தார். அங்கேயே குடில் ஒன்று கட்டி குடியிருக்கலானார். ஏழு கனிகள் விழுந்த இடத்தில் கல் ஒன்று நாட்டி திருமகளை நிறுத்தி வணங்கினார். மங்கலமஞ்சளும் மலரும் கொண்டு அவளை வழிபட்டாள் அவர் குலமகள். “இது இளையவள் அருளிய இடம். இங்கு அமைவோம். இங்கு தழைக்கும் நம் குடி” என அவர் அவளிடம் சொன்னார்.

அந்நிலத்தில் திருமகள் பொலிந்தாள். கன்றுகள் பெற்றுப்பெருக குடி எழுந்துபரந்தது. சப்தஃபல கன்னிகை என்றே அத்திருமகள் அழைக்கப்படலானாள். அவ்வூரும் சப்தஃபலம் என்று பெயர்கொண்டது. நூற்றெட்டு தலைமுறைகளாக அங்கே ஆபுரந்து அறம்வளர்த்த அத்தொல்குடி மாதனிகர் என்று அழைக்கப்பட்டது. விருஷ்ணிகுலத்தின் அவைகளில் அத்திமரத்தின் இலையை தலைப்பாகையில் சூடியமர்ந்திருக்கும் உரிமை கொண்டிருந்தது.

சப்தஃபலத்தின் தென்மேற்குமூலையில் இருந்த சிற்றாலயத்தில் சிறிய கற்சிலையாக கைகளில் மலரும் அமுதகலமும் சுடரும் கொண்டு அருட்கை மலர்ந்து அமந்திருருந்த சப்தஃபலகன்னிகையே அவ்வூரில் வாழ்ந்த மூன்று கொடிவழிகளுக்கும் பொதுவான குடித்தெய்வம். அன்னைக்கு ஒவ்வொருநாளும் அன்றலர்ந்த புதுமலர்களால் பூசனை செய்யப்பட்டது. புத்தரிசிச்சோறும் மஞ்சள்குழம்பும் படைக்கப்பட்டது. கருவுற்றாலும் ஈன்றாலும் அங்குவந்து வழிபட்டனர். புதுப்பாலை அன்னைக்குப் படைத்தனர். அவர்களின் ஆநிரை காப்பவள் அவள் என்று தொழுதனர்.

முதற்புலரியில் ஊரெழுவதற்கு முன்னர் சப்தஃபலத்தின் இளையவள் எழுந்துவிடுவாள். குறுங்காட்டிலிருந்து நீராவி கலந்த குளிர்காற்றில் பசுந்தழை மணம் மொண்டு ஊர்மேல் நிறைப்பாள்.  இல்லங்களின் முற்றங்களில் இரவில் பூத்த மலர்களை உதிர்த்துப்பரப்புவாள். காற்று அலைபரவிய புதுப்புழுதித் தெருவில் அவள் காலடித்தடம் தெரியும். இல்லத்துப்பெண்கள் காலையெழுந்து கதவுதிறக்கும்போது மங்கல இளம்வெளிச்சமாக அவள் முற்றத்தை நிறைத்திருப்பாள். அவர்கள் பச்சரிசி மாவால் பசுஞ்சாணிப்பரப்பில் அவள் கால்தடங்களை கோலமாக வரைந்து வைப்பார்கள்.

அன்று இளையவள் தன் கோயிலில் இருந்து எழுந்து வெளிவந்தபோது எதிரே இருண்ட சாலையில் கலைந்த குழலும் தளர்ந்துலைந்த நடையுமாக இளையோன் ஒருவன் வருவதைக் கண்டாள். விடியொளி விழிதுலக்கத் தொடங்கியிருந்தபோதும் அவனைச் சுற்றியிருந்தது அடரிருள் ஒன்று. அவனைத் தொடர்ந்து எலிகள் வந்துகொண்டிருந்தன. தலைக்குமேல் வௌவால்கள் அவனைச் சூழ்ந்து சிறகடித்தன. அவன் வருவதற்குள்ளாகவே கெடுமணம் கொண்டு காற்று வந்தது.

