[ 7 ]
அத்ரி முனிவரின் சௌகந்திகக் காட்டின் அழகிய காலையொன்றில் தொலைவில் மரம்செறிந்த காட்டுக்குள் ஒரு கங்காளத்தின் ஒலி கேட்கத் தொடங்கியது. அப்போது அங்கு வைதிகர் நீராடி எழுந்து புலரிக்கு நீரளித்து வணங்கிக்கொண்டிருந்தனர். பெண்டிர் அவர்களுக்கான உணவு சமைக்க அடுமனையில் அனலெழுப்பிக்கொண்டிருந்தனர். தொழுவத்தில் பால்கறந்தனர் முதிய பெண்கள். சிலர் கலங்களில் மத்தோட்டினர். அருகே வெண்ணைக்காக அமர்ந்திருந்தனர் இளமைந்தர். முற்றத்தில் ஆடினர் சிறுவர். மலர்கொய்து வந்தனர் சிறுமியர். இளையோர் சிலர் விறகு பிளந்தனர். சிலர் ஓலைகளில் நூல்களைப் பொறித்தனர்.
தூயது சௌகந்திகத்தின் காலை. தூய்மையில் விளைவதே மெய்மை என்று அத்ரி முனிவர் அவர்களுக்கு கற்பித்தார். விலக்குவதன் வழியாக விளைவதே தூய்மை. மூவேளை நீராடி உடலழுக்கு களைதல். அனலோம்பி மூச்சை நெறிப்படுத்தல். வேதமோதி அகத்தை ஒளிகொள்ளச்செய்தல். சௌகந்திகம் சூழ்ந்திருந்த பெருங்காட்டை முற்றாக விலக்கி வேலியிட்டு தன்னைக் காத்தது. வேதச்சொல் கொண்டு தன்னைச் செதுக்கி கூர்மையாக்குக என்றார் அத்ரி. வாழைப்பூ என தன்னை உரித்து உரித்து தேன்மலர் கொள்க என்றார்.
இனிய புலரியை அதிரச்செய்த கங்காள ஒலியைக் கேட்டு அவர்கள் திகைப்புகொண்டனர். முதலில் அது உக்கில்பறவையின் உப்பலோசை என்று தோன்றியது. சீரான தாளத்தால் அது மரங்கொத்தியோ என ஐயுற்றனர் மாணவர். தொலைதேரும் கருங்குரங்கின் எச்சரிக்கையோசை என்றனர் சில மாணவர். இளையோன் ஒருவன் “அது கங்காளத்தின் ஓசை” என்றான்.
அவர்கள் அதை முன்பு கேட்டிருக்கவில்லை. அவனைச் சூழ்ந்துகொண்டு “அது என்ன?” என்றனர். “மலைவேடர் கையிலிருக்கும் சிறுதோல்கருவி அது. விரல்போன்ற சிறுகழியால் அதை இழும் இழுமென மீட்டி ஒலியெழுப்புவர். கங்காளம் என்பது அதன் பெயர். அவர்களின் கையிலமைந்த நாவு அது என்பார்கள் என் குலத்தவர். கதைகளையே அவர்களால் அவ்வொலியால் சொல்லிக்கொள்ள முடியும்” என்று அவன் சொன்னான். “அது விம்மும். ஏங்கும். அறுவுறுத்தும். அறைகூவும்.”
“எங்கள் மலையடிவாரத்து ஊரில் கங்காளத்தின் திரளொலி எழுந்தால் அனைவரும் அஞ்சி ஓடிச்சென்று ஒளிந்துகொள்வர். கரிய திண்ணுடலுடன் மலையிறங்கிவரும் வேட்டுவர்கள் ஊர்புகுந்து சாவடியில் நிலைகொண்டால் ஊர்ப்பெரியோர் கூடி அரிசியும் பொன்பணமும் பிறபொருட்களுமாகச் சென்று பணிந்து மலைக்கப்பம் கொடுத்து வணங்குவார்கள். அவர்கள் அதைப் பெற்றுக்கொண்டு ஊரை வாழ்த்தி வெளியேறுகையில் ஊர்முகப்பில் நின்றிருக்கும் மரத்தின் பட்டையில் தங்கள் குலக்குறியை பொறித்துச்செல்வார்கள்.”
