‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 6

[ 10 ]

முனிவர்கள் கூடிவந்து தன்னிடம் சொன்னதைக் கேட்டு மகாகாளர் மூக்கிலிட்ட கையை குடைந்தபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தார். அவர் அருகே நின்ற முதல் மாணவன் உரத்தகுரலில் “நாங்கள் நேற்றே கிளம்புவதாக இருந்தோம். எங்கள் ஆசிரியர் மகதமன்னரைக் காணச் செல்லவேண்டியிருக்கிறது. இங்கு நாங்கள் தங்குவது இயலாதது” என்றான். “மேலும் நாங்கள் பெற்றுக்கொள்வது பொன்னும் மணியும் மட்டுமே. அதை அளிக்க வைதிகரால் இயலாது” என்றான் இரண்டாவது மாணவன். மகாகாளர் தன் மூக்கிலிருந்து உருட்டி எடுத்த அழுக்கை முகர்ந்தபின் “செய்துவிடலாம்” என்றார். அவர்கள் திகைத்து அவரைப் பார்த்தனர்.

அவர் “அவனை நான் அறிவேன்” என்றார். “யார்?” என்றார் கனகர். “இந்த குருநிலையை அழிக்கும்பொருட்டு அனுப்பப்பட்ட மாயாவிதானே?” என்றார் மகாகாளர். புன்னகையுடன் “அவன் அழிப்பவன். அதற்குமேல் அவனுக்கு இலக்கு என ஏதுமில்லை” என்றார். அவர்கள் ஒருவரோடொருவர் விழிகளால் பேசிக்கொண்டபின் கனகர் “நாங்கள் இப்போது பொன்னென ஏதும் அளிக்கவியலாது. ஆனால் எங்களில் ஒருவர் பாரதவர்ஷத்தின் ஏதேனும் பெருமன்னருக்கு வேள்வி செய்யச் செல்வோம். கிடைக்கும் பொன் அனைத்தையும் உங்களுக்கே அளிப்போம்” என்றார்.

“எனக்கு காணிக்கை என ஏதும் தேவையில்லை” என்று மகாகாளர் சொன்னார். “நான் இதை என் பொருட்டே செய்யலாமென எண்ணுகிறேன்.” அவர்கள் மீண்டும் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டார்கள். “அதைவிட நான் அறிந்தாகவேண்டிய ஒன்று அவனிடம் உள்ளது. அதை அவனைச் சூழ்ந்து சிறைப்பிடிக்காமல் நான் அறியவும் முடியாது.” கருணர் “அவனை முன்னரும் எதிர்கொண்டிருக்கிறீர்களா?” என்றார். “அவனை எதிர்கொண்டபடியேதான் இருக்கிறேன்” என்றார் மகாகாளர்.

அவர்கள் நினைத்தது ஈடேறுமென்ற எண்ணத்தை அடைந்தனர். ஆனால் அவ்வெண்ணம் ஆறுதல் அளிக்கவில்லை. அவர்களின் நெஞ்சங்களை பதறச்செய்தது. பின்வாங்கிவிடலாமா என ஒவ்வொருவரும் ஆழத்தில் எண்ணி பிறரை எண்ணி அதை கைவிட்டார்கள். “இருளைக்கொண்டு ஆடுகிறான். அவனுள்ளும் இருக்கும் அவ்விருள். அதையே அவனுக்கு அனுப்புகிறேன். அதை என்ன செய்வான்?” என்றார் மகாகாளர். அவர் என்ன சொல்கிறார் என்று புரியாமல் முனிவர்கள் மாணவர்களை பார்த்தனர். அவர்களும் ஒன்றும் புரியாமல்தான் நின்றுகொண்டிருந்தனர்.

