Tinnitus

 

அன்பு ஜெயமோகன்,

முதலில், என்னுடைய கடிதத்தைத் தங்கள் தளத்தில் வெளியிட்டதற்கு நன்றிச்செண்டு. அதன் மூலம் சில புதிய நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். வழக்கமாக என் மகன் உறங்கிய பிறகே என் வாசிப்பு தொடங்கும். அதற்குள் உங்களுடைய அடுத்த நாளைக்கான கட்டுரைகள் வெளியாகியிருக்கும். ஆனால் அன்றைக்கு நான் உங்கள் தளத்துக்கு வருவதற்கு முன்பே அமெரிக்காவிலிருக்கும் என் கல்லூரி நண்பனிடமிருந்து குறுஞ்செய்தி வந்துவிட்டது – “பெல்ஜியத்திலிருந்து… என்கிற தலைப்பை பார்த்தவுடன் நீயாக இருக்குமோ என்று நினைத்தேன். உன்னுடைய கடிதமே தான்.” வேறு சில நண்பர்களும், “நீ ஜெயமோகனுடன் தொடர்பிலிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.” என்று எழுதியிருந்தார்கள்.

அப்புறம், சமீபத்திய விமர்சன சர்ச்சைகளைப் பற்றியெல்லாம் நான் எதுவும் சொல்லப்போவதில்லை. இதையெல்லாம் நீங்கள் கண்டுகொள்ளாமல் எளிதாகக் கடந்து சென்றுவிடுவீர்கள். கடந்த மாதம் விடுமுறைக்கு இந்தியா வந்து திரும்பிய அன்று என்னுடைய எண்ணங்களை நண்பர்களிடம் இவ்வாறு பகிர்ந்திருந்தேன்.

“….விமர்சனங்களுக்கு மதிப்பளித்துக் கூர்ந்து கவனியுங்கள். நீங்கள் உயர்ந்தவராகவே இருக்கலாம். ஆனால் விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட புனிதம் என்கின்ற ஒன்று இந்தப் பேரண்டத்தில் இல்லவே இல்லை. குறைந்த பட்சம், சுய விமர்சனம், சுய எள்ளலாவது செய்து கொள்ளுங்கள். கண்ணாடி முன்பு நின்று நீங்கள் செய்வதையெல்லாம் ஒரு நாளாவது கவனியுங்கள். உங்கள் மனதை ஒரு மணிநேரமாவது உற்று நோக்குங்கள். உங்களை விட அதிபெரும் கோமாளி இந்த உலகில் இல்லை என்பது உங்களுக்கு விளங்கும். என்னை விட என்னை யாரும் அதிகமாகப் பகடி செய்தது கிடையாது என்பதை என்னால் கர்வத்துடன் சொல்லிக்கொள்ள முடியும்.

சான்றோர்களைச் சந்தியுங்கள். அவர்களுடனான சந்திப்பு நம் அறிவைப் பெருக்குவது மட்டுமல்ல, நூல்களைப் போன்றே நம் பார்வையை மாற்றும், நம்மை இன்னும் வலிமையானவர்களாக ஆக்கும். நம்மைவிட அறிவில் குறைந்தவர்களை சந்திக்கும் போது, அவர்களிடம் பேசி அவர்களையும் மேலே கொண்டு வர முயலுங்கள். நமக்கு எதிர் கருத்து உடையவர்களிடம் விவாதம் செய்யுங்கள். விவாதத்தில் ஒளி பிறக்கும். நமக்கு மேலான அறிவு படைத்தவர்களிடம் அடக்கத்தைக் கடைபிடியுங்கள். அமைதியாக கவனியுங்கள். மூடர்கள் உங்களிடம் அறிவு போதிக்கும்போதும் அதே அமைதியைக் கடைபிடியுங்கள். ஆனால் கவனிக்காதீர்கள்……”

என்னைச் சுற்றி நடக்கும் இதுபோன்ற விஷயங்களை கவனிக்காமல் அமைதியாக இருந்துவிடுவதே எனக்குப் பிடிக்கிறது. இருந்தாலும் அந்தக் கடைசி வரி என்னை அசைத்துவிட்டது. வள்ளலாருடைய ‘வன்பெரு நெருப்பினைப் புன்புழுப் பற்றுமோ…’ பாடல்தான் உடனே நினைவுக்கு வந்தது.