“தனிவேட்டுவர் மலையிறங்கும் ஒலி ஆறுதலளிப்பது. அவர்களை எதிர்கொண்டு வரவேற்று அழைத்துச்சென்று எங்கள் கன்றுகளை காட்டுவோம். அவற்றின் வாய்கட்டி வைத்திருக்கும் மலைத்தெய்வங்களை விடுவித்து மீண்டும் புல்கடிக்கச் செய்ய அவர்களால் முடியும். அணங்குகொண்டு அமர்ந்திருக்கும் கன்னியரை புன்னகை மீளச்செய்யவும் நோய் கொண்டு நொய்ந்த குழவியரை பால்குடிக்க உதடுகுவியச் செய்யவும் அவர்களால் முடியும்.”
அங்கு அதுவரை கங்காளர் எவரும் வந்ததில்லை. “இது வைதிகர் குருகுலம். இங்கு எவருக்கும் கொடையளிப்பதில்லை. இத்திசையில் எங்கும் வேட்டுவர் இல்லங்களும் இல்லை” என்றார் கனகர். ”வேதம்நாடி வரும் படிவரும் வைதிகருமன்றி பிறர் இதனுள் புக ஒப்புதலுமில்லை.” பிரபவர் ”அவன் எதன்பொருட்டு வருகின்றான் என நாம் எப்படி அறிவோம்?” என்றார். தசமர் “அயலது எதுவும் தீங்கே” என்றார்.
“அவனுடன் நாய் ஒன்றும் வருகிறது” என்றான் ஓர் இளையோன். “எப்படி நீ அறிவாய்?” என்றனர் அவனைச் சூழ்ந்து நின்ற பெண்கள். “புள்ளொலி தேரும் கலையறிந்தவன் நான்” என்று அவன் சொன்னான். “அவனுடன் இன்னொருவரும் வருகிறார். அது பெண் என்கின்றது புள்” என்றான். “காட்டை ஒலியால் அறிந்துகொண்டிருக்கிறாய். நோயும் கொலையும் வாழும் இக்காடு அவ்வொலியால் உன்னையும் வந்தடைகிறது. காடுவாழும் உள்ளத்தில் வேதம் நிற்பதில்லை” என்றார் அவன் ஆசிரியரான கனகர்.
அவர்கள் குடில்தொகையின் வாயிலென அமைந்த மூங்கில்தூண்களின் அருகே காத்து நின்றனர். இளையோர் இருவர் முன்சென்று அவனை எதிர்கொள்ள விழைந்தனர். மூத்தோர் அவர்களை தடுத்தனர். “கொல்வேல் வேட்டுவன் அவன் என்றால் எதிரிகளென உங்களை நினைக்கலாம். அந்தணரையும் அறவோரையும் அறியும் திறனற்றவனாகவே அவன் இருப்பான்” என்றார் சூத்ரகர். அச்சமும் ஆவலும் கொண்டு ஒருவர் கைகளை ஒருவர் பற்றியபடி அங்கே காத்து நின்றிருந்தனர்.
கங்காளத்தின் ஓசை வலுத்து வந்தணைந்தது. மரக்கூட்டங்களிலிருந்து பறவைகள் எழுந்து கலைந்து பறந்தன. கொல்லையில் நின்றிருந்த பசுக்கள் குரலெழுப்பலாயின. அவன் மரக்கூட்டங்களுக்கு நடுவே தோன்றியதும் இளையோர் அஞ்சிக் கூச்சலிட்டபடி பின்னடைந்தனர். கரிய நெடிய உடலில் ஆடையின்றி வெண்சாம்பல்பொடி பூசி அவன் வந்தான். அவன் இடைக்குக் கீழே ஆண்குறி சிறுதுளை வாய்கொண்ட செந்நிறத் தலைபுடைத்து விரைத்து நின்றது. அதில் வேர்நரம்புப் பின்னல்கள் எழுந்திருந்தன. சினம் கொண்ட சுட்டு விரல் போல. சீறிச் சொடுக்கிய நாகம் போல. யானைகுட்டியின் துதிமுனை போல. நிலம் கீறி எழுந்த வாழைக்கன்றின் குருத்துபோல.
