அன்புக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
உங்களின் அறம் சிறுகதை படித்தேன். உங்களின் வாசகனானேன். முதலில் என்னைப்பற்றி ஒரு சிறுகுறிப்பு சொல்லிவிடுகிறேன். என்னைவிட நீங்கள் 2 மாதங்கள் மூத்தவர். உங்களைப்போலவே என்னையும் ஆளாக்கியது எங்கள் ஊர் லைப்ரரிதான். டால்ஸ்டாய், ராகுலை சாங்கிருத்தியாயன், பெர்ட்ரண்ட் ரஸ்ஸல், ஜேகே, ஓஷோ மற்றும் பலர்தான் என்னையும் என் மனசாட்சியையும் உருவாக்கியவர்கள்.
ஆனால் நான் உங்களைப்போல அதிர்ஷ்டசாலி அல்லன். அதில் எனக்கு ஒரு வருத்தமும் இல்லை என்று சொல்லலாம். என்னுடைய கவலை எல்லாம் அடுத்த தலைமுறையைப் பற்றித்தான். எனக்கும் புத்தகம் எழுதவேண்டும் என்ற ஆசை மிகவே உண்டு. சமுதாயத்திற்கு எதாவது செய்யவேண்டும் என்ற ஆவல் நிறைய இருக்கிறது.
உங்களின் வீடியோ சிலவற்றை youtube பார்த்தேன். மிகவும் மனதிற்கு சந்தோஷமாக இருக்கிறது. என்னுடைய வடிவமாக நீங்கள் இருக்கிறீர்கள. என்றாவது ஆண்டவன் அருள இருந்தால் சந்திக்கலாம்.
நன்றி,
வணக்கம்.
தாமோதரன் கே
***
அன்புள்ள தாமோதரன்,
எழுதுவது பிறருக்காக இல்லை என்றாலும் தனக்கே நல்லது. அது நம்மை தொகுத்துக்கொள்ள, பயனுள்ளவற்றில் ஈடுபடுகிறோம் என நிறைவடைய உதவக்கூடியது
தொடர்ச்சியாக எழுதவும். எழுதுவதற்கிணையாகவே வாசிக்கவும். ஒவ்வொரு எழுத்தினூடாகவும் மேலே சென்றுகொண்டே இருக்கவேண்டும்.
ஜெ
***
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நான் வழக்கம் போல் உங்களை தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். சமீபமாக இருமுகன் படம் பார்த்தேன். படத்தில் தீயவர்கள் அனைவரும் Adrenaline உட்கொண்டு சிறுது நேரம் உக்கிரமாக சண்டையிட்டு பின் நினைவிழப்பார்கள். அதைப்பார்த்ததும் உங்களின் “உற்று நோக்கும் பறவை” சிறுகதையில் துவாத்மர்கள் பற்றி எழுதியது ஞாபகம் வர அதை மறுமுறை படித்துப் பார்க்க உங்கள் தளத்தில் தேடினேன். அந்த கதையின் தலைப்பு “த்வாத்மர்கள்” என்று என் மூளையில் எப்படியோ பதிந்துவிட்டிருக்க அந்த எழுத்துப் பிழையான வார்த்தைக் கொண்டு உங்கள் தளத்தில் தேட கிடைக்கவில்லை. பின் அந்த கதையில் கிளி பற்றி ஒரு வாசகம் வரும் என்று நினைவிற்கு வர கிளி என்று தேடி கண்டுபிடித்தேன். மறுமுறை “உற்று நோக்கும் பறவை” படித்தேன்.
உண்மையில் மறுமுறை அதை கண்டுபிடித்து படிக்கும் வரை அது ஒரு கட்டுரை என்றே நினைத்திருந்தேன். மறுமுறை படித்த போது தான் சிறுகதை என்பதை அறிந்தேன். அது ஏன் சிறுகதை என்று எனக்கு பிடிபடவில்லை. உடனே உங்களிடம் கடிதம் எழுத அமர்ந்தேன். பின் உங்கள் தளத்திலேயே சிறுகதைகள் பற்றி எழுதி இருப்பீர்கள் அதை தேடாமல் கடிதம் எழுதுவது தவறு என்று புரிந்துகொண்டு சிறுகதை என்னும் சுட்டி கொண்டு தேடி படிக்க ஆரம்பித்தேன். அது நான் படிக்காத பல கதைகளுக்கு எடுத்துச்செல்ல எதற்காக தேடினேன் என்பதை மறந்து அடுத்தடுத்த கதைகள் படிக்க ஆரம்பித்துவிட்டேன்.
முதிராக்குரல்கள் கட்டுரையில் சிறுகதை இலக்கணம் பற்றி நீங்கள் எழுதியதை படித்தவுடன் மறுபடியும் உற்று நோக்கும் பறவை வாசித்தேன். “உற்று நோக்கும் பறவையில்” ஒரு உண்மை வரலாற்று நிகழ்வையும் அதை நோக்கிய உங்கள் தேடலையும் எழுதியிருந்தீர்கள். அது எப்படி சிறுகதையாகிறது என்று விளக்க வேண்டுகிறேன். அறம் கதைகள் படித்த போதே எனக்கு அந்த சந்தேகம் எழுந்தது. ஆனால் அறம் கதைகளில் உண்மை மனிதர்களின் வாழ்கையினூடே நீங்கள் ஒரு புனைவை பின்னியிருப்பது தெரிந்ததால் அது கதையாகியது என்று எண்ணிக்கொண்டேன். ஆனால் உற்று நோக்கும் பறவை ஏன் சிறுகதை சட்டகத்திற்குள் பொருந்துகிறது என்று விளக்க வேண்டுகிறேன்.
பின்குறிப்பு: நான் ஒரு புதிய வாசகன். நீங்கள் பலமுறை பலவற்றை பற்றி எழுதியதை அறியாமல் சில கேள்விகள் கேட்கலாம். உங்கள் நேரம் மிக பொன்னானது என்பதையும் அறிவேன். என் கேள்விகள் மிகவும் தொடக்க நிலையில் இருந்தால் மன்னிக்கவும்.
நன்றியுடன்,
முருகன்.
***
அன்புள்ள முருகன்
சிறுகதைக்கு என சட்டகம் ஏதும் இல்லை. அதற்குத்தேவை ஒர் இயல்பு மட்டுமே, சொல்லப்படுவதற்கு மேலாக வாசகன் செல்லும் வழித்திறப்பு. கதை முடிந்தபின்னரும் தொடரும், புதிதாகத் திறக்கும் இயல்பு
அது அந்தக்கதையில் உள்ளது என்றே நினைக்கிறேன். அது ஒரு வரலாற்றுக்குறிப்பு போல தன்னை பாவித்துக்கொள்கிறது. அது கதையின் உத்தி. அவ்வளவுதான்
ஜெ