இசை கடிதங்கள்

ஆபிரகாம் பண்டிதர்

து.ஆ.தனபாண்டியன்

ஜெ, தமிழிசை பற்றிய கட்டுரை வெகு சிறப்பாக உள்ளது. அதில் குறிப்பிட்டுள்ள வரலாறு.காம் கட்டுரையை எழுதியது நான்தான்…வீண் புலம்பல்களுக்கு மத்தியில் உங்கள் குரலைக் கேட்க உற்சாகமாக இருந்தது. நன்றி.

‘சற்றே விலகி இரும்’ பாடல் வர்ணம் அல்ல. முடிந்தால் மாற்றி விடுங்கள். உங்கள் எழுத்தை அப்படியே எடுத்துக் கொள்பவர்கள் பலர் இருப்பதால் கூறுகிறேன். தவறாக எண்ண மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

அன்புடன் – லலிதா ராம்.

லலிதா ராம்,

மாற்றுகிறேன். எனக்கு இந்த தகவல்கள் தெரியாது . இசை சம்பந்தமான பண்பாட்டு வரலாற்றில் மட்டுமே எனக்கு ஆர்வம். அதன் கலைவரலாற்று ஞானம் இல்லை. ஏனென்றால் இசைஞானம் இல்லை. இசையறிஞர்களையும் அவ்வாறே பண்பாட்டு நாயகர்கள் என்ற அளவிலேயே கவனிக்கிறேன்

ஜெ

அன்புள்ள ஜெ..

கடந்த மூன்றாண்டுகளில் இது பற்றிய விவாதம் 2-3 முறை வந்துவிட்டது. உங்கள் நிலையைத் தெளிவு படுத்தி விட்டீர்கள். உங்கள் வாதம் மிக வலுவானது. ஆனால் இது மீண்டும் மீண்டும் வருவது – விவாதத்தைத் தாண்டி ஒன்றுமே நிகழ்வதில்லை என்பதையே காட்டுகிறது.

ஒரு இசை ரசிகனாக, எனக்கு மொழி புரிந்தால் இன்னும் நன்றாக இருக்குமே என்னும் ஆதங்கத்தில் சொல்பவர்கள் இருக்கிறார்கள். அந்தத் தளத்திலும் புகுந்து, சாதி பேசும் மக்களும் இருக்கிறார்கள். நீங்கள் இருவரையும் ஒரே மட்டையில் விளாசித் தள்ளுகிறீர்கள். இசையும் மொழியும் சரிவரக் கலந்து வரும் போது, அது இன்னும் அகன்ற தளத்துக்கு வரும் என்னும் வாதத்தையும் மறுக்கவியலாதுதானே.

ஒரு பாமர ரசிகனாக, பல கச்சேரிகளுக்குச் செல்லும் போதெல்லாம், ஒரே ஒரு தமிழ்ப் பாடல் பாடப் படும் போதெல்லாம் மனம் வருந்தும். ஆனால், நிறையத் தமிழ்ப் பாடல்கள் ஸ்வரப் படுத்தப் படவில்லை என்று நீங்கள் ஒரு சந்திப்பில் கூறினீர்கள். ஒரு துவக்க நிலை ரசிகனாக, எனக்கு அந்த உண்மைகள் தெரியவில்லை.

என்னால் முடிந்ததெல்லாம் ஒன்றுதான். நல்ல தமிழிசைத் தொகுப்புகள் வரும்போதெல்லாம் வாங்கிவிடுவதுதான். இது வரை குறைந்தது, இளையராஜாவின் திருவாசகத்தை 1000 சி.டிக் களாவது வாங்கியிருப்பேன். அருணா சாய்ராமின் சி.டி களையும் பல நண்பர்களுக்கு வாங்கிப் பரிசளிக்கிறேன். சமீபத்தில் அர்விந்த் எனக்கு அறிமுகப் படுத்திய சிக்கில் குருசரண் பாடிய ஒரு சி.டியை நண்பர் கோவை அரங்கசாமிக்கும் கொடுத்தேன். ஆசை முகம் மறந்து போச்சே என்னும் பாடலை அவர் நண்பர் ஸ்ரீனிவாஸனின் பியானோ இசையுடன் பாடுதல் கேட்பது பெரும் கொடுப்பினை, (யூ ட்யூபில் உள்ளது). அதே தொகுப்பில் செம்புலப் பெயநீர் பாடலும் உண்டு. சிக்கில் சகோதரிகளின் சேர்ந்திசையிலும் இப்பாடலைக் கேட்டிருக்கின்றேன்..

