காந்தி -கடிதங்கள்

nan

வணக்கம்.

நல்லாருக்கீங்களா?  சிங்கப்பூர் படைப்புகளின் விமர்சனங்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

நான் இப்போது பெங்களூரில் இருக்கிறேன்.  முன்பு சென்னையில் இருந்தபோது பனுவலுக்கு நீங்கள் வந்தபோது, என் தேவையில்லாத சிந்தையால் உங்கள் பேச்சைக் கேட்பதைத் தவறவிட்டுவிட்டேன்.  இப்போதும் வாய்ப்பின்மையால் தவறவிட்டுவிட்டேன்.  ஸ்ருதி டி.வி மற்றும் youtube-ன் புண்ணியத்தில் காந்தி தோற்கும் இடங்கள் உரையைக் கேட்டேன்.

உங்களின் எழுத்தும் பேச்சும் அடர்த்தியானதாகவே இருக்கின்றது.  அதை கிரகித்துக் கொள்ள எனக்கு சில மணி நேரங்கள் அல்லது சில நாட்கள் எடுத்துக் கொள்கிறது.  கேட்கும் போது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், வேறு ஏதோ சம்பந்தமில்லா ஒரு வேலையில் இருக்கும் போது, உங்கள் உரையின் வரிகளில் ஒன்று ஞாபக அடுக்கிலிருந்து மேலெழுந்து வரும்.  அப்போது அந்த வரியின் அர்த்தம் முழுமையாகப் புரியும்.  ஒன்று மட்டும் நிச்சயம், அவை என்னில் மாற்றத்தை ஏற்படுத்தத் தவறியதில்லை அல்லது ஏன் அவர் சொல்வதற்கு வேறானதாய் இருக்கக் கூடாது? என்றாவது தோன்றியிருக்கிறது.
இன்று நான் பார்த்த ‘காந்தி தோற்கும் இடங்கள்’ உரையில், ‘இவர்கள் – அவர்கள்’, ‘நம்மவர் – அயலவர்’ என்று நீங்கள் சொன்னது மட்டும் என்னை முழுமையாக ஆக்கிரமித்து இருக்கிறது.  என் அகங்காரத்தை நோக்கி, மென்னகை புரியும் கிழவனை நினைத்துக் கொண்டிருக்கிறேன்.  சில நேரங்களில் கிழவன், ஜீன்ஸ் அணிந்து மீசையில்லாத ஜெயமோகன் போல உருவெளித்தோற்றமாகவும் கற்பிதம் செய்து கொண்டிருக்கிறேன்.  காரணம் உண்டு.  கத்தோலிக்க கிறிஸ்தவப் பள்ளி மற்றும் கல்லூரியில் படித்தேன்.  என் சிந்தனையின் அத்தனை பக்கங்களிலும் அது தன் நல்ல விழுமியங்களால் நிறைந்துவிட்டிருக்கிறது.  எல்லா மருந்திலும் பக்கவிளைவுகள் உண்டல்லவே, காந்தியைப் பற்றிய என் சித்திரம் பெரும் எதிர்மறையாகக் கட்டமைக்கப்படாவிட்டாலும், ‘அவரால பிரையோஜனமில்ல’ என்கிற அளவில் இருந்தது.  அது உடைபட்டது, உங்களின் கட்டுரைகளில்.

உங்களின் கட்டுரை ஒன்றில், அந்த பொக்கைவாய்ச் சிரிப்பைச் சொல்லியிருப்பீர்கள்.  அதுதான் முதன்முதலில், கிழவனைப் பற்றிக் கொஞ்சமேனும் யோசித்துப் பார்க்க வைத்தது.  ஏன் என்றெல்லாம் தெரியவில்லை.  சத்திய சோதனையை வாசிக்காமல் தள்ளிப் போட்டு வருகிறேன்.  சட்டையைக் கழற்ற அஞ்சும், உள்ளிருக்கும் பாம்பாக இருக்கலாம்.  இன்றையா காந்தியா சத்திய சோதனையா எது முதலில் என்று யோசித்ததில், சத்திய சோதனையை முதலில் வாசிக்கலாம் என்றிருக்கிறேன்.