சடைத்திரிகள் தோள்நிறைத்து தொங்கின. வேர்புடைத்த அடிமரம்போன்ற கால்கள் மண்ணில் தொட்டுத் தாவுவதுபோல் நடந்தன. வலத்தோளில் தோல்வாரில் மாட்டப்பட்ட முப்புரிவேல் தலைக்குமேல் எழுந்து நின்றிருந்தது. இடக்கையில் மண்டைக்கப்பரை வெண்பல் சிரிப்புடன் இருக்க இடைதொட்டுத் தொங்கிய கங்காளத்தை வலக்கையின் சிறுகழியால் மீட்டியபடி நடந்து வந்தான். அவனுக்குப் பின்னால் நிலம் முகர்ந்தும், காற்றுநோக்கி மூக்கு நீட்டியும், விழிசிவந்த கரியநாய் வால் விடைக்க தொடர்ந்து வந்தது. அப்பால் வெண்ணிற ஆடையில் உடல் ஒடுக்கி நீண்ட கூந்தல் தோளில் விரிந்திருக்க நிலம்நோக்கி தலைதாழ்த்தி நோயுற்ற முதியவள் சிற்றடி எடுத்துவைத்து வந்தாள்.
பதறி ஓடி உள்ளே வந்து அவன் உள்ளே புகாதபடி மூங்கில்படலை இழுத்துமூடினர் இளையோர். அவன் மூடிய வாயிலருகே செஞ்சடைவழிந்த தலை ஓங்கித்தெரிய வந்து நின்று “பிச்சாண்டி வந்துள்ளேன். நிறையா கப்பரையும் அணையா வயிறும் கொண்டுள்ளேன்” என்றான். கங்காளம் குரலானது போலிருந்தது அவ்வோசை. “இரவலனுக்கு முன் மூடலாகாது நம் வாயில். திறவுங்கள்!” என்றார் முதியவராகிய சாம்பர். “அவன் காட்டாளன். இது வைதிகர் வாழும் வேதநிலை” என்றார் கனகர். “அவன் கொலைவலன் என்றால் என்ன செய்வது?” என்றார் சூத்ரகர். “எவராயினும் இரவலன் என்றபின் வாயில் திறந்தாகவேண்டும் என்பதே முறை” என்றார் சாம்பர். தயங்கிச்சென்ற இளையோன் ஒருவன் வாயில் திறக்க அவன் நீள்காலடி எடுத்துவைத்து உள்ளே புகுந்தான்.
அத்தனை விழிகளும் அவனையே நோக்கி நிலைத்திருந்தன. அத்தனை சித்தங்களிலும் எழுந்த முதல் எண்ணம் ‘எத்தனை அழுக்கானவன்! எவ்வளவு அழகற்றவன்!’ என்பதே. தோல்வாடையும் ஊன்வாடையும் மண்மணமும் இலைமணமும் கலந்து காட்டுக்கரடிபோல் அவன் மூக்குக்கு தெரிந்தான். கங்காளத்தின் ஓசை குடில்சுவர்களைத் தொட்டு எதிரொலித்து சௌகந்திகக்காட்டுக்குள் பரவியது. நோயுற்றவள் சுகந்தவாகினிக்கு அப்பால் தரையில் குனிந்தமர்ந்தாள். நாய் அவளருகே கால்மடித்து செவிகோட்டி மூக்குநீட்டி கூர்கொண்ட முகத்துடன் அமர்ந்தது.
அவன் உள்ளே நுழைந்தபோது தேவதாருக்காட்டுக்குள் நிறைந்திருந்த நறுமணத்தை ஊடுருவியது மதம்கொண்ட காட்டுவிலங்கின் நாற்றம். தொழுவத்துப் பசுக்கள் கன்றுகளைக் கண்டவைபோல குளம்புகள் கல்தரையில் மிதிபட, கொம்புகளால் தூண்களையும் அழிகளையும் தட்டி நிலையழிந்து, முலைகனத்து குரலெழுப்பின. கூரையேறிய சேவலொன்று தலைசொடுக்கி சிறகடித்துக் கூவியது. வளர்ப்புக்கிளிகள் ‘அவனேதான்! அவனேதான்!’ என்று கூவிச்சிறகடித்து உட்கூரையில் சிறகுகள் உரச சுற்றிப்பறந்தன.
