வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 9

b25

 

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

இந்த ஆண்டு விஷ்ணுபுரம் விருது மூத்த படைப்பாளி திரு. வண்ணதாசன் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளத்தில் மிகவும் மகிழ்ச்சி.

வண்ணதாசன் என்னும் சிறுகதையாசிரியர் உருவாக்கும் படைப்புலகம் தனிமனிதனின் கோபதாபங்களையும், ஆசாபாசங்களையும் அகழ்ந்து எடுக்க கூடியது. அதன் உளவியலை புறக்காட்சிகளின் மீது ஏற்றி அழகிய சித்திரம் போல் வரைந்து விட கூடியது. மனித மனம் அன்பு, குரோதம், நட்பு, துரோகம் என ஒன்றுக்கொன்று முரணான இயல்புகளை ஒரு படிமம் போல் ஒன்றன் மேல் ஒன்று அடுக்கி வைத்துள்ளது, அதன் நுட்பங்களையும், உணர்வுகளையும் கலைத்து போட்டு மீண்டும் அடுக்கும் ஒழுங்கை ஒத்து இருக்கிறது அவர் கதைகள். ஒரு முட்டு சந்துக்குள் நம்மை கொண்டு சென்று நிறுத்தி விட்டு அங்கு ஒரு புதிய பாதையை திறக்கும் லாவகம் வண்ணதாசன் அவர்களுக்கு தெரியும்.

அவரின் எல்லா கதைகளும், கதை மாந்தர்களும் அவர்கள் கொண்டுள்ள உணர்வுகளின் முரண் வழியாக தனக்குள்ளும், தனக்கு வெளியே சமூகத்துடனும் ஒரு உரையாடலை நிகழ்த்துகிறார்கள். இந்த நுண்ணியல்பை அவரைத் தவிர வேறு எந்த எழுத்தாளனும் இயல்பாகவும், அழகியலுடனும் படைத்ததில்லை என்று சொல்லலாம். இலக்கியம் எதையும் எங்கும் விவரித்து சொல்லுவதில்லை, அனைத்தையும் பூடகமாக சொல்லிச் செல்கிறது.

ஆனால் வண்ணதாசன் அவர்களின் சிறுகதைகள் இந்த அடிப்படையில் இருந்து வேறுபட்டு அவர் சொல்ல விரும்புவதற்கு எதிரானவைகளை மட்டும் கதைகளில் விவரிக்கிறார். உதாரணமாக “கனியான பின்னும் நுனியில் பூ” என்னும் சிறுகதையில் தினகரிக்கும் அவள் அப்பாவுக்கும் நடக்கும் உரையாடல் அனைத்தும் இறுதியில் திருடன் என்று சொல்லப்படும் ஒருவரை நோக்கி ” ‘அவரு கொய்யாப் பழம் வாங்க வந்திருக்காரு. நாம மாதுளை வாங்க வந்திருக்கோம். அவ்வளவுதாம்மா’. என்று நிறைவுறுகிறது.

இந்த கதை சொல்ல வருவது திருடன் என்று சொல்கிற அவருக்கும் அந்த குட்டி பெண்ணுக்கும் உள்ள உறவைதான் அனால் வண்ணதாசன் அந்த திறப்பை மேற்சொன்ன அந்த ஒற்றை வரியில் கொண்டு நிறுத்துகிறார். இதுதான் வண்ணதாசனின் படைப்புலகம், அது சொல்லாதவைகளின் மீதம். இருவரின் அந்தரங்கங்கள் கொண்டுள்ள ரகசியம் அதை அவர் திறப்பதேயில்லை. அந்த விஷயத்தை வாசகனிடம் விட்டு விடுகிறார் அவன் திறந்து பார்க்கும் ஆவலை தூண்ட செய்வது தான் அவரின் கதைகள்.

அவர் திருநெல்வேலி என்னும் நகரத்தின் தெருக்களில் எல்லா திருப்பங்கள் வழியாகவும் சென்று திரும்புகிறார். அவரின் கதைகள் திருநெல்வேலி டவுன் சந்துகளிலும், முடுக்குகளிலும் ஆரம்பித்து லாலா சத்திர, சந்தி பிள்ளையார், வாகையடி, தெப்பக்குளம், கோயில்வாசல் என முக்குகளில் திரும்பி ரத வீதியை வந்து அடைந்து விடுகிறது. டவுன் முழுவதுமே சில நேரங்களில் வண்ணதாசன் அவர்களின் கதை மாந்தர்கள் மட்டும் உலவும் இடமாக தெரியும் ஆச்சர்யம் எனக்கு ஏற்பட்டதுண்டு. அவரால் இந்த சாமான்யர்களிடமிருந்து இதே மக்களிடமிருந்தது இன்னும் எத்தனையோ கதைகளை படைக்க முடியும்.

கொல்கத்தாவில் எஸ்பிலேனடு சாலையில் காலையில் நான் நடந்து செல்லும்போது நடைபாதையின் முன்பு குந்தி அமர்ந்திருந்த கட்டிட கூலி தொழிலாளர்களுக்கும், சிறு வயதில் பள்ளி செல்லும் போது பாளையம்கோட்டை மார்க்கெட் சாலையில் வேலைக்காக காத்து கொண்டிருந்த கட்டிட கூலி தொழிலாளர்களுக்கும் அநேகமாக எந்த பெரிய வித்தியாசமும் இல்லை, அவர்கள் பணிக்காக வைத்திருந்த பொருட்களை தவிர. இருவரின் முகமும் ஒரே சிந்தனையில் தான் இருந்தன. இன்றைய நாள் கழிய கூலி கிடைக்குமா என்பது மட்டும்.

