இலக்கியத்தின் வெற்றி

30845

சிங்கப்பூர்ச் சூழல் குறித்து விமர்சனங்களை முன்வைக்கும்போது வழக்கமாக எழுந்துவரும் பல எதிர்விளக்கங்கள் உண்டு. சிங்கப்பூரில் தமிழ் குறைவாகவே பேசப்படுகிறது. அன்றாட வாழ்க்கையில் தமிழ் இல்லை. அவசரமான வாழ்க்கையில் இலக்கியம் படைப்பதற்கு நேரமில்லை. இலக்கிய வாசிப்பும் விவாதமும் குறைவாக இருக்கிறது. இப்படி பல.

சிங்கப்பூர் சூழல் உருவாக்கிய படைப்பாளிகளில் முதன்மையானவர் என்று சித்துராஜ் பொன்ராஜை ஐயமின்றி சொல்லலாம். சிங்கப்பூரிலேயே பிறந்து வளர்ந்தவர். அங்குள்ள மொழிச் சூழலில் பண்பாட்டுக் களத்தில் உருவாகி வந்தவர். சித்துராஜைப் போன்ற உண்மையான படைப்புத்திறன் கொண்ட ஒரு படைப்பாளி எழுந்து வரும்போது மேலே சொல்லப்பட்ட அத்தனை ‘சால்ஜாப்புகளும்’ பொருளிழப்பதைக் காணலாம்.

இவருடைய கதைகளைப் படிக்கும்போது அசோகமித்திரனின் படைப்புகளில் இருந்து தூண்டுதல் கொண்டிருப்பாரோ என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. ஆங்கிலம் வழியாக உலக இலக்கியத்தில் சாராம்சமான பகுதிகளுடன் அவருக்கு அறிமுகம் இருக்கிறது. குறிப்பாக நவீன அமெரிக்க எழுத்து அவருக்கு அணுக்கமானது. அசோகமித்திரனுக்கும் அவ்வெழுத்தே அணுக்கமானது என்பதனால் இயல்பாகவே அச்சாயல் அமைந்துள்ளதுஎன நினைக்கிறேன்.

சித்துராஜ் பொன்ராஜின் கதைகள் மிக இயல்பான புறவயநடை கொண்டவை. தேய்வழக்குகளோ வெற்று உணர்ச்சி வெளிப்பாடுகளோ இல்லாமல் என்ன நிகழ்கிறது என்ன உணரப்படுகிறது என்று மட்டும் சொல்லிச் செல்லும் தன்மையையே புறவயநடை என்று சொல்கிறேன். சிறுகதைக்கு ஒரு நம்பகத்தன்மையையும் கூர்மையையும் அந்த நடை அளிக்கிறது. அப்புறவய நடையை கடந்து எழும் எழுச்சி கொண்ட நடை என்பது மிக அசலானதாகவும் தன்னிச்சையானதாகவும் இருந்தாக வேண்டும். இல்லையேல் அது செயற்கையான மொழிச்சிடுக்காகவே மாறும்

மாறிலிகள் தொகுப்பின் அநேகமாக எல்லாக் கதைகளையுமே குறிப்பிடத்தகுந்த இலக்கிய முயற்சிகள் என்று சொல்லலாம். பெரும்பாலும் எந்தக்கதையிலும் முந்தைய எழுத்தாளர்களின் எதிர்மறைப்பாதிப்பு ஏதுமில்லை. கதைகளை முந்தைய தலைமுறை எழுத்தாளர்களுடன் நான் ஒப்பிட்டுநோக்குவது வழக்கம். அது அக்கதைகளை இயல்புசார்ந்து வகைமைப்படுத்துவதற்கு மட்டுமே. சித்துராஜை நடை மற்றும் கதையமைப்பில் அசோகமித்திரனின் சாயல்கொண்டவர் என்றும் மனநிலையில் அ.முத்துலிங்கம் போன்றவர் என்றும் சொல்லலாம்