அவ்வோசைகள் சூழ அவன் நடந்து முதல் இல்லத்தின் முன் சென்றுநின்றான். கங்காளத்தின் தாளத்துடன் இயைய “பசித்துவந்த இரவலன், அன்னையே. உணவிட்டருள்க, இல்லத்தவளே!” என்று கூவினான்.
அவனை சாளர இடுக்குகளினூடாக பெண்கள் நோக்கிக்கொண்டிருந்தனர். அவன் குரல்கேட்டு பதுங்கியிருக்கும் விலங்கின் உடலென அக்குடில் அதிர்வுகொண்டது. அதன் மூடிய கதவுகளின் இடுக்குகள் விதும்பின. அவன் மும்முறை குரலெழுப்பியதும் கதவு மெல்லத்திறக்க மேலாடைகொண்டு மூடிய தோளை ஒடுக்கி கால்கள் நடுங்க முனிவர்மனைவி முறத்தில் அரிசியுடன் வெளியே வந்தாள். தலைகுனிந்து நிலம்நோக்கி சிற்றடி வைத்து வந்து படிகளில் நின்று முறத்தை நீட்டினாள். அவன் தன் கப்பரையை அவளை நோக்கி நீட்டி புன்னகையுடன் நின்றான்.
அவளுடைய குனிந்த பார்வை திடுக்கிட்டு நிமிர்ந்தது. அவன் விழிகளை சந்தித்ததும் அவள் கைகள் பதற முறம் சரிந்து அரிசி சிந்தலாயிற்று. தன் கப்பரையாலேயே அவ்வரிசியை முறத்துடன் அவன் தாங்கிக்கொண்டான். கப்பரை விளிம்பால் முறத்தை மெல்லச்சரித்து அரிசியை அதனுள் பெய்தபோது அவன் விழிகள் அவள் உடலிலேயே ஊன்றியிருந்தன. விழி தழைத்திருந்தாலும் முழுதுடலாலும் அவனை நோக்கிய அவள் மெய்ப்புகொண்டு அதிர்ந்தாள். சுண்டிச்சிவந்த முகத்தில் கண்கள் கசிந்து வழிய, சிவந்து கனிந்த இதழ்கள் நீர்மையொளி கொள்ள, உயிர்ப்பின் அலைக்கழிப்பில் கழுத்துக்குழிகள் அழுந்தி எழ, முலைக்குவைகள் எழுந்து கூர்கொண்டு நிற்க எங்கிருக்கிறோம் என்றறியாதவள் போலிருந்தாள்.
“நலம் திகழ்க இல்லாளே! உன் குலம் பெருகுக! கன்றுடன் செல்வம் தழைக்க! சொல்கொண்டு பெருகுக உன் கொடிவழி!” என்று சொல்லி கங்காளன் திரும்பியபோது கனவிலென காலெடுத்து வைத்து அவளும் அவனைத் தொடர்ந்துசென்றாள். அவள் இல்லத்திலிருந்து கைநீட்டியபடி வெளியே வந்த இன்னொருத்தி “என்ன செய்கிறாய், வாமாக்ஷி? எங்கு செல்கிறாய்?” என்று கூவ அவன் திரும்பி நோக்கி மெல்ல நகைத்தான். வெறிகலந்த விழிகள். பித்தெழுந்த சிரிப்பு. அவள் மேலாடை நழுவ பெருமுலைகள் இறுகி மாந்தளிர்நிற காம்புகள் சுட்டுவிரல்களென எழுந்து நின்றன. விம்மி நெஞ்சோடு கைவைத்து அழுத்தி ஒருகணம் நிலைமறந்தபின் அவளும் உடனிறங்கி அவனுடன் சென்றாள்.
