அழுக்குநீக்கிகள்: கடிதம்

/முழுமையாகவே டிடர்ஜெண்டுகளை தடைசெய்ய முடியுமா? எந்த நாடாவது செய்துள்ளதா?//

டிடர்ஜண்டுகளை தடை செய்தால் துணி துவைக்க முடியாது. எனவே டிடர்ஜண்டுகளை தடை செய்ய முடியாது. டிடர்ஜண்டுகளில் பாஸ்பேட்டுகள் சேர்க்கக் கூடாது என்று தடை விதிக்கலாம். அமெரிக்காவில் துணி துவைக்கும் டிடர்ஜண்டுகளில் பாஸ்பேட் சேர்க்க மாட்டோம் என்று அங்குள்ள டிடர்ஜண்டு உற்பத்தியாளர்கள் 1993 முதலே உறுதியளித்துள்ளனராம். இந்த ஆண்டு முதல் பாத்திரம் துலக்கும் டிடர்ஜண்டுகளில் பாஸ்பேட் சேர்க்கக் கூடாது என்று 15 அமெரிக்க மாகாணங்கள் தடை கொண்டு வந்துள்ளனராம். ஐரோப்பாவிலும் இந்தத் தடைகள் நிலவலாம். நம்மூர் டிடர்ஜண்டுகளில் பாஸ்பேட் சேர்க்கிறார்களா, இல்லையா என்பது தெரியவில்லை.

ஆறுகளிலும், குளங்களிலும், ஏரிகளிலும், நிலத்தடி நீரிலும் சேரும் கழிவு நீரில் டிடர்ஜண்டுகள் மூலமாக எவ்வளவு பாஸ்பேட் போய்ச் சேருகிறது என்று தெரியவில்லை. மேலை நாடுகளில் வீடுகளிலிருந்து வெளியாகும் கழிவு நீரில் இருக்கும் பாஸ்பேட்டில் 30 முதல் 60 சதவிகிதம் வரை டிடர்ஜண்டுகளில் உள்ள பாஸ்பேட்டாக இருந்ததாகவும், 30 சதவிகிதம் வரை இருந்தால் பாதகமில்லை என்றும், அதற்கு மேலே போனால் டிடர்ஜண்ட் பாஸ்பேட்டுகளை தடை செய்ய வேண்டும் என்று சொல்கின்ற 1985-காலத்திய ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்று கண்ணில் பட்டது.

செப்டிக் டேங்குகளிலிருந்து வெளியே கசியும் நீர் கூட பாஸ்பேட் மிகுந்தது. அதுவும் நிலத்தடி நீர் மூலமாகவும், நேரடியாகவும் நீர்நிலைகளை பாதிக்கிறது என்றும் படித்தேன்.

மிகப் பரந்த அளவில் தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் நமது நீராதாரம் மோசமாகப் பாதிக்கப்படுவது சர்வ நிச்சயமாகத் தோன்றுகிறது.

ஜெயமோகன், நீங்கள் ஏற்படுத்தும் விழிப்புணர்வுக்கு நன்றி.

விக்டர் சுரேஷ்

அன்புள்ள விக்டர்

நன்றி.

அழுக்குநீக்கிகள் இன்றியமையாதவை என்று எனக்குப்படவில்லை. சாதாரண காரசோப்புகளே போதுமானவை. இன்றைய உலகில் பெரும்பாலானவர்கள் உடைகளை அதிக அழுக்குபட விடுவதில்லை. பெரும்பாலும் தினமும் துவைக்கிறார்கள். அழுக்குநீக்கிகளை முழுக்கவே தடைசெய்தாலும் ஒன்றும் ஆகாது

ஆனால் பதிலுக்கு அவற்றின் செறிவை அதிகரித்தபடியே செல்கிறார்கள். அவை துணிகளை மங்கச்செய்கின்றன. ஆகவே அதற்கு தனி பதப்படுத்திகளை விற்க ஆரம்பிக்கிறார்கள். இந்த வட்டமே நம் சூழலை அழிக்கிறது

ஜெ

முந்தைய கட்டுரைஉலகின் மிகச்சிறந்த…
அடுத்த கட்டுரைகடிதம்