‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 8

[ 3 ]

முன்பு தேவரும் அசுரரும் வாசுகியை நாணாக்கி மந்தரமலையை மத்தாக்கி  பாலாழியைக்  கடைந்தபோது எழுந்தவர் இரு தேவியர்.  இருளோரும் ஒளியோரும் இருபுறமும் நின்றிழுக்க மந்தரமலை சுழன்று பாற்கடலில் நுரையெழுந்தபோது அதன் அடியாழத்தில் ஓவியங்களென்றும் எழுத்துக்களென்றும் பொறிக்கப்பட்டு காலமின்மையில் துயின்றிருந்த தெய்வங்கள் ஒவ்வொன்றாக கண்விழித்தெழுந்தன.

பால்வண்ணப் பேரேட்டில் ஆமென்றும் அல்லவென்றும் குறிக்கும் ஓமென்ற எழுத்தால் எழுதப்பட்டிருந்த  பிரக்ஞாதேவி என்னும் அன்னை எட்டு கைகளுடன் விழித்தெழுந்தாள். அவள் முன்பக்கம் பொன்னிறமும் பின்பக்கம் கருநிறமும் என இருபுறமும் முகமும் முலைகளும் இடையும் கொண்டிருந்தாள். பேரழகும் நுண்ணறிவும் தண்ணளியும் கொண்டு மலர்ந்திருந்தது ஒரு முகம். மறுபக்கம்  எழுந்த முகம் கொடுமையும் மடமையும் கீழ்மறமும் என சுளித்திருந்தது.

சுழன்று சுழன்று ஒன்றுபிறிதெனக் காட்டி மேலெழுந்தாள் பிரக்ஞை. அவளை நோக்க பாலாழியின் பலகோடி மீன்கள் விழிகளாக எழுந்து சூழ்ந்தன. “இவள்! ஆம், இவள்!” என்று வியந்தன அவை. அவள் அசைவில் எழுந்த குமிழிகள் சொற்களென்றாகி ஒளிகொண்டன. பாலாழியின் மேல்விளிம்பை அடைவதற்கு முற்கணம்  தேவர்கள் “எங்களுள் அழியாதிருப்பவளே, எழுக!” என்று கூவிய ஒலி கேட்டதும் தேவியின்  கொடுமுகம் மறுமுகத்தை இடக்காலால் உதைத்து உந்தி விலக்கி தான் மேலெழுந்து வந்தது.

அவள் தோற்றத்தைக் கண்டு திகைத்த தேவர்கள் தங்கள் பிடியை நழுவவிட்டு அஞ்சிக் கூவியபடி பின்னகர்ந்தனர். இளித்த வாயும் வெறித்த விழிகளுமாக அவள் தேவர்களை நோக்கி பேருருக்கொண்டு விண்நிறைத்து மிதந்துசென்றாள்.  நாகவடம் நழுவ அதை இழுத்தோடியபடி கூவிக் களியாடிய அசுரர் “எங்களுள் விடாயென இருப்பவளே, எழுக!” என்று கூவியபோது தேவியின் இன்முகம் புன்னகையும் அருளுமாக எழுந்து, பொன்னொளி விரிய அவர்களை நோக்கி சென்றது. திகைத்து விழிகூட மேலே நோக்கி சொல்லவிந்தனர் அசுரர். அவர்கள் கைநழுவி நோக்கித் திகைத்த கணத்தில் தேவர்கள் தாங்கள் இழந்த நீளத்தை மீட்டெடுத்தனர்.

இரு அன்னையரும் எழுந்து விண்ணில் நின்றிருக்க  இருண்டும் குளிர்ந்துமிருந்தது வானத்தில் பாதி. ஒளிர்ந்து வெம்மைகொண்டிருந்தது மறுபாதி.  முனிவர்களின் மெய்மை அவரைவிதையென இரண்டாகியது. அவர்களில் ஒருபாதி கைகூப்பியபடி எழுந்து “விண்ணளந்தோனே, நீங்களே காக்க வேண்டும்! இத்தெய்வங்களை வென்றருளவேண்டும்” என்றது. மறுபாதி ஓடிச்சென்று முழந்தாளிட்டு “அனலுருவோனே, இத்தெய்வங்களை நீங்களே கொண்டருள்க!” என்று கூவியது.

