வல்லவன் ஒருவன்

krishnan article vallavan oruvan

 

என் பயணத்தோழர்களில் ஈரோட்டைச் சேர்ந்த வழக்கறிஞரான கிருஷ்ணன் விடாக்கண்டன். எதிரில் புலிவந்து நின்றாலும் வழக்கறிஞர்கள் அசரமாட்டார்கள். ‘இபிகோ 303 ன்படி இது கல்பபிள் ஹோமிசைடு. மரணதண்டனைக்குரிய குற்றம்’ என்று அதனிடம் சொல்வார்கள். கிருஷ்ணன் அந்தப்புலியையே அப்படி நம்பவைத்துவிடுவார். அது முனகிவிட்டு விலகிச்சென்றுவிடும். கிருஷ்ணன் வழக்கறிஞர் ஆனால் நல்லவர் என்று நான் பேச்சுவாக்கில் சொன்ன வரியே பாபநாசம் சினிமாவிலும் வசனமாக வந்து புகழ்பெற்று பழமொழியாகப் புழக்கத்தில் உள்ளது.

அறியாத ஊரில் தெரியாத இலக்கு நோக்கி வழிகேட்டு வழிதவறி மீண்டும் வழிகேட்டு சென்றுகொண்டிருப்போம். காரை நிறுத்தி சாலையோரம் நின்றிருக்கும் எவரிடமாவது வழிகேட்கையிலேயே ஆளை எடைபோட்டுவிடுவார். அவர் சுற்றிச்சுற்றி வழிசொல்லி வரும்போதே உரிமையுடன் “சார் கொஞ்சம் வண்டியிலே ஏறிக்கொள்ளுங்கள்… வந்து வழிகாட்டுங்கள்” என்பார்.

“எனக்கு வேற வேலை இருக்கே தம்பி” என்று அவர் தயங்கினால் மேலும் உரிமையுடன் “இருக்கட்டும் சார். இதுவும் வேலைதானே? நாளைக்குக்கூட வேலைய பாத்துக்கலாம். இன்னிக்குத்தானே எங்க கூட இருக்கமுடியும்? இந்தச்சின்ன உதவிகூட செய்யமாட்டீங்களா?” என்பார். அவர் கொஞ்சம் தயங்கியபடி நிற்கையிலேயே கதவைத்திறந்து ‘தள்ளுங்க. சார் ஏறணும்ல?’ என்பார். வேறுவழியில்லாமல் அவரும் ஏறிக்கொள்வார். “நீங்க இல்லேன்னா நாங்க எப்டி சார் போறது? உங்க ஊருக்கு வேற வந்திருக்கோம” என்பார் கிருஷ்ணன்.

நூறுகிலோ மீட்டருக்கு மேல் எங்களுடன் வந்து வழிகாட்டியவர்கள் இருக்கிறார்கள். முற்றிலும் சம்பந்தமற்ற ஊர்களில் மொழியே தெரியாமல் வந்து வழிகாட்டி அந்த இடத்தையும் விரிவாக விளக்குவார்கள். அங்கிருந்து நாங்கள் அடுத்த இலக்கு நோக்கிச் செல்ல அவர்கள் பஸ் பிடித்து தங்கள் ஊருக்குத் திரும்பவேண்டும். ஆனால் அதற்குள் ஆழ்ந்த அறிமுகம் ஆகிவிட்டிருக்கும். குடும்ப விஷயங்களெல்லாம் பரிமாறப்பட்டுவிட்டிருக்கும். ஆகவே அவர் டீ வாங்கித் தந்து பிரியாவிடை தந்துதான் வழியனுப்பிவைப்பார்கள். சமயங்களில் கண்ணீர் மல்குவதுகூட உண்டு.

