அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம். அண்மையில் எழுந்த சர்ச்சைகள் குறித்து எனக்கு சில கேள்விகள்.
இலக்கியம் என்பதன் வரையறை எது? எது சரியான இலக்கியம் என்று புதிய வாசகர்கள் எப்படி அறிவது?
இன்றைய இணைய காலகட்டத்தில் வாசிப்பவர்களுக்கு இணையாக எழுதுபவர்களும் உள்ளனர். கறாரான இலக்கிய இதழ்களில் வெளிவந்த படைப்புகளைப் போன்று இன்றைய வாசகன் சரியான எழுத்தைக் கண்டறிவது சிரமமாகத்தான் உள்ளது. ஏனெனில் இங்கு கொட்டிக் கிடப்பவை கற்பனைக்கப்பாற்பட்டவை. அதிகம் வாசிக்கும் பழக்கமுடைய என்னால், எனக்கு வரும் இணைய இதழ்கள், வலைப்பூக்கள், இலக்கிய இதழ்கள் என்று இணைப்பில் வந்து குவியும் எல்லா எழுத்துகளையும் முழுமையாக வாசித்து முடிக்க முடியவில்லை. சில நேரங்களில் வணிக கேளிக்கை எழுத்துகளைப் பிரித்தறியவே நேரம் கழிகிறதோ என்று தோன்றுகிறது. இன்றைய இணையத்தில் சரியான எழுத்தினை எப்படி பிரித்தறிவது? எழுதப்படும் அனைத்துமே கவிதைகளா? அதிகம் வாசிக்கப்படும் எல்லாமே சிறந்த இலக்கியமா என்றே வினா எழுகிறது.
தமிழ் இலக்கியத்தில் மாறும் காலகட்டங்கள் முன்பிருந்தவற்றை மீறி எழுந்தவையே. எனில் தமிழில் சமகாலத்தில் இனிவரும் காலங்களில் எத்தகைய படைப்புகள் உருவாகும்? எந்த வகையான எழுத்து முன்னிலை பெறும். ஒரு ஆர்வமிக்க இலக்கிய வாசகியாக சரியான எழுத்துகளை எப்படி கண்டறிவது? இதை உண்மையான ஆதங்கத்துடனேயே கேட்கிறேன். ஏனெனில் வாசிக்கத் தொடங்கி அது வெறும் வார்த்தை ஜாலம் மட்டுமே என்று ஒதுக்குவது உண்மையான வாசிப்பு ஆர்வங்கொண்டவர்களுக்கு எரிச்சலையே தரும் என்பது தாங்கள் அறிந்ததே.
ஜேகே எழுதுவார் “என்ன புஸ்தகம் இது? ஒண்ணும் நன்னா இல்லே. படிக்க ஆரம்பிச்சுட்டா, அதுக்காக ‘நன்னா இல்லன்‘னு வச்சுட முடியறதா? நன்னா இல்ல நன்னா இல்லேன்னு முனகிண்டே படிக்க வேண்டி இருக்கு? எங்கேயாவது கொஞ்சம் நன்னாயிருக்காதாங்கற நப்பாசை தான். சான்சே குடுக்க மாட்டான் போல இருக்கு! பக்கம் பக்கமாத் தள்ளிண்டே இருக்கேன்‘ என்று சில நேரங்களில் நாவலில். இப்படித்தான் எனக்கும் பல வேளைகளில் நடக்கிறது.
எப்படி வடிகட்டி வாசிப்பது என்று நேரமிருக்கையில் பதில் கூறுங்கள்.
நன்றி
மோனிகா மாறன்.
*
அன்புள்ள மோனிகா,
இங்கே நீங்கள் செய்யும் ஒரு பிழையை மட்டும் சுட்டிக்காட்டுகிறேன். இலக்கியம் என்பது அச்சிலும் இணையத்திலும் கண்கூடாகத் தெரிவதனால் புத்தகமாகத் தொட்டுப்பார்க்க முடிவதனால் ஒரு புறவயமான இயக்கம் என நினைக்கிறீர்கள். அப்படி அல்ல. இலக்கியத்தின் ஒரு பதிவு வடிவம் மட்டும்தான் அவை. இலக்கியம் எவ்வகையிலும் புறவயமானது அல்ல. அது முழுக்க முழுக்க அந்தரங்கமானது, தனிப்பட்டது, அகவயமானது. அதை புறவயமாக, அனைவருக்குமாக, எப்போதைக்குமாக வரையறை செய்யமுடியாது.