விஷ்ணு பொன்னுருவ அன்னையைச் சுட்டி “இன்முகம் கொண்ட இவள் என் நெஞ்சமர்ந்தோளின் மாற்றுருவென்றிருக்கிறாள். இவள் என் துணைவியென்றமைக! எங்கெல்லாம் பதினாறு செல்வங்களும் எட்டு மங்கலங்களும் பொலிகின்றனவோ அங்கெல்லாம் இவள் வழிபடப்படுக!” என்றார்.  மூன்று கைவல்லிகளில் தாமரை மலரும் வெண்சங்கும் சுடரும் ஏந்தி வலக்கை அருளி நின்றிருக்க அன்னப்பறவைக் கொடியுடன் வெண்யானை மேல் எழுந்த அன்னை அவர் வலக்கையின் செந்நிற வரியோடிய குழிவில் சென்று குடிகொண்டாள்.

மூன்று கைகளில் பாசமும் அங்குசமும் துடைப்பமும் ஏந்தி, அருட்குறி அமைந்த இடக்கையுடன், நாகமாலையை கழுத்தில் சூடி, காகக்கொடி பறக்க, கழுதைமேல் எழுந்து கோரைப்பல்காட்டி  உறுமிய அன்னையை ஆதிசிவன் தன் மகளெனக் கொண்டார். அவள் சென்று அவர் காலடியில் பணிந்துநிற்க இடக்கால் தூக்கி அவள் மடியில் வைத்து அருளளித்தார். “துயர்கொண்ட உள்ளங்களில் நீ குடிகொள்க! இருளும் அழுக்கும் கெடுமணமும் உன் இயல்பாகுக! உண்மையென்பது உன் வடிவும் ஆகுக!” என்று செம்மேனியன் அருள்புரிந்தார்.

சிவமகளை வருணன் மணந்தான். மூத்தவளும் இளையவளும் வடக்கிலும் தெற்கிலுமென குடிகொண்டனர். இரு அன்னையரில் ஒருவரை வழிபடுபவர் பிறிதொருவரின் சினத்திற்காளாவார்கள் என்றனர் முனிவர். நூல்நெறிப்படி அமைந்த ஆலயங்களில் முதுகொடு முதுகொட்டி இருபுறமும் நோக்கி அவர்கள் அமர்ந்திருந்தனர். இருவகை உலகத்தியல்பு அறிந்த முனிவர் இருவரையும் நிகரென வணங்கி அருள்பெற்றனர். அவர்கள் நெஞ்சில் மீண்டும் ஓருருக்கொண்டு இணைந்து அவள் பிரக்ஞாதேவி என்றானாள். அவளை அவர்கள் ஊழ்கத்தில் முகம் கண்டு புன்னகைத்தனர். அப்புன்னகை தெரிந்த மானுடரை முனிவர் என்றனர் கவிஞர்.

[ 4 ]

காம்யக வனத்திற்குத் தெற்கே இருந்த காளிகம் என்னும் குறுங்காட்டுக்குள் முன்பு ரகுகுலத்து ராமனும் அவன் இளையோனும் வழிபட்ட பேராலயமொன்றிருந்தது. அங்கு குளிரும் இருளும் நிறையவே முனிவர் அவ்விடம் நீங்க அது கைவிடப்பட்டு காட்டுப்பெருக்கால் உண்ணப்பட்டது. வேர்களுக்குள் கிளைகளுக்கு அடியில் இரு கல்லுருவங்களாக மூத்தவளும் இளையவளும் மூழ்கிக்கிடந்தனர். அவர்களுக்குமேல் எழுந்து பச்சைகொண்ட மரங்களில் நறுந்தேன் சூடிய மலர்கள் விரிந்து வானொளிகொண்டு நின்றன.