சித்துராஜிடம் மனிதர்களின் பழக்க வழக்கங்களை கூர்ந்து அவதானிக்கும் கலைஞனின் கண் இருக்கிறது. உதாரணமாக அவருக்கு தொடர்பே அற்றது எனத் தோன்றும் சூழல் தர்மரதம் என்னும் கதையில் சித்தரிக்கப்பட்டுள்ளது.துணிகளை வாங்கி வெட்டி தைத்துக் கொடுக்கும் ஓரு தொழில் உலகம். துணிகளைப்பற்றிய செய்திகளின் ஊடாகவே கறாரான விதிகளின் படி ஒன்றையொன்று வென்றும் தின்றும் செயல்படும் ஒரு வணிக உலகத்தை காட்ட அவரால் முடிந்திருக்கிறது. அவ்வுலகின் இரும்பு விதிகளுக்கு ஊடே ஓடும் அடிப்படை அறத்தின் ஒரு மெல்லிய கீற்றை சுட்டி இக்கதை முடிகிறது.

[அவரது சுயசரிதைத்தன்மை கொண்டது எனச் சொல்லத்தக்க பிறிதொரு கதையில் அவர்களின் அடுக்குமாடிக்கட்டிடத்திற்கு அருகே உள்ள துணிக்கிடங்குகள் குறிப்பிடப்படுகின்றன. அது ஓர் எட்டிப்பார்த்த அனுபவமாக இருக்கலாம். அதுவே எழுத்தாளனுக்குப் போதும். உண்மையில் மக்கள் மிக நெருக்கமாக வாழும் சிங்கப்பூர் சூழல் அப்படி பல்வேறு வாழ்க்கைகளினூடாக புகுந்துவர மிக உதவியான ஒன்று]

ஒருவேளை நவீனச்சிறுகதையில் பலமுறை எழுதப்பட்ட கதைக்கருதான் தர்மரதம். இதற்கு நிகரான பல கதைகளை வண்ணதாசன் புனைவுகளில் நாம் காண முடியும். ஆயினும் முற்றிலும் மாறுபட்ட ஒரு பண்பாட்டுச் சூழலில் அதைப்படிப்பது ஊக்கமூட்டும் ஓர் அனுபவம். அழுத்தாமல் அந்த முடிவைச் சொல்லி நகரும் கதை ‘ நம் அறவுணர்வுக்கு நிகராகவே அழகுணர்வையும் நிறைவுசெய்கிறது.

மனித இயல்புகளை வெளிப்படுத்துவதில் நவீன எழுத்தாளனுக்கு ஒர் இடர் உள்ளது. நவீன இலக்கியம் என்பது பொதுவாக உயர்ந்த இலட்சியங்களில் அவநம்பிக்கையும் வாழ்க்கைநோக்கில் எதிர்மறைப்பண்பும் கொண்டது. சென்ற நூற்றாண்டின் மிகையுணர்ச்சிகளை அது ஐயப்படுகிறது. ஆகவே பரிவு, இரக்கம், கருணை போன்ற உணர்வுகள் நேரடியாக புனைவில் வெளிப்படும்போது அதற்கெதிரான மனநிலைக்கு வாசகன் தள்ளப்படுகிறான்.

ஆனால் எப்படியோ இலக்கியத்தின் சாராம்சமான உணர்வுகளாக நிற்கக்கூடியவை அவைதான். ஆகவே எழுத்தாளன் முதல் பார்வைக்கு எளிய கிண்டல் போல தோன்றும் ஒரு பாவனையில் தன் கதாபாத்திரங்களைப்பற்றிச் சொல்ல ஆரம்பிக்கிறான். வாசகனும் எழுத்தாளனும் அறிந்திராத ஒரு தருணத்தில் அந்தக் கிண்டல் பரிவையும் கருணையையும் கனிவையும் நோக்கி செல்கிறது. அசோகமித்திரனின் பல கதைகளில் நிகழும் அந்த மந்திரம் நிகழ்ந்த கதை என கர்ணயட்சினியைச் சொல்லலாம்.

