பாப் டிலன் , நோபல், இ.பா- சில எண்ணங்கள்

 

Bob-Dylan-Xavier-Badosa-Huck-958x559

இவ்வருடத்திற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு பாப் டிலனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதுசார்ந்து ஆதரவுகளும் எதிர்ப்புகளும் பதிவாகியிருக்கின்றன. எதிர்ப்புகள் பொதுவாக ’இலக்கியம்’ என்னும் கலைவடிவின், அறிவுத்தளத்தின் தனித்தன்மை குறித்த கவலை கொண்டவர்களிடமிருந்து எழுகின்றன. ஆதரவு பெரும்பாலும் நுகர்வுக்கலாச்சாரத்தில் ஊறியவர்களான பெரும்பான்மையினரிடமிருந்து எழுகிறது.

முதல் வகையினரின் குரல் ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் பொறுத்தவரை சென்ற இருபதாண்டுக்காலமாக மெல்லமெல்லத் தளர்ந்து மிகச்சிறிய வட்டத்திற்குள் ஒலிப்பதாக ஆகிவிட்டிருக்கிறது. அதை காலத்திற்கு ஒவ்வாதது, குறுக்கல் நோக்கு கொண்டது என எள்ளல் செய்யும் பெரும்பான்மையின் குரல் அறிவுலக அங்கீகாரத்தையும், அமைப்புகளின் ஆதரவையும் படிப்படியாக பெற்றுவருகிறது. அவர்கள் இத்தருணத்தைக் கொண்டாடுகிறார்கள். அதே எள்ளலுடன் எம்பிக்குதித்தலுடன்.

மெல்ல நம் கண்முன்னால் அந்த சின்னச்சுடர் அணைந்துபோகும் என்றே நினைக்கிறேன். எது விற்கிறதோ அது இலக்கியம் என்றும், எது பரவலாக ஏற்கப்படுகிறதோ அதுவே கலை என்றும் ஆகும். உலகின் போக்கு அந்தத்திசை நோக்கியே. ஆனால் அந்த அழிந்துகொண்டிருக்கும் சிறுசுடரின் ஒளியில் நின்று, அதனுடன் அழிந்துபோகவே விரும்புகிறேன். ஏனென்றால் அது மானுடத்திற்குத் தேவை என்று நான் உண்மையில் நம்புகிறேன். மானுடம் அதை இழந்தால் அரிதான ஒன்றை, ஒர் இலட்சியத்தை ஒரு கனவை இழக்கிறதென்றே நினைக்கிறேன். அதை கைவிட்டு பிறிதொன்றைப் பற்றுவதை என்னால் எண்ண முடியாது.

ஆகவே இத்தருணம் எனக்கு மிகுந்த சோர்வையும் தனிமையையும் அளிப்பதாகவே உள்ளது. பாப் டிலனுக்கு அளிக்கப்பட்ட இப்பரிசு இலக்கியம் என்னும் கலைவடிவுக்கு, அறிவுப்பாதைக்கு எதிரான ஒரு பிரகடனம்.

*

ஆனால் இலக்கியத்திற்கான நோபல்பரிசு அதன் முக்கியத்துவத்தை உலகளாவிய இலக்கிய வாசகர்களிடம் இழந்து நெடுநாட்களாகின்றது. சந்தேகமிருந்தால் சென்ற சில ஆண்டுகளில் நோபல் பரிசு பெற்றவர்கள் யார், அவர்களை எத்தனைபேர் தேடிப்படித்தீர்கள் என்று மட்டும் தன்னை நோக்கிக் கேட்டுக்கொள்ளுங்கள். ஆகவே இந்தப்பரிசு பாப் டிலனுக்குக் கொடுத்தால் என்ன திரைக்கதைவசனம் எழுதியதற்காக குவிண்டின் டொரெண்டினோவுக்குக் கொடுத்தால் என்ன, அல்லது அதையெல்லாம் பேசியதற்காக லியனார்டோ டி காப்ரியோவிற்கே கொடுத்துத் தொலைத்தால்தான் என்ன என்னும் மனநிலையே பொதுவாக உள்ளது.