ஆகவே இலக்கியவாசிப்பு என்பது ஆசிரியனும் வாசகனும் அந்தரங்கமாக உரையாடிக்கொள்ளும் ஓர் இடத்தில் மட்டுமே நிகழ்கிறது. அதற்கு புறவயமான விதிகளை, இலக்கணங்களை, கொள்கைகளை நிரந்தரமாக உருவாக்கிக் கொள்ளமுடியாது. எனவே நல்ல இலக்கியம் என்பது இப்படி இருக்கும் என எவருமே வரையறை செய்யமுடியாது.
இலக்கியத்திற்கான எல்லா வரையறையும் அகவயமானதாகவே இருக்கும். ஒரு வாசகனிடம் மட்டுமே அவை அர்த்தம் கொள்ளும். உதாரணமாக, ஒரு நல்ல படைப்பில் சொல்மிகாத கூர்மை இருக்கும் என்று ஒரு வரையறையைச் சொல்வோம். சொல்மிகாத கூர்மை என்றால் என்ன என்பதை வாசகன் அல்லவா தீர்மானிக்கமுடியும்? ஒருவனுக்குச் சொல் மிகுந்துள்ளது என தோன்றும் படைப்பு இன்னொருவருக்கு கச்சிதமானதாகத் தோன்றும் அல்லவா? ஆகவே இலக்கியம் பற்றிய எந்தக்கூற்றும் வாசகனின் தன்னிலை சார்ந்த அர்த்தம் மட்டுமே அளிப்பதுதான்
ஆகவே இலக்கிய மதிப்பீடு, இலக்கியவகைப்பாடு என்பவை ஒருபோதும் அனைவருக்கும் பொதுவானவையாக இருக்கமுடியாது. அவற்றை எவ்வகையிலும் நிரூபிக்கமுடியாது. இந்தப் படைப்பு உயர்ந்தது என ஒரு விமர்சகன் சொல்கிறான் என்று கொள்வோம். அதை அவன் அந்தப்படைப்பை வாசித்து அதன் நுட்பங்களை தன்னைப் போலவே அறியும் ஒருவாசகனிடம் மட்டுமே சொல்ல முடியும். அவனிடம் மட்டுமே அவன் அப்படிச் சொல்வதற்கான தர்க்கங்களை முன்வைக்க முடியும்.
அந்தவாசகன் அப்படைப்பை வாசித்து அக்கருத்தையும் கணக்கிலெடுத்துக் கொண்டான் என்றால் அந்த விமர்சகனின் கருத்தை ஏற்கவோ மறுக்கவோ முடியும். அந்நூலை வாசித்து உணரமுடியாத ஒருவாசகனிடம் அந்த விமர்சகன் உரையாடவே முடியாது. என்ன சொன்னாலும் புரியவைக்கமுடியாது.
ஆகவே எந்த இலக்கிய வாசகனும் இலக்கியம் என்றால் என்ன என்று வரையறுக்கமுடியுமா என பொதுவெளியில் கேட்கமாட்டான். இலக்கியத்தின் இயல்புகளாகச் சொல்லப்படும் அழகு, ஆழம், நுணுக்கம், தரம் எதையுமே பொதுமேடையில் வரையறை செய்ய முடியாது. அவற்றை சமானமான ரசனை கொண்ட ஒருவரிடம் மட்டுமே சொல்லமுடியும். அவை விளக்குதலாக நிகழ முடியாது, சுட்டிக்காட்டலாகவே நிகழமுடியும்.
*
இலக்கியத்தின் இந்த அந்தரங்கத்தன்மை மிகமிக அடிப்படையான விஷயம். ஆரம்பப்பாடம் இது. இதை ஏதோ புதுக்கண்டுபிடிப்பு போல புரிந்துகொண்டு ‘பயில்முறை’ இலக்கியவாதிகள் இலக்கியத்தில் தரம் என்ற ஒன்று இல்லை என்றும் ஒருவருக்கு தரமான எழுத்து என்பது இன்னொருவருக்கு தரமற்றதாகத் தெரியும் என்றும் ‘உண்மை’களை எடுத்துவிட ஆரம்பிக்கிறார்கள். அப்படியே பாய்ந்துபோய் இலக்கியம் என்றே ஒன்று இல்லை என்று சொல்ல ஆரம்பிப்பார்கள். தொலைபேசி பெயர்ப்பட்டியல் கூட ஒருவருக்கு இலக்கியமாகத் தெரியலாமே என ஒரு மேதை ஒருமுறை சொன்னார்
இந்த அசட்டுத்தனத்திற்கு இருநூறாண்டுக் காலமாக இலக்கியவிமர்சகர்கள் பதில் சொல்லியிருக்கிறார்கள். அதன்பின்னரும் இந்தக் குரல் வந்துகொண்டே இருக்கும். இலக்கியத்தை பாமரர் தரப்பில் இருந்து எதிர்கொள்ளும் முதல் குரல் இது என நினைக்கிறேன்.
