டின்னிடஸ் -கடிதங்கள்

images

 

அன்புள்ள ஜெமோ

டின்னிடஸ் பற்றிய கடிதம்  பார்த்தேன். முதலில் மாதவன் இளங்கோவின் கடிதத்தை நான் பொதுவான ஏதோ கடிதம் என்றுதான் நினைத்தேன். அதன் கடைசியில்தான் டின்னிடஸ் என்னும் விபரீத நோய் பற்றி வருகிறது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் எனக்கு அந்த சிக்கல் இருந்தது.

உண்மையில் நான் ஒரு அரைகுறை யோக மையத்திற்குச் சென்றேன். அங்கேதான் அது வந்தது. அதற்கு முன் வியாபாரம் நொடித்து பெரிய மனச்சிக்கல் இருந்தது. தற்கொலை செய்வதற்காக மாடியில் இருந்து குதித்தேன். அதில் தப்பினாலும் தூக்கமில்லாமையும் மூக்கில் கெட்டநாற்றமும் இருந்தது. நிறைய டாக்டர்களிடம் போனேன், பயனே இல்லை. கடைசியில் இந்த யோகா மையம் போனேன். அங்கே காதில் சத்தம் கேட்க ஆரம்பித்தது.

அதன்பிறகு மூன்றுவருடங்கள். கடுமையான மனோவியல் பிரச்சினைகள். தூக்கம் கிடையாது. எந்த டாக்டரைப் பார்த்தாலும் ஒன்றுமே பிரச்சினை இல்லை என்பார்கள். டாக்டர்களுக்கே இதெல்லாம் தெரியாது. இங்கே டாக்டர்கள் காதுகொடுத்துக் கேட்பதும் இல்லை. என் மனைவி என்னுடன் உறுதியாக இல்லாவிட்டால் செத்திருப்பேன். கடைசியாக ஒரு நண்பருடன் சத்குரு ஜக்கி வாசுதேவின் யோகமையம் போனேன் ஏழுமாதத்தில் குணமாகியது. இப்போது பிரச்சினையே இல்லை.

எனக்கு இருந்தது ஒரு பிரமை என்றும் நான் அதை மூடத்தனமான பக்தியால் சரிசெய்துகொண்டேன் என்றும் நானே நம்பிக்கொண்டிருந்தேன். எப்படியானாலும் சரியாகியதே. குரு என்றும் தெய்வவடிவம் என்றும் நம்ப நமக்கு ஏதேனும் தேவையாகிறது அவ்வளவுதான். மாதவன் இளங்கோ கடிதத்தைப்பார்த்தபின்னர்தான் அது ஒரு பெரியநோய் என்று தெரிந்துகொண்டேன். மாதவன் இளங்கோவின் மன உறுதிக்குப்பாரட்டுக்கள். அந்த உறுதி இருந்தால்போதும்

சீனிவாசன் மணவாளன்

***

அன்பு ஜெயமோகன்,

நெகிழ்ச்சியுடனே இந்தக் கடித்தத்தை உங்களுக்கு எழுதிக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் எவரேனும் இந்த உலகம் எவ்வளவு மோசமானது என்பதற்கான பத்து காரணங்களைக் கூறும் பொழுதும், இந்த உலகம் எவ்வளவு அழகானது என்பதை நிரூபிப்பதற்கு நூறு காரணங்களாவது என்னிடம் இருக்கிறது. அத்தகையதொரு அழகான விஷயம்தான் புதன் கிழமையிலிருந்து எனக்கு வந்துகொண்டிருக்கும் முகமறியா மனிதர்களின் கடிதங்கள்.

டின்னிடஸ் பற்றிய என்னுடைய கடிதத்தை நீங்கள் பகிர்ந்ததிலிருந்து என் அஞ்சல் பெட்டியில் விடாமல் பொழிந்துகொண்டிருக்கிறது அன்பெனும் மாமழை. வாசகர்கள் அத்தனை பேருக்கும் நான் புதியவன். நீங்கள் பகிர்ந்திருந்த புகைப்படம் மூலம், கருப்பு-வெள்ளையாகக் கனவில் வரும் முகமாகத்தான் அவர்கள் என்னை அறிவார்கள். அவர்களும் எனக்குப் புதியவர்களே. ஆனால் பெயர்கள் மட்டும் பரிச்சயம். இதே பெயர்களில் சில நண்பர்களும், உறவுகளும் இருக்கிறார்கள். இந்தக் கடிதங்களை வாசிக்கும்போது அவர்களின் முகமே தெரிகிறது, அவர்களின் குரலே கேட்கிறது. அதைத் தவிர்க்கவே முயல்கிறேன், ஆனால் முடியவில்லை. ஒரு எளிய வாசகன் தனக்கு நன்கு அறிந்த கதாசிரியர் ஒருவனின் படைப்பை வாசிக்கும்போது அவருடனும், அவருடைய வாழ்க்கையோடும் தொடர்புபடுத்திக்கொள்வதை தவிர்க்க முடியாமல் அந்தப் படைப்பாளிக்கு துரோகம் செய்வானே, அதே போன்று, ஒரு எளிய மனிதனாக இந்த முகமறியா மனிதர்களுக்கு நான் துரோகத்தை செய்துகொண்டிருக்கிறேன்.