உடல் சார்ந்தும் உளம் சார்ந்தும் மிக மெல்லிய பாலியல் அடையாளத்திரிபு கொண்ட பிரமிளாவை இயல்பான கேலியுடன் அறிமுகப்படுத்தும் சித்துராஜ், கதை முடிவில் அவள் பக்கம் நின்று உலகைப் பார்க்க வைப்பதில் வெற்றி பெறுகிறார். அவளுடைய ஆளுமையைப் பற்றி ஆசிரியர்கூற்றாக எதுவுமே இன்றி அவளுடைய புழக்கங்கள் வழியாக மட்டுமே ஒரு சித்திரத்தை உருவாக்க முடிந்திருப்பது தேர்ந்த கலைஞனின் கைகளுக்கு மட்டுமே சாத்தியமாகும்.

இத்தொகுதியின் அழகிய கதைகளில் ஒன்று விடியல் தவம். சீனச் சமையல் நிபுணராக ஆக விரும்பும் சுகந்தனின் கதை இது. மிகச்சரியான வடிவம் கொண்ட சிறுகதை. எனவே சுகந்தன் சமைக்கத் தொடங்குவதிலிருந்து சமைத்து முடிப்பதற்குள் கதை முடிந்துவிடுகிறது. ஆசிரியர் வந்து எதையும் விளக்குவதில்லை. அந்நிகழ்வுகளின் ஊடாகச் செல்லும் வாசகனே அனைத்தையும் அறிந்து, உணர்ந்து தானும் அதில் வாழத்துவங்குகிறான்.

சீனச் சமையல் குருவின் முன் தன் திறனை வெளிப்படுத்தி வெல்லும் சுகந்தனின் வெற்றியின் கணம் தான் கதை. ஆனால் விரிந்த ஒரு தளத்தில் சிங்கப்பூரில் சீனப் பண்பாட்டு சூழலில் தன் அடையாளத்திற்காக தவித்து போராடி வெல்லும் ஒரு தமிழனின் கதை கூட. அடையாள உருவாக்கத்தை முன்வைத்த சிங்கப்பூர் தமிழ் கதைகளின் பாரம்பரியத்தில் இக்கதை முற்றிலும் புதிய பொருள் கொள்கிறது. இங்கே அடையாளத் துறப்பும் பிற அடையாளத்தில் கரைதலுமே வெற்றியின் வழியாக முன்னால் திறந்திருக்கிறது.

இன்னும் விரிந்த தளத்தில் முற்றிலும் அந்நிய பண்பாடு ஒன்றில் தன்னை தகவமைத்துக் கொண்டு ஊடுறுவி வெல்லும் ஒரு மனிதனின் கதை இது. எதைக் கழற்றிவிடுகிறான் ,எதைக் கழற்றமுடியவில்லை என்பது சுவாரசியமான கேள்வி.ஒவ்வொரு தளத்திலும் வேறு வேறு அர்த்தங்கள் நிகழும்படி நுண்மையான தகவல்களால் பின்னப்பட்டுள்ள ஓர் இலக்கிய வெற்றி இந்த ஆக்கம்.

சிறுகதையின் செவ்வியல் வடிவை இது அடைவது தன்னை முழுக்க உடைத்து உருமாற்றி சீனனாகவே ஆகி சீனச் சமையலுக்குள் சென்று வென்றபின் சுகந்தன் அந்தச் சீன சமையல் நிபுணரின் சட்டையைப்பிடித்துக் கொண்டு தமிழில் ”யாருய்யா நீ எனக்கு எல்லாத்தையும் கொடுத்திருக்கியே யார் நீ உனக்கு நான் என்ன பண்ணமுடியும் என்று கண்ணீருடன் கத்தும்போதுதான். சீனனாக மாறிய ஆளுமை ஒன்றிற்கு அடியில் எப்போதும் மாறாத தமிழ் ஆளுமை ஒன்றிருப்பதை காணும் கணம் தமிழ் சிறுகதையின் முக்கியமான தருணங்களில் ஒன்று.

சித்துராஜ் பொன்ராஜின் கதைகளைப்பற்றிய ஒர் உரையாடலில் சிங்கப்பூர் நண்பர் ஒருவர் அவர் பெண்களைப்பற்றி கூறும் இடத்தில் நேரடியான ஒரு காமநோக்கு இருப்பதாகவும் அது ஒரு ஆண் மையப்பார்வையை வெளிப்படுத்துவதாகவும் சொன்னார். ஒர் எழுத்தாளனின் படைப்பில் குறிப்பிட்ட தன்மை இருப்பதை அடையாளம் கண்டு கொள்வது வேறு. அதைத் தவிர்த்து அவர் எழுத வேண்டுமென்று விரும்புவவது முற்றிலும் வேறு.

