வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 4

 

1a

அன்புள்ள ஜெயமோகன்,

வணக்கம். நலம்தானே?

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது அளித்திருப்பதில் எனக்கு தனிப்பட்ட முறையில் பெரும் மகிழ்ச்சி. தமிழில் எழுதும் மற்ற எழுத்தாளர்கள் எல்லோரும் எனக்கு வெறும் எழுத்தாளர்கள் மட்டுமே. வண்ணதாசன் ஒருவர் மட்டும் என்னில் ஒரு பகுதி. அல்லது, சரியாகச்சொன்னால், அவரில் நான் ஒரு பகுதி. எனக்காகவும் சேர்த்து உங்களுக்கு நன்றியும் வணக்கங்களும்

அன்புடன்

ஜி.குப்புசாமி

***

அன்புள்ள ஜெ

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது அளிப்பதற்காக மனமார்ந்த நன்றி. சென்ற இரண்டு ஆண்டுகளாக நான் இதற்காகவே காத்திருந்தேன். வெளிநாட்டிலிருந்து என்னால் வந்துசேர முடியாது. ஆனால் இங்கிருந்தே மனம் நிறைந்து வாழ்த்தமுடியும்.

நான் வண்ணதாசனை வாசித்தது என் தோழியின் அறிமுகம் வழியாகத்தான். அவள் வண்ணதாசனின் பெரிய ரசிகை. அவளுக்காகத்தான் வாசிக்க ஆரம்பித்தேன். அவள் என்னை விட்டு விலகிப்போய்விட்டாள். வேறுவழியில்லாத ஒரு நிலைமை. இப்போது அவளும் இந்தச்செய்தியை எங்கிருந்தோ எண்ணிக்கொண்டிருப்பாள் என நினைக்கிறேன். வண்ணதாசன் அவளுடன் இணைந்தே என் மனதுக்குள் வந்துகொண்டிருக்கிறார்.

வண்ணதாசன் எனக்கு எதை அளித்தார் என்று நானே கேட்டுக்கொள்வேன். நான் இபப்டிச் சொல்லப்பார்க்கிறேன். நான் எட்டாண்டுக்காலம் வெளிநாட்டில் வாழ்ந்தேன். பிறகு ஒருமுறை சொந்த ஊருக்குப் போனேன். புதுக்கோட்டைப் பக்கம் போகும்போது ஒரு வீட்டில் சோறு பொங்கும் மணம் வந்தது. அந்த மணம் அதுவரை அப்படி அழகாக இருந்தது இல்லை. என் வாழ்க்கையிலேயே அப்படி ஒரு மணத்தை அறிந்தது இல்லை அதேபோன்ற ஒரு அனுபவம்தான் வண்ணதாசனை வாசிப்பது

நாம் அறிந்திருக்கும் விஷயங்கள்தான். ஆனால் நாம் அதை ரசிக்க ஆரம்பிக்கும்போது வண்ணதாசனை அணுக ஆரம்பிக்கிறோம். ஒரு மாமரம் பூத்திருப்பதைக் கண்டால் வண்ணதாசன் இதைப்பார்க்கவேண்டும் என்று நினைக்கிறோமே அதுதான் அவருடைய வெற்றி

தமிழிலக்கியத்தின் முக்கியமான சுவை என்பது வண்ணதாசனின் எழுத்து. உங்களுக்கு வாழ்த்துக்கள் ஜெ. அவரை இன்னும் பிந்திப்போகாமல் கௌரவித்திருக்கிறீர்கள்

சிவப்பிரசாத்

***

அன்புள்ள ஜெ

வண்ணதாசனுக்கு விருது அளிப்பது பற்றிய செய்தி கண்டேன். வாழ்த்துக்கள். எனக்கு உங்கள் எழுத்துக்கள் பிடிக்காது. நான் அதை முன்பு எழுதியிருக்கிறேன். உங்கள் கருத்துக்களிலும் உடன்பாடு கிடையாது. வண்ணதாசன் வழியாக நாம் உரையாடிக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவருக்காக நான் உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்

சங்கர்

***

அன்புள்ள ஜெமோ

வண்ணதாசனுக்கு விருது என்னும் செய்தி மகிழ்ச்சியை அளித்தது. எனக்கு உங்களையோ உங்கள் எழுத்துக்களையோ கொஞ்சம்கூட பிடிக்காது. நாம் ஒரு கசப்பான கடிதப்பரிமாற்றமும் செய்திருக்கிறோம். உங்கள் எழுத்திலுள்ள திமிர் என்னைப் போன்ற வாசகனுக்கு பிடிப்பதில்லை.

வண்ணதாசன் எழுத்தில் உள்ள பணிவு அரவணைப்பது போல இருக்கிறது. அவர் நம்மிடம் மென்மையாக கூடவந்தபடி பேசிக் கொண்டிருக்கிறார். அவர்குரல் நடுங்கிக்கொண்டே மார்கழிக்குளிரில் இருட்டுக்குள் பேசிக்கொண்டு வரும் மூத்தமாமா போன்ற ஒரு குரல். அந்த மென்மைக்காகவே அவரை விரும்புகிறேன்

சரவணன் கதிர்வேல்

***

அன்புள்ள ஜெ,

வண்ணதாசன் கதைகளைப்பற்றி எழுதியிருந்தீர்கள். 80 வயதான என் அப்பா சொன்னார். அவர் அப்போதுதான் வண்ணதாசனை வாசித்தார். ‘‘காடராக்ட் பண்ணிண்டு புதிசா உலகத்தைப்பாக்கிறாப்ல இருக்குடா’’ என்று. அதுதான் வண்ணதாசன் அளிக்கும் அனுபவம்

விருதுக்காக வண்ணதாசனுக்கு வாழ்த்துக்கள்

சாயி மகேஷ்

 

 

Vishnupuram award for Vannadasan

 

Vishnupuram for Vannadasan

 

 

====================================================

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 1

 

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 2

 

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது கடிதங்கள் 3

 

முந்தைய கட்டுரைஒன்றென்றாவது…
அடுத்த கட்டுரைபாப் டிலன் , நோபல், இ.பா- சில எண்ணங்கள்