சாந்தீபனி குருநிலையில் இருந்து தன் தோழனைத் தவிர்த்து தனியாகத் திரும்பிய இளைய யாதவர் தன் எண்ணச்சிதறலால் வழிதவறி கால் கொண்டுசென்ற போக்கில் அக்காட்டுக்குள் நுழைந்தார். உலகில் கொள்வனவற்றையும் சூழ்வனவற்றையும்  எண்ணி எண்ணி அலமலந்த உள்ளம் கொண்டிருந்தமையால் வழியை அவர் அறியவில்லை. வழியறிந்தபோது விடாய் கொண்டு உடலெரிவதை உணர்ந்தார். மலர்பூத்த மரம் மீது பறவைகளின் ஒலி கேட்டு அங்கு வேர் அருகே நீரோடை இருப்பதை உய்த்தறிந்தார்.

KIRATHAM_EPI_08

தன் காலடிகள் தன்னை தொடர்ந்தொலிக்க அந்த மலர்மரத்தடியில் வந்து நீரோடையைக் கண்டு அள்ளி அருந்தியபின் இளைப்பாற வேர்ப்பற்றில் அமர்ந்தார். எண்ணம் எழுந்து சூழ உடல்தளர்ந்து விழிமூடி மயங்கியபோது அவர் பெண்குரல் விசும்பியழும் ஒலியை கேட்டார். தன்னுள் எழுந்ததோ அவ்விசும்பல் என்று திகைத்தார். பின் விழித்தெழுந்து நோக்கியபோது கருநிறமும் கெடுமுகமும் கொண்ட பெண் ஒருத்தி உடல்குவித்து அமர்ந்து அழுவதைக் கண்டார்.

அவளை அணுகி “பெண்ணே, நீ யார்?” என்று அவர் கேட்டார். “என்னை மூத்தவள் என்பார்கள். இக்காட்டில் நான் கோயில்கொண்டிருக்கிறேன்” என்றாள். “நீ அழுவது எதனால்?” என்றார். “தனித்து கைவிடப்பட்டவர்கள் அழுவதே இயல்பு” என்று அவள் சொன்னாள். “நீ கைவிடப்பட்டது ஏன்?” என்றார். அவள் தன் கையை நீட்டிக்காட்டினாள்.  அதில் இருந்து ஒளிவிட்ட அருமணியைக் கண்டு அவர் அருகணைந்தார். அவள் “என் விழிநீர்த்துளியால் உருவானது இது. இவ்வரிய மணியை நிகிலம் என்றழைக்கிறார்கள். இதை என்னிடமிருந்து பெற்றுச் சூடாமல் எவரும் மெய்மையை அறிவதில்லை” என்றாள்.

“இங்கு வாழ்ந்த ஒவ்வொரு முனிவருக்கும் இதை நான் நீட்டியிருக்கிறேன். எவரும் இதை பெற்றுக்கொண்டதில்லை. எவரும் ஏற்காத இந்த அருமணி என் கைகளை அனல் என எரிக்கிறது. அதன் துயர்தாளாது நான் அழுகிறேன்.” அவர் அதை நோக்கியபடி “இவ்வருமணியின் சிறப்பென்ன?” என்றார். அது ஒரு விழிமணி போலிருந்தது. “யாதவனே, நீ நோக்கியறிந்த ஒவ்வொன்றிலும் மறைந்துள்ள பிறிதொன்றுள்ளது. அதை இது காட்டும்” என்றபடி அவள் புன்னகைத்தாள். “இதன் ஒளியில் ஒவ்வொன்றும் நிலைமாறும். உன்னைச் சூழ்ந்துள்ள இப்புடவி முற்றிலும் திரிந்து உருமாறும்.”

அவள் கண்களை நோக்கியபடி அவர் திகைத்து நின்றார். “ஆம், இது எளியவர்களுக்கு உகந்தது அல்ல. அறிக, கோழைகளுக்குரியதல்ல மெய்மை! தன்னை உரித்து தான்போர்த்தி நின்றாடுபவர்களுக்குரியது அப்பாதை. தன்னைக் கொன்று தானுண்டு செரித்து மேலேறும் மாவீரர்களுக்குரியது அம்மலைமுடி. தன்னை நீறாக்கி தானணிபவர்களின் வானம் அது. சொல்க,  நீ அவர்களில் ஒருவனா?”