இன்னொன்று சொல்ல மறந்துவிட்டேன்.  நீங்கள் ஒரு தேர்ந்த ஆசிரியர்.  முன்பொருமுறை ஆர்வக்கோளாறில் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன்.  அதில் இதைச் சொல்லியிருந்தேன்.  எழுத்தில் கண்டிப்பான ஆசிரியராகவும், பேச்சில் கனிவான ஆசிரியராகவும் இருக்கிறீர்கள் என்று.  இப்போது இரண்டிலும் கனிவானவராக எனக்குத் தோற்றம் தருகிறீர்கள்.

என்னைப் போல எவ்வளவு பேரைப் பார்த்திருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன், அதனால் மீண்டும் ஒரு முதிராக் கடிதம்.  ஏதேனும் தவறாக இருப்பின் மன்னிப்பு கோருகிறேன்.

நன்றி,
ஜே. இன்பென்ட் அலோசியஸ்

 

அன்புள்ள இன்ஃபெண்ட்,

 

காந்தியைப்பற்றிப் பேசுவதென்பது ஒருவகையில் நம் எல்லைகளைக் கண்டடைவதுதான். அன்றைய என் பேச்சே கூட எவ்வகையில் நாம் காந்தியிடம் தோற்றுக்கொண்டிருக்கிறோம் என்பதைத்தான் சொன்னது. தனிப்பட்ட முறையில் என் கோபத்தை, மூர்க்கத்தை வெல்வதேகூட எனக்குப் பெரும் சவால். அதைத்தான் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருக்கிறேன்

 

ஜெ

 

ஜெ அவர்களுக்கு,

 

என் கல்லூரி நாட்களில் காந்தியின் சுயசரிதம் படித்து அதனால் அவர் மீது பெரிதும் ஈர்க்கப்பட்டவன்  நான்.

 

காந்தி உலகுக்கு எடுத்துக் காட்டிய அகிம்ஸை முறை பற்றி எனக்கு சில கேள்விகள் இருக்கின்றன.

 

ஒரு அகிம்சாவாதி எப்படி இந்த உலகிற்குத் தன்னைக் காட்டிக் கொள்ள வேண்டும் என்பதே இந்தக் கேள்வி. இதற்கு இரண்டு வழிமுறைகள் இருக்கின்றன.

 

1) தன்னை அகிம்சாவாதி என்று பகிரங்கமாகப் பிரகணப்படுத்திக் கொள்ளுதல். மார்ட்டின் லூதர் கிங், மண்டேலா இதற்குச் சிறந்த உதாரணம். தங்கள் அகிம்சை முறையினால் மக்களிடம் கிடைக்கும் தார்மீக ஆதரவே அவர்களுக்குப் பலம்.

 

2) இன்னொரு வழிமுறை, அகிம்சாவாதியாக வெளிப்படையாகத் தன்னைக் காட்டிக் கொள்ளாதது. இந்த நபருக்கு உள்ளுக்குள்  எதிராளிக்குத் தீங்கு செய்யும் நோக்கம் சிறிதும் இருக்காது. ஆனால் வெளியே  நீ என்னிடம் வைத்துக்  கொண்டால் உன்னை உண்டு இல்லை என்று செய்து விடுவேன் என்ற ரீதியில் பயத்தை உண்டாக்குவார். எதிராளியின் அச்சத்தைப் பயன்படுத்தி அவனை பலவீனப்படுத்துவார்.

 

இந்த இரண்டாம் வழிமுறையே நடைமுறை வாழ்க்கைக்குச் சாத்தியமானது என்பது எனது அபிப்பிராயம்.