அன்னை அவன் முன்னால் புன்னகையுடன் நின்று “மைந்தா” என்றாள். அவன் அவளை அலையும் விழிகளுடன் நோக்கி ஒருகணம் நின்று பின் தன் அழுக்கான கையை நீட்டி “விலகு” என ஒதுக்கிவிட்டு கடந்துசென்றான். அவள் “நான் யாரென்று அறிவாயா?” என்றபடி அவன் பின்னால் செல்ல அவன் இயல்பாக காறித்துப்பிய எச்சில் அவள் முகத்தில் விழுந்தது. திகைத்து அவள் அங்கேயே நின்றுவிட்டாள். அவன் திரும்பி நோக்காமல் நடந்து மறைந்தான்.

நின்றிருக்கவே அவள் உடல் கருமைகொண்டது. அவள் வலத்தோள்மேல் காகம் ஒன்று வந்தமர்ந்தது. அவள் இனிய புன்னகை மறைந்து கரிய கோரைப்பற்கள் எழுந்தன. கனைத்தபடி கழுதையொன்று அவளருகே வந்து நிற்க அவள் அதன் மேல் ஏறியமர்ந்தாள்.  கையில் அவள் கொண்டிருந்த வெண்தாமரை மலர் துடைப்பமாக மாறியது. அவள் உடலெங்கும் பரவியிருந்த ஒளி மெல்ல இருண்டு ஒட்டடைப்படர்வாகியது.

[ 7 ]

கசியபப் பிரஜாபதிக்கு அரிஷ்டையெனும் துணைவியில் பிறந்த பதினாறாயிரம் கந்தர்வர்களில் மூத்த நூற்றெண்மரில் ஒருவனாகிய சித்ரசேனன் தன் காதல் மனைவியாகிய சந்தியையுடன் விண்முகில் ஒன்றில் யாழுடன் அமர்ந்து காதலாடினான். அந்தியெழும் வேளையில் காற்றில் பனித்துளியென விண்ணில் பொன்னிறத்தில்  திரண்டு வரும் பேரழகி அவள். அந்தி இருண்டு விண்ணின் விழிகள் திறக்கும்போது அவனை மொழியால் சூழ்ந்து, மேனியால் தழுவி, காமத்தால் புதைத்து அவள் மகிழ்விப்பாள். மழைக்கால மலைகளைப்போல அவனிலிருந்து குளிரருவிகள் ஒளியுடன் எழும். அத்திமரம் கனிகொண்டதுபோல அவன் வேரும் தடியும் கிளையும் இனிமைகொண்டு நிறைவான்.

ஆனால் முதற்சூரியக் கதிர் எழுவதற்குள் அவள் உடல்கரைந்து உருமாறத்தொடங்குவாள். அவள் உடலின் தோலில் சுருக்கங்களும் மடிப்புகளும் உருவாகும். முகமெங்கும் வரி படரும். உடல்கூன கண்கள் பஞ்சடைய கூந்தல் நரைத்துக்குறுக முதுமகளாக ஆவாள். அவளுக்கு அப்போது வலிகை என்று பெயர். இருவுருக்கொண்ட ஒருமகள்  அவள் என்று சித்ரசேனன் அறிந்திருக்கவில்லை.  இரவில் ஒருமுகமும் பகலில் மறுமுகமும் கொண்ட அவளுடைய எழில் முகத்தை மட்டுமே அவன் கண்டான்.

முன்பு அந்திப்பொழுதில் முகிலில் கனிந்த மழைத்துளி ஒன்று செவ்வொளிபட்டு பொன்னென்றாகியது. அவ்வழி விண்ணில் கடந்துசென்ற பிரம்மன் புன்னகைத்து அவளை ஒரு கன்னியென்றாக்கினான். கைகூப்பி நின்றிருந்த கன்னியிடம் “பிந்துமதி என்று எழுந்தவள் நீ. இசைகொண்டு உன்னை மீட்டும் கந்தர்வன் ஒருவனுக்கு காதலியாகுக!” என்று வாழ்த்தினான். விண்ணில் ஒளிவிட்டு நின்றிருந்த அவளை இரு தேவியர் அணுகி இருகைகளையும் பற்றிக்கொண்டனர். வலக்கையைப் பற்றியவள் திருமகள். “நான் இளையோள். உன்னில் எழிலையும் மங்கலத்தையும் நிறைப்பவள்” என்றாள். இடக்கையைப் பற்றியவள் இருள்மகள். “நான் தமக்கை. உன்னை நீ மட்டுமே அறியும் பேராற்றல் கொண்டவளாக ஆக்குவேன்” என்றாள்.

