இங்குள்ள அத்தனை நிகழ்வுகளும் ஒரு மாபெரும் சூதுப்பலகையின் களங்களில் நிகழ்கின்றன என்றால் பெருநிகழ்வுகள் அவற்றின் களமையத்தில் நிகழ்கின்றன. திரௌபதி துகிலுரியப்பட்ட நிகழ்வு அத்தகைய ஒன்று.
உண்மையில் அது மகாபாரத மூலத்தில் பலநூற்றாண்டுகளுக்குப்பின் சேர்க்கப்பட்டது. மகாபாரதம் முன்வைக்கும் மாபெரும் அரசியலாடலின் தளத்தில் அது பொருந்தவுமில்லை. அனேகமாக மகாபாரதக்கதை நிகழ்த்துகலையாக ஆனபின் அதில் இந்நிகழ்வு உருவாகிவந்திருக்கலாம். பின்னர் மகாபாரதத்தில் சேர்க்கப்பட்டிருக்கலாம்.
அது மகாபாரதம் என்னும் மேல்தட்டுக்கு கீழ்த்தளத்திலுள்ள எளிய மக்களின் வாழ்க்கையிலிருந்து எழுந்து வந்து சேர்ந்தது. ஆகவே மகாபாரதம் முன்வைக்கும் திரௌபதியின் ஆளுமைக்கும் சரி, பாண்டவர்களின் இயல்புகளுக்கும் சரி, கௌரவர்களின் பெருமைக்கும் சரி, பொருந்தாததாகவே உள்ளது.
ஆனால் அது மிகமுக்கியமான நாடகத்தருணம். எவ்வகையிலோ இந்தியாவின் ஆதாரமான உளவியல் சிக்கல் ஒன்றை காட்டுகிறது. பெண்மையின், தாய்மையின் பிரம்மாண்டத்தை எதிர்கொள்ளமுடியாத ஆண்மையின் எல்லைகளைக் காட்டுகிறது. ஆகவே தவிர்க்கக்கூடியதும் அல்ல.
இந்த இரட்டைத்தன்மைதான் இந்நாவலின் மையம். ஆகவே இது இரட்டைமை என்னும் சரடையே பின்னிப்பின்னிச் செல்கிறது. இந்தியப்பண்பாட்டின் இரட்டைத்தன்மை அதன் வேதங்களில் ,அரசியலில் , பண்பாட்டுநிகழ்வுகளில் அனைத்திலும் முகம் கொள்வதை இந்நாவல் காட்டுகிறது
அந்தப்பெருநிகழ்வு நிகழும் சூதுக்களத்தை பன்னிரு ராசிக்களமாகவும் பன்னிரு மாதங்களாகவும் உருவகித்திருக்கும் இந்நாவலின் ஒருதளம் சோதிடக்குறியீடுகளால் ஆனது. ஆர்வமுள்ளவர்கள் அதைக் கணித்துப்பார்க்கலாம்.
வெண்முரசில் அதன் முதல்நாவல் முதல் உருவாகிவந்துள்ள அடிப்படையான மோதல் இந்நாவலில் முனைகொள்கிறது. அவ்வகையில் பன்னிரு படைக்களம் திகிரி சுழன்று திரும்பும் புள்ளி. வெண்முரசின் இதுவரையிலான நாவல்களை வாசித்து பிரதிக்குள் பின்னிச்செல்லும் உட்பிரதியை வாசிக்கத்தெரிந்த வாசகர்களுக்குரியது இதன் கூறுமுறை
இந்நாவலை என் இளமைக்காலத்தில் பெரும் ஆதர்சமாக இருந்தவரான வெள்ளிமலை சுவாமி மதுரானந்தஜி மகராஜ் அவர்களின் நினைவுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன்
ஜெயமோகன்
கிழக்கு வெளியீடாக வரவிருக்கும் பன்னிருபடைக்களம் நாவலின் முன்னுரை