தீபாவளி

அன்புள்ள ஜெ

தீபாவளி பற்றிய உங்கள் கட்டுரையை வாசித்தேன். பல வெளிச்சங்களை தந்த ஆணித்தரமான கட்டுரை- வழக்கம்போலவே.

ஆனால் பழங்குடியினர் நோய் அண்டாமலிருக்க விளக்குகள் கொளுத்தி வைப்பதை கொஞ்சம் பகுத்தறிவு பாணியில் மெல்லிய கிண்டலுடன் பார்க்கிறீர்களா என்று சந்தேகமாக இருந்தது. அவர்களை மூடநம்பிக்கையாளர் என்று சொல்ல நாம் யார்?

நான் நாலு வருசம் மூநாறு அருகே ஒரு கிராமத்தில் வாத்தியாராக இருந்தேன். அந்தியானால் ஊரே இருட்டிவிடும். ஐப்பசி மாசம் முதல் மார்கழி மாசம் வரை எப்போதுமே மழை பெய்யும். வயிற்றுப்போக்கு வந்து பிள்ளைகளும் பெரியவர்களும் செத்துக்கொண்டே இருப்பார்கள். கிளாஸில் எப்படியும் மாசத்துக்கு ஒரு பிள்ளை செத்துப்போகும். வருசத்துக்கு பள்ளிக்கூடத்தில் பதினைந்து பலி உறுதி. சாவு இருந்துகொண்டே இருக்கும். இருட்டைபபர்த்தாலே சாவு மாதிரி இருக்கும்.

அப்போது நீங்கள் சொன்னதுபோல வீடு முழுக்க விளக்கு கொளுத்தி வைப்பார்கள். எண்ணை என்பது நிறைய செலவாகும். ஆனாலும் விளக்கு வைப்பார்கள். அந்த விளக்குகள் கொடுக்கக்கூடிய நம்பிக்கையும் ஆறுதலும் நிறைய. அதை அனுபவித்தால்தான் தெரியும். கரெண்ட் இருக்காது. இருக்கும்போது நானே எல்லா விளக்குகளையும் போட்டிருப்பேன். ராத்திரி முழுக்க. கரெண்ட் இல்லாத போது நானே நிறைய தீபங்களை வைத்திருக்கிறேன்.

எஸ்டேட்டு பாதையிலே செல்லும்போது ஆங்காங்கே இந்த விளக்குகளைப் பார்த்தால் மனசுக்கு மிகவும் ஆறுதலாக இருக்கும். இருட்டு கட்டுக்குள் இருப்பதுபோல தோன்றும். இருட்டு என்பது எவ்வளவு பயங்கரம் என்று மூநாறிலேதான் தெரியும் ஜெ. அப்படிப்பார்த்தால் தீபாவளி விளக்கை கொண்டாடும் பண்டிகை. விளக்கின் அழகு நமக்கு தெரியாது. அந்த ஆதிவாசிகளுக்குத்தான் தெரியும்.

தீபாவளியை உற்சாகமாக கொண்டாட வேண்டும் என்று தோன்றியது. நன்றி

திவாகரன்

கோழிக்கோடு

அன்பின் ஜெமோ,

வணக்கம். தீபாவளிப் பண்டிகை குறித்த இடுகை படித்தேன். இது குறித்து
நீண்ட நாட்களாக எனக்குத் தோன்றிக் கொண்டிருக்கும் ஒரு செய்தியையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

சமண முனிவர் மகாவீரரின் நினைவு நாளும் தீபாவளித் திருநாளும் ஒரே நாளில் கொண்டாடப் படுகிறது. பொதுவாக இறந்தவர்களின் நினைவு நாள்களில் தீபமேற்றி ஒளி வழிபாடு செய்தல் நம் வழக்கங்களில் ஒன்றுதான்.

இவ்வாறாக சமணர்களின் எச்சங்களில் ஒன்றாகத்தான் இந்த விழா வந்திருக்குமோ என்ற ஐயம் வருகிறது.

திருஞான சம்பந்தர் ஒரு வருடத்தின் ஒவ்வொரு விழாக்களையும் குறிப்பிட்டுச் சொல்லி, இதை காணாமல் இறந்து போய்விட்டாயோ? என்று திருமயிலையில் பூம்பாவை எழுப்பிய போது பாடிய தேவாரங்களைப் பார்க்கும் போது, அதில் தீபாவளி
குறித்த எந்த செய்தியும் இல்லை.

ஐப்பசி ஓணவிழாக் காணாது போதியோ பூம்பாவாய்-
கார்த்திகை விளக்கீடு காணாது போதியோ பூம்பாவாய்- என்று
திருஞான சம்பந்தர். என்று பாடியது குறிப்பிடதகுந்தது.

aruran visu

அன்புள்ள ஆருரான்

கிட்டத்தட்ட நான் சொன்னதையே நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள். தீபாவளி சோழர்காலத்தில் ஒரு சாக்த-சமண பண்டிகை மட்டுமே. இங்கிருந்த தீபத்திருநாள் கார்த்திகைதான். வடக்கே வர்த்தமானரின் ஞானஒளி நாளாக தீபாவளி கருதப்படுகிறது. சாக்தத்தில் இருந்து தீபாவளியை அனைவருக்குமாக கொண்டுவந்தவர்கள் நாயக்கர்கள்தான்

ஜெ

ஜெ,

உங்கள் சமீபத்திய கட்டுரையில் இவ்வரிகளைப் படித்தேன்.