இருவரில் ஒருவரைத் தெரிவுசெய்ய முடியாது பிந்துமதி திகைத்தாள். இருவரும் இரு கைபற்றி இழுக்க அவள் இரண்டாகப் பிரிந்தாள். ஒருத்தி பேரழகுகொண்ட சந்தியை. பிறிதொருத்தி முதுமைகொண்டு சுருங்கிய வலிகை. அந்தியில் எழுந்தவள் சூரியனை அறியவே இல்லை. பகலில் உழன்றவள் விண்மீன்களை பார்த்ததே இல்லை. ஆனால் சந்தியையைக் கூடும் காமத்தின் ஆழத்தில் சித்ரசேனன் வலிகையைக் கண்டான். அழகைப் பிளந்தெழுந்த ஆற்றலை உணர்ந்தான்.

அன்றும் அவளுடன் காமத்தில் திளைக்கையில் ஆழத்து அலைகளில் ஆயிரம் கைகளும் பல்லாயிரம் கண்களும் கொண்டெழுந்த வலிகையின் விழைவின் பேராற்றலை உணர்ந்து திகைத்துத் திணறிக் கொண்டாடி மூழ்கி எழுந்து மீண்டு வந்து மல்லாந்து படுத்து அன்று அவனுடன் உரையாட எழுந்த விண்மீனை நோக்கிக் கொண்டிருந்தான். அவனருகே புரண்டுபடுத்த சந்தியை “நீங்கள் என்னுடன் இருக்கையில் பிறிதொருவரிடம் செல்கிறது உங்கள் உள்ளம். என் கைகளுக்குச் சிக்கிய உடலுக்குள் உள்ளம் இல்லை என்பதை ஒருகணம் உணர்ந்தேன்” என்றாள்.

“ஆம், ஆழத்தில் நீ பிறிதொருத்தியாக ஆகிறாய். அந்த ஆற்றலை எதிர்கொள்கையிலேயே என்னுள்ளும் ஆற்றல் எழுகிறது” என்றான் சித்ரசேனன். “அது நானல்ல” என்று அவள் சீறினாள். “அதுவும் நீயே. நீயென்று நீ நிகழ்த்துவது மட்டும் அல்ல நீ” என்று அவன் நகைத்தான். அவள் சினத்துடன் அவனை நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள். அவன் முகத்தின் உவகைக்குறி அவளை எரியச்செய்தது. பின்னர் குனிந்து அவன் செவிகளுக்குள் “நான் அவளென்று ஆனால் உங்களுக்கு பிடித்திருக்குமா?” என்றாள். அவள் வினாவை நன்குணராத சித்ரசேனன் “ஆம்” என்றான். அவள் மூச்சில் முலைகள் எழுந்தமைய அவனையே நோக்கிக்கொண்டிருந்தாள்.

முதற்கரிச்சான் குரலெழுப்புவதற்குள் விழித்துக்கொண்டு அவன் இதழ்களை முத்தமிட்டு எழுப்பி விடைகொண்டு அகல்வது அவள் வழக்கம். அன்று அவள் வஞ்சமெழுந்த விழிகளால் அவனை நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள். கீழ்த்திசையில் முதல்புள் காலை என்றது. முகில்குவையின் நுனிகளில் செம்மை படரத் தொடங்கியது. அவள் புறங்கைகளில் நரம்புகள் புடைத்தெழுந்தன. கண்களுக்குக் கீழே தோல்வளையங்கள் கருகியிறங்கின. முகவாயில் ஆழ்ந்த வாய்வரிகள் விரிசல்போல் ஓடின. நெற்றியில் கோடுகள் படிந்தன.

அவனை முத்தமிட்டு “எழுக!” என அவள் சொன்னபோது அவள் வலிகையென்றாகிவிட்டிருந்தாள். அவன் விழித்து கையூன்றி எழுந்து அவளை நோக்கி “யார் நீ?” என்று கூவினான். “நான் மூத்தவளாகிய வலிகை. சந்தியையின் மறுமுகம்” என்றாள். “இல்லை, நீ எவரோ. நான் உன்னை அறியேன்” என்று அவன் கூவியபடி எழுந்தான். அவள் அவன் ஆடைபற்றி நிறுத்தி “நீ என்னை அறிவாய்” என்றாள். அவள் விழிகளில் எரிந்த விழைவைக் கண்டதுமே அவன் அறிந்துகொண்டான். “ஆம்” என்றான். அவனிலும் அவ்விழைவு பற்றிக்கொண்டது.