இந்தச்சரிவு சினிமாவிலும் உள்ளது. நான் கல்லூரியில் படிக்கும் காலகட்டத்தில் கேன்ஸ், கார்லேவாரி திரைப்பட விருதுகளைப்பற்றிய ஒரு சின்ன பதற்றமே சூழலில் இருக்கும். அப்படங்கள் திருவனந்தபுரத்தில் சூரியா திரைக்கழகத்தால் மூன்றுமாதங்கள் கழித்து திரையிடப்படும்போது பஸ் பிடித்துச் சென்று பார்ப்போம். இன்று அந்தக் கவனமே தெரியவில்லை. கேன்ஸ் திரைப்பட விழாவே ஒரு பெரிய ஆடம்பர விருந்துபோல, ஒரு வணிகக்கேளிக்கை நிகழ்ச்சிபோல ஆகிவிட்டிருக்கிறது.

*

எழுபதுகளில் எவையெல்லாம் தீவிரம் என்று கருதப்பட்டனவோ அவையெல்லாம் பொருளிழக்கின்றன. எவை எல்லாம் ஒருவன் தன் வாழ்க்கையை முழுதாக இழப்பதற்கும், முழுமையானத் தனிமையில் நின்று போராடுவதற்கும் தகுதியானதென்றும் எண்ணப்பட்டனவோ அவையெல்லாம் கேலிக்குரியனவாக ஆகிவருகின்றன. புரட்சி, இலட்சியவாதம், தனித்தலைதல் போன்ற சொற்கள் அனைத்தும் பொருளழிந்துவிட்டன.

வேடிக்கை என்னவென்றால் பாப் டிலன் அந்த இலட்சியவாத காலகட்டத்தின் மேலோட்டமான நுரைக்கொந்தளிப்பாக அறியப்பட்டவர். இன்று அவருக்கு விருது அளிக்கப்பட்டிருப்பது அந்த விழுமியங்களை மறுப்பதற்காக. இது அவருடைய மக்களாதரவுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.

நான் கல்லூரியில் படிக்கும்போது பாப் டிலன் பிரபலமாக இருந்தார். இடதுசாரிகளில் ஒருசாரார் அவரை புகழ்ந்து பேசுவர். அவரது பாடல்களைப் பாடும் ஒரு குழுவும் திருவனந்தபுரத்தில் இருந்தது. ஆனால் அவர்கள் திருவனந்தபுரத்தின் பெரிய ஓட்டல்களில்தான் பாடுவார்கள். ஒருவகை அமெரிக்க இலட்சியவாதமாகவும் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பாகவும் அவரது பாடல்கள் பார்க்கப்பட்டன.

ஆனால் அன்று ஒரு பெரும் அலையாக இருந்த பாப் மார்லியுடன் ஒப்பிட்டால் அவரது பாடல்கள் சற்றே சோகையானவை. வரிகள் என்ற அளவில்கூட பாப் மார்லியின் பாடல்கள் வலுவானவை. பாப் டிலனின் வரிகளை மட்டும் வாசிக்கும் ஒருவர், அமெரிக்க மொழிச்சூழலில் இருந்து சற்று விலகி நிற்பவர் என்றால், அவை என்ன காரணத்தால் இலக்கியம் என்று கருதப்படுகின்றன என்று உணரமுடியாமல் திகைப்பர்.

*

நோபல் பரிசுகள் ஒவ்வொரு முறையும் காட்டுவது ஒன்றுண்டு, உலகைநோக்கி எழுதிய பெரும்படைப்பாளிகள் மெல்ல அருகிவருகிறார்கள். படைப்பாளிகளை பொதுவாக இரண்டாகப்பிரிக்கலாம். உலகிடம் பேசியவர்கள், ஒரு மொழி மற்றும் பண்பாட்டுச்சூழலில் மட்டுமே பொருள்படுபவர்கள். தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி, தாமஸ் மன் போன்றவர்களுக்கு அவர்கள் எழுதிய மொழி ஒரு வரலாற்றுத் தற்செயல் மட்டுமே. அவர்கள் உலக எழுத்தாளர்கள். ஆனால் பெரும்படைப்பாளியாக இருந்தாலும் ஜேம்ஸ் ஜாய்ஸ் ஒரு குறிப்பிட்ட மொழி, பண்பாட்டுச்சூழலுக்குள் மட்டுமே பொருள்படுபவர்.