நீண்ட காலமாக வாசிப்பு பழக்கம் இருந்தாலும் உங்கள் மூலமாகவும், எஸ்.ரா போன்ற துரோணர்கள் மூலமாகவும்தான் நிறைய படைப்பாளிகளையும், படைப்புகளையும் பற்றி அறிந்துகொண்டேன். திலீப்குமார் என்று ஒரு எழுத்தாளர் இருக்கிறார் என்று உங்கள் தளம் மூலம் அறிந்துகொண்ட பிறகே, அவருடைய சிறுகதைகளை வாசித்தேன். இன்றைக்கு திலீப்குமாருக்கு கடிதம் எழுதினால் அடுத்த இரண்டொரு மணிநேரங்களில் பதில் வந்துவிடும். என் தந்தைக்கு நிகராக நான் வைத்துப்பார்க்கும் ஒரு மனிதர் அவர்.

அ.முத்துலிங்கம் அவர்கள் ஆரம்ப காலத்தில் எழுதிய சிறுகதையொன்று கல்கியில் வெளியாகி பரிசைப் பெற்றதைப் பற்றி எழுதிய குறிப்பொன்று நினைவுக்கு வருகிறது. எஸ்.பொ அவர்கள் அந்தக் கதையை ஒரு எழுத்தாளர் கூட்டத்தில் அலசி ஆராய்ந்து, இறுதியில் கிழித்து எறிந்திருக்கிறார். இருபத்தைந்து வருடங்கள் கழித்து அதே எஸ்.பொ அவர்களின் மித்ர பதிப்பகம் அவருடைய சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டது என்று குறிப்பிட்டிருந்தார். நல்ல வேளை நீங்கள் கிழித்தெல்லாம் எரியவில்லை. அதை செய்திருந்தால் நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும். அ.முத்துலிங்கம் அவர்களையும் நான் உங்கள் மூலமாகவே அறிந்துகொண்டேன்.

நான் ஏற்கனவே எழுதியிருந்தது போல் எனக்கு நம்மைப் பற்றி உங்களிடம் பேசுவதற்கு நிறைய இருக்கிறது. திலீப்குமார் போன்று என்னைச் சுற்றி இன்றைக்கு இருக்கும் பல புள்ளிகளையும் என்னையும் இணைக்கும் இழையாக நீங்கள் இருந்திருக்கிறீர்கள். இதையெல்லாம் செய்துவிட்டு, ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விட்டு, இதுபோன்ற எதிர்வினைகளையும் வாங்கிக்கொள்ளவேண்டியிருக்கிறது. ஒருவேளை நான் எழுத்தாளராகி நிறைய புத்தகங்கள் எல்லாம் எழுதி, ;-) அதற்கு உங்களுடைய விமர்சனம் இப்படி இருக்குமானால், என்னுடைய ஆகச் சிறந்த படைப்பு ஒன்றை உருவாக்கிவிட்டே உங்களை வந்து சந்திப்பேன். அதை எதிர்பார்த்துத்தானே விமர்சனங்கள் செதுக்கப்படுகின்றன. தேவையற்றவை விழுந்தால்தானே சிலையொன்று உருவாகும். அது வேண்டாம் என்றால் நான் கல்லாக இருக்கவே விரும்புகிறேன் என்றாகிவிடும்.

எதுவும் சொல்லப்போவதில்லை என்று கூறிவிட்டு எதையெதையோ. நான் முக்கியமாக சொல்ல வந்ததையே மறந்துவிட்டு.

நேரம் கிடைக்கும்போது இந்தக் காணொளியை எனக்காகப் பார்க்கவும்.

‘கேபி ஓல்ட்ஹவுஸ்’ என்கிற இந்தப் பெண்மணி ‘டின்னிடஸ்’ பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர். டின்னிடஸ் பற்றிய விழிப்புணர்வு அவ்வளவாக இல்லை. நான் முதன்முறையாக இந்தப் பிரச்சினையைப் பற்றி என் நண்பர்களிடம் கூறிய போது, யாரும் அதைப் பெரிதாகவே எடுத்துக்கொள்ளவில்லை. சிலர் சிரித்துக்கொண்டே கேட்கவும் செய்தார்கள்.