சாதாரணமாக யோசித்துப் பார்த்தாலே தெரியும், எந்த ஒரு அறிவுத்துறையிலும் அப்படி எல்லாமே சமம்தான், எல்லாமே முக்கியம்தான் என ஒரு நிலை இருக்கமுடியுமா என்ன? தான் ஈடுபடும் ஒவ்வொரு துறையிலும் மிகச்சிறந்ததை நோக்கி, மிகநுண்மையை நோக்கிச் சென்றுகொண்டே இருப்பதுதான் மானுட இயல்பு. மேலும் மேலும் என்றே அது தாவுகிறது. மானுடர் ஈடுபடும் அத்தனை செயல்களிலும் அந்த மேன்மையாக்கமும் நுண்மையாக்கமும் நிகழ்ந்தாகவேண்டும்.
இலக்கியம் உட்பட அனைத்திலும் நாம் பேசிக்கொண்டிருப்பது அதைப்பற்றித்தான். எப்படியோ ஒட்டுமொத்த மானுடக்குலமும் இணைந்து அந்த முன்னகர்வை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன. இன்று, செய்தித்தொடர்புகள் மூலம் உலகம் ஒன்றாகிவிட்டிருக்கிறது. இன்று அது கண்கூடாகத்தெரிகிறது. ஆனால் வரலாற்றுக்காலம் முழுக்க இப்படித்தான் மானுடக்குலம் ஒற்றைப் பெருந்திரளாக முன்னகர்ந்திருக்கிறது. கலை, அறிவியல், தத்துவம் அனைத்திலும். அதை பெருநூல்களை வாசித்தாலே அறியலாம். தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் பரவலாக ஆனதை நோக்கினாலே புரிந்துகொள்ளலாம்
ஆகவே தரம் என்பது என்ன என்றால் அந்த ஒட்டுமொத்த முன்னகர்வில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்னும் அளவீடுதான். அந்த ஒட்டுமொத்த உரையாடலில் உங்கள் குரலின் இடம் என்ன என்னும் கேள்விதான். அது என்றுமுள்ளது.
அது முதல்தளத்தில் தனிப்பட்ட ரசனை சார்ந்தது, அகவயமானது. ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் அப்படி அல்ல. அதற்கு கண்கூடான ஒரு புறவயத்தன்மை உண்டு. ஒருவருக்கு புகழேந்திப்புலவர் கம்பனை விட பிடித்தமானவராக இருக்கலாம். ஆனால் புகழேந்திப்புலவர் கம்பனுக்கு சமானமானவர் அல்ல என்று ‘நிரூபிக்க’வேண்டியதே இல்லை.
இது எப்படி நிகழ்கிறது? இலக்கியத்தின் ரசனை தனிப்பட்ட தளத்தில் நிகழ்ந்தாலும் ஒரு பொதுவான சமூக மதிப்பீடு திரண்டு வந்தபடியே இருக்கிறது. அது ஒரு பண்பாட்டுத் தளத்தில் நிகழும் தொடர்ச்சியான உரையாடல் வழியாக நிகழ்கிறது. திருவள்ளுவரும் கம்பரும் மேலே வர ஒட்டக்கூத்தரும் புகழேந்தியும் கீழே செல்கிறார்கள். இதுதான் இலக்கிய மதிப்பீட்டின் உருவாக்கம். இது நிகழாத காலகட்டமே இலக்கியத்தில் இருக்கமுடியாது. இது நின்றுவிட்டால் இலக்கியமே அழிந்துவிடும்.
