மீட்பு -கடிதம்

mision-800x531

இனிய ஜெயம்,

அதிகாலை [நள்ளிரவு??] நண்பர் மாதவன் இளங்கோவின் கடிதம் படித்த கணம் முதல் இந்த வினாடி வரை பரவசம் சுதி இறங்காமல் இருக்கிறது. வெற்றியின் கதை. மீட்சியின் சாட்சியம். ஒவ்வொரு முறை என் முன் எழும்போதும் மானுடன் எத்தனை மகத்தானவன் என விம்மிதம் பொங்கும்.

”டின்னிடஸால் பாதிக்கப்பட்ட நண்பர்கள் யாரேனும் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள் என்று எல்லோரிடமும் வேண்டிக்கொள்கிறேன்.”

என்ற அவரது அழைப்பில் இருந்த மீட்பின் குரல்வழியே ஓலைச் சிலுவை கதையின் சாமர்வெல்லை வந்தடைந்தேன். வறுமைக்கு வாழ்வைத் தொலைத்த பனையேறி குடும்பம் .எட்டு பெத்த பனையேறி அனைவரையும் அநாதரவாக விட்டு இறக்கிறார். வீட்டு மனிதர்களைக் காட்டிலும் அம்மா குடும்பத்தில் புழங்கிய தெய்வங்கள் அதிகம். அதில் வளர்ந்து வந்த அம்மா சொல்கிறாள், கும்பி காஞ்சவனுக்கு எல்லா சாமியும் கல்தான். தெய்வங்களால் கைவிடப்பட்டவளை சாமர்வெல் கேட்கிறார், வேதத்துக்கு மாறுகிறாயா?

எனக்கு ரொட்டி வேணும். கதை சொல்லி கேட்க, சாமர்வேல் சிரித்தபடி ”ரொட்டி போதுமா?” என்கிறார். கதை சொல்லிக்கு எட்டு வயது ”நிறைய ரொட்டி வேணும் . என் தங்கச்சிக்கும் குடுக்கணும்” எட்டாவதான தங்கை. கதைசொல்லி ஜேம்ஸ் டேனியல் ஆகி, சாமர்வெல்லை பின்தொடர்கிறான்.

சாமர்வேல் கடந்து வந்த வாழ்வும், அவரது ஆளுமையும், ஜேம்ஸின் விவரணையில் சாமர்வெல்லுடன் அரைநூற்றாண்டு காலம் வாழ்ந்த உவகையையும் ஆயாசத்தையும் அளிக்கிறது. ஜேம்ஸ் அவருடன் இருக்கிறான். விசுவாசமாக இருக்கிறான். எஜமானின் ஒவ்வொரு காலடியையும் முத்தி முத்தி நுகர்ந்து அவர் பின் செல்லும் வளர்ப்பு நாய் போல் விசுவாசமாக இருக்கிறான். அவனே சொல்வது போல அவனால் சாமர்வெல்லுகுத்தான் விசுவாசமாக இருக்க முடிகிறது. ஏசுவுக்கு அல்ல. சாமர்வெல்லுக்குள் புரண்டு அவரது ஊற்றுமுகத்துக்கு வழி விட்ட அந்த ஒன்று, இன்னும் ஜேம்சுக்குள் புரளவில்லை. காரணம் ஜேம்சுக்கு . உணவு படிப்பு வசதி எல்லாம் கிடைத்தது கூடவே தேவனும். அவ்வளவுதான் ஜேம்ஸின் தேவன். அவனுக்கு கிடைத்த ஏசு ஒரு பண்ட மாற்று. அந்த பண்டமாற்றை செய்தவர் சாமர்வேல். இதுதான் ஜேம்ஸின் நிலை.

காலரா பெருகி ஊரே செத்து அழுகி மிதந்து நாறுகிறது. ஜேம்சும் சாமர்வெல்லும் ஊருக்குள் ஊழியம் செய்கிறார்கள். தனது மூன்று குழந்தைகளையும் இழந்த அன்னைக்கு மீட்பளிக்கிறார் சாமர்வெல். அக் கணத்தில்தான் சாமர்வெல்லாக தன் குடும்பத்துக்கு வந்தது எது என அறிகிறான். அது சோறும் குழம்புமட்டுமல்ல , கல்வியும் செல்வமும் மட்டும்அல்ல அது பண்டமாற்றல்ல .மீட்சி .

அறிந்த அக்கணம் நிகழ்கிறது அவனது தேவனின் வருகை.

‘என் தேவனே! என் ஏசுவே ! என் மீட்பனே! என் ஐயா, இதோ உனக்கு நான்! உனக்கு நான் என் தேவனே’

சாமர்வேல் அவரது சாரமான கருணையால் அவனுக்கு தேவனை அறிமுகம் செய்துவிட்டு, அவனால் தொட முடியாத தொலைவில் மிக முன்னால் சென்றுகொண்டிருக்கிறார்.

என் அன்புத் தோழி வானதி ஆதவ் அறக்கட்டளை சார்பாக மருத்துவ வளாகம் திறந்த நாளில், இக் கதையைத்தான் மீள மீள எண்ணிக் கொண்டிருந்தேன். என் தோழி மகத்தானவள், மனிதகுமாரனின் கால்களை தொட்டு விட்டவள்.

https://www.youtube.com/watch?v=lAoT2ktM2H0
the mission படத்தில் eniyo moricon வின் ஒபோ கருவி இசை. ஓலைச்சிலுவை சாமர்வெல்லின் துணை.

என் அன்புத் தோழிக்கு இந்த்த இசைத் துணுக்கு.

கடலூர் சீனு

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 10
அடுத்த கட்டுரைதீபாவளி யாருடையது?