டின்னிடஸ் பற்றி நீங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இருபத்து நான்கு மணிநேரமும் கூடவே வரும் அந்தச் சத்தத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அந்தப் பெண் இறுதியில் சாகவே தீர்மானித்துவிட்டார். அவருக்கு இரண்டு குழந்தைகள். தான் ஏன் செத்தே ஆகவேண்டும் என்று அந்தக் குழந்தைகளுக்கு விளக்கிவிட்டு இறந்திருக்கிறார். இதையெல்லாம் கேட்ட போது மிகவும் வருத்தமாக இருந்தது. அந்தப் பெண்ணின் வலியை என்னைத் தவிர வேறு யாரும் புரிந்துகொள்ள முடியுமா என்று தெரியவில்லை. ஒரே வித்தியாசம். அவர் சாவைத் தேர்ந்தெடுத்துவிட்டார். நான் வாழ்வைத் தேர்ந்தெடுத்துவிட்டேன்.

‘பேய்க்கும் நோய்க்கும் ராத்திரி என்றாலே கொண்டாட்டம்’ என்று ஒரு திரைப்படத்தில் நாகேஷ் போகிற போக்கில் வசனம் பேசியிருப்பார். எனக்கு பேய் பற்றிய பயமெல்லாம் இல்லை. ஆனால் இந்த டின்னிடஸ் விஷயத்தில் இது முழுக்க முழுக்க உண்மை. அப்படிப் பல இரவுகள் என் தலைக்குள் கொண்டாடித் திரிந்த அரக்கன் டின்னிடஸ். அதனுடனான என் அனுபவங்களை நிறைய விவரமாக உங்களைச் சந்திக்கும் நேர்ந்தால் கூறுகிறேன். தூக்கம் வரும்போது தூங்க முடியாது என்பது போன்ற கொடுமை எதுவுமே இருக்க முடியாது. எனக்கு கேன்சர் பற்றியெல்லாம் தெரியாது. ஆனால் இந்தச் சத்தத்தோடு போடும் யுத்தத்தை விட கொடுமையான வலி வேறொன்று இருக்கமுடியும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. என்னுடைய வலியைப் புரிந்துகொள்ள விரும்புபவர்கள் இந்தக் காணொளியைப் பார்த்தாலே போதும்.

எப்படியோ டின்னிடஸ் எனக்கு ஏற்படுத்திய கொடுங்கனவில் இருந்து என்னை மீட்டு வெளியே கொண்டுவந்துவிட்டேன். டின்னிட்டஸுக்குப் பல காரணங்கள். எனக்கு வந்திருப்பதற்கு என்ன காரணம் என்பதைக் கண்டுபிடிக்க பலமுறை MRI ஸ்கேன்கள் எடுத்தாகிவிட்டது. எதையெதையோவெல்லாம் முயன்று பார்த்துவிட்டார்கள் இங்குள்ள மருத்துவர்கள். எல்லாம் இயல்பாகவே இருக்கிறது; நலமுடன் இருக்கிறேன் என்கிறார்கள்.

இங்கிருக்கும் மருத்துவ வசதிகளைப் பற்றி இந்தக் குறையும் சொல்லமுடியாது. ஆனால், மருத்துவர்கள் மீது எனக்கு நிறைய விமர்சனங்கள் இருக்கிறது. திறன்மிகுந்தவர்கள். அதில் எதுவும் சொல்வதற்கில்லை. ஆனால், பல சமயம் எந்திரங்களைப் போன்று செயல்படுகிறார்கள். மருத்துவர்கள் மட்டுமல்ல, பெரும்பாலான மற்றவர்களும்தான். ஐரோப்பியர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், நம்மிடமிருந்து இவர்கள் கற்றுக்கொள்வதற்கு அதைவிட மிக மிக மிக அதிகமாகவே இருக்கிறது. Especially, human aspects.