அவர் மூச்சடைக்கும் அச்சத்துடன், விழிவிலக்கவொண்ணா பேரார்வத்துடன்  அவளை நோக்கி நின்றார். “அறிதலென்பது நீ அறியத்தொடங்கிய நாளிலிருந்தே இனிதென்றே உன்னை வந்தடைந்திருக்கும்.  உண்ணும் புணரும் தழுவும் வெல்லும் கொள்ளும் இன்பங்களை சிறு திவலைகளென்றாக்கும் பேரின்பமே அறிதலென்பது.” அவள் விழிகள் நாகவிழிகளின் ஒளிரும் வெறிப்பு கொண்டிருந்தன. “ஆனால் அறிக, உவகையினூடாக அறிவது அறிவின் ஒருபக்கம் மட்டுமே. கடுந்துயரும் கசப்பும் வலியும் கொண்டு கணம் கணமென வதைபட்டு அறியும் அறிவும் ஒன்றுண்டு. அவ்வறிவாலும் இவையனைத்தையும் அறிந்தவனே மெய்யறிவன்.”

அவள் நுண்சொல் ஓதும் பூசகிபோல காதருகே காற்றசைவென பேசினாள். “அவன் அறியும் வேதம் வேறு. அவன் அடையும் வேதநிறைவும் மற்றொன்று. இருமையென அறிந்து ஒருமையென்றாக்கி அறிவதே மெய்மை.” அவர் தோள்களில் அவள் தன் கைகளை வைத்தாள். அவள் வாயிலிருந்து மட்கிய ஊன்நாற்றம் வீசியது. பீளைபடிந்த பழுத்த விழிகள் நோக்கிழந்த இரு துளைகளென்று தோன்றின. “உலர்ந்த குருதியில் மட்கும் பிணங்களில் எரியும் மயிரில் எழும் சொற்களின் வேதம். சீழில் சளியில் மலத்தில் அழுகலில் எழும் வேதம். கண்ணீரில் கதறலில் வசைகளில் சாவில் எழும் வேதம். அதைக் கல்லாது நீ அறிவதுதான் என்ன?”

அவர் பெருமூச்சுடன் மெல்ல தளர்ந்து “ஆம், உண்மை” என்றார். “நானறிந்த வேதம் குறைபட்டதென்பதை ஒவ்வொரு சொல்லும் எனக்கு உணர்த்துகிறது. நான் கொண்ட பெருஞ்சோர்வு அதன்பொருட்டே.”  “நீ அவ்விழிகளால் அதைப் பார்க்க முடியாது. அந்த மெய்மையை அறியும் ஒளிவிழி இதுவே” என அவள் அந்த அருமணியை அவர் கண்களுக்கு முன் காட்டினாள். “கொள்க! இனியவனே, இதைக் கொள்க! உனக்கென்றே இன்று என் கையில் பூத்துள்ளது இது.”

அவள் கறைப்பற்கள் நடுவே சிறியவெண்புழுக்கள் நெளிந்தன. கரியநாக்கு பெரிய புழுவென துழாவியது. காம்பு கூம்பித் தொங்கிய வறுமுலைகள் அவர் மார்பின் மேல் படிந்தன. எலும்பெழுந்த கைகள் அவர் தோளை வளைத்து அவர் முகத்தை தன் முகம் நோக்கி இறுக்கின. அவள் மூச்சில் புண்சலம் நாறியது. “நீ வீரன். வென்று செல்பவன். யுகங்களுக்கொருமுறை மண்ணில் எழும் மாமானுடன். மெய்மையை மணிமுடியெனச் சூடி காலத்தைக் கடந்து நின்றிருப்பது உன் முகம். வெற்று அச்சத்தால் நீ அதை இழந்துசெல்வாயா என்ன?”