அவளுடன் அவன் காமத்திலாடினான். எரி எரியை ஏற்று எழுவதுபோன்ற காமம். கீழே சித்ரகூடமெனும் காடு புள்ளொலியும் சுனைகளிள் மணியொளியும் என நிழல்கரைந்து விடிந்துகொண்டிருந்தது. காதலில் கொண்டிருந்த எல்லா நுண்மைகளையும் அழகுகளையும் அவன் துறந்தான். இன்சொற்களும் நெகிழுணர்வுகளும் அகன்றன. வன்விழைவே இயல்பென்றான விலங்கென மாறினான். கூடி முயங்கி மூச்சிரைக்க திளைத்த பொழுதில் அவள் வாயிலிட்டு அளித்த வெற்றிலைச்சாற்றை தன் வாயில் வாங்கி மென்று திரும்பி நீட்டி நிலத்துமிழ்ந்தான்.

[ 8 ]

கௌசிக குலத்தில் பிறந்தவரும் விசுவாமித்திர மாமுனிவரின் கொடிவழி வந்தவருமாகிய காலவ முனிவர் கின்னரநாட்டின் மேல்விளிம்பில் அமைந்த  சித்ரகூடம் என்னும் பசுங்காட்டின் நடுவே குடில் அமைத்து தன் பதினெட்டு மாணவர்களுடன் தவமியற்றி வந்தார். ஆறாக்கடுஞ்சினம் கொண்ட முதல்முனிவரின் அவ்வியல்பையே தானும் கொண்டவர் என்று அவர் அறியப்பட்டிருந்தார்.

ஆவணி மாதக் காலை ஒன்றில் காலவர் தன் முதல் மாணவர் மூவருடன் அக்காட்டின் நடுவே ஓடும் சித்ரவாகினி என்னும் ஆற்றின் கரைக்கு கதிர்வணக்கத்திற்காக சென்றார். நீராடி, சடைமுடிக் கற்றைகளை தோளில் பரப்பி, கிழக்கு நோக்கி இடைவரை நீரில் நின்று, எழுசுடர் கொண்டிருந்த செம்மையை தன் முகத்தில் வாங்கி, சூரியனை வழுத்தும் வேதச்சொல்லை ஓதி,   நீரள்ளி கதிருக்கு நீட்டி கை மலர்ந்தபோது அதில் உமிழப்பட்ட வெற்றிலைச்சாறு வந்து விழுந்தது.

பறவை எச்சம் போலும் என்று எண்ணி அதை நோக்கிய காலவர் அறிந்து அருவருத்து கையை உதறி அதை நீரில் விட்டார். கைகளை மும்முறை கழுவியபடி தலை நிமிர்ந்து வானைப் பார்த்தபோது கடந்து சென்ற முகில் ஒன்றின் மேல் அரைமயக்கில் படுத்திருந்த கந்தர்வனின் கழலணிந்த காலை கண்டார். அப்பால் அக்காலுடன் பிணைந்ததென கந்தர்வப் பெண்ணொருத்தியின் கால் தெரிந்தது.

KIRATHAM_EPI_09

நிகழ்ந்ததென்ன என்று அக்கணமே உணர்ந்த  காலவர் குனிந்து நீரில் ஒரு பிடி அள்ளி வான் நோக்கி நீட்டி “நீ எவராயினும் ஆகுக! என் தவத்தூய்மை மேல் உமிழ்ந்த உன்னை இன்று நாற்பத்தொரு நாள் நிறைவுறுவதற்கு முன் எரித்தழிப்பேன். உன் பிடி சாம்பலை அள்ளி நீறென உடலணிந்து இங்கு மீண்டு என் தவம் தொடர்வேன். ஆணை! ஆணை! ஆணை!” என்றார். அவருடைய மூன்று மாணவரும் குனிந்து நிலம் தொட்டு “புவி சான்றாகுக! நிலை சான்றாகுக! வேர் சான்றாகுக!” என்றனர்.

சினம் எரிந்த உடலுடன் காலவர் சென்ற வழியெல்லாம் தளிரிலைகள் கருகின. புட்கூட்டம் அஞ்சிக் கூவி வானிலெழுந்தது. தன் குடில் மீண்ட காலவர் தனியறைக்குள் சென்று புலித்தோல் விரித்து அதன் மேல் அமர்ந்து விழிமூடி ஊழ்கத்தில் ஆழ்ந்தார்.  அவர் அறைக்கு வெளியே மாணவர்கள் கைகூப்பி காத்து நின்றனர். ஊழ்கத்தில் தன் இதழ்களை ஒவ்வொன்றாக விரித்து மூதாதையர் அளித்த முதற்சொல்லை மீட்டார். அதன் சரடு வழியாகச் சென்று அங்கு அடைந்து உச்சிநின்று கூவினார். “என் தவத்தை இழிவு செய்தவன் எவன்? தெய்வங்களே இங்கெழுந்து அவனை காட்டுங்கள்!”