டின்னிடஸ் பிரச்சினையில் உழன்று கொண்டிருந்தபோது, இந்தியாவிலுள்ள என்னுடைய குடும்ப மருத்துவரை அழைத்தேன்.. அவரோ, ‘அதெல்லாம் ஒன்னுமில்லடா..’ என்று கூறியபோதே என் பாதி பிரச்சினை தீர்ந்துவிட்டதுபோல் இருந்தது. என் தந்தையார் ஒரு யோகா தெரபிஸ்டும் என்பதால், அவரோடு சேர்ந்து ஸ்கைப் மூலம் தொடர்ந்து யோகா செய்து வந்தேன். தீவிர உணவுக்கட்டுப்பாடு. எப்போதும் எதையாவது செய்துகொண்டு சுறுசுறுப்பாக இருப்பது மட்டுமே ஒரே வழி என்று புரிந்தது.

டின்னிட்ஸால் பாதிக்கப்பட்ட நண்பர்களிடம் இருக்கும் பிரச்சினையே அவர்கள் இதற்கான தீர்வை தேடிக்கொண்டே இருக்கிறார்கள். அமைதி வேண்டுமென்கிறார்கள். இவர்கள் சும்மாவே அமைதி விரும்பிகள். அர்த்தமற்ற அமைதியின் மீது அப்படி என்னதான் காதலோ? ஆனால் அவர்கள் வேண்டும் அமைதிக்கு நிச்சயம் சாத்தியமில்லை என்பதே உண்மை.

எனவேதான் அந்தச் சத்தத்தையே எனக்கு சாதகமாக்கிக்கொண்டேன். நண்பனாக்கிக் கொண்டேன். அதை ரசிக்க ஆரம்பித்து விட்டேன். அதன் மீதே தியானம் செய்ய ஆரம்பித்துவிட்டேன். இப்போது அதைக் கேட்காமலாக்கிவிட்டேன். அது இருக்கிறது. ஆனால் இல்லை. :-) ஏனெனில் கண்டுகொள்வதில்லை. மனதை வலிமையாக்கிக்கொள்வது மட்டுமே ஒரே வழி.

ஆனால் இவர்களுக்கு அதை எப்படி புரிய வைப்பது என்று தெரியவில்லை. தற்கொலை செய்துகொள்வதைவிட வேறு வழியே இல்லை என்று சொல்லிக்கொண்டிருக்கும் நண்பன் ஒருவனை ‘ஒருமுறையாவது இந்தியாவிலுள்ள ஏதேனும் ஒரு நகருக்குச் சென்று வா’ என்று தீர்வு சொன்னேன்.

இந்திய நகரங்களின் இரைச்சல் ஒருவேளை இதற்கு ஒரு தீர்வாக அமைந்துவிடுமல்லவா? ஆனால் அதற்கும் ஆபத்து வந்துவிட்டது. எனது நண்பனின் சகோதரி டெல்லி மாநகரிலேயே இந்தப் பிரச்சினையில் உழன்று கொண்டிருக்கிறார். இரண்டு வாரங்களுக்கு முன்பு அந்தப் பெண்ணிடம் ஒரு மணிநேரம் பேசிக்கொண்டிருந்தேன். அழுதுவிட்டாள்.

இங்கிருக்கும் நண்பர்களும் அப்படித்தான். நான் அதிலிருந்து மீண்டுவந்துவிட்டதால் என்னை இவர்கள் கடவுளாகவே பார்க்கிறார்கள். எனக்கு என்னசெய்வதென்றே தெரியவில்லை. என்னால் முடிந்த அத்தனையும் செய்துவருகிறேன். அதிலும் ஒரு நண்பருக்கு இரண்டு காதுகளிலும் டின்னிடஸ். யாரோ ஒருவர் 24 மணிநேரமும் மரம் வெட்டிக்கொண்டே இருப்பது போன்ற சத்தம் கேட்கிறதாம்.

ஒருபுறம் சாகத்துடிக்கும் நண்பர். இன்னொருபுறம் அவரது முடிவு சரி என்று ஊக்கப்படுத்தும் வகையில் வந்திருக்கும் கேபியின் Euthanasia முடிவைப் பற்றிய இந்தக் காணொளி. இந்த நேர்காணலை அந்தப் பெண்மணி யுதனேசியா (கருணைக்கொலை என்கிற வார்த்தை எனக்கு பொருத்தமாக இருப்பதாகத் தெரியவில்லை) செய்துகொள்வதற்கு சில வாரங்களுக்கு முன்புதான் எடுத்துள்ளார்கள். இந்த ஆவணப்படம் வெளிவருவதற்கு முன்பே அவர் இறந்துவிட்டார்.