அப்படி அரிய நட்புகள் பல வாய்த்திருக்கின்றன. ஹளபீடு சென்று கொண்டிருந்த கிருஷ்ணனை வலுக்கட்டாயமாக கூட்டிச்சென்று மேலும் பல ஹொய்ச்சாள ஆலயங்களை காட்டினார் ஒருவர். ‘பெலவாடி போகாம ஒரு பயணமா?’ என்று கூட்டிச்சென்ற அவர் ‘அடுத்தமுறை வர்ரப்ப சொல்லுங்க. இன்னும் நெறைய எடம் இருக்கு” என்றார். தலைக்காவிரி சென்றவர்களை திபெத் குடியிருப்பைப் பார்க்காமல் செல்லக்கூடாது என கட்டாயப்படுத்தி மறக்கமுடியாத அனுபவத்தை அளித்தார் ஒருவர். வழியில் ஒருவரை பார்த்ததுமே கிருஷ்ணன் தலையை ஆட்டி “சார் நம்மாளு!” என்பார்.

ஈரோட்டைச்சேர்ந்த இன்னொரு நண்பரான பாபு கொடாக்கண்டர். குழந்தை முகம். அன்னியக் குடும்பங்களில் அனல்பட்ட சீஸ் போல உருகி இணைந்துவிடுவார். ‘யக்கா’ என அவர் அழைத்தால் நடுத்தர வயது அம்மாக்கள் ‘தம்பி’ என நெகிழ்வார்கள். ஒருமுறை இரவிகுளம் போய்விட்டு மலைப்பாதையில் பகல் முழுக்க சோறு கிடைக்காமல் கொலைப்பட்டினியாக வந்துகொண்டிருந்தோம்.ஒரு மெஸ் கண்ணுக்குப்பட்டது. சற்று மேட்டில் இருந்தது அது. சபரிமலைத்தரிசனத்தின் பரவசம்

மேலேறிச்சென்றால் அந்த அம்மாள் “சோறு தீர்ந்துபோச்சே” என்றார். பாபு “இருக்கட்டும்கா. தம்பிக்கு சாப்பிட எதுனா குடுங்கக்கா” என்றார். “பரோட்டா இருக்கு… ஆனா காலம்பற செஞ்சது” என்றார் அம்மாள். “பரவாயில்லைங்கக்கா” என உட்கார்ந்துவிட்டோம். சாம்பாரும் கொஞ்சம் இருந்தது. சுருட்டிக் கடித்து தின்றபோது வேட்டைப்புலி போல உணர்ந்தோம்.

சாப்பிடும்போது பாபு “அக்கா கொஞ்சம் சோறு குடுங்கக்கா” என்றார். அம்மாள் “சோறு இல்லியே தம்பி” என்றார். “நீங்க சாப்பிட வச்சிருப்பீங்களே அத குடுங்கக்கா. தம்பிதானே கேக்கிறேன்” என்றார்.அவர் உள்ளிருந்து பாபுவுக்கு மட்டும் சோறு கொண்டுவந்து கொடுத்தார். “அக்கா கொஞ்சம் மோரு இருந்தா குடுங்கக்கா” என கேட்டு வாங்கி திருப்தியாக சாப்பிட்டார் பாபு. அந்த அம்மாளுக்கு அவரிடம் காசு வாங்கும்போது மிகுந்த சங்கடமாக இருந்தது “பரவால்லீங்கக்கா…வாங்குங்க… அடுத்தவாட்டி வந்து விருந்தே சாப்புட்டுட்டுப் போறம்” என்றார் பாபு பெருந்தன்மையாக. பெட்ரோல் பங்குகளில் கூட ‘ஏங்க கோயில் பாக்கப்போறம்…டிஸ்கவுண்ட் குடுங்க” என்று கேட்டு வாங்குவார்.