தன்னுள் எஞ்சிய இறுதி வேதச்சொல்லெடுத்து ஆணையிட்டார். “இங்கு எழுக என் கையின் அவிகொண்ட எரி!” அவர்முன் அகல் சுடரிலிருந்து எழுந்து திரைச்சீலையை பற்றிக்கொண்டு நின்றெழுந்த அனலவன் “முனிவரே, அவன் பெயர் சித்ரசேனன். விண்ணில் தன் துணைவியுடன் காதல்கொண்டிருக்கையில் நிலைமறந்தான்” என்றான். காலவர் சீற்றத்துடன் “எப்போதும் நிலைமாறாதவனே விண்ணூரும் தகுதிகொண்டவன். அவன் கால்கீழே வேதச்சொல் ஓதும் முனிவர் வாழ்வதை அவன் அறிந்திருக்கவேண்டும்” என்றார்.

அனலோன் “ஆம், ஆனால் காதலென்பது கட்டற்றது அல்லவா?” என்றான். “காலவரே, இக்காடு விண்ணில் அவன் கொண்ட காதலின் பொருட்டு மண்ணில் அவனால் உருவாக்கப்பட்டது. ஆயிரமாண்டுகாலம் தன் யாழை மீட்டி அதன் சுதியின் அலைகளிலிருந்து இப்பசுமரப் பெருவெளியை அவன் படைத்தான். இங்கு மரங்களை சமைத்து, சுனைகளையும் குளிர்ந்த பாறைகளையும் உருவாக்கினான். விழிமின்னும் மான்களும் தோகை விரிக்கும் மயில்களும் பாடும் குயில்களும் அவனால் உருவாக்கப்பட்டதே. இங்கு ஆண்டு முழுக்க வெண்குடையென நின்று கனிந்து மழை பெய்து கொண்டிருக்கும் முகில் அவன் இல்லம். தன் நூற்றியெட்டு தேவியருடன் அவன் இங்கு வசிக்கிறான். வெல்லற்கரியவன். விண் துளிகளுக்கு நிகரான அம்பு பெய்யும் ஆற்றல் கொண்டவன்.”

காலவர் சினம் மேலும் கொழுந்துவிட கூவினார் “என் சொல் மாறாது. இவன் செயலால் என் தவம் கொண்ட இழிவு இவன் அழியாமல் அணையாது. அவனை நான் வென்றாக வேண்டும்.”  எரியன் “முனிவரே! அவனுடைய காட்டில் குடியேறியிருப்பது தாங்கள்தான். தன் இன்பத்தை பெருக்கிக்கொள்ளும் பொருட்டு குயிலுக்கு காகத்தையும் மயிலுக்குக் கோழியையும் மானுக்குப் புலியையும் குளிரோடைக்குக் காட்டெரியையும் அவனே உருவாக்கினான். தன் காமத்திற்கு மாற்றாக இங்கு உங்களை அவன் குடியேற்றினான். முற்றும் துறந்து தவம் செய்யும் பொருட்டு வெற்றுடலுடன் நீங்கள் இக்காட்டின் எல்லைக்கு வந்தபோது இவ்வழியே என்று கூவும் வழிகாட்டிப் பறவையாக உங்கள் முன் தோன்றி இங்கு அழைத்துவந்தவன் அவன்தான்” என்றான்.

“இக்காடல்ல நான் குடியிருக்கும் இடம். என் உள்ளத்தில் எழுந்த வேதச்சொல் விளையும் வெளியில் அமர்ந்திருக்கிறேன். பிறிதொன்றும் எனக்கொரு பொருட்டல்ல” என்று காலவர் சொன்னார். “பொறுத்தருள்க, முனிவரே! அவனை இங்கு அழைத்து வருகிறேன். உங்கள் வேள்விக்காவலன் என்று நின்றிருப்பான். உங்கள் தாள் பணிந்து பிழை பொறுக்குமாறு அவன் கோருவான்” என்றான் அனலோன். “இல்லை, நான் விழைவது அவன் எரிநீறு மட்டுமே” என்று காலவர் சொன்னார்.

