அப்பா, இயற்கைவேளாண்மை -கடிதங்கள்

wpid-wp-1475573515092.jpeg

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

ஆண்மையின் தனிமை கட்டுரையில் வினயன் அவர்கள் இந்திய இளைஞர்களின் உளச்சிக்கல் தந்தையைப் பெற்றுக்கொள்ளுதல் என்று கூறியதை எழுதியிருந்தீர்கள். “அங்கே அப்பா காத்திருக்கிறார்” பதிவில் “வாழ்க்கை என்பது அப்பாவாக ஆகிக்கொண்டே இருப்பது” என்ற வாக்கியத்தை படித்ததையும் அது எவ்வளவு ஆழமான உண்மை என்பதையும் கூறியிருந்தீர்கள். இந்த இரு கட்டுரைகளை படிக்கும்போது வெறும் தகவலாக மூளையில் ஏற்றி கடந்துவிட்டேன்.

திடீரென்று ஒரு நாள் நான் நின்று கொண்டிருந்த பாவனை என் அப்பாவை போல் இருப்பதை கவனித்தேன். ஆச்சர்யம் அன்றிலிருந்து சிற்சில விஷயங்களில் நான் ஏற்கனவே என் அப்பா ஆகியிருப்பதை உணர்ந்தேன். இன்னும் காலம் செல்ல செல்ல நான் மேலும் மேலும் அப்பா ஆகலாம். இது உண்மையிலேயே ஒரு திறப்பு. அந்த சிற்சில நொடிகளில் நான் பூமியில் வாழும் ஒரு தனித்துவமான உயிர் அல்ல, நான் ஒரு அறுபடாத பிரதி, ஒரு தொடர்ச்சி அவ்வளவே என்பதை உணர்ந்த போது அதிர்ச்சி அடைந்தேன்.

இப்பொழுது என் ஐயமே சாதியையும் நான் பெற்றுக்கொள்வேனா என்பது தான். இந்த பெற்றுக்கொள்ளுதல் நாளுக்கு நாள் விரிவடைவது போல் தோன்றுகிறது. இப்போது இல்லையென்றாலும் இன்னும் ஐந்து பத்து வருடங்களில் என் அப்பா சாதியைப் பற்றி என்ன எண்ணம் கொண்டிருந்தாரோ அதே இடத்திற்கு சென்று சேர்ந்திருப்பேனா? விஜயனின் கதை ஒன்றில் தூக்கிலிடப்பட்ட மகன் மூதாதையரோடு நலமாக இரு என்பதாக தன் துயரத்தை கடந்து போவதையும் எழுதியிருந்தீர்கள்.  நம் முன்னோர்களின் தொடர்ச்சியாக நம்மை எண்ணிக்கொள்வதும் ஒரு வகையில் நாம் நம் தந்தையை பெற்றுக்கொள்வதும் நம் குழந்தைகளிடம் நம்மை கண்டடைவதும் தானே. நம் முன்னோர் அல்லது நம் வரலாறு என்றால் அது சாதி தானே. இது உண்மையெனில் சாதி அழிவதென்பது ஒரு வேளை பொது தளத்தில் நடந்தாலும் மனதினில் எப்போதும் இருக்குமோ?

நன்றியுடன்,

முருகன்.

*

அன்புள்ள முருகன்

பரிணாமத்தின் போக்கிலேயே உள்ள விஷயம் ஒன்றுண்டு, நாம் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வதில்லை. தேவையானவற்றை மட்டுமே மேலே கொண்டுசெல்கிறோம்

ஆகவே விமர்சனமில்லாமல் கடந்தகாலத்தை ‘அப்படியே’ ஏற்றுக்கொள்வது எவராலும் இயல்வதில்லை.

நான் பாகுலேயன்பிள்ளையை நோக்கித்தான் சென்றுகொண்டிருக்கிறேன். என் முகமே அவராக ஆகிக்கொண்டிருக்கிறது

ஆனால் நான் அவரில்லை. அவருடைய திருந்திய பதிப்புதான்

ஜெ

***

அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். நலம். தாங்களும் குடும்பத்தாருக்கும் நலம் விழைக பார்த்திக்கின்றேன்.