“அபிசார வேள்வியை நடத்த இடம் வேண்டும் அல்லவா? இங்கு நடத்தமுடியாது…” என்றார் கனகர். “அதற்குரிய பொருட்கள் என்னென்ன என்று சொல்லிவிட்டீர்கள் என்றால் இன்றே சேர்த்துக்கொள்ளத் தொடங்குவோம்” என்றார் கருணர். “இக்காட்டினுள் ஒரு மலைப்பாறை போதும். எளிய வேள்விக்குரிய நெய்யும் விறகும் தர்ப்பையும் தோலிருக்கைகளும் போதும். பிறிதொன்றும் தேவையில்லை” என்றார் மகாகாளர்.

அவர்கள் திகைப்புடன் நோக்கிக்கொண்டபின் “அபிசாரம் என்றால்….” என்று சொல்லத்தொடங்க “மண்ணிலுள்ள இழிபொருட்களை அளித்து அது செய்யப்படுகிறது. காய்ந்தமலம் முதல் காக்கைச்சிறகுவரை ஆயிரத்தெட்டு பொருட்கள் அதற்குத் தேவையாகின்றன. ஆனால் நான் விண்ணிலுள்ள இழிபொருள் ஒன்றையே அவியாக்கவிருக்கிறேன்” என்றார் மகாகாளர்.

“இது ஒரு தருணம். ஒருவேளை நான் இங்கு வந்ததே அதன்பொருட்டாகவிருக்கலாம்” என்றபின் எழுந்துகொண்டு “நாள் கடந்து நாள் இரவு கருநிலவு. அந்நிசி உகந்தது” என்றார். அவர் நடந்துசென்றபோது திகைத்து நின்றிருந்த அவரது மாணவர்களும் உடன் சென்றனர். “என்ன சொல்கிறார்?” என்றார் சூத்ரகர். “நாமறியாதது. ஆனால் அவரால் முடியும் என நினைக்கிறேன்” என்றார் கனகர். “எப்படி?” என்றார் சூத்ரகர். “அதை சொல்லத்தெரியவில்லை. ஆனால் ஆற்றலை மட்டும் நம்மால் எளிதில் புரிந்துகொள்ளமுடிகிறது” என்றார் கனகர். “நம் அச்சத்தால் அதை அறிகிறோம்.”

கருநிலவுநாளில் அந்தியில் குருநிலையில் அனைத்து வேள்விச்சடங்குகளும் முடிந்தபின் முனிவர் பதினெண்மரும் உணவருந்தாமல் துயிலச்சென்றனர். அனைவரும் துயின்றபின்னர் எழுந்து வெளியே நடந்து இருளுக்குள் ஒன்றுகூடினர். இருள்வழியாகவே சென்று காட்டுக்குள் இருந்த சிறிய பாறையடுக்கு ஒன்றை அடைந்தனர். அதன்மேல் வெண்ணிற ஆடையாக மகாகாளர் நின்றிருப்பது தெரிந்தது. கனகர் ஒருகணம் உளச்சோர்வுகொண்டார். அதை அவர் உடலசைவு வழியாகவே பிறர் அறிந்து நின்றனர்.

கனகர் “இப்போதுகூட நாம் திரும்பிச்சென்றுவிடமுடியும்” என்றார். பிறர் ஒன்றும் சொல்லவில்லை. இருளுக்குள் அவர்களின் விழிவெண்மைகள் மட்டும் தெரிந்தன. “நாம் எப்போது வேண்டுமானாலும் திரும்பியிருக்கலாமே?” என்று பின்னால் நின்றிருந்த அஸ்வகர் கேட்டார். அவர் முதலில் இருந்தே அஞ்சியவர் போலிருந்தார் என்பதை கனகர் உணர்ந்தார். “இதுவரை வந்துவிட்டோம். இதனாலேயே பாதிப்பங்கு செயலை ஆற்றிவிட்டோம். திரும்பிச்சென்றால் எஞ்சியதை கற்பனையில் ஆற்றியபடி மீதி வாழ்வை வீணாக்குவோம். சென்று செய்து விளைவை எதிர்கொள்வதே நாம் செய்வதற்குகந்தது.”