அவன் கங்காளத்தை மீட்டியபடி இல்லங்கள்தோறும் சென்றான். அவன் செல்வதற்குள்ளாகவே ஆடை நெகிழ்ந்துருவிச் சரிய, விழிகளில் காமப்பெருக்கு செம்மைகொள்ள, விம்மும் முலைகளை தோள்குறுக்கி ஒடுக்கியும், கைகொண்டு இறுக்கியும், தொடைசேர்த்து உடல் ஒல்கியும் முனித்துணைவியர் அன்னத்துடன் திண்ணைகளுக்கு வந்தனர். உறவுத்திளைப்பிலென குறுவியர்வை கொண்ட நெற்றிகள். பருக்கள் சிவந்து துடித்த கன்னங்கள். கனிவு கொண்டு சிவந்த இதழ்கள். மூச்சு அனல்கொள்ள விரிந்தமைந்த மூக்குத்துளைகள். சுருங்கி அதிர்ந்த இமைகளுக்குள் பால்மாறா பைதல்நோக்குபோல் ஒளியிழந்து தன்னுள் மயங்கிய விழிகள்.
குடிலுக்குள் இருந்து அஸ்வக முனிவர் ஓடிவந்து “என்ன செய்கிறாய், மாயாவியே? நீ யார்?” என்று கூவினார். கிருபர் “தடுத்து நிறுத்துங்கள் அவனை! நம் குலக்கொடிகளை மயக்கி கொண்டுசெல்கிறான் அவன்” என்றார். அவன் கங்காளத்தின் தாளம் மாறுபட்டது. குடில்களில் இருந்து குழந்தைகள் கூவிச்சிரித்தும் துள்ளியார்த்தும் அவனுக்குப்பின் திரண்டுசென்றன. அவனை நோக்கி மலர்களைப் பறித்து வீசின. அவனுடன் செல்ல முண்டியடித்தன. கங்காளம் அழைக்க வேதம் பயின்ற இளையோர் தங்கள் கையிலேந்திய பணிக்கருவிகளை அங்கேயே உதறி அவனைத் தொடர்ந்தனர். சுவடிகளை உதறி கல்விநிலைகளில் இருந்து எழுந்து அவன் பின்னால் ஏகினர்.
வேள்விச்சாலைக்குள் பன்னிரு முனிவர் சூழ அமர்ந்து வேதமோதி அவியிட்டுக்கொண்டிருந்த அத்ரியின் முன் சென்று நின்ற கருணர் மூச்சிரைத்தபடி “முனிமுதல்வரே, எண்ணவும் இயலாதது நிகழ்கிறது. எங்கிருந்தோ வந்த கிராதன் இதோ நம் இல்லப்பெண்களையும் மாணாக்கர்களையும் இழுத்துக்கொண்டு செல்கிறான். முடிவற்ற மாயம் கொண்டிருக்கிறான்… எழுந்து வருக! நம் குருநிலையை காப்பாற்றுக!” என்று கூவினார். “இங்கிருந்தே வெல்வேன் அவன் மாயத்தை” என்று கூவியபடி அவியிலிட தர்ப்பை ஒன்றைக் கையிலெடுத்த அத்ரி அது பொசுங்கி எரிந்து தழலாவதைக் கண்டார்.
சினத்தால் உடல் அதிர எழுந்து அவர் வெளியே சென்று நோக்கியபோது கரிய திண்ணுடலில் தசைத்திரள் அதிர கங்காளம் மீட்டியபடி குடில்நிரை நடுவே கடந்துசென்ற காட்டாளனைக் கண்டார். “யாரவன்?” என்று கூவினார். “முன்பு இவன் இங்கு வந்துள்ளான். இவன் காலடிகளை நான் முன்பும் எங்கோ கண்டுள்ளேன். இவ்வோசையையும் நான் அறிவேன்.” கர்த்தமர் “அடர்காட்டின் இருளில் இருந்து வந்தான். வெண்சாம்பல் அணிந்த காலன். அவன் நாயும் துணைவந்த நோயும் அங்கே அமர்ந்துள்ளன” என்றார்.