அவர் உடல் உதறிக்கொண்டே இருந்தது. “அஞ்சுகிறாய், இளையோனே. எதை அஞ்சுகிறாய் என்று எண்ணிப் பார். ஏன் அஞ்சுகிறாய் என்று ஆராய்ந்து பார். அஞ்சுவது என்னையா? உன்னுள் இருந்து எழுந்து வந்து இங்கு நான் நின்றிருக்கிறேன். உன் மலக்குடலில், குதத்தில் வாழ்கிறேன். நீ உண்ணும் இன்னுணவெல்லாம் எனக்களிக்கும் படையல். உன் மூச்சில் நானும் கலந்துள்ளேன். உன் விந்துவில் ஊறி உன் தேவியர் வயிற்றில் முளைத்து உன் மைந்தரென முகம் கொண்டு நின்றிருக்கிறேன்.”

அவர் “நான் என்ன செய்யவேண்டும்?” என்றார். “என்னைத் தழுவுக! என்னைச் சூடுக! ஏழாண்டுகாலம் என்னை உடன்கொள்க!” அவள் தன் இதழ்களை அவர் வாயருகே கொண்டுவந்தாள். மட்கிய ஊன்போன்று கரியவை. அழுகிக்கிழிந்து தொங்கியவை. அவர் அறியாது அவளை சற்று உந்தி விலக்கினார். “மண்ணிலெழும் மாமனிதரில் கணமேனும் என் கையின் இந்த மணி கொள்ளாதோர் எவருமில்லை. விண்வேதம் கொய்தெடுத்த மாமுனிவர் ஒவ்வொருவர் மடியிலும் ஏழாண்டுகாலம் அமர்ந்தவள் நான். நீ அவர்களில் ஒருவனல்லவா? அவர்கள் அறிந்ததை நீ அறியவேண்டாமா?”

அவர் பெருமூச்சுவிட்டார். கண்களை இறுகமூடி “ஆம்” என்றார். “எதற்கு அஞ்சுகிறாய்? நீ அறிந்ததில்லையா என்னை? உன் மைந்தரின் மலத்தை அருவருத்தாயா? அவர் எச்சிலை நீ அமுதென்று எண்ணவில்லையா? அவர்மேல் கொண்ட அக்காதலை எனக்கும் அளி. என்னைப் புல்கு. முதல் உறவுக்குப்பின் நான் இனியவள் என உணர்வாய். என்னை பேரழகி என்று உன் விழிகள் அறியும்.  என் அருகிருப்பதை மட்டுமே விழைவாய். ஏழரையாண்டுகாலம் என்னுடன் நீ இருந்து நிறையும்போது இவ்வருமணியை உனக்களித்து நான் மீள்வேன். இது முழுமை. இது சமன். இதுவே பிறிதொன்றிலாமை…”

அவர் மேலும் ஒருமுறை பெருமூச்சுவிட்டார். “நான் பைநாகப் படமணிந்தவனின் மகள். அவன் சூடிய சுடலைப்பொடி நாறும் உடல்கொண்டவள். நிணமொழுகும் தலைமாலை சூடிய காலபைரவனின் தமக்கை. உக்ரசண்டிகை என்றும் அகோரிகை என்றும் காளபயங்கரி என்றும் பவஹாரிணி என்றும் என்னை வழிபடுகிறார்கள் முனிவர்கள்.” அவர் “ஆம்” என்றார். “அழகனே, கொள்க இவ்வொளியை!” என்றாள். எப்பொருளும் இல்லாமல்  “ஆம்” என்று அவர் சொன்னார்.

ஒருகணம் மெல்லப்புரள, முன்பெங்கோ முடிவான மறுகணத்தில் அவர் அவளை அள்ளி அணைத்து உடலுடன் சேர்த்து இறுக்கி இதழ்களில் முத்தமிட்டார். காமம் கொண்டு முனகியபடி அவள் அவர் உடலுடன் தன்னைப் பொருத்திப் புல்கி ஒன்றானாள்.  “நீ இனியவன். நீ எனக்குரியவன்” என்று விழிசொக்கப் புலம்பினாள். அவள் உடலில் ஊறிவழிந்த மதநீர் எரிமணம் கொண்டிருந்தது.