மணிக்கொடி காலகட்டத்தில் எத்தனைபேர் எழுதியிருப்பார்கள். ஆனால் புதுமைப்பித்தன், மௌனி, கு.ப.ரா. ந.பிச்சமூர்த்தி மட்டும்தான் அக்காலகட்டத்தின் முதன்மைப் படைப்பாளிகள். அந்தத் தெரிவு எப்படி நிகழ்ந்தது? அதை ரா.ஸ்ரீ.தேசிகன், ஏ.வி.சுப்ரமணிய அய்யர் போன்ற விமர்சகர்கள் முன்வைத்தனர். விவாதம் மூலம் அது நிறுவப்பட்டது. க.நா.சுப்ரமணியத்தால் உறுதிசெய்யப்பட்டது.
அப்போதும் அரைவேக்காடுகள் ‘இவர்கள் எப்படி இதையெல்லாம் சொல்லலாம்?’ என்றும் “இலக்கியம் என்றால் இது என எப்படிச் சொல்லமுடியும்? அவரவர்க்கு ஒன்று பிடித்திருக்கிறது’ என்றும் ‘இலக்கியம் என்றால் என்ன என்று புறவயமான வரையறை எங்கே?’ என்றும் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
மானுடம் தழுவிய அளவில் நிகழும் அந்த உரையாடல்-விவாதம்-மதிப்பீடுதான் ஷேக்ஸ்பியரை மானுடத்திற்குப் பொதுவான கவிஞராக கொண்டுவந்து நிறுத்துகிறது. தல்ஸ்தோயை கொண்டுவந்து நிறுத்துகிறது. இலக்கிய விவாதக்களத்தைப் பார்த்தோம் என்றால் இப்போது துஃபு போன்ற சீனக்கவிஞர்கள் அந்த இடம் நோக்கி வருவதைக் காணலாம்.
இலக்கியத்தில் மட்டும் அல்ல பெரும்பாலும் அனைத்து அறிவுத்துறைகளிலும் வெகுஜனப் பங்களிப்பாலோ அல்லது பிற அளவீடுகளாலோ மதிப்பீடுகள் உருவாக்கப்படுவதில்லை. அத்துறையின் முக்கியமான, மையப்போக்கில் செயல்படக்கூடியவர்களாலேயே அவை உருவாக்கப்படுகின்றன. அவை தீர்ப்பாகச் சொல்லப்படுவதில்லை. விவாதக்கருத்தாக முன்வைக்கப்படுகின்றன. விவாத முடிவில் வகுக்கப்படுகின்றன. peer review என அதைச் சொல்கிறார்கள்.
இந்த மதிப்பீட்டுப்போக்கை இலக்கியத்தை உண்மையிலேயே வாசிக்கும் எவரும், இலக்கிய விமர்சனத்துடன் உரையாடும் எவரும் மிகமிக எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். வாசிக்காதவர், ரசனையற்றவர் என்னதான் சொன்னாலும் புரிந்துகொள்ளமுடியாது.
அன்பு, காதல், இலட்சியவாதம், தியாகம், அறம் என்றெல்லாம் சொல்லப்படுகின்றவற்றை நீங்கள் எப்படி அறிகிறிர்கள்? அவற்றை எவரேனும் புறவயமாக வகுத்துச் சொல்லிவிடமுடியுமா? அவை வகுத்துரைக்கப்படவில்லை என்பதனால் அவை இல்லை என ஆகிவிடுமா? அவை ஆளுக்கொரு வகையில் வெளிப்படுகின்றன, புரிந்துகொள்ளப்படுகின்றன என்பதனால் எல்லாமே அன்புதான் என்று ஆகிவிடுமா? அவை எந்த அளவுக்கு அந்தரங்கமானவையோ அந்த அளவுக்கு மானுடப் பொதுவானவையாகவும் உள்ளன அல்லவா?