அது முற்றிலும் உண்மை என அனைவரும் உணர்ந்தனர். ஒன்றும் சொல்லாமல் மேலே சென்றனர். அவர்களை வரவேற்புச்சொல் ஏதுமின்றி மகாகாளர் எதிரேற்றார். அங்கே எளிய நிகர்சதுர வேள்விக்குளம் அமைக்கப்பட்டிருந்தது. அதன் கிழக்கே மேற்குநோக்கி மகாகாளர் அமர்வதற்கான புலித்தோல் இருக்கை. மகாகாளர் அமர்ந்ததும் இரு மாணவர்களும் அவருக்கு இருபக்கமும் பின்னால் அமர்ந்து வேள்விக்கு உதவிசெய்தனர். மகாகாளர் எந்த முகமனும் இல்லாமல் அனலேற்றி நெய்யூற்றி அவியிட்டு வேள்வியைத் தொடங்கினார். அதர்வம் ஒலிக்கத்தொடங்கியது.

மூன்று வேதங்களும் முற்றொதுக்கியவற்றால் ஆன நான்காம் வேதம். கனகர் அதை முன்னரே ஒலியெனக் கேட்டதே இல்லை. அதன் ஒலி ஒத்திசைவற்று இருப்பதாக முதலில் தோன்றியது. எருதுகள் செல்லும் காலடியோசைபோல. எருதுகளைக் கண்டபின்னர் அவற்றின் ஒசை ஒன்றென்றாகியது. பின்னர் அவர் அந்த ஓசையால் முற்றாக ஈர்க்கப்பட்டார். கல் அலைத்து ஒழுகிய பேரருவியென அது அவர்களை இட்டுச்சென்றது. மலைச்சரிவுகளில் சென்று அடியிலி நோக்கி பொழிந்தது.

எரிகுளத்தில் கதிர் எழுந்து நின்றாடியது. எந்த ஒலியையும் தான் ஏற்று நடிக்கத்தெரிந்தது தழல். அனைத்தையும் நிழல்கொண்டு தன்னுடன் ஆடவைக்கும் மாயம் அறிந்தது. தன்னிலிருந்து எழுந்து பேருருக்கொண்டு தலைமேல் எழுந்து நின்றாடும் அந்நிழலை அவர் நன்கறிந்திருந்தார். அது அவரை அறியாததுபோல் வெறிகொண்டு ஆடியது. காற்று நிழலை அசைத்தது. மரக்கூட்டங்களை நிழல் அசைத்தது.

அனலை மட்டுமே நோக்கியிருந்த மகாகாளரின் விழிகளுக்குள்ளும் அனலெரிந்தது. அவர் கை அவியளிப்பதை நிறுத்தி ஓங்கியபடி காற்றில் நின்றபோது அவர்கள் தம் எண்ணங்கள் அறுந்து அவரை நோக்கினர். அவர் உரத்த குரலில் “இருளெழுக! இருளென எழுக! இருண்டெழுக!” என்று கூவினார். பின்னர் அனலில் கையிலிருந்த இறுதி விறகை எறிந்து “எழுக! எங்குமுள்ளதே எஞ்சுவதே எழுக! எரிவதே அணைவதே எழுக! திகழ்வதே தெரிவதே மறைவதே எழுக! சூழ்க! சூழ்க! சூழ்க!” என்றார்.

கீழே பாறைக்கு அடியில் செறிந்திருந்த மரக்கூட்டங்களுக்கு நடுவே இருள் செறிந்து உருண்டு உருவானதுபோல் ஓர் அசைவை கனகர் கண்டார். அவர் விழிதிரும்பியதுமே தாங்களும் திரும்பிய பிறமுனிவரும் அதைக் கண்டனர்.

