விளையாடல்

nagesh 2

அன்புள்ள ஜெ

 

ஏ.பி நாகராஜனின் திருவிளையாடல் சினிமாவின் முக்கிய நான்கு கதைகளும், திருவிளையாடற் புராணத்தை (பரஞ்சோதி முனிவரின்) தழுவி உள்ளது.

 

திரைப்படத்தில் உள்ள முக்கிய வசனக் கூறுகள், காட்சி அமைப்பு (வணிகம் சார்ந்து இருந்தால் கூட, மூல இலக்கியத்திற்கு மரியாதையாகவே) முதலியவை ஏ பி நாகராஜனின் உழைப்பையும் தமிழ் இலக்கியம் தழுவிய அபார முயற்சியும் வியப்பளித்தன.

 

திரைத் துறையில் கூட non -linear  கதை சொல்லுதலும் முயற்சிக்கப் பட்டிருக்கிறதோ என தோன்றுகிறது.

 

பாண புத்திரர் கதை – இறையனார் – சாதாரிப் பண் பாடினாராம். அது தேவ காந்தாரி என்றும், பந்துவராளி என்றும் கூறுகின்றனர். படத்தில் அமைந்தது கௌரி மனோகரி. இருந்தாலும் சிறப்பாகவே இருக்கிறது – பாடலினிசை மட்டும் :)

 

http://shaivam.org/tamil/sta_tiruvilaiyadal_07_u.htm#viraku

 

தருமி கதை – எனக்கு மிகவும் வியப்பை அளித்தது இது

http://shaivam.org/tamil/sta_tiruvilaiyadal_08_u.htm#tharumikku

 

வேறு ஏதாவது குறிப்புகள் நீங்கள் அறிந்தது உண்டா?

 

எதோ ஒரு தளத்தில் குறைத்து மதிப்பிடப் பட்ட திரை முயற்சியோ எனவும் தோன்றுகிறது.

 

இதனைப் பற்றிய புகழ் – தோன்ற வேண்டிய இடம் – இலக்கியத்தில் இருந்து எனத் தோன்றுகிறது

 

 

முரளி

 

அன்புள்ள முரளி

 

ஏ பி நாகராஜனின் புராண மறு ஆக்கங்கள் அனைத்துமே தனியாக ஆராயத்தக்கவை. திருவிளையாடலிலேயே சிவன் விறகுவெட்டியாக வந்து மக்களிடம் தன் துன்பத்தைச் சொல்லும் பகுதி மேலும் முக்கியமானது.

 

அந்த அழகியல் அன்றிருந்த தெருக்கூத்து, அதில் இருந்து கிளைத்த நாடகம் என்னும் வெகுஜனக்கலையில் இருந்து வந்தது. நாகராஜனின் விளைநிலமே பாய்ஸ் கம்பெனி நாடகம்தான்.

 

அந்த வெகுஜனக்கலையில் பல நுட்பமான உள்ளோட்டங்கள் உண்டு. ஒன்று, தெய்வங்களை மனிதத்தன்மை கொண்டு அன்றாட வாழ்க்கைக்குக் கொண்டுவருவது. கட்டியங்காரன் சிவபெருமானை உள்ளூர் பிரமுகருக்கு அறிமுகம் செய்து அவரை சிவபெருமானுக்கு அறிமுகம் செய்வான்.

 

தெய்வங்களின் பிரச்சினைகளை மனிதப்பிரச்சினைகளாக ஆக்குவார்கள். அதிலுள்ள தத்துவார்த்தமான அம்சங்களை முழுமையாகக் களைந்து எளிமையாக்கி உணர்ச்சிகரமாக மாற்றுவார்கள். மக்கள் அதனுடன் தங்களை அடையாளம் கண்டுகொள்வார்கள்.

 

அதன் அடுத்தபடியாக ‘தலைகீழாக்கம்’ நிகழும். தெய்வங்களை கேலிசெய்வார்கள்.  சிவபார்வதி நடனத்தின்போது ஒரு செம்பு நீரைக்கொண்டுவந்து மேடையில் வைத்து ‘போறபோக்கப்பாத்தா உங்களுக்குத் தேவைப்படும்போல’ என்று பபூன் சொல்வதுண்டு என்றே வாசித்திருக்கிறேன்

 

புராணங்களை புரிந்துகொள்வதற்குப் பதிலாக புராணங்கள் வழியாக தங்களைப்புரிந்துகொள்வது, புராணங்களை வைத்து விளையாடுவது என்று அந்த அழகியல் செல்கிறது.

 

அதன் சமூகக்கூறுகளைப்பற்றியும் உளவியல்கூறுகளைப்பற்றியும் நிறையவே ஆராயலாம். அதற்கு முக்கியமான தேவை என்பது உடனடியாக எங்காவது கற்றுக்கொண்ட மேலைநாட்டுக் கொள்கைகளை கண்மூடித்தனமாக அதன்மேல் போட்டு ஆராயமலிருப்பது. ஆனால் மேலைநாட்டுக்கொள்கைகளை போட்டால்தான் கல்விமான் அந்தஸ்து. ஆகவே அதைச்செய்யும் ஆய்வாளர்களே நம்மிடம் இருக்கிறார்கள்

 

முதலில் இந்த அழகியலை நேரடியாகச் சந்தித்து அது உருவாக்கும் வினாக்களுக்கான விடைகளை நம் பண்பாட்டில்தேடி அந்தப் பயணத்திற்கு உதவுமளவுக்கு மட்டுமே  அயல்நாட்டுக் கொள்கைகளைக் கையாளவேண்டும். அதற்கு அக்கொள்கைகளை கொஞ்சம் புரிந்துகொண்டு பேசவேண்டும். அவ்வாறு பேசுபவர்கள் நம்மிடையே மிகச்சிலரே.

 

அப்படிப்பட்ட ஆய்வுகள் எழுமென்றால் நம் சினிமாவுக்கும் அதற்கு முன்பிருந்த வணிகக்கலைகளுக்கும் இடையேயான உறவை, கொடுக்கல்வாங்கலைப்பற்றி நிறையவே பேசமுடியும். நம் ரசனையும் சமூகப்புரிதலும் விரிவடையும்

 

‘என்னிடம் வா ,நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று சொல்லும் கடவுளிடம் ‘எங்கெங்க வீங்கியிருக்குன்னா?’ என கேட்கும் நாகேஷின் குரல் எவருடையது என்று ஆராய்ந்தாலே போதும் , நம் பண்பாட்டில் நடந்துகொண்டே இருக்கும் அந்த விளையாடலைக் காணமுடியும்.

 

ஜெ

 

முந்தைய கட்டுரைபவிழமிளம் கவிளிணையில்…
அடுத்த கட்டுரைமன்னிப்பு -கடிதங்கள்