*
இலக்கிய மதிப்பீடுகளை எப்படி அடைவது? ஒன்று வாசிப்பது, இன்னொன்று மதிப்பீடுகளை அறிந்துகொண்டு அவற்றை பரிசீலிப்பது. இரண்டுமே சேர்ந்து நிகழும்போது இலக்கியமதிப்பீடு எளிதில் உருவாகிவிடும். புதுமைப்பித்தனை வாசியுங்கள். அவரைப்பற்றி ஆதரித்து க.நா.சுவும், சுந்தர ராமசாமியும், நானும் எதிர் விமரிசனம் செய்து கைலாசபதியும், தி.க.சிவசங்கரனும், அ.மார்க்ஸும் எழுதியிருப்பதை வாசியுங்கள். உங்கள் கருத்தை அந்த விமர்சனகளத்தில் மானசீகமாக வையுங்கள். உங்கள் மதிப்பீடுகள் உருவாகிவிடும்
இலக்கிய மதிப்பீடுகளை உருவாக்கி நிலைநிறுத்துபவை செவ்விலக்கியமும் பேரிலக்கியமும்தான். ஒரு மொழியில். ஒரு பண்பாட்டுச்சூழலில் அதற்குரிய செவ்விலக்கியமும் பேரிலக்கியமும் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும். ஒரு மொழியின் பிற்காலத்தைய இலக்கியங்கள் அனைத்துக்கும் அடிப்படையாக அமைபவை செவ்விலக்கியங்கள். அம்மொழியின் உச்சப்படைப்புகளாக அறியப்படுபவை பேரிலக்கியங்கள். பொதுவாக கிளாஸிக் என்கிறோம்
அவை மேலே சொன்ன கூட்டுவாசிப்பு, கூட்டுவிவாதம் மூலம் உருவாகி வந்த மதிப்பீடுகளின் விளைவாகவே முன்னிலைப்படுத்தப்பட்டன.. ஐம்பெருங்காப்பியங்கள் என்பவை அன்றிருந்த பலநூறு காப்பியங்களில் இருந்து அறிஞர்களின் கூட்டுவிவாதம் மூலம் காலப்போக்கில் முன்னிறுத்தப்பட்டவை. வள்ளுவன்போல் கம்பனைப்போல் இளங்கோவைப்போல் என்று ஒருவன் சொல்கிறானே அதுதான் இலக்கிய மதிப்பீடு. பேரிலக்கியங்கள் தங்கள் இருப்பாலேயே இலக்கிய மதிப்பீடுகளை உருவாக்கி நிலைநாட்டுகின்றன. அவற்றை வாசிப்பதே நம் உள்ளத்தில் அளவுகோல்களை உருவாக்கிவிடும்
நவீன இலக்கியத்தைப் பொறுத்தவரை அவற்றின் பேரிலக்கியங்கள் உலகமொழிகள் அனைத்திலும் உள்ளவை, உலகளாவியவை தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி, தாமஸ் மன் என பேரிலக்கியவாதிகளின் ஒரு நீண்ட வரிசை உள்ளது. அவர்களை வாசிப்பவர்கள் தங்கள் ரசனையாலேயே இலக்கிய அளவீடுகளை உருவாக்கிக்கொள்ள முடியும்.
*
கடைசியாக, வந்து குவியும் இலக்கிய நூல்களில் இருந்து தேர்ந்து வாசிப்பதெப்படி என்னும் வினா. யோசித்துப்பாருங்கள், இது எந்தப்பொருளுக்குத்தான் இன்று இல்லை? எல்லா பொருளையும் நாம் இப்படி பல்லாயிரத்தில் ஒன்று என்றுதானே தெரிவு செய்கிறோம்? எப்படிச் செய்கிறோம்? பிற நுகர்வோர் கருத்தைக் கேட்கிறோம். பொதுவான மதிப்பீடுகளை அறிந்துகொள்கிறொம். ‘சாம்பிள்’ பார்க்கிறோம். அப்படியும் கொஞ்சம் ஏமாந்துபோகிறோம்
அதேதான் இலக்கியத்திற்கும் வழி. முதலில் உங்கள் ரசனைக்குரிய நூல்கள் எவை என நீங்களே ஓரளவு புரிந்துகொள்ளுங்கள். சூழலில் நம்பகமான கருத்துக்களைச் சொல்லும் விமர்சகர்களை கவனியுங்கள். ஒரு புனைவைக்குறித்து உருவாகி வரும் மதிப்பீடுகளை கவனியுங்கள். அதன்பின் வாசித்துப் பாருங்கள். எந்த நூலுக்கும் அதன் ஐந்தில் ஒருபங்கு சலுகை அளிக்கலாம். அதற்குள் அது உங்களைக் கவரும் அம்சங்கள் எதையேனும் காட்டியிருக்கும். இல்லை என்றால் அது உங்கள் நூல் அல்ல. அல்லது நீங்கள் அந்நூலுக்குத் தயாராகவில்லை.
அறிவுத்தேடலிலும் சுவைதேடலிலும் அந்தத் தேடல் என்பது மிக முக்கியமானது. அதுவே உண்மையில் சுவாரசியமானது. அதில் கண்டிப்பாக ஏமாற்றங்கள் உண்டு. அவையும் அறிதலே. குறைந்தபட்சம் அவை நமக்கு ஏன் பிடிக்கவில்லை என்றாவது யோசிக்கலாமே
ஜெ