[ 11 ]

“தாருகக் காட்டின் எட்டு முனிவர்களால் எட்டுத் திசைகளிலிருந்தும் எட்டு யானைகள் எழுப்பப்பட்டன என்கின்றன தொல்கதைகள்” என்றார் பிச்சாண்டவர். இருள் சூழ்ந்திருந்த இரவில் குளிர்ந்த இருள் எனக் குவிந்தெழுந்த பாறை ஒன்றின் மேல் அவர்கள் அமர்ந்திருந்தனர். “அவை எட்டுத் திசையானைகளாகச் செறிந்த கடுவெளியின் இருளே. அதர்வச்சொல் ஒவ்வொன்றுக்கும் நடுவே நிறைந்திருப்பது அவ்விருளே. இருளைக்கொண்டு இருளை ஏவினார் மகாகாளர். இருள்வேழங்கள் துதிக்கை தூக்கி பிளிறியபடி வந்து அந்த வேள்விக்குண்டத்தை எட்டுத் திசைகளிலும் சூழ்ந்து செவியாட்டி இருளை ஊசலாட்டியபடி நின்றன.”

“மகாகாளர் தன் கையிலிருந்த கங்காளத்தை மீட்டினார். விம்மலென எழுந்த அந்த ஓசையை செவிகோட்டி அவை கூர்ந்தன. அவற்றின் விழிகளென அமைந்த இருட்துளிகள் மின்கொண்டன. அந்தக் கங்காளத்தை அவர் சுழற்றி காட்டில் எறிந்தபோது அவை கொலைப்பிளிறலுடன் காட்டுக்குள் பாய்ந்தன. காட்டுக்குள் நிறைந்திருந்த கங்காளத்தின் ஒலியை அவை கேட்டன. செவிகோட்டி ஒலிதேர்ந்தும் துதிநீட்டி மணம்கொண்டும் அவை காட்டுக்குள் ஊடுருவிச் சென்றன.”

“இருளென இருளில் கரைந்து, இருளிலிருந்து இருட்குவையென பிதுங்கி எழுந்து அவை சென்றன. பிளிறும் பேரிருருள். கங்காளம் மீட்டிச்சென்றுகொண்டிருந்த கிராதனைக் கண்டதும் எட்டும் இணைந்து ஓருருக்கொண்டன. கரியமலைபோல பேருடல் கொண்டு அவனை மறித்தன.”

பிச்சாண்டவர் வைசம்பாயனனை நோக்கி “அக்கரியுரித்தல் நிகழ்ந்த இடமென பன்னிரு இடங்களை நானே கண்டுள்ளேன். பாண்டவர்களை எரித்துக்கொல்ல கௌரவர்கள் முயன்ற வாரணவதம் அதிலொன்று” என்றார். “ஆனால் அது நிகழ்ந்திருக்குமென நான் எண்ணும் ஓர் இடத்தை பின்னர் கண்டேன். இமயமலைச்சரிவில் திரிகர்த்தநாட்டின் மறு எல்லையில் கின்னரர் நாடு தொடங்குமிடத்திலுள்ளது அது. கஜசர்மம் என்று அந்த மலை அழைக்கப்படுகிறது. அதனுள் ஆயிரம்பேர் நின்றிருக்கும் அளவுக்கு பெரிய குகை ஒன்றுள்ளது.”

இளவயதில் நான் எங்கள் எல்லை கடந்து சென்று வேட்டையாடுவதில் விருப்பம் கொண்டிருந்தேன். காட்டெருது ஒன்றை துரத்திச்சென்று வழிதவறி வழிகண்டுபிடிப்பதில் தோற்று மீண்டும் வழிதவறி நான் கஜசர்மத்தை சென்றடைந்தேன். நெடுந்தொலைவிலேயே யானை மத்தகம் போன்ற அந்த மலைப்பாறையைக் கண்டேன். அதன் மேல் மரங்கள் நின்றிருந்தன. அப்படியென்றால் அதற்கருகே நீர்நிலை இருக்கும் என உய்த்து எரியும் விடாயுடன் அதனருகே சென்றேன்.

