ஜெ,
என் பெயர் வேண்டாம். இங்கே நான் பிழைக்க முடியாது. நான் இங்கே சில்லறைக்கூலிக்கு வேலைசெய்ய வந்தவன். புதுக்கோட்டை மாவட்டம்.
திரு சித்துராஜ் பொன்ராஜ் அவர்களின் கதைகளைப்பற்றி பாராட்டி எழுதியிருந்தீர்கள். நானறிந்து அடுத்த தலைமுறையில் நீங்கள் இத்தனை பாராட்டிய ஓர் எழுத்தாளர் வேறு யாரும் கிடையாது.
ஆனால் நீங்கள் அவர் ஃபேஸ்புக்கில் என்ன எழுதினார் என்று பார்த்தீர்களா? நீங்கள் அவருக்குத் தமிழ் முறையாகத் தெரிந்திருக்காது என்று எழுதியிருந்தீர்கள். அவர் ஒரு கடிதமும் உங்களுக்கு எழுதியிருந்தார். அதற்கு நீங்கள் அப்படி நீங்கள் ஏன் ஊகித்தீர்கள் என்றும் எழுதியிருந்தீர்கள்
அதாவது உங்களை வாசித்தவராகச் சொல்லும் அவர் உங்களை நேரில் சந்தித்தபோது தமிழிலே பேசவில்லை. நீங்கள் அறிமுகம் செய்துகொண்டபோதுகூட கெத்தாகப் பேசியிருக்கிறார். அவருக்குத் தமிழ் தெரிந்திருக்காதுபோல என நீங்கள் நினைத்துக் கொள்ளும் அளவுக்கு ‘பழகியிருக்கிறார்’
அவர் நீங்கள் எழுதியபிறகு ஃபேஸ்புக்கில் உங்களைப்பற்றி ஏகப்பட்ட நக்கல்களும் கிண்டல்களுமாக எழுதியிருந்தார். பொதுவாக சிங்கப்பூரியன்களின் மனநிலை என்பது ‘நீ பிழைக்கத்தானே வந்தாய். அந்த வேலையைப்பார். விமர்சனமெல்லாம் செய்யாதே. பொத்திக்கிட்டு போ’ என்பதுதான். அதே மனநிலையில் அதேபோன்ற வரிகளைத்தான் சித்துராஜ் எழுதியிருந்தார்
அதாவது ’நீங்கள் சிங்கப்பூர் அரசின் ஊதியம் பெற்று வேலைக்கு வந்தவர். இங்கே வீட்டுவேலைக்கு வரும் தமிழர்களைப்போலத்தான் நீங்களும். சொன்னவேலையைச் செய்து பணத்துடன் திரும்பப்போகவேண்டியதுதானே, என்ன விமர்சனம் வேண்டிக்கிடக்கிறது?’ என்பதுதான் அவரது நக்கல்களின் சாராம்சம்
அதை இந்தியாவிலுள்ள உங்கள் எதிரிகளும் உண்மையிலேயே கூலிகொடுத்தால் பாராட்டுபவர்களும் மாய்ந்து மாய்ந்து லைக் போட்டு மகிழ்ந்தார்கள். அதற்குப்பிறகுதான் நீங்கள் எழுதுகிறீர்கள். அவர் பெரிய எழுத்தாளராக வருவார் என்கிறீர்கள்.
என் கேள்வி இதுதான். இலக்கியவாதிமேல் இலக்கியம் மேல் கொஞ்சம் கூட மதிப்பில்லாத ஒருவர், தாய்நாட்டுத் தமிழர்கள் மேல் இப்படி ஒரு இளக்காரமான எண்ணம் கொண்ட ஒருவர் எப்படி தமிழர்களுக்குரிய எழுத்தாளராக ஆகமுடியும்? எப்படி அவர் ஒரு நல்ல மனிதராக இருக்கமுடியும்? நல்லமனிதராக இல்லாதவர் எப்படி நல்ல எழுத்தை உண்டுபண்ண முடியும்?
கே.
*
அன்புள்ள கே,
நான் ஃபேஸ்புக் வாசிப்பதில்லை. அவர் அப்படி கிண்டலோ நக்கலோ செய்திருந்தால் அது ஃபேஸ்புக்கின் கொண்டாட்டங்களில் ஒன்று.அங்கே எல்லாமே நக்கல்தான் என்றார்கள். அதற்குமேல் அச்சொல்களுக்கு முக்கியத்துவமேதும் இல்லை. ஃபேஸ்புக்கில் எவரோ என்னை வசைபாடாத, கிண்டல் செய்யாத ஒருநாள் கூட கடந்து செல்வதில்லை என்றார்கள் நண்பர்கள். குறைந்த பட்சம் அதில் என்மேல் ஒரு கவனம் உள்ளது. அது நல்லதுதானே?