அனைத்துக்கும் மேலாக எல்லா பண்டிகைகளும் குழந்தைகளுக்கானவை. அவர்கள் உற்சாகம் கொள்வதற்கான தருணங்கள். பெரியவர்கள் தங்கள் உலகை விட்டு கொஞ்சம் குழந்தைகளின் உலகுக்குள் இறங்கிவருவதற்கானவை. நாம் நம் பெற்றோரின் நினைவை நம் பிள்ளைகளுக்கு அளிப்பதற்கானவை. வாழ்க்கை என்பது இம்மாதிரி சில தருணங்கள் மட்டுமே. ஆகவே உற்சாகம் கொள்வதற்கான காரணங்கள் அனைத்துமே முக்கியமானவை.

சமீபகாலமாக எனக்கும் இக்கருத்து தோன்ற ஆரம்பித்திருக்கிறது. அதாவது கொண்டாட்டங்களுக்கான சூழ்நிலைகள் அனைத்துமே தொடர்ந்து ஈடுபடத்தக்கவை எனபது. எனினும் கடந்தகால அனுபவங்களிலிருந்தும் அது கொடுத்த காயங்கள்/பாடங்கள் கொடுத்த பக்குவங்கள் என்று நினைப்பவற்றிலிருந்து விடுபட முடியவில்லை. நான் எனது பிறந்த நாளை 10 வருடங்களுக்கும் மேலாக கொண்டாடுவதில்லை. அதற்கு ஒரு முக்கிய காரணம் உயர் நிலைப் பள்ளிப் பருவத்திலேயே நான் மட்டுமல்ல எனது பெற்றோரே எனது பிறந்த நாளை நினைவில் வைத்துக்கொள்ளாத அளவுக்கு சூழ்நிலை இருந்தது. சிலசமயங்களில் நினைவில் இருந்தும் கொண்டாடமுடியாத சூழ்நிலை இருந்தது. அதனால் அதன்மிதிருந்த பற்று/ஈர்ப்பு இல்லாமல் போய்விட்டது. இதனை எதிர்கொள்ளும்போது ஏற்பட்ட மனநிலை மாற்றங்களை பக்குவம் என்றும் குறிப்பிட்ட வயதிற்குமேல் பிறந்த நாள் கொண்டாடுவது சிறுபிள்ளைத்தனமானது என்றும் தோன்ற ஆரம்பித்துவிட்டது. தனக்கு மகனோ/மகளோ பிறந்த சந்தோசத்தை பெற்றோர் கொண்டாடுவது அர்த்தமுள்ளது, நம் பிறந்த நாளை நாமே கொண்டாடுவதில் என்ன அர்த்தம் உள்ளது? என்ற தத்துவார்த்த சார்புச் சிந்தனைகள் வேறு… இத்தனையையும் தாண்டித்தான் ‘கொண்டாடுவதற்கான மேலும் ஒரு நாள், அதை ஏன் வீணடிக்க வேண்டும், எள்ளி நகையாட வேண்டும்’ என்ற சிந்தனையும் மேலோங்க ஆரம்பித்திருக்கிறது.

இது அப்படியே, ‘அப்படியானால் பட்டறிவு என்பதுதான் என்ன” என்ற கேள்விக்கு இட்டுச்செல்கிறது. அனுபவப் பாடம் என்பது மோசமான அனுபவங்களாலேயே ஏற்படுகிறது. ‘ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது’ என்கிறோம். அதே நேரத்தில் ஆன்மீகம் கடந்தகாலக்களிலேயே நின்று விடாதீர்கள், சூடுபட்ட பூனை பாலையே வெறுத்தது போலாகிவிடுவீர்கள் என்கிறது. இந்த முரண்பட்ட கருத்துகளில் எதை எடுத்துக் கொள்வது?

நன்றி,
சாணக்கியன்
http://vurathasindanai.blogspot.com/

அன்புள்ள சாணக்கியன்,

அ முத்துலிங்கத்தின் நாயுடன் கதைப்பவர் என்ற கட்டுரையில் ஒரு இடம். நாயுடன் உரையாடுகிறார் ஒரு பெண். நண்பரின் கேள்விக்கு நாயிடம் கேட்டு பதில்சொல்கிறார்


நண்பர்: நீ எதற்காக இந்த உலகத்தில் பிறந்திருக்கிறாய்?

நாய்: மகிழ்ச்சியாக இருப்பதற்கு.

நாய்க்கு தெரிந்தது மனிதர்களுக்கு தெரியவேண்டாமா? உயிர்களின் இயல்பு ஆனந்தம் என்பது வேதாந்தக்கருத்து. மகிழ்ச்சியை அளிக்காத அனுபவ ஞானம் ஞானமே அல்ல. அதில் ஏதோ தப்பு இருக்கிறது

ஜெ

தீபாவளி யாருடையது?

முந்தைய கட்டுரைபரிபாஷை பரவிய நிமிடங்கள்!!!
அடுத்த கட்டுரைஇந்த இணையதளத்தின் வாசகர்கள்…