முதல்வகை எழுத்தாளர்கள் உலகமெங்கும் வாசகர்களால் தங்களுக்காக எழுதியவர்களாகக் கருதப்படுகிறார்கள். மானுட மனசாட்சியை நோக்கிப் பேசுவதனால், உலக நோக்கு கொண்டிருந்தமையால் உருவாகும் உயரம் அது. உண்மையில் அதை அளிப்பது அவர்களின் இலக்கியத்தின் சாராம்சமாக இருக்கும் தரிசனம், அதை அவர்கள் முன்வைக்கும்போது உருவாகும் தத்துவார்த்தநோக்கு. அவர்களுக்கு மொழி, நாடு சார்ந்த அடையாளங்கள் இல்லை. காஃப்கா நமக்கு ஜெர்மானியரா என்ன? காம்யூ பிரெஞ்சுக்காரரா என்ன?

அத்தகைய உலக எழுத்தாளராக இறுதியாக நோபல் பரிசு பெற்றவர் கப்ரியேல் கர்ஸியா மார்க்யூஸ்தான். சற்றே தயக்கத்துடன் லோஸாவையும் சேர்த்துக்கொள்ளலாம். அத்தகைய எழுத்தாளர்கள் இல்லாமலாகும்போது நோபல் பரிசுக்குழுவே ஒன்றும் செய்யமுடியாமலாகிறது. டோனி மாரிசனையும் அலிஸ் மன்றோவையும் அவர்கள் நோபல் பரிசு பெற்றதனால் மட்டுமே வாசகர்கள் கவனிப்பார்கள். நோபல் பரிசுக்குழுவினர் என்னதான் பசப்பினாலும் அவர்கள் உலகவாசகர்களுக்குரிய எழுத்தாளர்கள் அல்ல என்று உடனே கண்டுகொள்வார்கள். அந்த ஒருவருடத்திற்கு அப்பால் அவர்களுக்கு உலகளாவிய கவனமும் அமைவதில்லை.

இந்நிலையில் நோபல்பரிசுக்குழு இன்னொரு இடர் நோக்கிச் செல்கிறது. பதிப்பகவல்லமையால் உலகம் முழுக்க பெரிய எழுத்தாளர்களாக நிலைநாட்டப்பட்டுள்ள போலி எழுத்தாளர்கள், வணிக எழுத்தாளர்கள் அவர்களின் வாசல்களைத் தட்டிக்கொண்டே இருக்கிறார்கள். முதல்வகைக்கு சல்மான் ருஷ்தியையும் இரண்டாம் வகைக்கு ஹாருகி முரகாமியையும் சுட்டுவேன். கூடுமானவரை அவர்களை நோபல் குழு தவிர்த்து வருகிறதென்பதே இப்போதைக்கு ஆறுதலானது. இல்லையேல் மிக விரைவிலேயே நோபல் பரிசு என்பது ஆஸ்கார் போல ஒரு வணிகமுத்திரையாக நிறுவன வல்லமைகொண்டு திட்டமிட்டு பெறப்படுவதாக ஆகிவிடும்.

அபூர்வமாக நோபல் குழுவால் கண்டெடுக்கப்பட்டு அதன்மூலம் உலகளாவ அறிமுகமாகி உலக எழுத்தாளராக வாசிக்கப்படுபாவ்ர்களும் இருக்கிறார்கள். இவோ ஆண்ட்ரிச் போல. ஆனால் சென்ற முப்பதாண்டுக்காலமாக அத்தகைய அற்புதங்கள் நிகழ்வது நோபல் பரிசில் சாத்தியமில்லாமல் ஆகிவிட்டிருக்கிறது. தெரிவுக்குழு பெரும்பாலும் ஐரோப்பிய மேட்டிமைநோக்கும், ஐரோப்பிய ரசனையும் கொண்டதாக இருக்கிறது. ஏற்கனவே ஐரோப்பாவில் அறியப்பட்டு ரசிக்கப்படாத ஒன்றை கண்டடைவதற்கான நுண்ணுணர்வை அது பெரும்பாலும் இழந்துவிட்டிருக்கிரது.

விளைவாக பல முக்கியமான உலகப்படைப்பாளிகளை நோபல் குழு புறக்கணித்துக்கொண்டே இருந்தது. மிலோரட் பாவிக் போல. அத்தகைய பலர் உலக மொழிகளில் இன்னமும் அறியப்படாது எழுதிக்கொண்டிருக்கக்கூடும். அவர்கள் வெளிச்சம் பெற இனி நோபல் பரிசை நம்பிப்பயனில்லை என்பதே இன்றைய நிலை.

