அழியா இளமைகள்

1

 

பயணங்களில் பெண் முகங்கள் எப்போதுமே நினைவில் நிற்கக்கூடியவை. நண்பர் தமிழினி வசந்தகுமார் முகங்களைத்தான் அதிகமும் எடுப்பார். எங்கே எப்போது என்றெல்லாம் அவர் குறித்துக்கொள்வதில்லை. ஒரு காலகட்டம் கடந்தபின்பு பார்த்தால் வெறும் முகம் மட்டும்தான் கையில் இருக்கும். அதன் பின்னணி எதுவும் நினைவிலிருந்து எழாது. ஆனால் அந்த முகமே பலவகையான கற்பனைகளையும் சிந்தனைகளையும் எழுப்பும்.

வசந்தகுமார் அவரது பதிப்பகம் வெளியிடும் நூல்களின் அட்டைகளில் அவர் எடுத்த முகங்களை வெளியிடுவதுண்டு. இன்னொரு நாட்டில் என்றால் இது பெரிய சட்டமீறல். இந்தியாவில் அந்த முகத்திற்குரியவர்கள் அவர்கள் புகைப்படமாக ஆனதையும் இலக்கியவரலாற்றில் பதிவானதையும் அறியவே போவதில்லை என்பதனால் சிக்கல்  இல்லை. அப்போதுகூட எனக்கு ஓரு கற்பனை ஏற்படும். வடக்கத்திக்காரர் ஒருவர் குடும்பத்துடன் கன்யாகுமரிக்கோ ராமேஸ்வரத்திற்கோ வந்து அங்கே தன் படம் புத்தகமாகத் தொங்குவதை கண்டால் என்னதான் நினைப்பார்.

நானும் நாஞ்சில்நாடனும் வசந்தகுமாரும் நண்பர் மதுரை சண்முகத்தின் காரில் மகாராஷ்டிரம் பக்கமாகச் சென்றோம். சிவாஜியின் வரலாற்றுடன் சம்பந்தப்பட்ட கோட்டைகளை எல்லாம் பார்ப்பது திட்டம். பிஜப்பூர் கோட்டையைப் பார்த்தோம். கோல்கும்பாஸ் என்னும் மாபெரும் மசூதியின் கும்மட்டத்திற்குள் மையத்தில் இருந்து சாதாரணமாகப் பேசினாலும் அனைத்துப்பகுதிகளுக்கும் தெளிவாகக் கேட்கும்படி ஒலியமைப்பு இருப்பதைக் கண்டு வியந்தோம். பிஜப்பூர் மாபெரும் பீரங்கிகளின் ஊர். ஒவ்வொன்றும் ஒரு திமிங்கலம் என்று தோன்றியது. அனலுமிழ்ந்த அவை குளிர்ந்து செயலற்றுக்கிடந்தன.

அங்கிருந்து பூனா நோக்கிச் செல்லும்போது சாலையோரத்தில் மரத்தடியில் வயலை நோக்கியபடி  ஒரு பெரியவர் அமர்ந்திருப்பதைக் கண்டு வசந்தகுமார் ஓட்டிக்கொண்டிருந்த சண்முகத்தின் தோளில் மெல்லத் தொட்டார். வண்டி நின்றது. நாஞ்சில் நாடன் இறங்கி வயல் நோக்கி சென்றார். பெரியவரிடம் மராட்டியிலேயே பேச ஆரம்பித்தார். கோதுமை அறுவடை நடந்துகொண்டிருந்தது. அறுவடை இயந்திரம் மாபெரும் வண்டு போல உறுமியது. நாஞ்சில்நாடன் வயலின் புதுதானிய மணம் பெற்று உணர்ச்சிவசப்பட்டார். கோதுமையை உருவி ஊதி வாயிலிட்டு மென்றார். புதிய வைக்கோலை எடுத்து முகர்ந்தார். அவர் நான் அறிந்த எழுத்தாளன் அல்ல. அந்தச்சட்டையை உருவிப்போட்டுவிட்டு வீராணமங்கலத்து விவசாயியாக ஆகிவிட்டார்

 