கையிலிருந்த வேள்விக் கரண்டியைத் தூக்கியபடி “நில்! நில்!” என்று கூவினார் அத்ரி. அவன் திரும்பி அரைக்கணம் நோக்கியபோது அவ்வெறிச்சிரிப்பின் துளியைக் கண்டு திகைத்து பின்னடைந்தார். சௌகந்திகக் காடே அவன் சூர்மணத்தை சூடிக்கொண்டிருந்தது. ஈரமண் மணம், பழைய வியர்வையின் மணம், புதிய விந்துவின் மணம். “யார் இவன்? யார் இவன்?” என்று கூவியபடி அவனைத் தொடர்ந்தோடினார். “நிறுத்துங்கள் அவனை… வாயிலை மூடுங்கள்!” என்றபடி கீழே கிடந்த கழியொன்றை எடுத்துக்கொண்டு முன்னால் பாய்ந்தார்.
கங்காளம் கதிமாற கட்டுப்பசுக்கள் வடங்களை அவிழ்த்துக்கொண்டு குளம்புகள் மண்மிதித்து ஒலிக்க, வால்சுழல, நாக்குநீட்டி கரிய மூக்கைத் துழாவியபடி கூவி அவனைத் தொடரலாயின. வேள்விச்சாலைக்குள் நால்வேதங்களாக உருவகித்து நிறுத்தப்பட்டிருந்த வெண்ணிறமும் செந்நிறமும் சாம்பல்நிறமும் கருநிறமும் கொண்ட பசுக்கள் நான்கும் கட்டறுத்துக் கூவியபடி நடையில் உலைந்த பெருமுலைகளின் நான்கு காம்புகளிலும் பால்துளிகள் ஊறிநின்று துளித்தாடி புழுதியில் சொட்ட, திரள்வயிறு அதிர, வால்சுழல அவனைத் தொடர்ந்தோடின.
அவனை முந்திச்சென்று மறித்த அத்ரி “நில் இழிமகனே, இக்கணமே நில்! என் வேதப்பேராற்றலால் உன்னையும் உன் குடியையும் பொசுக்கியழிப்பேன்…” என்று கூச்சலிட்டார். அவர் கையில் இருந்து நடுங்கியது விறகுக்கழி. “என் குடிப்பெண்களை இழுத்துச்செல்லும் நீ யார்? எதன்பொருட்டு இங்கு வந்தாய்?” அவன் புன்னகையுடன் “நான் இரவலன். பசிக்கு அன்னமும் என் குடிக்கு பொருளும் இரந்துபெற வந்தேன். எனக்களிக்கப்படும் அனைத்தையும் பெறும் உரிமை கொண்டவன். இவர்கள் எவரையும் நான் அழைக்கவில்லை. எதையும் கவரவுமில்லை. எனக்களிக்கப்பட்டவை இவை. என்னைத் தொடர்பவர் இவர்கள்” என்றான்.
“இது மாயை. இது கீழ்மையால் வல்லமை கொண்ட காட்டாளனின் நுண்சொல் வித்தை… இதை என் தூயவேதத்தால் வெல்வேன்” என்று அத்ரி தன் கையைத் தூக்கினார். அதர்வவேத மந்திரத்தைச் சொல்லி அவன் மேல் தீச்சொல்லிட்டார். அவன் புன்னகையுடன் அவரை நோக்கி “வேதங்கள் இதோ என் பின் வந்து நின்றிருக்கின்றன, முனிவரே” என நான்கு பசுக்களை சுட்டிக்காட்டினான். அவர் திகைத்து மெல்ல கை தழைத்தார்.
அவன் புன்னகையுடன் “தூயவை மட்டும் நிறைந்த உங்கள் வேதக்காட்டில் இப்போது எஞ்சியிருப்பது என்ன, முனிவரே?” என்றான். அவர் தழைந்து கண்ணீர் நனைந்த குரலில் “இது மாயம்… இது வெறும் மாயம்” என்றார். “சரி, மாயத்தை அவிழ்க்கிறேன்” என்று தன் கையறியாது மீட்டிக்கொண்டிருந்த கங்காள ஒலியை நிறுத்தினான். அவனைச் சூழ்ந்திருந்த பெண்கள் நிலைமீண்டு அஞ்சியும் நாணியும் கூவியபடி ஆடைகளை அள்ளி தங்கள் உடல் மறைத்தனர். ஆடையற்றவர் தோள்குறுக்கி நிலத்தில் கூடி அமர்ந்தனர். இளையோர் விழிப்பு கொண்டு ஒருவரை ஒருவர் நோக்கி வியக்க பசுக்கள் கன்றுகளை நோக்கி குரலெழுப்பின.