உலகம் முழுவதும் மனிதர்கள் வேறுபடலாம். அவர்களின் அகம் எங்கும் ஒன்றாகத்தான் இருக்கின்றது. அந்த அகத்தை மட்டும் எழுதிக் கொண்டே இருக்கும் வண்ணதாசன் அவர்கள் இந்த விருதின் மூலம் கெளரவிக்கப்படுவது மிகவும் மகிழ்ச்சி.

என்றும் வாசிப்புடன்,

சரவணன்

 

 

அன்புள்ள ஜெ

 

வண்ணதாசன் கதைகளுக்கு விஷ்ணுபுரம்ன் விருது அளிக்கப்பட்டிருப்பதை ஒரு முரண்பாடான ஆச்சரியமாகவே பார்க்கிறேன். வண்ணதாசன் கதைகள் நேரடியான வாழ்க்கையைச் சொல்பவை. அப்பட்டமான வாழ்க்கை என்றுகூட சொல்வேன். ஆனால் விமர்சனம் இல்லாதவை. பூடகமானவை. ஆனால் ஆசிரியன் தெரியாதவை. தத்துவம் சிந்தனை என்பதெல்லாம் வண்ணதாசனுக்கு அப்பாற்பட்டவை. அதோடு அவர் காட்டும் உலகம் குறியீடுகள் அற்றது. அதனால்தான் அப்பட்டம் என்று சொன்னேன்

 

ஆனால் விஷ்ணுபுரம் நேர் எதிரானது. அது பூடகமான குறியீடுகளால் ஆனது. சிக்கலானது. யதார்த்தமே இல்லை அதிலே. அதில் வாழ்க்கைகூட இல்லை. உருவகங்கள் மட்டும்தான். ஆசிரியன் எல்லா கதாபாத்திரங்களுக்குள்ளும் இருக்கிறான். தத்துவமாகவே எல்லாம் உள்ளன. அதன் அழகியலே வேறு. எனக்குக் கொஞ்சம் கூட பிடிக்காத புத்தகம் என்றால் விஷ்ணுபுரம்தான்

 

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் அவார்ட் என்பது வண்ணதாசனின் வெற்றி என்றுதான் நினைக்கிறேன். சரியா? எனக்குப்பிடித்த எழுத்தாலர் என்றால் வண்ணதாசன்மட்டுமே. அசோகமித்திரனையும் பிடிக்காது சுந்தர ராமசாமியையும் பிடிக்காது. இலக்கியம் என்றால் பெரிதாக அலட்டிக்கொள்ளவேண்டாமே என்றுதான் நான் நினைக்கிறேன்

 

மருத்துவர் ராஜசேகர்

 

அன்புள்ள அய்யா ஜெயமோகன் ,

 

நான் வண்ணதாசனை கண்டுகொள்ள ஆரம்பிக்கும் தருணத்தில் இந்த விருது அவருக்கு கிடைப்பது என்வாசக அனுபவத்துக்கு ஒரு தூண்டுதலாக அமைகிறது , வண்ணதாசனின்  சில சிறுகதைகளை மட்டும்வாசித்து முடித்திருக்கிறேன்.

 

ஜெயமோகன்  , புதுமை பித்தன் , எஸ்.ராமகிருஷ்ணன், கி. ரா , பிரியா தம்பி ஆகியோரின் சிறுகதைகள்வாசித்திருக்கிறேன் ஆனால் வண்ணதாசன் ஒரு தனி league என்று தான் கூற வேண்டும் (என்அனுபவத்தில்).

 

நீங்களும்  எஸ்.ராமகிருஷ்ணனும் மிகை யதார்த்தவாதிகளாகவே எனக்குப்  படுகிறீர்கள் . யதார்த்தத்தை மிகவும் நெருங்கி சொல்பவராக  வண்ணதாசன் எனக்குத்  தோன்றுகிறார் .

 

உங்கள் இருவரின் எழுத்தும் மிகக் கூர்மை வாய்ந்ததாக இருக்கின்றது. உண்மைகளை நேரடியாகச் சொல்லி, உண்மையின்  நிதர்சனத்தைப்  பட்டவர்த்தமாக வாசகனின் தலையில் விழும்படி எழுதுகிறீர்கள்  (with brutal honesty).

 

வண்ணதாசன் ஒரு மெல்லிசை போல் ஒரு உண்மை நிலையைச்  சொல்லி விட்டு , அதைப்  பற்றிவாசகனின் இயலாமையை உணர்த்துகிறார். வண்ணதாசனுக்கு இந்த விருது மிகவும் பொருத்தமானதாககருதுகிறேன், அதே வேளையில் நீங்களும் , எஸ்.ரா வும் இணைந்து அவருக்கு இந்த விருதை (மேடையில்)அளிக்க வேண்டும் என்பது என் ஆசை.

 

நன்றி

சுதாகரன் விஸ்வநாதன்

வண்ணதாசன் இணையதளம்

வண்ணதாசன் நூல்கள்

வண்ணதாசன் இணையப்பக்கம்

வண்ணதாசன் கதைகள்

வண்ணதாசன் கவிதைகள்

=====================================

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 1

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 2

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 3

வண்ணதாசன் கவிதைகள் பாடல்களாக

வண்ணதாசன் கடிதங்கள் 4

வண்ணதாசன் கடிதங்கள் 5

வண்ணதாசன் கடிதங்கள் 6

வண்ணதாசன் கடிதங்கள் 7

 

முந்தைய கட்டுரைவெள்ளையானை, ஐயா வைகுண்டர் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைதெலுங்கில் நவீன இலக்கியம் உண்டா?