வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 6

images

 

 

அன்புள்ள ஜெ,

வணக்கம். நலம், நலம்தானே?

நான் அடிக்கடி விளையாட்டாக, பிரிட்டன் கால நிலை என்பது இரண்டே இரண்டுதான் என்று சொல்வதுண்டு. மழைக்கு முன் அல்லது மழைக்குப் பின்.

கிட்டதட்ட உங்கள் நிலையையும் இது போன்று இரண்டே நிலைதான் என்று தோன்றுகிறது. பயணத்திற்கு முன் அல்லது பயணத்திற்குப் பின்.

தற்போது கேதார் பயணத்திலிருந்து திரும்பியிருக்கிறீர்கள். அடுத்த பயணம் நிச்சயம், சீக்கிரமே என்பதில் சந்தேகம் இல்லை!

முன்பு ஒரு முறை வண்ணதாசன் சிறுகதைகளைப் பற்றி நமது நண்பர்கள் சிலரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவை அவர்களை அவ்வளவாக கவரவில்லை என்று அறிந்தேன். ஓரிரு கதைகள் மட்டுமே வாசித்திருந்தார்கள். மேலும் படிக்க அவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்று தெரியவந்தபோது ஆச்சரியமே மேலிட்டது.

கவிஞர் குமரகுருபரனின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் நீங்கள் ஆற்றிய உரையை சமீபத்தில் கேட்டேன். அதில் கல்பற்றா நாராயணன் அவர்களின் Touch Screen கவிதையை “தொட்டு” ஆரம்பித்து உரையை எடுத்து விரித்துச் சென்றீர்கள். என்னை கவர்ந்த உரைகளில் ஒன்று.

ஓங்கி உதைத்து திறந்த கதவுகள், வன்மையாக குரலெழுப்பிய முற்றங்கள், மிதித்து தாண்டிய தொலைவுகள்…. இப்படிப்பட்ட, உக்கிரமான, தீவிர படைப்புகளை ஆரம்பத்திலேயே படித்து பழகியவர்களுக்கு வண்ணதாசனின் அணில்களும், நாவல் பழங்களும், ஆச்சியும், வண்ணாத்திபூச்சிகளும் மிக மென்மையாக, அதனாலேயே ஈர்க்கவில்லையோ என்று நினைத்துக்கொண்டேன்.

ஆனால் மானுட உச்சங்களை காட்டுவதற்கு, “மனுசபயலை” உணர்த்துவதற்கு “கதவுகளை ஓங்கி உதைக்க வேண்டியதில்லை”, நீர் பரப்பில் நடமாடும் பூச்சிகள் போன்ற ஒரு மென் தொடுகையே போதும் என்பதற்கு வண்ணதாசன் படைப்புகள் ஓர் சிறந்த உதாரணமாகவே நான் காண்கிறேன்.

ஆழமில்லாதது போன்று தோற்றமளிக்கும் ஏரிப்பரப்பில் முழு வானத்தையும் கண்டுகொள்ளமுடிகிறது அல்லவா?

வண்ணதாசன், 2016 விஷ்ணுபுரம் விருது – விருதைக்கொடுத்து விருதைப் பெறுதல். பேருவகை கொள்கிறேன்.

சிவா கிருஷ்ணமூர்த்தி

***

அன்புள்ள ஜெ

விஷ்ணுபுரம் விருது பெறும் வண்ணதாசனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். வண்ணதாசனை தமிழிலக்கியத்தில் ஒரு ‘மணமான’ அம்சமாக நான் நினைக்கிறேன். பலவகையான ருசிகள் இங்கே உள்ளன. ஆனால் மணம் இல்லாமல் சமையல் ஏது? எண்ணையும் கடுகும் கறிவேப்பிலையும் சேர்ந்து உருவாக்கும் அந்த முறுகல் இல்லாமல் எப்படி சமையலறை நிறையும்?