“இப்பெண்களில் காட்டாளனைப் புணராத ஒருவரேனும் உளரேல் அழைத்துச்செல்க!” என்றான் அவன். அத்ரி தனக்குப் பின்னால் வந்து கூடிய முனிவர்களை விழிநோக்கி தயங்கி நின்றார். “இவ்விளையோரில் காட்டாளனாக ஒருகணமேனும் ஆகாத ஒருவன் உளன் என்றால் கூட்டிக்கொள்க!” என்று அவன் புன்னகையுடன் சொன்னான். அத்ரியின் உதடுகள் சொற்களின்றி அசைந்தன. “காட்டை நினைத்து அசைபோடாத ஒரு பசுவையேனும் அழைத்துச்சென்றால் நீங்கள் அமுதுகொள்ளலாம்” என்று அவன் மேலும் சொன்னான்.
அத்ரி சினத்துடன் “நீ வேதமுனிவரை இழிவுசெய்கிறாய், கீழ்மகனே” என்று கூவினார். “காட்டாளத்தியாகி உங்கள் மனைவியர் அளித்த கொடையை காட்டாளனாக மாறி நுகராதவர்கள் உங்களில் எவர்? முனிவரே, உங்கள் கையில் இருக்கும் அவ்விறகுக் கட்டையை காட்டாளன் அல்லவா ஏந்தியிருக்கிறான்!” என்று அவன் வெண்பல்நிரை காட்டிச் சிரித்தான். அத்ரி தன் கையிலிருந்த கழியை அப்போதுதான் உணர்ந்தார். அதை கீழே வீசிவிட்டு “ஆம், மானுடராக நாங்கள் மாசுள்ளவர்களே. ஆனால் மாசற்றது எங்கள் சொல்லென நின்றிருக்கும் வேதம். அதுவே எங்கள் அரணும் அரசும் தெய்வமும் ஆகும்” என்றார்.
“காட்டாளன் அறியாத வேதம் இந்நான்கில் ஏதேனும் உள்ளதென்றால் அழைத்துச்செல்க!” என்று அவன் பசுக்களை சுட்டிக்காட்டினான். அத்ரி முன்னால் நின்ற அதர்வம் என்னும் கரிய பசுவை தொடையில் தட்டி அழைத்தார். அது சீறி மூக்கு விடைத்து விழியுருட்டி தன் கொம்புகளைச் சாய்த்தது. அவர் அஞ்சி பின்னடைந்து சாம்பல்நிறமான சாமம் என்னும் பசுவின் திமிலைத் தொட்டு “என் அன்னையல்லவா?” என்றார். அது கொம்புகளைச் சரித்து குளம்பெடுத்து முன்னால் வைத்தது. செந்நிறப்பசுவான யஜுர் அவரை நோக்கி விழிசரித்து காதுகளை அடித்துக்கொண்டது. வெண்பசுவான ரிக்கை நோக்கி கைகூப்பி “என் தெய்வமே, என்னுடன் வருக!” என்றார் அத்ரி. அது அவரை அறியவே இல்லை.
கண்ணீருடன் “தோற்றேன். இன்றுவரை வென்றேன் என நின்று தருக்கிய அனைத்தையும் முற்றிழந்தேன். இனி நான் உயிர்வாழ்வதற்குப் பொருளில்லை” என்று கூவியபடி அவர் தன் இடையாடையை அவிழ்த்து வடக்குநோக்கித் திரும்ப அவன் அவர் தோள்களில் கையை வைத்தான். “வெங்குருதியையும் விழிநீரையும் அறியாமல் எவரும் வேதத்தை அறிவதில்லை, முனிவரே” என்றான். “நீ யார்? நீ யார்?” என்று அவர் உடல் நடுங்க கூவினார். “காட்டுச்சுனையிலிருந்து காட்டை விலக்குவது எப்படி?” என்றான் அவன் மேலும். “நீ காட்டாளன் அல்ல… நீ காட்டாளன் அல்ல” என்று அவர் கூச்சலிட்டார்.
