அறம் – மனிதரும் எதிரீடும்

Aram-Jeyamohan-1024x499

அறம் விக்கி

அன்புள்ள ஜெ

வணக்கம்.

அறம் சிறுகதைகள் மீண்டும் மீண்டும் வாசிப்பில் என்னுடன் தொடர்ந்து வரும் நேசிப்பிற்கு உரிய தொகுப்பாகும். ஒவ்வொரு முறையும் ஒரு நெகிழ்வை பரவச உணர்வை புதிய வழித்தடங்களை அது காட்சிப்படுத்துகிறது இக்கடிதம் எழுதிய காரணம் அறம் தொகுப்பை சிறுகதைகளாக வாசிக்கும் போது ஏற்படும் உணர்ச்சிகளுக்கும் பின்பு அதன் கதைமாந்தர்களின் நிஜ பின்புலத்தை உணர்ந்து மீள்வாசிப்பு செய்யும் போது ஏற்படும் கிளர்ச்சி வேறுவகையான உணர்வை தரக்கூடியது. உங்கள் தளத்தை தொடந்து வாசிப்பவர்கள் அக்கதை மாந்தர்களை கண்டடைவர் அறம், யானை டாக்டர், நூறு நாற்காலிகள், மெல்லியநூல் போன்று சில கதைகளின் கதாபாத்திரங்களின் நிஜங்களை நான் கண்டுகொண்டேன். 23-10-2016 தமிழ் இந்து நாளிதழ் இலக்கியம் பகுதியில் தி. ஜா அவர்களை பற்றி சுரேஷ்குமார் இந்திரஜித் அவர்கள் எழுதிய கட்டுரையின் மூலம் மயில் கழுத்து சிறுகதை சு. ரா. அவர்களையும் தி. ஜா அவர்களையும் கதாபாத்திரமாக்கியதைக் கண்டு கொண்டேன் மீண்டும் மயில் கழுத்தை வாசிக்கும் போது அது மிக நெருக்கமான உணர்வைத் தருகிறது. என் ஆவல் நீங்கள் அறம் தொகுப்பின் ஒவ்வொரு சிறுகதையின் நிஜ நாயகர்களை பற்றி விரிவாக. ஒரே பத்தியில் எழுத வேண்டும் என்பது என் ஆவல். அது புதிதாக அறத்தை வேறொரு பரிணாமத்துக்கு என்னை போன்றவர்களை அழைத்துச்செல்லும். நன்றியுடன்

சக்தி. குவைத்.

*

அன்புள்ள சக்தி

அறம் கதைகளின் நாயகர்களை வெளிப்படையாகச் சொல்லக்கூடிய வாய்ப்பிருந்தால் கதைக்குள்ளேயே சொல்லியிருப்பேன், பெருவலி போல

மற்றகதைகளில் அது வாசக ஊகமாகவே இருப்பதுதான் நல்லது

ஜெ

***

அன்புள்ள ஜெ

அறம் சிறுகதைகளை இப்போதுதான் மீண்டும் வாசித்தேன். பலகதைகள் முதல் வாசிப்பில் ஒரு வகையில் கவர்ந்தன. அவற்றிலிருக்கும் கதை உச்சமே அப்போது கவர்ந்தது. இப்போது அந்தக்கதைகளின் அமைப்புக்குள் உள்ள டெக்ஸ்ச்சர் மிகவும் கவர்கிறது. பொதுவான வாச்கர்கள் எளிதில் சென்றடைய முடியாத அந்த ஊடுபாவுகளை இலக்கிய விமர்சகர்கள்தான் சொல்லவேண்டும். ஆனால் நம்மூரில் அப்படி ஏதேனும் ஒரு நல்ல படைப்பின் உள்ளோட்டங்களை கண்டு சொன்ன ஒரு புதிய விமர்சகனை நான் கண்டதே இல்லை. நமக்குக் கிடைப்பது கூட அவர்களுக்குக் கிடைப்பதில்லை. ஒன்றும் புரியாமல் கோட்பாடு கொள்கை என்று பேசிக்கொண்டிருப்பார்கள்

உதாரணமாக, இருப்பதிலேயே எளிமையான கதையாகிய யானை டாக்டர். அந்தக்கதையில் உள்ள யானை x புழு என்னும் பைனரியை எவராவது சொல்லியிருக்கிறார்களா என்று நானும் தேடித்தேடிப்பார்த்தேன். யானை டாக்டருக்குப் புழுமேல் உள்ள ஈடுபாடு. யானை அவ்வளவு பெரியது. புழு அவ்வளவு சிறியது. ஆனால் புழு யானையை உண்கிறது கடைசியில். புழுவை அவர் காட்டின் குழந்தை என்று சொல்கிறார். யானைக்கும் புழுவுக்குமான அந்த பைனரி மிக முக்கியமாக அக்கதையை அடுத்த இடத்துக்குக் கொண்டுபோகிறது. அது நம்மவருக்குத் தெரியவில்லை

ஆனால் அது அந்தக்கதையில் அப்படி தெளிவாகவே இருக்கிறது. யானை பற்றிய கதையில் ஒன்றரைப் பக்கம் எதற்கு புழுவுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்று யோசித்தாலே தெரிந்துவிடும். அத்தனை கதைகளையும் மீண்டும் இந்தக்கோணத்திலே வாசிக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்

மனோகர்

 

====

நாடகம் போடும், நிறைய எழுதும், சாமி கும்பிடுதல் என்ற ஒன்றே இல்லாத வாழ்வைக் கழித்த ஒரு முற்போக்கு எழுத்தாளன் முதுமைக்குள் நுழையும் போது அடி முதுகில் திருகு வலி வந்து நிற்க முடியாமல் நடக்க முடியாமல் படுக்க முடியாமல் பெரும் அவதியில் அல்லல்படுகிறான். உள்ளே வெறுமை வந்து தின்ன, எழுந்து நிற்கவே முடியாத நிலை கொண்ட, இறைவணக்கமே கொள்ளாத அவன் இமயமலையேறி கைலாயம் காண ஆசை கொள்கிறான்.

உடம்பு தாங்காது, உயரம் ஏற முடியாது என்று பதறும் உற்றார், உறவினர், நண்பர் சொல் உதிர்த்து புறப்பட்டுப் போகிறான். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் கடப்பாறை இடியாய் முதுகெலும்பில் இறங்குகிறது வலி. வலியோடு பல லட்சம் அடிகள் எடுத்து மலையேறி, கயிலாயத்தை நெருங்கும் போது அவனுக்கு ஏற்படும் அனுபவம், கங்கைவார் சடை மலையை கண்டதும் காணாமல் மறைந்த வலி, அங்கே நடந்த அனுபவம்… என மரணப் படுக்கையிலிருந்தவனின் (எழுத்தாளர் கோமல்) ஒரு உண்மை அனுபவத்தை கேட்டு உள்வாங்கி அற்புதமாய் தந்துவிட்டார் ஜெயமோகன்.

‘பெருவலி’ அற்புதமான உண்மைப் படைப்பு. ‘அறம்’ மிக அருமையான நூல். நூலை அனுப்பி வைத்த மலர்ச்சி மாணவர் கோவை பணப்பட்டி பொன்னுஸ்வாமிக்கு நன்றி!

பேரன்புடன், பரமன் பச்சைமுத்து

http://www. paramanin. com/?p=701

முந்தைய கட்டுரைடின்னிடஸ் – கடிதங்கள் 2
அடுத்த கட்டுரைதொழிற்சங்கம் தேவையில்லையா?