நீர்நிலை மான்விழிபோல கிடந்தது. நீரள்ளி அருந்தியபோது என் மேல் அம்புகள் குறிவைக்கப்படுவதை கண்டேன். ஒன்றும் செய்வதற்கில்லை என்பதனால் நீரை அள்ளி அருந்தி முடித்து மண்ணில் முகம் பதிய குப்புற விழுந்துகிடந்தேன். அவர்கள் என்னை சூழ்ந்துகொண்டனர். என்னை பிடித்துத் தூக்கி நாரால் கைகளைக் கட்டி இழுத்துச் சென்றனர். அவர்களின் மொழியிலிருந்தும் தோற்றத்திலிருந்தும் என்னைக் கொல்லமாட்டார்கள் என என் ஆழம் உய்த்தறிந்தது. ஆகவே நான் என்னை முற்றாக அவர்களுக்கு ஒப்படைத்துக்கொண்டேன்.

அவர்கள் அங்குள்ள பதினெட்டு குகைகளிலாக வாழும் தொல்குடி. தங்களை அவர்கள் காலர்கள் என அழைத்துக்கொண்டார்கள். என்னை அங்குள்ள சிறுகுகை ஒன்றில் அடைத்து வைத்தனர். அவர்களின் குடிப்பூசகர் புலித்தோலாடை அணிந்து உடலெங்கும் சாம்பல்பூசி சடைமுடிமேல் பன்றிப்பல்லால் ஆன பிறைநிலவு சூடி கழுத்தில் நாகத்தை மாலையென அணிந்திருந்தார். அவர்கள் அவரை சிவம் என்றனர்.

முழுநிலவுநாள் வரை அங்கேயே என்னை அடைத்து வைத்திருந்தனர். முழுநிலவு எழும்போது அவர் உடலில் எழுந்த சிவம் என்னை அயலான் அல்ல என்று அறிவுறுத்தியதும் என்னை அவர்களில் ஒருவராக சேர்த்துக்கொண்டனர். அவர்களை அறிந்தபின்னர் அங்கிருந்து செல்லலாம் என எண்ணி நான் நான்குமாதகாலம் அவர்களுடன் வாழ்ந்தேன். அவர்களில் ஒரு பெண்ணையும் மணந்துகொண்டேன்.

குடிப்பூசகரான சிவம் முதல்முறை சூர்கொண்டபோது என்னை சிவந்த விழிகளால் நோக்கி “கையிலுள்ளது மண்டை. மண்டையை கையிலேந்தியவன். மண்டை உதிரும் இடமொன்று உண்டு. தேடுக! தேடிச்செல்க!” என்றது. அதன்பொருள் அன்று எனக்குப் புரியவில்லை. நான் அவர்களில் ஒருவராக ஆனபின் ஒவ்வொரு முழுநிலவிலும் என்னை நோக்கி அதையே சொன்னது. “மண்டையைக் கையிலேந்தும் ஊழ்கொண்டவர் சிலரே. ஊழ் கனிக! இருள்பழுத்து சாறு எழுக!”

நான் கிளம்புவதற்கு முந்தைய முழுநிலவில் “ஏழுலகைப் பெய்தாலும் நிறையாதது மண்டை. முடிவுள்ளதொன்றாலும் நிறையாத கலம். முடிவிலி நிறைக்கட்டும் அதை. முடிவிலா கடுவெளி நிறைக்கட்டும் அக்கலத்தை. பெரும்பாழே அதை நிறைக்கட்டும்” என்றது. அன்றுதான் அச்சொற்கள் நான் உணராத பெரும்பொருள் கொண்டவை என்று உணர்ந்தேன். அவரிடம் மறுநாள் அதைப்பற்றி கேட்டேன்.

ஆனால் அவருக்கு அவர் சொன்னது என்னவென்று புரியவில்லை. “நான் ஒன்று காட்டுகிறேன். நான் சொன்னதன் பொருள் அதிலிருந்ததென்றால் நீயே உணர்க!” என்று சொல்லி என்னை மட்டும் உச்சிமலைக்கு அழைத்துச் சென்றார். அங்கு மிக அணுகி ஒரு மலைப்பாறையை சுற்றிவந்த பின்னர்தான் ஒரு குகைவாயில் இருப்பது தெரிந்தது. அதற்குள் சுளுந்தொளியை ஏந்தியபடி என்னை அழைத்துச் சென்றார்.