அக்காட்டின் பசிய இருளுக்குள் அவளை அவர் புணர்ந்தார். கிளறப்பட்ட சதுப்பென கெடுமணங்கள் குமிழியிட்டெழுந்தன அவளிலிருந்து. சிதையென அவரை ஏற்று எரித்தாள். சேறென அவரைச் சூழ்ந்து மட்கவைத்தாள். சிம்மமென அவரை நக்கி உண்டாள். அவர் விழித்தெழுந்தபோது அவள் அங்கிருக்கவில்லை. அவள் ஒரு கெடுமணமாக தன் உடலில் படர்ந்துவிட்டிருப்பதை உணர்ந்தார்.

[ 5 ]

காளிகக் காட்டிலிருந்து வெளிவந்த இளைய யாதவரின் நடையும் நோக்கும் மாறிவிட்டிருந்தன. புல்தெறித்துச் செல்லும் வெட்டுக்கிளி என நடந்துகொண்டிருந்தவர் நிலம் அதிர ஆண் எருமையென கால் எடுத்து வைத்தார். சுவைதேர்ந்து இன்கனியும் மெல்லூனும் தேனும் நறுநீரும் உண்டவர் கிழங்கைப்பிடுங்கி மண்ணுடன் மென்றார். சேற்றுடன் உழன்ற பன்றியைக் கொன்று குருதி வேகாது தின்றார். கலங்கல் நீரை அள்ளி அருந்தி ஈரச்சேற்றிலும் இருண்ட குகையிலும் படுத்துறங்கினார்.

எட்டு நாட்களுக்குப்பின் அவர் சியாமளபதம் என்னும் சிற்றூரைச் சென்றடைந்தபோது அவ்வூரார் அவரை காடுவிட்டெழுந்து வந்த காளாமுகன் என்று எண்ணினர். அவர் வருவதை அகலே எழுந்த நாய்க்குரைப்பிலேயே அறிந்த ஊர்மூத்தார் உணவும் நீரும் ஏந்தி ஊருக்கு வெளியே காத்து நின்று “கொள்க, கபாலரே! எங்கள் ஊர்செழிக்க வாழ்த்துக!” என்றனர். அவர் ஊருக்குள் நுழையாதபடி வேலிப்படல்களை முன்னரே மூடிவிட்டிருந்தனர். பெண்கள் குழந்தைகளைத் தழுவியபடி உள்ளறைக்குள் ஒடுங்க கன்றுகளை எண்ணி பசுக்கள் குரல்கொடுத்துக்கொண்டிருந்தன.

சப்தஃபலம் என்னும் யாதவச்சிற்றூரை அவர் சென்றடைந்தபோது அங்கிருந்த யாதவப்படைத்தலைவன் சதமன் அவரை அடையாளம் காணவில்லை. கபாலமும் சூலமும் உடுக்கும் இன்றி வந்த காளாமுகரை நோக்கி வியந்த அவன் அருகிருந்த முதிய யாதவவீரராகிய கலிகரை நோக்கி “யாரவர்? யாதவர் நிலத்திற்குள் கொடுஞ்சைவர் நுழைவதில்லையே?” என்றான். கண்களுக்குமேல் கைகளை வைத்து நோக்கிய கலிகர் “யார்?” என்றார். மெல்லிய நடுக்கம் ஓடிய உடலுடன் “எந்தையரே, யார் அவர்?” என்றார். மேலும் உரக்க “இல்லை, இருக்கவியலாது” என்று கூவினார்.

மறுகணமே சதமன் கண்டுகொண்டான். “ஆ! அவரேதான்! அரசர்” என்றான். அக்கணத்திலேயே அத்தனை வீரர்களும் அவரை அடையாளம் கண்டுகொண்டனர். காவல்மேடையிலிருந்து மரப்படிகளில் உடல்முட்டி நெரிந்திறங்கி ஓடி அவர்களை அணுகிவந்த இளைய யாதவரை நெருங்கி “அரசே!” என்று கூவினர். அவர் உடலில் சேறும் ஊனும் மலமும் நாறியது. அவர் விழிகள் சிவமூலிக் களிகொண்டவனைப்போல அலைபாய்ந்தன.