2

நாஞ்சில்நாடன் வேளாண்மையைப்பற்றி சில கேள்விகளைக் கேட்பதற்குள்ளாகவே பெரியவர் பொரிந்துகொட்டித்தள்ளினார். வழக்கம்போல கோதுமையும் நஷ்டம்தான். ஆனால் வேறுவழியே இல்லை, விவசாயம் செய்தாகவேண்டும். மகன்கள் ஏன் விவசாயம் செய்யவேண்டும் என்றுதான் கேட்கிறார்கள். ஏன் செய்யவேண்டும் என்று அவரும் யோசிக்காமலில்லை. ஆனால் தந்தையும் பாட்டன்களும் செய்த தொழில். மண்ணை சும்மா விட்டுவிடுவது பாவம்.

”இங்கே விளையும் கோதுமையை எங்கோ ஏதோ வயிறு சாப்பிடவேண்டும் என தெய்வம் எழுதியிருக்கிறது. எறும்புகளோ எலிகளோ பறவைகளோ கூட சாப்பிடலாம். விவசாயம் செய்யாமல் விடுவது அவற்றை எல்லாம் பட்டினி போடுவது அல்லவா?” என்றார் பெரியவர். நாஞ்சில்நாடன் கண்கலங்கிவிட்டார். அவர் அருகே அமர்ந்து முகம் கனத்து பழுத்திருக்க கேட்டுக்கொண்டே இருந்தார்.

பெரியவர் நல்ல மங்கலமான தோற்றம் கொண்டிருந்தார். பெரிய வண்ணத் தலைப்பாகை. ஏராளமான பாசிமணிமாலைகளை அணிந்திருந்தார். வாயில் வெற்றிலை. சிவப்பு நிறம். முதுமையில் சுருங்கிய முகமானாலும் சிரிப்பும் கண்களில் குறும்பும் இருந்தன. ஆரோக்கியமானவர் என்பதை குரலே காட்டியது. நாஞ்சில் பேசிக்கொண்டிருக்கும்போது வசந்தகுமார் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார். நாஞ்சில்நாடனின் ’சூடிய பூ சூடற்க’ ஒன்று நூலின் அட்டையாக அமைந்தவர் அந்தப்பெரியவர்தான்

வசந்தகுமாரின் காமிரா எப்போதுமே முகங்களுக்காக காத்திருக்கும். அவர் பெரிய காமிராக்களைப் பயன்படுத்துவதில்லை. பெரும்பாலும் காருக்குள் அல்லது பேச்சு நடக்கும் களத்திற்கு வெளியேதான் இருப்பார். ஆகவே படம் எடுக்கப்படுவது எவருக்குமே தெரியாது. ஆனால் பெரும்பாலும் பெண்கள் பறவைகளைப்போல ஓரவிழிப்பார்வை கொண்டவர்கள். காமிரா அசைவை அவர்கள் முன்னரே உணர்ந்துவிடுவார்கள். அவர்கள் புகைப்படம் எடுப்பதை அனுமதித்தால் மட்டுமே எடுக்கமுடியும். பெரும்பாலான தருணங்களில் அவர்கள் அறிந்தும் அறியாதவர்கள் போல இருப்பார்கள். குருவிகள் அப்படி நம்மை பார்த்தபின் பார்க்காத பாவனையில் இருப்பதைக் காணலாம். பெண்களை பறவை என்று கவிஞர்கள் சொல்வது இந்த அழகிய பாவனைகளால்தான்

வசந்தகுமாரும் நானும் நண்பர்களுடன் கோதாவரியில் படகில் செல்லும்போது அப்படி பல அழகிய படங்கள் கிடைத்தன. கரிய அழகிய பெண் ஒருத்தி மூங்கில் குடிசைக்குமுன்னால் அமர்ந்திருந்தாள். வசந்தகுமாரின் காமிராவை அவள் பார்த்துவிட்டாள். எழுந்து குடிசைக்குள் செல்வதற்கு முன் சிரித்தபடி திரும்பிப்பார்த்தாள். காமிரா அக்கணத்தை அள்ளிக்கொண்டது. அழகிய அட்டைப்படமாக அவள் நிலைபெற்றாள்