விந்தையானதொரு கனவென என்னுள் நிறைந்திருக்கும் ஓவியத்தொகையை அங்கே கண்டேன். கருமைபடிந்த கற்சுவர்வளைவில் மின்னும் கருமையால் வரையப்பட்டவை அவ்வோவியங்கள். மெல்ல முதல் யானையை விழி அடையாளம் கண்டதும் யானைகள் தெரியலாயின. பின்னர் மேலும் மேலும் யானைகள். இறுதியில் அவ்விருளே யானைகளாலானதென்று தோன்றியது.

அந்த இருள்பரப்பால் முற்றிலும் சூழப்பட்ட மக்களைக் கண்டேன். அவர்கள் கடுங்குளிரில் என ஒருவரோடொருவர் ஒண்டிக்கொண்டு ஒற்றையுடலாக பாறையொன்றின் அடியில் கூடியிருந்தனர். வானில் இரு மெல்லிய அரைவட்டங்களாக இரு நிலவுகள் வரையப்பட்டிருந்தன. ஒன்று சூரியன் பிறிதொன்று சந்திரன் எனத் தெளிந்தேன். கூர்ந்துநோக்கியபோது மரங்கள் இலைகளை இழந்து கிளைகளில் வழிந்து உறைந்து தொங்கிய பனியுடன் நின்றிருக்கக் கண்டேன். இருளுக்குள் இருளாக பனியை வரைந்திருந்தனர். நோக்க நோக்க அச்சூழலே பனிமூடி உறைந்திருப்பதை அறியமுடிந்தது.

அக்கூட்டத்தில் ஒருவன் கரிய வெற்றுடலும் பிடரிமேல் படர்ந்த சடையுமாக எழுந்து முதலில் வந்த பெருவேழத்தை எதிர்கொண்டான். அதன் இரு கொம்புகளைப்பற்றி நடுவே தன் வேலைச் செலுத்தினான். அதைக் கொன்று பிளந்தான். அதன் ஊனை வெட்டியெடுத்து உண்டது அவன் குடி. அவ்வூன்கொழுப்பை எரித்து அனலாக்கி அதைச் சூழ்ந்து அமர்ந்து வெம்மை கொண்டன. அதன் தோலை உரித்து விரித்து அதைப் போர்த்தியபடி உடல்கூட்டி அமர்ந்திருந்தன.

அப்பால் யானைத்தோலை இழுத்துப் போர்த்தியபடி நின்றிருக்கும் அக்குலமூத்தானின் உருவத்தைக் கண்டேன். அதன் மத்தகத்தின் மேல் வலக்கால் ஊன்றி இடக்காலால் அதன் முன்வலக்காலை உதைத்து விலக்கி தலைக்குமேல் எழுந்த இரு கைகளால் அதன் பின்னங்கால்களை பற்றித்தூக்கி அத்தோலை தன்னைச்சூழ அமைத்து விழிகள் வானை நோக்க இதழ்களில் குறுநகையுடன் அவன் நின்றிருந்தான். அவன் காலடியில் வலப்பக்கம் சூரியநிலவும் இடப்பக்கம் சந்திரநிலவும் நின்றிருந்தன. அவன் உடல் செந்நிறத்தழலுருவாக வரையப்பட்டிருந்தது.

சிவம் என்னிடம் “மண்வடிவான அன்னை மகியின் ஆணைப்படி சூரியன் முற்றணைந்த காலம் ஒன்றிருந்தது. அன்று பகல் இருக்கவில்லை. முடிவடையாத இரவொன்றே திகழ்ந்தது. அன்று எங்கள் குலம் அழியாதபடி காக்க விண்ணிலிருந்து இறங்கி வந்த தெய்வம் இது. இதையே முதற்சிவம் என்கிறோம்” என்றார். நான் அந்த ஓவியத்தையே நோக்கிக்கொண்டிருந்தேன். அம்மூதாதையையே விடியல்கதிரவன் என வரைந்திருக்கிறார்கள் என்று தோன்றியது.