நான் வாழும் பெல்ஜியம், நெதர்லாந்து நாடுகளில் யுதனேசியாவை சட்டம் அனுமதிக்கிறது. உண்மையில் யுதனேசியா பற்றிய என்னுடைய பார்வையே இந்தச் செய்தியைப் பார்த்தவுடன் மாறிவிட்டது. ஒருவேளை நான் அவரிடம் பேசி இருக்கலாமோ? அது அவருக்கு உதவியிருக்குமோ? என்றெல்லாம் ஏதேதோ எண்ணங்கள் வந்து விழுகிறது. உண்மையில் இதைப் பார்த்த அன்று இரவு எனக்குத் தூக்கமே வரவில்லை.

எல்லோரிடமும் கூறி வருகிறேன். டின்னிடஸால் பாதிக்கப்பட்ட நண்பர்கள் யாரேனும் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள் என்று எல்லோரிடமும் வேண்டிக்கொள்கிறேன். இயற்பியலாளர் ஸ்டிபன் ஹாக்கிங் பற்றி உங்களுக்குத் சொல்ல வேண்டியதில்லை. அவரைப் பற்றியெல்லாம் கூறி வருகிறேன்.

இருபத்தோரு வயதில் அவருக்கு ‘Motor Neurone Disease’ வந்து உடல் முழுவதும் செயலிழந்து போய், அவர் இன்னும் இரண்டு வருடங்கள்தான் உயிர் வாழ்வார் என்று மருத்துவர்கள் கூறிக் கைவிரித்துவிட்டனர். ஆனால், ஸ்டிபன் ஹாக்கிங் ஒரு நம்பிக்கைவாதி. தன்னம்பிக்கையின் உச்சம் எது என்று யாராவது கேட்டால், அவருடைய வாழ்க்கையைத்தான் காட்டுவேன்.

இன்றைக்கு அவருக்கு வயது எழுபத்து நான்கு. அவரால் பேச முடியாது, நடக்க முடியாது; அவரால் அவரது உடலைக்கொண்டு எதையும் செய்யமுடியாது. அவரது வலது பக்க கன்னத்தின் தசைகளின் ஒரு பகுதி மட்டும் சற்று செயல்படும். அதன் மூலமாக அவர் தட்டச்சு செய்வதை, அவருடைய சக்கர நாற்காலியோடு இணைக்கப்பட்டு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கணிப்பொறி மற்றவர்களிடம் வாசித்துக் காண்பிக்கும். அவரே அவருக்குப் பிடித்தமான குரலைத் தெரிவு செய்துள்ளார். இந்தக் குரல்தான் அவருக்கும் உலகத்துக்குமான ஒரே தொடர்பு. ஒருமுறை அவரிடம் ‘எப்படி இவ்வளவு நாள் இதுபோன்ற உடலோடு வாழ்ந்து வருகிறீர்கள்’ என்று கேட்டபோது அவர் கூறியது ‘While there is life, there is hope’. எனக்கு இந்த வரிகள்தான் எல்லாமாயும் இருந்திருக்கிறது.

ஹாக்கிங்கால் முடிந்திருக்கிறது. நானோ இப்போது டின்னிடஸ் நண்பனுடன் கொண்டாட்டமான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இப்படி இருக்க இந்த யுதனேசியா எல்லாம் தேவையா? அதைப்பற்றி உங்கள் கருத்துக்களை அறிய விரும்புகிறேன்.

நீண்ட கடிதத்துக்கு மன்னிக்கவும்.

குழந்தைகளுக்கு என் அன்பு.

என்றென்றும் அன்புடன்,

மாதவன் இளங்கோ

பெல்ஜியம்

[email protected]

முந்தைய கட்டுரைபாப் டிலன் , நோபல், இ.பா- சில எண்ணங்கள்
அடுத்த கட்டுரைகல்யாண்ஜி கவிதைகள் பாடலாக