அன்றுதான் ஆற்றங்கரை ஓரமாக நின்றிருந்த ஒரு சிறுமியை வசந்தகுமார் படம் எடுத்தார். அவள் பார்த்துவிட்டாள். ஆனால் விழிகொடுக்காமல் மறுபக்கம் நோக்கி நின்றிருந்தாள். பதினாறுவயதே இருக்கும். ஆனால் கல்யாணமாகி குழந்தையும் இருந்தது. நகை அணிந்து ஒரு மூங்கில்கூடையுடன் படகுக்காகக் காத்திருந்தாள். ஒரு மௌனப்போர் நடந்தது. அவள் திரும்பவில்லை, வசந்தகுமார் காத்திருந்தார்.

படகு திரும்பியது. படகு புகைப்படமெடுக்காமலேயே சென்றுவிட்டதோ என அஞ்சியவள்போல அவள் அனிச்சையாகத் திரும்பிப்பார்த்தாள். காமிராவின் கண்களைப் பார்த்ததும் சிரித்துவிட்டாள். காமிரா அச்சிரிப்பை ஓவியமாக்கியது. ராஜ சுந்தரராஜனின் நாடோடித்தடம் நூலின் அட்டையில் அந்தப்பெண் இருக்கிறாள். அந்தப்பயணத்தில் சற்று நேரம் கழித்து எடுக்கப்பட்ட படம் சு வேணுகோபாலின் கூந்தப்பனை நூலின் அட்டை. அந்தப்பெண் எண்ணத்தில் ஆழ்ந்து காத்திருந்தாள். ஆனால் படம் எடுக்கப்படுவது அவளுக்குத் தெரிந்திருந்தது

100-00-0002-208-5_b

முகங்களில் என்ன இருக்கிறது? முகங்கள் வாழ்க்கையைப் பதிவுசெய்தபடியே இருக்கின்றன. துக்கம் மகிழ்ச்சி மலர்ச்சி சோர்வு என அவ்வாழ்க்கையையே முகம் காட்டுகிறது. உண்மையில் அந்தக் குணச்சித்திரமே முகத்தில் உள்ளது. நமக்குத்தெரிந்தவர்களின் முகங்கள்தான் நம்மை ஏமாற்றுகின்றன. தெரியாதவர்களின் முகங்களைக் காட்டும் புகைப்படங்கள் மிகத்துல்லியமாக அவர்களின் குணத்தைக் காட்டிவிடுகின்றன.

2008ல் இந்தியப்பயணத்தில் நல்கொண்டா மாவட்டத்தைச் சுற்றிப்பார்த்தோம். வரங்கல்லில் இருந்து மாலை கிளம்பி பாலாம்பேட் என்ற கிராமத்தில் இருக்கும் ராமப்பா ஏரிக்கு அருகே உள்ள ராமப்பா கோயில் சென்றோம். வரங்கல்லில் இருந்து எழுபது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இது. சின்னஞ்சிறு கிராமம். வழிகேட்டு வழிகேட்டுச் சென்றோம். ராணி ருத்ராம்பா உருவாக்கிய ராமப்பா ஏரி கடல்போல வரவேற்றது. வழியெங்கும் கூட்டம் கூட்டமாக எருமைகளை மேய்ச்சலுக்குக் கொண்டு சென்றார்கள்.

ராமப்பா கோயில் எனப்படும் கோயில் ரேச்சால ருத்ரன் என்ற சிற்றரசனால் கட்டப்பட்டது. இவன் முதலாம் கணபதி தேவருக்கு கீழே இருந்தவன். அக்கோயிலில் உள்ள சிவன் பெயர் ராமலிங்க சுவாமி. ராமேஸ்வரத்து தெய்வம்தான். சிற்பங்களைப்பார்த்து முடிக்க அந்தி ஆகிவிட்டது. கலைப்பரவசத்தில் மதிய உணவைச் சாப்பிட மறந்துவிட்டோம். வெளியே வந்ததுமே உக்கிரமாகப் பசித்தது