“அரசே, தாங்களா? என்ன ஆயிற்று?” என்று கலிகர் கூவினார். சதமன் அப்படியே அவர் கால்களில் சரிந்து அழத்தொடங்கினான். “அரசே! அரசே!” என யாதவ வீரர் அவரைச் சூழ்ந்துகொண்டு கூவினர். அவர்  மெல்லிய கூர்குரலில் “இந்நகரில் நான் சிலநாட்கள் இருப்பேன். இங்கு நான் எவரையும் காண விழையவில்லை” என்றார். “ஆம், ஆணை” என்றார் கலிகர்.

அவர்கள் எவரையும் நோக்காமல் நடந்து அச்சிற்றூரின் நடுவே அமைந்திருந்த அரசமாளிகையை அடைந்தார். அவருக்காக நீராட்டுப்பணியாளர்களும் சமையர்களும் அங்கே காத்து நின்றிருந்தனர்.  அவர் அவர்களை ஏறிட்டும் நோக்கவில்லை. முகமன்கள் எவையும் அவரை சென்றடையவில்லை. செல்லும்வழியில் தூண்மடிப்பில் விழுந்துகிடந்த மாடப்புறாவின் எச்சத்தை அவர் கைதொட்டு எடுத்து மூக்கில் வைத்து முகர்ந்து முகம் மலர்ந்ததைக் கண்டு அவர்கள் திகைத்தனர்.

அடுமனைக்குள் புகுந்து அதன் கொல்லைப்பக்கம் கரிபடிந்த மூலையில் குவித்திட்ட குப்பைக்குமேல் அமர்ந்துகொண்டு உணவு கொண்டுவரும்படி சொன்னார். அவர்கள் திகைத்து முகமும் முகமும் நோக்க முதிய அடுமனையாளன் “அரசாணை எனில் அவ்வாறே” என்று மெல்லிய குரலில் சொன்னார்.  அவர்கள் அளித்த உணவை இருகைகளாலும் அள்ளி உண்டார். உண்ணும்போதே சொறிந்துகொண்டார். உரத்த ஒலியுடன் ஏப்பம் விட்டார்.

அவர்கள் இல்லம் புகுந்த பேயை என அவரை பார்த்துக்கொண்டிருந்தனர். எழுந்துசென்று கையைக் கழுவாது உதறிவிட்டு இருளுக்குள் நடந்தார். அவருக்கான நீராட்டும் மஞ்சத்தறையும் ஒருக்கியிருப்பதைச் சொல்ல பின்னால் சென்ற ஏவலர் அவர் அரண்மனைக்கு வெளியே சென்று அங்கு நின்றிருந்த இலைமூடி தழைந்த வாகைமரத்தின் அடியில் புழுதியிலேயே உடல்சுருட்டிப் படுத்து துயிலத் தொடங்கியது கண்டு அஞ்சி அப்பால் நின்றனர். அவரை எழுப்புவதா என்று மெல்ல முதிய குடித்தலைவரிடம் ஏவலன் ஒருவன் கேட்டான். “அவரில் வாழும் தெய்வமேது என்று அறியோம். காத்திருப்போம்” என்று அவர் சொன்னார்.

அன்றிரவு முழுக்க அவர்கள் இருளுக்குள் அவருக்காக காவல் நின்றனர். மறுநாள் விழித்தெழுந்த அவர் மீண்டும் வந்து அடுமனைக்குப்பின் அமர்ந்து உணவுகொண்டார். அரண்மனையை ஒட்டிய குறுங்காட்டுக்குள் சென்று அந்தி இறங்கிய பின்பு மீண்டார். நாட்கள் செல்லச் செல்ல அவர் விழிகள் அவ்விடத்தை அறியலாயின. அரண்மனையின் அறையில் துயிலவும் ஏவலர் விழிநோக்கவும் தொடங்கினார்.

ஆனால் அழுக்கும் இருளும் கெடுமணமும் அவரைச் சூழ்ந்திருந்தன.  அவர் அசைவுகள் காற்றில் பிரியும் புகைபோல ஓய்ந்திருந்தன. சொற்கள் அவரைச் சென்றடைய நெடுந்தொலைவு பயணம் செய்யவேண்டியிருந்தது. வெறித்த விழிகளுடன் அவர் தன்னுடன் பேசுபவர்களை நோக்கிக் கொண்டிருந்தார். கண்முன் அகல்சுடர் சரிந்துவிழுந்து திரைச்சீலை பற்றி எரிந்து தன் ஆடையை தொடவரும்போதும் வேறெங்கோ இருந்து அதை நோக்கிக் கொண்டிருந்தார்.