அவன் காலடியின் சிவந்த அழலை செம்பாறைக்குழம்பால் வரைந்திருந்தனர். அச்செம்மை அவன் உடலில் கீழிருந்து மேல் நோக்கி வீசியது. நோக்க நோக்க அனல் வெம்மையை அறியமுடிவதுபோலிருந்தது. அந்த எரியொளி வட்டத்திற்கு அப்பால் இருள். யானைகளாகச் செறிந்து குகைவிளிம்புவரை சென்று மெய்யிருளுடன் முற்றாகக் கலந்தது அது. என்னைச் சூழ்ந்திருக்கும் மதவேழங்களை உடலால் உணர்ந்தேன். செவியசையும் காற்றை. துதிக்கை மூச்சை. அதன் ஈர ஊன்மணத்தை. மரப்பட்டைபோன்ற உடல்கள் உரசிக்கொள்ளும் ஒலியை.

“நெடுநாட்கள் அக்காட்சி என் நினைவுக்குள் இருந்தது. பின் அது கனவுக்குள் சென்று வளர்ந்தது. நான் ஒருபோதும் அதிலிருந்து விடுபட்டதே இல்லை” என்றார் பிச்சாண்டவர். “இந்த நிறையாக் கபாலம் என் கைக்கு வந்தபின் அதை மீண்டும் கண்டேன். நாம் நம் விலங்கியல்பால் சென்றுகொண்டிருக்கும் பாதையில் பெருநிழலென தொடர்ந்து வருகிறது. நனவின் இடைவெளியில் அதை நாம் ஓர் எச்சரிக்கை உணர்வு என அறியக்கூடும். கனவுகளில் அச்சமென காணவும் கூடும். ஆனால் மெய்மை விழைந்து திரும்பி நடக்கத் தொடங்கும்போது நேர் எதிரில் காண்கிறோம்.”

“நான் அதை எதிரில் கண்டநாளை நினைவுறுகிறேன்” என்று பிச்சாண்டவர் தொடர்ந்தார். “அஞ்சிக் கூச்சலிட்டபடி எழுந்து நின்றேன். என் உடலில் இருந்து நீரும் மலமும் வெளியேறிக்கொண்டிருந்த வெம்மையை உணர்ந்தேன். தடுக்கி விழுந்து எழுந்து ஓடி என் ஆசிரியர் காலடியில் விழுந்தேன். யானை யானை என்று கூவினேன். ‘மரத்தை மறைக்கும் மாமதம்’ என அவர் புன்னகை செய்தார். என்னை எழுப்பி அவர் அருகே அமரச்செய்து என் ஆயிரமிதழ்த் தாமரையின் மையத்தை தன் சுட்டுவிரலால் தொட்டார். நான் அந்த யானையை என் முன் மிக அருகே கண்டேன்.”

“இரு நிலவுகள் எழும் யோகப்பெருநிலை” என்று பிச்சாண்டவர் சொன்னார். “அதைப் பிளந்தெழவேண்டுமென்பதே இலக்கு. கரியுரித்தெழும் கனலால் விடியும் காலை அது. நீளிருள் நீங்கும் தருணம்.” வைசம்பாயனன் அவரை நோக்கியபடி கனவிலென அமர்ந்திருந்தான். “எண்கரியை நீ கண்டுவிட்டாய். நன்று. அவை ஒன்றெனத் திரண்டு உன்முன் எழுக!” என்றபின் அவர் தன் சுட்டுவிரலை நீட்டி அவன் நெற்றிப்பொட்டை தொட்டார். அவன் விழிகள் எடைகொண்டவைபோல சரிந்தன. என்ன நிகழ்கிறது என அவன் உள்ளம் விழிப்புகொள்ள முயலும்தோறும் சித்தம் சரிந்து மறைந்தது. விழிகளுக்குள் இருள் ஊறி நிறைந்து மூடியது.

