சித்துராஜ் பொன்ராஜ் -கடிதம்

 

அன்புள்ள எழுத்தாளர் திரு ஜெயமோகனுக்கு வணக்கம்

மாதங்கி அவர்களைப் பற்றிய உங்கள் பதிவில் எனக்குத் தமிழ் அதிகம் தெரியாதென்று நீங்கள் எழுதியுள்ளதைப் படித்தேன்.

தங்களது விஷ்ணுபுரம், வெள்ளை யானை, காடு நாவல்களை நிச்சயமாக இருமுறைக்கு மேலும் நாவல் கோட்பாடு என்ற நூலை நான்கு முறையாவது வாசித்தவன் என்ற முறையிலும் சின்ன வயதில் திவ்ய பிரபந்தம் சேவிக்கும் போது ‘என்று’ என்பதை ‘என்னு’ என்று உச்சரிக்காததால் அப்பாவிடம் அடி வாங்கியவன் என்ற உரிமையிலும் எழுதுகிறேன். எனக்குத் தமிழ் மிக நன்றாகவே தெரியும்!

அது மட்டுமல்ல என் அப்பா கன்னடம் என்றாலும் அம்மா பாலக்காட்டு மலையாளம் என்றாலும் இந்த இரு மொழிகளோடு சிறு வயதிலிருந்தே தமிழும் கற்றுத் தந்திருக்கிறார்கள். தமிழிலும் நிறைய வாசிக்கிறேன். உங்கள் நாவல்கள் தவிர எஸ் ராமகிருஷ்ணன் தொடங்கி ஷோபா சக்தி மற்றும் அசோகமித்திரன், பள்ளிகொண்டபுரம் எழுதிய நீல பத்மநாபன், கோணங்கி, நீங்கள் அதிகம் விரும்பாத மு.வ., அகிலன் (சித்திரப்பாவை!) ஆகியோரோடு கோட்டயம் புஷ்பநாத் வரையிலும் தமிழிலேயே பழக்கம் உண்டு. இப்போது Roberto Bolanoவில் மாட்டிக்கொண்டிருக்கிறேன் (இவரைத் தமிழில் யாராவது மொழி பெயர்த்தார்களா தெரியாது – அதனால் இவரை ஸ்பானிய மொழியில்)

தங்களுக்கு யாரேனும் தவறான தகவல் தந்திருக்கலாம். அதற்குத்தான் இங்கே ஆட்களுக்குப் பஞ்சமில்லையே. உங்கள் கருத்தைத் திருத்திக் கொண்டால் தன்யனாவேன். எனக்குத் தமிழே தெரியாது என்றால் என் குழந்தைகளுக்குத் தமிழில் வீட்டுப் பாடம் சொல்லித் தரும்போது அவர்களைத் திட்டக்கூட எனக்கு உரிமை இல்லாமல் போய் விடும் என்பதால்…

மிகுந்த பணிவன்புடன்

சித்துராஜ் பொன்ராஜ்

 

அன்புள்ள சித்துராஜ் பொன்ராஜ்

நாம் சென்ற ஆண்டு நேரில் சந்தித்திருக்கிறோம். ஓரிரு சொற்கள் பேசியிருக்கிறோம். அப்போது நீங்கள் என்னை முன்னரே கேள்விப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கவில்லை. உங்கள் உச்சரிப்பில் இருந்து உங்களுக்குத் தமிழ் அதிக பரிச்சயமில்லை, ஆகவே என்னையும் அறிமுகமில்லை என நானே ஊகித்துக்கொண்டேன்.

அது தவறு, தமிழ் நன்றாகவே தெரியும், என்னையும் அறிவீர்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. திருத்திக்கொள்கிறேன்

ஜெ

 

முந்தைய கட்டுரைமலேசியச் சிறுகதைப்பட்டறை குறித்து…
அடுத்த கட்டுரைஇலக்கியத்தின் வெற்றி