ஒருமுறை கேரளத்தில் திருநெல்லி என்னும் ஊருக்குச் சென்றிருந்தோம். மிகப்பழைமையான சிவன் கோயில் அது. அடர்காடு நடுவே இருந்தது. அங்கே வனவிடுதியில் தங்கினோம். மழையில் நனைந்தபடி காட்டைச்சுற்றிவந்தோம். மறுநாள் அதிகாலை கிளம்பி காட்டுச்சாலை வழியாக நாகரஹோலேயை கடந்து சாம்ராஜ்பேட் வந்து சத்யமங்கலம் வழி ஈரோடு வருவது திட்டம். கிளம்பி சாலைக்கு வந்தபோது விடிகாலை இருட்டில் விளக்குகள் எரிய ஒரு டீக்கடை ஜொலிப்பதைக் கண்டோம். சூடான குழாய்ப்புட்டு வாழையிலைகளில் உருளைகளாக அடுக்கப்பட்டிருந்தது. பொன்னிறமான நேந்திரம்பழக்குலைகள் தொங்கின.

“சாப்பிட்டுவிட்டே செல்வோமே” என்றேன். “சார், இதைவிட நல்ல கடை அந்தப்பக்கம் இருக்கு. இங்க உக்காந்து சாப்பிட வசதியில்லை” என்றார் கிருஷ்ணன். சரி என்று கடந்து சென்றோம். அன்று இரவு ஒன்பது மணிக்கு சாம்ராஜ்பேட்டில்தான் சாப்பிட ஏதாவது கிடைத்தது. வழியில் எங்கும் கடை ஏதும் இல்லை. ஏன் மனிதநடமாட்டமே இல்லை. சாலை மிகமிக மோசம். கிட்டத்தட்ட நடந்துசெல்லும் வேகத்தில்தான் சென்றோம். நடந்தால் மேலும் வசதியாக இருந்திருக்கும். வண்டி அப்படி தூக்கிப்போட்டது. ஆனால் வழியில் பலவகை மிருக நடமாட்டம். ஆகவே இறங்கவும் பயம். குலுங்கி ஆடி பழையகால ராக் அண்ட் ரோல் நடனமிட்டபடி கொலைப்பசியுடன் பகல் முழுக்க ஊர்ந்துகொண்டே இருந்தோம்.

“எப்டி கிருஷ்ணன் வழியிலே நல்ல ஓட்டல் இருக்குன்னு சொன்னீங்க?” என்று கேட்டேன். “ஒரு லாஜிக்தான். எடுத்த எடுப்பிலேயே ஒரு ஓட்டல் கண்ல பட்டுது. அப்ப அந்த மாதிரி நெறைய இருக்கணும்ல?” என்றார் கிருஷ்ணன். என்ன லாஜிக் என எனக்கு இன்றுவரை பிடிகிடைக்கவில்லை. ஆனால் அதன்பின் அவரது லாஜிக்கை நான் உடனடியாக நிராகரிப்பதை வழக்கமாக்கிக் கொண்டேன்.

பசியில் சாப்பாட்டைப்பற்றியே பேசிக்கொண்டு சென்றோம். ஒருகட்டத்தில் நண்பரும் இன்னொரு வழக்கறிஞருமான செந்தில் [அவர் உயர்நீதிமன்ற வழக்கறிஞராதலால் மேலும் நல்லவர்] வெறிகொண்டு “சாப்பாடு பத்தி பேச்சுவேண்டாமே சார்!” என்றார். “சரி, இலக்கியம் பேசுவோம். இப்ப லா.ச.ராவை பாத்தீங்கன்னா அவரோட அழகியல்…” என்று ஆரம்பித்தேன். ஐந்தே நிமிடத்தில் “அவரோட கதையிலே வத்தக்குழம்ப மட்டும் தனியா வர்ணிச்சிருப்பார்… காபிநெறத்திலே பளபளன்னு அது சூடான சோறுமேலே நெய் உருகி மின்னுறத புன்னகைக்கிறதுன்னு ஒரு கதையிலே சொல்றார்” என வந்து நின்றது. தொடர்ந்து நாஞ்சில்நாடனின் சாளைமீன் புளிமுளம், ஜானகிராமனின் பாயசம் என்னும் கதை…