தன் இருளாழத்திலிருந்து விழித்தெழுந்தால் அவர் பெருஞ்சினம் கொண்டார். கொலைத்தெய்வம் போன்று வெறிகொண்டு சுளித்த முகத்துடன் கைநீட்டி அடிக்க வந்தார். “ஈன்ற பூனைபோலிருக்கிறார். அவரை அணுகாதொழியுங்கள்” என்று ஏவலர்தலைவன் இளையோரிடம் சொன்னான். தனிமையில் நாளெல்லாம் அமர்ந்திருந்தார். நீள்மூச்சு விட்டு  அவர் அசைந்தமர்கையில் “அவர் எண்ணி ஏங்குவதுதான் எதை? இளையோரே, எந்தை கொள்ளும் துயர் எதன்பொருட்டு?” என்று அமைச்சர்கள் புலம்பினர். முதுபூசகர் “அவர் துயரில் மகிழ்ந்தாடுகிறார். அவரைச் சூடிய பேய் அதில் திளைக்கிறது” என்றார்.

அங்கு அவர் வந்துசேர்ந்த செய்தி துவாரகைக்கு அனுப்பப்பட்டது. அரசர் ஆட்சிச்செயல்கள் அனைத்திலும் இருந்து விலக விழைவதாக ஆணை சென்றபோது அக்ரூரர் திகைத்து என்ன நிகழ்ந்தது என்று வினவி செய்தியனுப்பினார். என்ன நிகழ்ந்தது அரசருக்கு என குடித்தலைவருக்கும் நிமித்திகருக்கும் புரியவில்லை. குடிமூத்தார் குடிப்பூசகர் மூவரைக் கூட்டி உசாவினார். அரசருக்கு அகோரசிவம் உளம்கூடிவிட்டிருக்கிறது என்றனர் அவர்கள். அச்செய்தியையே துவாரகைக்கு அனுப்பினர்.

அக்ரூரர் உடனே கிளம்பி சப்தஃபலத்திற்குச் செல்ல விழைந்தார். “என்ன நிகழ்ந்துள்ளதென்று உணரமுடிகிறது, அரசி. மூத்தவர் பிரிந்து சென்றதும், யாதவர் உளத்திரிபு கொண்டதும் அரசரின் உள்ளத்தை உலைத்துவிட்டிருந்தன. அவர் தன் தோழரை காணச்சென்றதே அதன்பொருட்டுதான். அவர் உள்ளம் நிலையழிந்துள்ளது” என்றார். “இத்தருணத்தில் அவருடன் நான் இருந்தாகவேண்டும்… அது என் கடன் என்றே உணர்கிறேன்.”

சத்யபாமை அதை தடுத்துவிட்டாள். “நாம் அறியாத பலர் நாளும் கடந்துசெல்லும் ஒரு வாயில் போன்றவர் அவர். நாம் அறிந்தவர்களைக்கொண்டு அதை மதிப்பிடலாகாது. அக்ரூரரே, நம் தலைக்குமேல் எழுந்து நின்றாலும் இந்நகரின் அணிப்பெருவாயிலை நாம் எவரும் காண்பதே இல்லை. அதைக் காண நாம் கடலில் ஊர்ந்து விலகிச்செல்லவேண்டும்.  அவர் எவரென்று அறிய நாம் காலத்தில் பறந்தகலவேண்டும். பிறிதொரு யுகத்தில் நாம் அவரை ஒன்றென நோக்கமுடியும். முடிவிலா முகங்களினூடாக தன்னை தான் நோக்கிக்கொண்ட அந்த முழுமுகத்தை. அதுவரை அவர் ஆணைகளை தலைக்கொள்வதே நாம் செய்யக்கூடுவது.” அக்ரூரர் பெருமூச்சுடன் “ஆம், தேவி” என்றார்.

முந்தைய கட்டுரைஆடற்களம்
அடுத்த கட்டுரைவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 12