“ஆம், அவன் அறியாமல் இப்பிழை ஆற்றப்பட்டிருக்கலாம். ஆனால் அவன் உமிழ்ந்த மிச்சில் என் மீதல்ல, நான் கொண்ட தவம் மீது மட்டுமல்ல, எந்தையின் மீதும்கூட. என் முதுமூதாதை விசுவாமித்திரர் மீது விழுந்த வாய்நீர் அது. அனலோனே, மானுடர்க்கரிய அருந்தவம் இயற்றி படைப்பவனுக்கு நிகரென பேருரு கொண்டபோதும் அந்தணர் அல்ல என்பதனால் ஆயிரம் அவைகளில் இழிவுபட்டவர் என் மூதாதை விசுவாமித்திரர். இன்றும் அவ்விழிவின் ஒரு துளி சூடியே நானும் என் குலத்தோரும் இம்மண்ணில் வாழ்கிறோம்.”

“என் கையில் விழுந்த அவ்வெச்சில் இங்கு நாளை வேதியரால் இளிவரலாக விரியுமென்பதை நான் அறிவேன். அது சூதர் சொல்லில் எப்படி வளரும் என்றும் நானறிவேன். அவனைப் பொசுக்கிய சாம்பல் ஒன்றே அதற்குரிய மறுமொழியாகும். கௌசிககுலத்தின் தவத்திற்குச் சான்றென அது நின்றிருக்கட்டும் கதைகளில்” என்று காலவர் சொன்னார். “இனி சொல்லாடவேண்டியதில்லை. நீ செல்லலாம்” என்றார்.

அனலோன் “அவ்வண்ணமெனில் உங்கள் சொல்வல்லமையால் அவனுடன் போர்புரிக! முனிவரே, மண்ணில் எவரும் அவனை வெல்ல முடியாதென்று அறிவீர்” என்றான். காலவர் “விண்ணில் ஒருவன் அவனை வெல்ல முடியுமென்றால் மண்ணிலும் ஒருவன் அவனை வெல்ல முடியும். யாரெனக் காண்கிறேன்” என்று  சூளுரைத்தார். “அவன் படைக்கருவி யாழில் அவன் இசைக்கும் இசை. வில் செல்லாத தொலைவுக்கு சொல் எட்டா சேய்மைக்கு செல்லும் ஆற்றல் கொண்டது இசை… அவனை வெல்லமுடியாது” என்றபடி அனலவன் அணைந்து கரியென எஞ்சினான்.

அன்றாட அறச்செயல்களை நிறுத்தி, நீரன்றி உணவுகொள்ளாது அவ்வறைக்குள் அமர்ந்து தன்னுள் நிறைந்து புடவிப்பேரோவியத்தை விரித்து விரித்து பறந்து புள் என தேடி ஏழுநாட்கள் அமர்ந்திருந்த காலவர் இளைய யாதவரை கண்டடைந்தார். அவரை முழுவடிவில் கண்டதுமே வானிலிருந்து அறுந்து மண்ணறைந்து விழுந்தவர்போல் அதிர்ந்து அலறினார். விழிதிறந்து உவகையுடன் “ஆம்!” என்று கூவியபடி எழுந்தோடி கதவைத் திறந்து வெளிவந்தார். தன் மாணவர்களிடம் “அவனே… ஆம், அவனே!” என்று கூச்சலிட்டார்.

அவர்கள் அவரை சூழ்ந்துகொண்டனர். “அவனே வெல்வான். அவனை வெல்லல் மூன்று இறைவருக்கும் அரிது” என்று காலவர் கொந்தளித்தார். “இப்புவியில் விண்ணின் துளியென வந்துதிர்ந்தவன். மண்ணையும் முழுதும் வெல்லும் பேராற்றல் கொண்டவன். அவனே அக்கந்தர்வனையும் வெல்ல முடியும்” என்றார். முதல் மாணவனாகிய சலஃபன் “அவர் யாதவ அரசரல்லவா?” என்றான். “அவன் யாரென நான் அறிவேன். அவனால் என்ன இயலுமென அவனும் அறிவான். கிளம்புங்கள்” என்று சொல்லி காலவர் அங்கிருந்து புறப்பட்டார்.

முந்தைய கட்டுரைபிரியம்வதா -விமர்சனங்கள்
அடுத்த கட்டுரைகாற்றுசெல்லும் பாதை.