senthil -article vallavan oruvan

“வேண்டாம் சார் அரசியல் பேசுவோம்” என்று செந்தில் கதறினார். எழுபதுகளில் தி.மு.க மாநாட்டில் முயல்கறி பரிமாறப்பட்டதைப்பற்றி தினதந்தி செய்தி வெளியிட கலைஞர் ‘எச்சில் இலைகளைப்பார்த்து எழுதியிருக்கிறார்கள்’ என்று சொன்னதில் வந்து நின்றது. அதன் பின் முயல்கறி மான்கறி காடை கௌதாரி என நீண்டது. கடைசியில் சாப்பாட்டைப்பற்றியே பேசுவோம் என ஏகமனதாக முடிவுசெய்யப்பட்டது. பாபு “நல்லா புது அரிசி சோறு கொதிக்கிற மணம் இருக்கே” என்றார். நெஞ்சு உடைய “அய்யோ!” என்றார் செந்தில். யாரோ வாய் உறிஞ்சும் ஒலி.

நடுவே வழி வேறு தவறியது. சரியான வழிதானா என்று கண்டுபிடிக்க வழியில் ஆளும் இல்லை. கடைசியில் ஒருவர் பேருந்துக்காக நிற்பதைக் கண்டோம். கையில் குடை. பெரிய மஞ்சள் பை. நரைத்தமீசை. நெற்றியில் துருத்திய நரைமுடி. குறுகி இறுகிய உடம்பு மலைப்பகுதி ஆள் என்பதைக் காட்டியது. ‘சார் நம்மாளு!’ என்றார் கிருஷ்ணன். உடன் வந்து வழிகாட்ட முடியுமா என அழைத்தபோது யோசித்தார்.

“வாங்கண்ணா, சாப்பிட்டே ரொம்ப நேரமாகுண்ணா” என்றார் பாபு. தயங்கிய பிறகு ஒப்புக்கொண்டார். வண்டியில் ஏற்றிக்கொண்டோம். கன்னடத்தில் பேசிக்கொண்டே வந்தார். காட்டின் இயல்புகள், வழியின் சிக்கல், விவசாயப்பிரச்சினைகள். எங்களுக்கு கன்னடம் நாலைந்து சொற்கள்தான் தெரியும் என்பது அவருக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை

ஒருவழியாக ஒரு சிறிய சாலையில் தாழ்வான கூரை போட்ட வீட்டுமுன் வண்டி சென்று நின்றது. “இஸ்டாப்பு” என்று கூவி நிறுத்தச்சொல்லி பையுடன் இறங்கிக்கொண்டார். “டாங்க்ஸ் குரு” என்றார். “இது என் வீடு. நீங்கள் வந்தவழியே திரும்பிச் சென்றால் நாம் ஒரு ஆலமரத்தை கடந்தோம் அல்லவா அந்த இடம் வரும். அங்கே சென்று வலப்பக்கமாகத் திரும்பினால் பெரிய சாலை வரும். அப்படியே செல்லுங்கள்… அதுதான் சாம்ராஜ்பெட் போகிற வழி என நினைக்கிறேன். உறுதியாகத்தெரியாது. அங்கே யாரிடமாவது கேட்டுப்பாருங்கள்”

கிட்டத்தட்ட பாதித்தூரம். சுத்தமாக சம்பந்தமே இல்லாத திசைக்கு அழைத்து வந்துவிட்டார் மனிதர். என்ன சொல்ல முடியும்? வண்டியைத் திருப்பினோம். வண்டிக்குள் பேச்சுக்குரலே எழவில்லை. விடாகண்டனும் கொடாகண்டனும் தங்களை மிஞ்சிய வல்லாளகண்டனைத்தான் நெஞ்சடைத்துப்போய் நினைத்துக்கொண்டிருந்தார்கள் என தோன்றியது.

முந்தைய கட்டுரைவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 6
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 3