இருளின் மெல்லிய அசைவை அவன் மிக அருகெனக் கண்டான். அது ஒரு தோல்சிலிர்ப்பு. இருளில் விரிசல்கோடுகள் என வரிகள். யானைத்தோல். மூக்கு தொடுமளவுக்கு அண்மையில் அதை நோக்கிக்கொண்டு நின்றான். பின்னர் அகன்று அகன்று அதை முழுமையாகக் கண்டான். மிகப்பெரிய மத்தகம். இரு பேருருளைகள். கீழே அவன் ஒரு வெண்தந்தத்தைக் கண்டான். அது நீரில் பிறையென அலையடித்தது.

“சிவோஹம்” என்னும் ஒலி கேட்டு விழித்துக்கொண்டான். அவர் அவன் விழிகளைக் கூர்ந்து நோக்கி “என்ன கண்டாய்?” என்றார். “யானை” என்றான். அவர் “சொல்!” என்றார். “ஒற்றைப் பெருந்தந்தம்” என்றான். “ஒன்றா?” என்றார். “ஆம், அது நீர்ப்பாவையென்றாடியது.” அவர் சிலகணங்கள் அவனைக் கூர்ந்து நோக்கியபடி “வானில் நிலவு இருக்கவில்லையா?” என்றார். “இல்லை” என்றான் “அதன் பாவை மட்டுமே.”

அவர் எழுந்துகொண்டு “நீ செல்லும் திசை வேறு” என்றார். “ஆசிரியரே…” என அவன் எழுந்துகொண்டான். “நீ கனவுகளினூடாக அங்கு சென்றடைபவன். சொல்லை அளைபவன். உன் ஆசிரியன் ஒற்றைநிலவில் விழிதிறந்திருக்கும் ஒருவன்.” அவர் தன் சூலத்தை ஊன்றியபோது எலும்புமணிகள் குலுங்கின. “ஆசிரியரே, என்னை கைவிடாதீர்கள்… என்னை அழைத்துச்செல்லுங்கள்” என்று அவன் கூவியபடி அவர் கால்களைப் பற்றினான்.

அவர் தன்னை விடுவித்துக்கொண்டு நடந்து இருளுக்குள் சென்று மறைந்தார். அவரை உள்ளிழுத்துக்கொண்டு இருள் நலுங்காமல் நிறைந்து சூழ்ந்திருந்தது. தன் ஆடைக்குள் இருந்து பாவையொன்றை எடுத்துக்காட்டி மறைத்துக்கொண்ட அன்னை. அவன் அதையே நோக்கிக்கொண்டிருந்தான். நீள்மூச்சுகளாக விட்டுக்கொண்டு நெடுநேரம் அமர்ந்து பின் களைத்து படுத்துக்கொண்டான். அவ்வண்ணமே விழிமயங்கித் துயில்கொண்டான்.

பறவைக்குரல் கேட்டு அவன் விழித்துக்கொண்டான். வாயைத் துடைத்தபடி எழுந்தமர்ந்தபோது அவன் உடலில் இருந்து எழுந்து பறந்தது கொசுப்படலம். செந்நிறத் தீற்றலாகத் தெரிந்த கீழ்வான் சரிவை நோக்கியபடி எழுந்து நின்றான். குளிருக்கு கைகளை கட்டிக்கொண்டான். முதற்பறவைகளின் தனிக்குரல்கள் இருளில் ஒலித்துக்கொண்டிருந்தன. சாம்பல்வானப் பின்னணியில் எழுந்து சுழன்று மீண்டும் இறங்கிய சிறிய பறவைகளைக் கண்டான்.

KIRATHAM_EPI_06

வான்சிவப்பு அடர்ந்து விரிந்தது. ஓடைகளாக செவ்வொளி வழிந்து பரவியது. இருண்டபரப்பை கிழித்துப் போர்த்தியபடி எழுந்த செவ்வுருவை அவன் கண்டான். அதன் தெற்கு மூலையில் மெலிந்த வெண்பிறை வெள்ளிக்கம்பி போல வளைந்து நின்றிருந்தது.

வெண்முரசு விவாதங்கள்

நிகழ்காவியம்

முந்தைய கட்டுரைதெலுங்கில் நவீன இலக்கியம் உண்டா?
அடுத்த கட்டுரைவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 10