பெரிய நெருக்கடிகளை வண்ணதாசன் காட்டுவதில்லை. ஏனென்றால் அவருடைய உலகமே அவற்றுக்கு அப்பாற்பட்டதுதான். அவர் காட்டுவது உலகங்கள் மெல்ல தொட்டுக்கொள்வதையும் உரசிக்கொள்வதையும்தான். ஆனால் அவற்றிலே மனித சுபாவங்களில் ஏராளமான வண்ணங்களைக் காட்ட அவரால் முடிகிறது. ஆகவே அவை கிளாஸிக் அந்தஸ்து கொண்டவை

இந்தியமொழிகளிலே அப்படிப்பார்த்தால் வண்ணதாசனைப்போல ஒரு படைப்பாளி இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஓரளவுக்கு ரேமண்ட் கார்வர், எடித் வார்ட்டன் இருவரையும் வண்ணதாசனுடன் ஒப்பிடலாமென நினைக்கிறேன்

ராமச்சந்திரன் எம்.

***

அன்புள்ள ஜெ,

வண்ணதாசன் கதைகளை நீண்டநாட்களுக்குப்பின் வாசித்துப்பார்க்க ஒரு சந்தர்ப்பம் என்றுதான் இந்த விருதை எடுத்துக்கொள்கிறேன். அவரைத் தொடர்ந்து வாசித்துக்கொண்டிருந்த ஒரு காலகட்டம் இருந்தது எனக்கு.

நான் அவரை முதலில் வாசித்தது காலச்சுவடில் வெளிவந்த நீ இப்போது இறங்கும் ஆறு என்னும் கதை. 1988 என நினைக்கிறேன். அப்போதே அவர் பெரிய ஸ்டார். அந்தக்கதையை சுஜாதா இன்செஸ்ட் என்று சொல்லியிருந்தார். அப்படி என்ன இருக்கிறது என்று பார்ப்பதற்காகத்தான் முதலில் வாசிக்க ஆரம்பித்தேன். அந்தக்கதையில் மறைந்திருக்கும் கதையை வாசிக்கவே எனக்கு ரொம்ப நேரம் ஆகியது

வண்ணதாசன் கதையைப்பற்றி இப்படித்தான் சொல்லமுடியும். சில விஷயங்களை ரொம்பப்பூடகமாகச் சொன்னால்தான் அவைகளுக்கு மதிப்பு. நேரடியாகச் சொன்னால் அப்படியா என்று ஆகிவிடும். அந்தப்பூடகமான விஷயங்களை மேலும் பூடகமாகச் சொல்லி அந்த பூடகத்தன்மைவழியாகவே அவற்றை பெரிதாக ஆக்குகிறார். அவருடைய பூதக்கண்ணாடி அந்த பூடகத்தன்மைதான்.

அதைச்சொல்வதற்கு அவர் ஒரு பாஷையை பயிற்சிசெய்து வைத்திருக்கிறார். சும்மா அவர் பாட்டுக்குச் சொல்லிச்செல்வதுபோல, நஸ்டால்ஜியா போல ஒரு பாஷை அவை இரண்டும் இணைந்து உருவாக்கும் ஒரு தனி ருசி அவரை தமிழில் முக்கியமான இலக்கியக்கலைஞராக ஆக்குகிறது

முகுந்த் நாராயணன்

***

அன்புள்ள ஜெ,

வண்ணதாசனை புரிந்துகொள்ள ஒரு நல்ல உதாரணம் அவரோட ஒரு கதை. அதில் ஒருபெண் அவள் ரகசியக்காதல் கொண்டிருக்கிற ஒரு ஆண் படுத்து எழுந்துபோன மெத்தையின் சூடான குழியில் சென்று படுத்துக்கொள்வாள். இன்செஸ்ட் கதை அது என நினைக்கிறேன். அந்தக்கதையை வாசிக்கையில் ஒரு ரகசியக்குதூகலம் ஏற்பட்டது.

வண்ணதாசனின் கதையும் அதேபோல ஒரு நுணுக்கமான அனுபவம்தான். அதாவது அதை கொடுப்பவரும் பெறுபவரும் மட்டுமே அறிய முடியும். மற்றவர்களுக்கு அதிலே ஒன்றும் பெரிதாக இருப்பதில்லை. ஆழமான கதைகள் என்றால் அப்படி இல்லை என்று தான் சொல்வேன். ஆனால் அனுபவம் ஆழமானது

பெரியவிஷயங்களைச் சொல்லும் எழுத்தாளர்களின் நடுவே வண்ணதாசன் சின்னவிஷயங்களின் கடவுள்

சாரங்கன்

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 2
அடுத்த கட்டுரைவல்லவன் ஒருவன்