பலுகே பங்காராமாயனா என்று உண்ணி பாடும் போது அக்குரலின் பாவம் மட்டுமே உணர்கிறேன். மற்றபடி அப்பாடலுக்கோ அல்லது ஏதேனும் இன்னொரு மொழிப் பாடலுக்கோ என் இதயத்தில் வேறு இடம் இல்லை.. ஆனால், சின்னஞ்சிறு கிளியேவுக்கு என் நெஞ்சில் இருக்கும் இடம் வேறு. 13 ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் ஃப்ரான்ஸ் நாட்டில், மிக வேக ரயில் பயணத்தின் போது அந்நாட்டின் ஊர்ப்புற அழகில் மனம் அமிழ்ந்திருக்க, காதில் “எந்தையும் தாயும்” கேட்ட அனுபவத்தை இன்றுமே என்னால் எழுத்தில் கொண்டு வரமுடியவில்லை

அமெரிக்காவுக்கோ அல்லது ஆஸ்திரிலியாவுக்கோ சென்று அங்கு நிற வெறி இருக்கிறது என்று நிருபித்துக் கொண்டிருப்பது வெட்டி வேலை. ஓபாமா போல் செய்து காட்டுவதுதான் ஆக்க பூர்வமான பாதை. என் அளவில் நான் செய்யக் கூடியதெல்லாம், நல்ல தமிழிசை கேட்பதும், மற்றவர்களுக்குச் சொல்வதுமே. மற்ற இசையும் கேட்பேன். தேவ (!) பாஷைகளும், தேன் மொழிகளும் என் எதிரிகளல்ல. ஒரு துளி வெள்ளமாகாமல் போகலாம். அத்துளிக்கு அதன் பரப்பளவே உலகம். உங்களுடனான இந்த உரையாடலில் எனது எல்லைகள் பரந்திருக்கின்றன. என் அளவுகோள்களை நான் பரீசிலித்துக் கொள்ள உதவியுள்ளன. உங்களின் இந்தப் பொறுமையான உரையாடலுக்கு நன்றி. ஆனால் இவ்விவாதத்தில் ஈடுபடும் அனைவரும் சாதி/மொழி வெறியர்கள் என்னும் வாதம் எனக்குப் பிடிக்கவில்லை. உண்மை இவ்விரு தரப்புக்கும் இடையில் எங்கோ இருக்கிறது என்று சொல்கிறது மனம்.

அன்புடன்

பாலா

அன்புள்ள பாலா

தமிழில் பாடவேண்டும் என்று எண்ணக்கூடியவன் தான் நான். எனக்கு கவிபாவமும் முக்கியம். அல்லதுதான் முதலில் முக்கியம். ஏனென்றால் நான் இலக்கியவாதி.

ஆனால் இசையில் ராகபாவம்தான் முதன்மை என்பதை உணர்கிறேன். ஆகவே ஒருபோதும் தியாகராஜர், தீட்சிதர் போன்றவர்களை நிராகரிக்க முடியாதென்பதையும் உணர்கிறேன். அதை நிராகரிப்பவர்கள் இசையை, அதன் கடந்தகால வரலாற்றை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கிறார்கள். அப்படி எந்தக்கலையும் இறந்தகாலத்தை நிராகரித்துவிட்டு நீட்சி கொள்ளமுடியாது.

தமிழிசை இயக்கத்தை நான் நிராகரிக்கவில்லை. அது காலத்தின் குரல். ஒரு பண்பாட்டியக்கம். ஆகவேதான் சொல்புதிதுக்கு தமிழிசை சிறப்பிதழே போட்டோம். ந.மம்முதுவை அறிமுகம் செய்தோம்.

ஆனால் தமிழிசைக்கான தேடலை படைப்பூக்க மனநிலையுடன், மேலும் மேலும் முன்னே செல்லும் கலையெழுச்சியுடன் செய்யவேண்டும். சாதிக்காழ்ப்புக்கான சாக்காக இசையை ஆக்கக்கூடாது. தமிழிசை சம்பந்தமான இன்றைய பேச்சுகள் இசையையே இரண்டாம்கட்டத்துக்கு தள்ளிவிட்டு வசையை முன்னிறுத்துகின்றன. இசையை எவரும் ஒரு பொருட்டாக நினைப்பதில்லை. பிராமணக்காழ்ப்புக்கும் தங்கள் உலகியல்வெறியை மறைப்பதற்கும் அதை கேடயமாக்குகிறாகள். அதையே நான் மீண்டும் மீண்டும் குறிப்பிடுகிறேன்

ஜெ

தமிழிசை காழ்ப்பே வரலாறாக

முந்தைய கட்டுரைஇரு திருமணங்கள்
அடுத்த கட்டுரைமூப்பனார்