நான் என் கட்டுரைகளில் சொல்லும் விஷயம் ஒன்றுதான், உண்மைதான் இலக்கியத்தின் அழகு. அரசியல் சரிகள், ஒழுக்கநிலைகள் அல்ல. சிங்கப்பூரியர்களுக்கு தமிழர்கள் கூலிக்கு வருபவர்கள் என்னும் இளக்காரம் இருந்தால், அது சித்துராஜிடம் இயல்பாகவெளிப்பட்டால் அது மிகச்சரியான ஒரு பிரதிநிதித்துவம்தானே? அவர் அதை மறைத்தோ கட்டுப்படுத்தியோ எழுதினால்தான் தவறு.
ஏனென்றால் இலக்கியம் ஒரு வாக்குமூலம்தான். தன்னியல்பான வெளிப்பாடு என அதைத்தான் சொல்கிறோம். எழுத்தாளன் ஒரு சமூகத்தின் ’சாம்பிள்’ ஆக இருக்கும்போதே முக்கியத்துவம் பெறுகிறான். பொய்யான ஒழுக்கம் , அரசியல் சரிகளை வெளிப்படுத்தும்போது அல்ல.
அவர்கள் அப்படி உணர்கிறார்கள், அப்படி தங்கள் எழுத்தில் வெளிப்படுத்துகிறார்கள் என்றால் அது ஏன், எந்தெந்தப் பண்பாட்டுக் காரணிகளால் அவ்வாறு நிகழ்கிறது என்று ஆராய்வதே இலக்கிய வாசகனின் மனநிலை. அதனால் புண்படுவதும் சரி ,அதன்பொருட்டு அவ்வெழுத்துக்களை விலக்குவதும் சரி, அவ்வாறெல்லாம் எழுதக்கூடாது என்று அவரிடம் சொல்வதும் சரி அவன் செய்யக்கூடாதவை. இலக்கியத்திற்கு எதிரானவை.
சித்துராஜ் பொன்ராஜின் எழுத்தில் சிங்கப்பூரியத் தனித்தன்மை ஒன்று தெரிந்தது. அது எப்படி வெளிப்பட்டாலும் தமிழில் உள்ளவரை தமிழிலக்கியத்திற்கு முக்கியமானதே. அந்த சிங்கப்புயுரிய அழகியலைத்தான் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். வாசிக்கவும் ஆராயவும் பாராட்டவும் வேண்டும். அவர்கள் தமிழகத்தை வெறுத்தாலோ, அல்லது நம்மை இளக்காரம் செய்தாலோ அது நம் மதிப்பீட்டில் மாறலாகாது.
எது அவர்களால் உண்மையில் உணரப்படுகிறதோ அதை அவர்கள் எழுதட்டும். தமிழகத்தைப் பார்த்து எழுதுவது, பொதுவான விஷயங்களை எழுதுவதுதான் பிழையானது. அவர்களின் உள்ளம் உண்மையாக வெளிப்படும்வரை அதை இலக்கியமென்று சொல்ல எனக்குத் தயக்கமில்லை. ஏனென்றால் எனக்கு இலக்கியம் என்னும் இயக்கம்மீது ஆழமான நம்பிக்கை உண்டு.
நம்மை விட அவர்கள் முன்னேறிய தேசம். அது அளிக்கும் தன்னம்பிக்கையோ மேட்டிமைத்தன்மையோ அவர்களுக்கு இருக்கலாம். அது இயல்பு. அதைவிட பலமடங்கு மேட்டிமைத்தனம் அமெரிக்காவில் குடியேறிய நம்மூர்த்தமிழர்களிடம் உள்ளது. “யூ இண்டியன்ஸ் இப்பவும் நீங்க மாறலையா?” என்று நம்மிடம் கேட்கிறார்கள். அதெல்லாம் வரலாற்றின் சில இயல்புகள் என எடுத்துக்கொள்ளவேண்டியதுதான்
நாம் வேறுதேசம், வேறுசூழல். இங்கு நாம் வரிசைகளில் காத்திருந்து, பேருந்துகளில் முண்டியடித்து, வேலைச்சுமைகளுக்கு நடுவே எழுதி, வருடத்திற்கு ஆயிரம் ரூபாய் சன்மானம் பெற்று, நன்றிக்கடிதத்தையே ராயல்டியாக வாங்கி பூரித்து இலக்கியம்படைக்றோம். அவர்களுக்கு பலமடங்கு வாய்ப்புகள் உள்ளன. எழுத ,வாசிக்க ,விவாதிக்க . சர்வதேசக் கருத்தங்களுக்குச் செல்லலாம். உலகளாவிய பதிப்பகங்களில் இடம்பெறலாம்.
அவ்வாய்ப்புகளைப் பயன்படுத்தியும் அவர்கள் மொக்கையாக எழுதும்போது சீற்றம் வருகிறது. அதற்குக்காரணம் தமிழ்மேல் நமக்கிருக்கும் ஈடுபாடே. அவ்வாய்ப்புகளைப் பயன்படுத்தி சித்துராஜ் போன்றவர்கள் மேலே சென்றால் தமிழ்மேல் கொண்ட ஈடுபாட்டால் அதை தமிழின் வெற்றியென்றே கொள்ளவேண்டும்.அவர்கள் எழுதட்டும்
ஜெ
சித்துராஜ் பொன்ராஜ் கதைகளைப்பற்றி….
https://chajournal.wordpress.com/2016/08/29/addiction-sithuraj/