 

இதற்கு உதாரணமாக அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட்  ரீகனைச்   சொல்லலாம். அவர் சோவியத்தை அணு  ஆயுதத் தாக்குதல் செய்து கூட கம்யூனிசத்தை அழிப்பேன் என்ற ரீதியில் பிரச்சாரம் செய்து தான் ஜனாதிபதி ஆனார்.

 

ஜனாதிபதி ஆனப்  பிறகு அமெரிக்காவின் ஆயத பலத்தைப் பன் மடங்கு பெருக்கி சோவியத்தை கிலி கொள்ளச் செய்தார். இதன் மூலம் சோவியத்துக்குப் பெரிய பொருளாதார நெருக்கடியை உண்டாக்கினார். அதன் பிறகு சோவியத்திடம் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தி இரு தரப்பிலும் அணு ஆயுதங்கள் பெரிதளவு குறைக்க வழி செய்தார். இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அவர் ஒரு முறை கூட நேரடியாக அமெரிக்க ராணுவத்தை சோவியத்தைத் தாக்கப் பயன்படுத்தவில்லை.  ஆஃப்கானிஸ்தானில் கூட மறைமுகமாகத்  தான் சோவியத்துக்கு எதிராக தாலிபனுக்கு ஆதரவு அளித்தார்.

 

எனக்கு ரொனால்ட் ரேகனும் அகிம்சாவாதியாகத் தான் தெரிகிறார். சாணக்கியத்தன்மை கலந்த அகிம்சாவாதியாக. காந்தியின் அகிம்சைமுறையை விட இது நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்புடையதா?

 

இது பற்றி தங்கள் கருத்துக்களை கூறுங்கள்.

 

நன்றி

சத்திஷ்

 

 

அன்புள்ள சதீஷ்,

 

ஒரு கோணத்தில் நீங்கள் சொல்வது சரி. பரமஹம்சர் சொன்னதுபோல கொத்தவேண்டாம், சீறலாமே என்னும் கதைபோலத்தான்

 

ஆனால் உண்மையில் வன்முறையை தவிர்த்தல் என்பது எதிர்வன்முறை அல்லது சமானமான ஆற்றல் மூலம் உருவாகும் செயலின்மை அல்ல\

 

உள்ளப்பூர்வமான அகிம்சை என்பது வன்முறையை நம்பாமலிருத்தலே. அது மிகமிகக் கடினம். நான் அதை நம்புகிறேன். என்னால் இயல்வதில்லை

 

ஜெ

 

ப்ரிய ஜெ

 

வணக்கம்.

 

இந்த வருட  விடுமுறையின் போது தங்களை சந்திக்க நினைத்தேன்.ஆனால் தங்கள் சிங்கப்பூர் பயணத்தால் அது நிறைவேறவில்லை.

 

காடு வாசித்து முடித்தேன். அது பற்றி தனியே தங்களுக்கு எழுத வேண்டும்.

 

என் நட்பு  குழுமத்தில் முன்னரே குறுந்தொகை, கபிலர் படித்து வந்தேன்.

 

காடு-அய்யர் வழியே அறிந்த கபிலன் இன்னும் ப்ரியமானவன் ஆனான். அதற்கு என் நன்றிகள்.

 

ஈரோடு புத்தக விழாவில் குறுந்தொகை -திரு ராகவ ஐயங்கார் உரை வாங்கி படிக்க ஆரம்பித்துள்ளேன்.

 

 

Convey My kind regards to Family.

 

Regards,

Chandru

Doha

 

அன்புள்ள சந்துரு

 

நீண்டநாட்களாயிற்று கடிதம் கண்டு. இப்போது பதில்

 

இன்றைய காந்தி இப்போதும் அச்சில் உள்ளது என்றுதான் நினைக்கிறேன். நான் பார்த்து நீண்டநாட்களாகின்றன.

 

குறுந்தொகை நூல் எதுவானாலும் உரையைக்கொண்டு கவிதையை மறைக்காததாக இருக்கவேண்டும்

 

ஜெ

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 4
அடுத்த கட்டுரைவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 8