வழியில் ஒரு புல்வேய்ந்த டீக்கடையில் கரீம்நகருக்கு வழிகேட்டோம். அவர்கள் கடைமூடும் நேரம். கடையை நடத்திய கடைக்காரரும் மகளும் எங்களை உற்சாகமாக வரவேற்று எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டுத்தெரிந்துகொண்டனர். அவர்களுக்கெல்லாம் சென்னையும் கன்யாகுமரியும் தெரியும். வசந்தகுமார் வரைபடத்தை எடுத்து விரிக்க அந்தக் கடைக்காரரின் மகள் சிரித்தாள், “இதோ இருக்கும் கரீம் நகருக்குப் போவதற்கு மேப்பா?” என்று கேட்டாள்.

unnamed

“பாப்பா, நாங்கள் கன்யாகுமரியில் இருந்து வருகிறோம். எங்களுக்கு இதெல்லாம் அன்னியதேசம்தான்…” என்றோம். அழகான பெண். குட்டையான தலைமுடியும் கூரிய முகமும் சிறிய கண்னாடியுமாக இருந்தாள். “கன்யாகுமரியில் இருந்து ஏன் இங்கே வந்தீர்கள்?” என்றாள். “ராணி ருத்ராம்பாவின் மண்ணைப்பார்க்கத்தான்” என்றேன். அழகிய பல்வரிசை தெரிய சிரித்தாள். வசந்தகுமாரின் காமிரா அதை தொட்டு எடுத்து சேர்த்துக்கொண்டதை நான் உணர்ந்தேன். பேச்சு சுவாரசியத்தில் அவள் கவனிக்கவில்லை. “இங்கே நிறைய கோயில்கள் உள்ளன. எல்லாவற்றிலும் பொம்மைகளுண்டு” என்றாள்

“வேறு எங்கே செல்லப்போகிறீர்கள்?” என்று கேட்டாள். நான் “வடக்கே காசிவரை” என்று சொன்னதும் கண்கள் பிரமிப்பில் திறந்துவிட்டன. “ஏன்?” என்று மேலும் தாழ்ந்த குரலில் கேட்டாள். “சும்மா பார்க்கத்தான்”. அவள் “ரொம்பதூரம் இல்லையா?” என்றாள். “ஆம்|”என்றேன். மானசீகமாக அங்கே சென்றுவந்துவிட்டாள் என்று தெரிந்தது.

“பாப்பா என்ன படிக்கிறாய்?” என்றார் செந்தில் அவள் “புகுமுக வகுப்பு” என்றாள். “என்ன சப்ஜெக்ட் ?” என்றேன். அவளுக்கு அப்போதுதான் புரிந்தது. வெடித்துச் சிரித்தபடி “படித்தது 8 வருடம் முன்பு” என்றாள். ஆறுவயதில் அவளுக்கு மகன் இருக்கிறான். கணவர் வளைகுடா நாட்டில் வேலை பார்க்கிறார். “நம்பமுடியவில்லை…பொய் சொல்கிறாய்” என்றோம். “உண்மை,சத்தியமாக” என்றாள்.

ஆச்சரியமாக இருந்தது. வயதே தெரியவில்லை. வயதை நாம் ஒவ்வொருமுறையும் உள்ளூர் அடையாளங்களைக்கொண்டே மதிப்பிடுகிறோம். மத்திய இந்தியப்பகுதியின் ஸித்தியன் இனப்பெண்கள் மிகச்சிறிய செங்கல்நிற உடலும் கூரிய முகமும் சிறிய விழிகளும் கொண்டவர்கள். அந்த சிறிய கட்டமைப்பே அவர்களின் வயதை மறைத்துவிடுகிறது

வசந்தகுமார் அட்டைப்படகாக ஆக்காத அந்தப் பெண்ணின் முகத்தை எடுத்துப்பார்த்தேன். அதிலிருந்த சிரிப்பு அப்படியே இருந்தது. எட்டாண்டுகளில் அந்தப்பெண் என்னென்னவோ ஆகியிருப்பாள். ஆனால் என்றும் இளமையாக எங்கள் நினைவில் நீடிப்பாள்.

குங்குமம் முகங்களின் தேசம்

 

முந்தைய கட்டுரைகொற்றவையின் தொன்மங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 14