*

இலக்கியம் என்னும் எல்லையை நோபல் பரிசு தாண்ட ஆரம்பித்து ஓரிரு வருடங்களாகின்றன. பாப் டிலனுக்கு அளிக்கப்பட்டமையால்தான் இது இன்று பேசுபொருளாகிறது. சென்றவருடத்திற்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது ஸ்வெத்லேனா அலெக்ஸியேவிச் என்னும் இதழாளருக்கு, அவரது செய்திக்கட்டுரைகளுக்காக. நோபல் குழுவே கூட அவருடைய தைரியத்தைப்பாராட்டித்தான் நோபல் பரிசு அளித்திருக்கிரது. பாப் டிலனுக்கு அவரது நடனத்தை பாராட்டி இம்முறை அளித்திருக்கிறது என நம்புகிறேன்.

ஏன் இதழியலுக்கோ பாடலுக்கோ நோபல் பரிசு அளிக்கக்கூடாது? அளிக்கலாம். ஆனால் இது இலக்கியத்திற்கான நோபல் பரிசு. அப்படியென்றால் அது இலக்கியச் சிறப்புக்காகவே அளிக்கப்பட்டிருக்கவேண்டும். பாப் டிலனின் வரிகளை மட்டும் வாசிப்பவர்கள் அதை இலக்கியமாக நினைக்க மாட்டார்கள். நான் ஸ்வெத்லேனாவின் பரிசுபெற்ற நூலை வாசித்தேன், பெரும்பாலும். அவருடைய தைரியத்துக்கு மேலதிகமாக அவருடைய எழுத்தில் தகுதி ஏதும் இல்லை என நோபல் குழு நினைத்ததை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது

இவை இலக்கியத்திற்கு அப்பாற்பட்ட காரணங்களுக்காகப் புகழ்பெற்றவை. பாப் டிலனின் பாடல் அதிலிருந்த நாட்டார்த்தன்மை கொண்ட தாளத்தால்தான் ரசிக்கப்பட்டது. இன்றைய ரசிகனுக்கு அதெல்லாம் பொருட்டாகத் தெரியாது. முப்பதாண்டுகளுக்கு முன் நாங்களெல்லாம் செருப்பால் மிதித்து மிதித்துத் தாளம்போட்டோம். ஸ்வெத்லேனாவின் எழுத்து அது வெளிப்படுத்தும் தகவல்களின் அரசியல் முக்கியத்துவத்தால் மட்டுமே புகழ்பெற்றது. எழுத்துமுறையால் மொழியால் அல்ல. அதாவது இலக்கியத்தால் அல்ல

இதையே மொழி பயன்படுத்தப்படும் பிற வடிவங்களுக்கும் சொல்லலாம். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் அமைந்த ஒரு வரி பெரும்புகழ்பெறும். ஒருவகை சமூகப்பாதிப்பையும் செலுத்தும். ஆகவே அது உயர்ந்த கவிதை ஆகிவிடாது. ரஜினிகாந்த் சொல்வதனால் ஒரு வசனம் பெரும்புகழ்பெறும். அதனாலேயே அது உயர்ந்த இலக்கியம் அல்ல. ஓர் ஆக்கம் அதை உருவாக்கிய ஆசிரியனின் குரலாக மட்டுமே நின்றிருக்கையில்தான் இலக்கியமாகிறது.

ஆகவே என் பெருமதிப்பிற்குரிய இந்திரா பார்த்தசாரதி  பாப் டிலன் பற்றி எழுதிய இக்குறிப்பை நான் முழுமையாகவே நிராகரிக்கிறேன். அவரைப்போலவே எனக்கும் பாப் டிலன் பற்றிய கடந்தகால ஏக்கம் நிறைய உண்டு. ஆனால் இன்று வாசித்தால் அய்யே என்றுதான் இருக்கிறது. ஆழ்வார்பாடல்களும் அஷ்டபதியும் இலக்கியமாவது அவை பாடப்படுவதனால் அல்ல. வெறும் வரிகளாகவே அவை உயர்கவிதையாக நிலைகொள்கின்றன. பாடப்படுவதனால் ஒன்று இலக்கியமாகாது என எவரும் சொல்லவில்லை. பாட்டாக மட்டுமே நின்றிருக்கக்கூடிய ஒன்றை இலக்கியமாகக் கொள்ளலாமா என்பதே கேள்வி.

பாப் டிலன் இசை இலக்கியமாகுமா? இந்திரா பார்த்தசாரதி

 

முந்தைய கட்டுரைவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 4
அடுத்த கட்டுரைTinnitus