அவன் விலகிச்செல்ல அவர் அவனைப்பற்றி இழுத்து “சொல், நீ யார்? நீ யார்?” என்றார். “இங்கு ஒருவர் மட்டிலுமே என்னை உண்மையுருவில் கண்டவர். உங்கள் அறத்துணைவி. அவரிடம் கேளுங்கள்” என்றபின் அவன் திரும்பிச் சென்று சுகந்தவாகினியை கடந்தான். அவன் கால்பட்டு ஒரு உருளைக்கல் பெயர்ந்து உருண்டது. நாய் எழுந்து வால்குழைத்து முனகியது. அவன் நடந்துசெல்ல அவனைத் தொடர்ந்து நோயும் சென்றது. அவர்கள் கங்காள ஒலியுடன் நடந்து மரக்கூட்டங்களுக்கிடையே மறைந்தனர்.
அத்ரி திரும்பி தன் குடிலுக்குள் ஓடினார். அங்கே வெளியே நிகழ்ந்தவை எவற்றையும் அறியாமல் அடுமனையில் துவையல் அரைத்துக்கொண்டிருந்த அனசூயையிடம் “சொல், நீ கண்டது என்ன? சொல்!” என்று கூவினார். “என்ன கண்டேன்? எதைக் கேட்கிறீர்கள்?” என்றாள் அவள். “சற்றுமுன் நீ கொண்டுசென்று கொடுத்த பிச்சையை ஏற்ற இரவலன் யார்? சொல்!” என்றார் அவர். “நான் கண்டவன் ஒரு இளஞ்சிறுவன். காட்டுக்குலத்தவன். ஆடையற்ற சிற்றுடலில் சாம்பல் பூசியிருந்தான். இடக்கையில் கப்பரையும் வலக்கையில் கழியும் ஏந்தி இடையமைந்த கங்காளத்தை மீட்டிக்கொண்டிருந்தான். மாசற்ற வெண்பல் சிரிப்பு கொண்ட அவனைக் கண்டதும் என் முலைக்கண்களில் பாலூறியது. இக்கணம்வரை அவனைத்தான் எண்ணிக்கொண்டிருந்தேன்.”
அவர் திகைத்து நின்றிருக்க அவள் தொடர்ந்தாள் “அவன் தோள்களில் மானும் மழுவும் பச்சைகுத்தப்பட்டிருந்தன. நெற்றியில் அறிவிழி ஒன்று பொட்டெனத் திறந்திருந்தது. செஞ்சடைக்கற்றையில் பிறைநிலவென வெண்பல் ஒன்றைச் சூடியிருந்தான். அவனுக்கு இருபக்கமும் காலைச்சூரியனும் அணையாத சந்திரனும் நின்றிருக்கக் கண்டேன்.”
அம்பு விடுபட்ட வில் என நாண் அதிர நிலையழிந்து துவண்ட அத்ரி மீண்டெழுந்து “எந்தையே!” என்று கூவியபடி வெளியே ஓடினார். நெஞ்சில் அறைந்தபடி “வந்தவன் அவன். ஆடல்வல்லான் ஆடிச்சென்ற களம் இது. முனிவரே, துணைவரே, நாமறியாத வேதப்பொருளுரைக்க எழுந்தருளியவன் பசுபதி. கபாலன். காரிமுகன், பைரவன், மாவிரதன். அவன் நின்ற மண் இது. அவன் சொல்கேட்ட செவி இது” என்று ஆர்ப்பரித்தார்.
அழுதபடியும் சிரித்தபடியும் ஓடிச்சென்று அவர் அந்த உருளைக்கல்லை எடுத்து அந்த இடத்திலேயே சிவக்குறியாக நிறுவினார். “இது கிராதசிவம்!” என்றார். நால்வேதப்பசுக்களை நான்கு திசையிலும் நிறுத்தி அவற்றின் பால்கறந்து அதில் ஊற்றி முழுக்காட்டினார். “சிவமாகுக! ஓம் சிவமாகுக!” எனக் கூவியபடி கைகூப்பினார்.