அவ்வாறு தவிர்க்க ஆரம்பித்தால் அச்சமூகம் கொள்ள விரும்பும் விஷயங்களை மட்டுமே தக்கவைத்து , அது தள்ள விரும்பும் அனைத்து விஷயங்களையும் தவிர்த்து எழுத வேண்டியிருக்கும். அவ்வாறு சலவை செய்த எழுத்து நமது போலி முற்போக்குகளின் அரசியல்சரிகளின் பிலாக்கணம் போலிருக்கும்.நவீனச் சிங்கப்பூர்ச்சூழலின் வணிக – கேளிக்கைச்சூழலில் அந்தப்பார்வைதான் எழுந்து வருகிறது என்றால் அதன் சாட்சியமாக எழுத்து இருப்பதே உகந்தது.

எழுத்து என்பது ஒரு படைப்பாளியின் குருதித் துளி போல. அவனுடைய நோய்க்கூறுகள், அவனுடைய திறன்கள், அவனுடைய வம்சாவளி அனைத்தும் அதில் இருக்க வேண்டும். எந்த அளவுக்கு சரியான பிரதிநிதித்துவம் உள்ளதோ அந்த அளவுக்குத் தான் அது சிறந்த எழுத்து. சித்துராஜ் பொன்ராஜின் கதைகளை நான் முக்கியமானதாகக் கருதுவதற்கு காரணம் அவை நான் அறிய விரும்பும் ஒரு நவீனச் சிங்கப்பூர் வாழ்க்கையின் கூறுகளை மிகத் துல்லியமாக காட்டுகின்றன என்பது தான். அதாவது சித்துராஜ் சொல்லாதவற்றையும் ஏன் உத்தேசிக்காதவற்றையும்கூட அக்கதைகளில் இருந்து காணமுடிகிறது. ஒருபிடி மண்ணை அள்ளி நிலத்தின் அனைத்து இயல்புகளையும் ஆய்வுச்சாலைகள் வழியாக கண்டெடுப்பது போல.,

உதாரணமாக முடியொழுக்கம், மூன்று சந்திப்புகள், மாறிலிகள் போன்ற கதைகள். இவை இன்றைய சிங்கப்பூர் வாழ்க்கையின் பெண்களின் நிலைகுறித்த வெவ்வேறு காட்சிகளைக் காட்டுகின்றன. இளங்கண்ணன், கண்ணபிரான், புதுமைதாசன் போன்ற சிங்கப்பூரின் முன்னோடி எழுத்தாளர்கள் எழுதிய ஒழுக்க, கலாசாரக் கவலைகளை கருத்தில் கொண்டு இக்கதைகளை படிப்பது மிகுந்த சுவாரசியமான அனுபவம். இக்கதைகளுக்கான முன்னோடிக் கதைகளை அவர்களின் படைப்புலகில் கண்டெடுக்க முடியும் – அதாவது நேர் எதிரான கோணம் கொண்டவை. எனக்கு கண்ணகி -மாதவி இருமை நினைவுக்கு வந்தபடியே இருந்தனர். எல்லா கதைகளிலும் கண்ணகியும் மாதவியும் கலந்துவிட்டிருக்கிறார்கள்.

மூன்றுசந்திப்புகள் நட்சத்திர விடுதியில் மது பரிமாறும் பணிசெய்யும் மகளுடன் தன் இளமைக்கால நண்பரை சந்திக்கும் தந்தை ஒரு இந்தியத் தமிழ்க் கதையில் சாதாரணமாக வரமுடியாத கதாபாத்திரம் .அந்தப்பெண் தந்தையின் நண்பரிடம் தான் மணந்து கொள்ளப்போகும் வட இந்தியருக்காக திருமண ஏற்பாடுகள் செய்யும்படி சொல்கிறாள். அவர் அவ்வாய்ப்பை ஆவலுடன் பற்றிக்கொள்கிறார்.