இவர்களின் அன்பும், அக்கறையும் என்னை மெய்சிலிர்க்கவைக்கிறது. உலகத்தின் ஏதோவொரு மூலையில் ஒரு உயிர் துன்புறுவதை அறியும் போது வேறோதோவோர் மூலையில் இருக்கும் நல்லிதயங்களில் அது ஒருவித அமைதியின்மையை ஏற்படுத்துகிறது. இந்தச் சலனம், இந்த அமைதியின்மை, அதுதான் மானுடம் இன்னும் வீழ்ச்சியடையவில்லை என்பதற்கான ஆதாரம். எனவேதான் இந்த உலகம் அழகானது. உலகம் என்பதை விட ‘உயிர்கள் அழகானது’ என்றே சொல்லவேண்டும். உதவிக்கரம் நீட்டுபவனுக்கே உதவிக்கரம் நீட்டும் அற்புதங்கள். கைநீட்டித் தூக்க வந்தவன் தூக்கப்பட்டுக் கொண்டிருக்கும் விந்தை. விந்தையல்ல, அன்பை விதைத்தால் அன்பே விளையும் என்கிற அடிப்படை உண்மை. ஒரு விதைக்குப் பல பழங்கள் கிடைக்கும் என்று எங்கள் வீட்டுத் தோட்டம் என் மகனுக்குச் சொல்லிக்கொடுக்கும் அதே உண்மை.

இந்தியா வரும்போது உங்களை சந்திக்க வருவேனோ இல்லையோ, உங்கள் வாசகர் ஷாகுல் ஹமீது என்னை நிச்சயம் நாகர்கோவிலுக்கு வரவழைத்துவிடுவார் போலிருக்கிறது. டின்னிடஸால் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக தூக்கமில்லாமல் கிட்டத்தட்ட பித்துநிலையில் இருந்த போது என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றவர் இங்கே பெல்ஜியத்தில் இருக்கும் என்னுடைய சகோதரர் ஷாகுல் ஹமீது. திருநெல்வேலிக்காரர்.

அந்த நாள் எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. அன்று விடியற்காலை என்னைச் சுற்றி என்ன நடக்கிறதென்றே எனக்குப் புரியாத குழப்ப மனநிலை. யாராவது எதையாவது செய்து என்னைத் தூங்கவைத்துவிட மாட்டார்களா என்று தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருக்கிறேன். காரில் இளையராஜா பாடலைப் போட்டு என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் ஷாகுல். காரை நிறுத்தி விட்டு இறங்குகினோம். அந்தச் தெருவில் சற்று தொலைவில் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் முதியவர் ஒருவர் தெரிந்தார். அது சற்று மேடான தெரு. சக்கர நாற்காலி பள்ளத்தில் பின்புறம் சென்றுகொண்டிருப்பதை கவனித்தவுடன், நானும் ஷாகுலும் ஓடிச்சென்று வண்டியைப் பிடித்தோம். பேட்டரி வேலை செய்யவில்லை போலிருக்கிறது. பெரியவருக்கு சரியாகப் பேச்சு வரவில்லை. எதையோ சொல்ல முயல்கிறார் ஆனால் நாக்கு குளறுகிறது. எங்களுக்குப் ஒன்றும் புரியவில்லை. பிறகு அவர் கைகாட்டிய திசையில் வண்டியைத் தள்ளிக்கொண்டே சென்றோம். எனக்கோ தலைவலி. காதுக்குள் இரைச்சல் வேறு. ஆனால் அந்தப் பெரியவரை அந்த நிலைமையில் அங்கேயே விட்டுச் செல்ல எங்கள் இருவருக்குமே மனமில்லை.

“மேனேஜ் பண்ண முடியுமா மாதவன்?” என்று ஷாகுல் வருத்தத்துடன் கேட்டார். “பரவாயில்லை ஷாகுல். அவர் வீடு அருகில்தான் எங்கேயாவது இருக்கும். அவரை ஒழுங்காகச் சேர்த்துவிட்டுச் செல்லலாம்.” என்று கூறினேன். கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்திருப்போம்.  இறுதியாக அவர் நிறுத்தச் சொன்ன இடம் ஒரு முதியோர் இல்லம். நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டோம். அந்தப் பெரியவர் எங்களைப் பார்த்து சிரித்துக்கொண்டே நன்றி தெரிவிப்பது போல் சைகை செய்துவிட்டு உள்ளே சென்றுவிட்டார். எனக்கு அவரைப் பார்த்து புன்னகைப்பதா அழுவதா என்றே புரியவில்லை. ஷாகுலின் கண்கள் கலங்கிவிட்டது.

நான் ஷாகுலைப் பார்த்து, “இப்போதைக்கு கிட்டத்தட்ட அந்தப் பெரியவர் நிலைமையில்தான் நான் இருக்கிறேன் ஷாகுல்” என்று கூறினேன். என்னுடைய கையைப் பிடித்துக்கொண்டே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இன்றைக்கு அலுவலகத்தில் தேநீர் அருந்தும்போது இந்த ஷாகுலிடம் அந்த ஷாகுலின் கடிதங்களைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன். உங்களுக்கு இருக்கும் வாசகப் பரப்பை அறிவேன். ஆனால் அது ஒரு குடும்பம் என்பதை இப்போதுதான் அறிகிறேன்.

மனித மனங்களை இணைத்து வைத்ததற்கு நன்றி

மாதவன் இளங்கோ

 

முந்தைய கட்டுரைஒரு வக்கீல் நோட்டீஸ்
அடுத்த கட்டுரைஆடற்களம்