முன்னோர்கள், பெற்றோர்கள், குடும்பத்தார்கள், உயர்வான எண்ணமுடையவர்களின் ஆசிர்வாதங்கள் என்றும் அவசியம் அவை நம்மை காக்கும் வல்லமை கொண்டவை என்பது என் எண்ணம்.

இயற்கை, வேளான்மை கொள்கை விதை வித்திட்ட எழுத்துக்கள் திரு.ஆர்.எஸ். நாராயணன் (சொல்வனம் கட்டுரைகள்) அவர்களுடையது இந்த எண்ணங்களுக்கு உங்கள் எழுத்துக்கள் வழியாகவே நீர் ஊற்றி இன்று வேர் பிடித்துள்ளது. இங்கு தெய்வத்திரு நம்மாழ்வார் அவர்களையும் குறிப்பிட விரும்புகிறேன். கடந்த வந்த வருடங்களில் மன வல்லமை பெற்று, ஆரோக்கிய உணவு மற்றும் இயற்கையுடன் இணைந்து வாழ்க்கை முறை என்ற பிரதான நோக்கங்களை அடுத்த தலைமுறைக்கு சாத்தியப்படுத்திவிட வேண்டும் என்ற உறுதியோடு ஆரம்பத் திட்டங்களை வகுத்துவிட்டோம். என் தந்தையின் அனைத்து ஆதரவுடன் அவரே முன்னின்று செயல்படுகிறார்.

திரு.ஆர்.எஸ்.நாராயணன் அவர்களை சந்தித்து அவர்களிடம் தோட்ட மேன்பாடு அறிவுரைகள் பெற்று, அடுத்தாக வங்கி கடன் பெற அலைச்சல் ஆரம்பம் ஆயிற்று. பெரியவர்களின் ஆசிகள் நம்மை வழிநடத்தட்டும் என்ற எண்ணத்தில் முதல் வேலையாக தரிசான நிலம் சுத்தம் செய்யும் பணிகள் ஆரம்பித்துவிட்டோம். ஆறடுக்கு பணிகள்,

  1. சுத்தம் செய்தல்
  2. நிலத்தை மட்டப்படுத்துதல்3
  3. வேளி இடுதல்
  4. ஆழ்துளை கிணறு அமைத்தல்
  5. சிறுகுடில், மின்சாரம் (இலவசம் சாத்தியமில்லை, வேளாண் வகை சாத்தியங்களை பார்த்துக் கொண்டிருக்கிறோம்)
  6. ஆரம்ப காடு அமைத்தல் (திரு.ஆர்.எஸ்.நாராயணன் அவர்களின் அறிவுரை) மற்றும் வரப்புகள் அமைத்து அதில் தென்னை (போன்ற) மரம் நடுதல்

வருகையில் அனைத்தும் சேர்ந்தே வரும் என்பது போல இதே நேரத்தில்,

பிரபஞ்ச சக்தி, மரபான இல்லம், புவிசார்ந்த இல்லம் என்ற விதை வித்திட்ட உங்கள் எழுத்துக்கள், தொடர்ந்த வாசிப்பகள் வாயிலாகவே மணவல்லமை பெற்று, இந்த மாத இறுதில் முதல் அடி சாத்தியக்கூறுகள் கலத்துரையாடல் திட்டம். ஆம், திரு. பிஜு பாஸ்கரன் அவர்களோடு உரையாடி நேரில் சந்திப்பற்கு முடிவாகியுள்ளது.

இவை இரண்டும் பிரஞ்ச அருளாள் நல்ல விதமாக முடியவேண்டும். தங்களின் ஆசிர்வாதங்கள் வேண்டுகிறேன்.

தங்களின் ஆசிர்வாதங்கள் வேண்டுகிறேன்.

நாராயணன் மெய்யப்பன்

***

அன்புள்ள நாராயணன் மெய்யப்பன்,

சென்னையில் உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. உங்கள் கனவுகள் நனவாகட்டும்

இன்றைய நிலையில் இயற்கைவேளாண்மை ஒரு தொழில் அல்ல. ஒருவகை இலட்சியவாதச் செயல்பாடுதான். அந்நினைவும் உடனிருக்கட்டும்

ஜெ

 

முந்தைய கட்டுரைசிறுகதைகள் கடிதங்கள் – 8
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 29