மலையாளத்தில் மிமிக்ரி போல தமிழில் டப்மாஷ் ஒரு பெரிய கலையாக வளர்ந்து வந்திருக்கிறது. மலையாளத்தின் நடிகர்களில் பலர் மிமிக்ரியில் இருந்து வந்தவர்கள். ஜெயராம், ஷம்மி திலகன், சலீம்குமார், ஜெயசூரியா, திலீப், லால்… அதேபோல நடிகர்கள் இதிலிருந்தும் வரக்கூடும்.
ஆனால் பெரிய சிக்கல் இது சினிமாநடிப்பல்ல என உணர்வது. ‘டைமிங்’ என்பதை மட்டுமே இந்த நடிப்பிலிருந்து எடுத்துக்கொள்ளவேண்டும். ‘செய்வது’ என்பதை முழுமையாகவே தவிர்த்துவிடவேண்டும். நவீன சினிமா நடிப்பு என்பது ’இருப்பது’ ‘புழங்குவது ‘ஆவது’ தான். ஒன்றை செய்துகாட்ட ஆரம்பித்துவிட்டாலே இருநூறுமடங்கு பெரிய வெள்ளித்திரை அந்நடிகனின் உள்ளம் அதில் இல்லை என்பதை தெளிவாகக் காட்டிவிடும்.
நடிக்காமல் சும்மாநின்றால்கூட இன்றைய சினிமா மன்னிக்கும். செய்வதை தாங்கிக்கொள்ளவே முடியாது. தமிழ் சினிமா இயல்பாக புழங்கக் கற்ற நடிகர்களுக்காக தேடிக்கொண்டே இருக்கிறது. வருபவர்கள் எல்லாமே செய்துகாட்டுகிறார்கள். பல படங்களுக்காக நானே எப்படியும் நூறுபேரை நேரில் சந்தித்திருப்பேன். இந்த வேறுபாட்டை அவர்களுக்குச் சொல்லிப்புரியவைக்க முடியாது.இந்தச் சின்ன எல்லையை இவரைப்போன்றவர்கள் கடந்தார்கள் என்றால் நல்லது.