இந்தக்கதையின் கட்டமைப்பு கவனமற்றதுபோல செய்யப்பட்டிருக்கும் கவனமான கலைவடிவம். நவீன இளைஞர்களின் உலகில் போட்டியில் வெளியே தள்ளப்பட்டு தளர்ந்து வரும் தந்தையின் நண்பரின் கோணத்தில் அந்தப்பெண் காட்டப்படுகிறாள். அவளுக்குப் பணிசெய்வதன் மூலம் அவர் மீண்டும் தன்னை இளையோரின் விரைவுமிக்க உலகில் திணித்துக்கொள்கிறார். தன்னை உடைத்து உருமாற்றிக்கொண்டு. அதற்கான வலியையும் அவமதிப்பையும் விழுங்கியபடி.

இதிலிருக்கும் ஒரு விசித்திரமான சுதந்திரம் என்னைக் கவர்கிறது. அதைத்தான் முன்னோடிகள் அஞ்சினார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது. வேறுவழியே இல்லை, அது வந்து நின்றிருக்கிறது. முடியொழுக்கம் இன்றைய வாழ்வின் நேரடியான பாலியல் விழைவைக் காட்டும் கதை. ஆணிடம் தனக்கு பாலுறவின்பம் மட்டும்தான் வேண்டும் என்று கேட்கும் ஒரு பெண்ணை இயல்பாக கதையில் சந்திக்கும்போது வாழ்வின் புதிய திறப்பு ஒன்றைக் கண்ட திகைப்பும் மெல்லிய பரவசமும் ஏற்படுகிறது. அவள் அந்த ஆணை அழைப்பதும் சரி, அவன் இயலாமை கண்டு துறப்பதும் சரி, ‘ ஆம், இது பிறிதொரு வாழ்க்கை’ என்று சொல்லிக் கொள்ள வைக்கிறது.

மறுபக்கம் மாறிலிகள் .அத்தலைப்பு சொல்வது போலவே இத்தனை சுதந்திரத்திற்கும் அடியில் இருக்கும் அப்பட்டமான பாலியல் சுரண்டலை சித்தரிக்கிறது. மாறிலிகளின் கதாநாயகி திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளும் விதம் மிக இயல்பாகவும் நுணுக்கமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. தந்தையை இழந்த தனிமை ,உலகு அறியாத தந்தையிடமிருந்து புற வாழ்வைக் கற்றுக்கொண்டதன் போதாமை, இவை அனைத்திற்கும் மேல் வாழ்க்கையின் முதல் முடிவை சுயமாக எடுப்பதில் இருக்கும் பரிச்சயமின்மை.

இதை உண்மையிலேயே பல பெண்கள் சொல்லி நான் கேட்டிருக்கிறேன். தன் வாக்கையின் மிக முக்கியமான முடிவை வேறு எதன்பொருட்டோ, எதையும் யோசிக்காமலோ அவர்கள் எடுக்கிறார்கள். பலசமயம் சிறிய உள அழுத்தம் ஒன்றில் இருந்து தப்பிப்பதற்காகவே அதைச் செய்கிறார்கள். அவள் அடையும் அவமதிப்புகளும் துயரங்களும் ஒரு நவீனச் சிங்கப்பூர் வாழ்க்கையின் பின்னணியில் அபத்தமாக தெரிகின்றன. ஆனால் ஒருவேளை நியூயார்க்கிலும் இதே வாழ்க்கை இருக்ககூடும் என்றும் எண்ணத்தோன்றுகிறது.

பிறிதொரு வாசிப்பில் மாறிலிகளின் கதை இருவேறு உலகங்களின் சந்திப்பு புள்ளி என்றுபட்டது. அவள் கணவன் இந்தியாவின் அடித்தளம் ஒன்றின் சிங்கப்பூர் பிரதிநிதியாக இருக்கிறான். மேல்தட்டில் வாழ்க்கை பலவகையான மாற்றங்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும்போது கூட அங்குள்ள அடித்தட்டுத் தமிழ் வாழ்க்கை இன்னமும் நூறாண்டுகால பழமை தேங்கி நாற்றமடித்திருப்பதை கதை காட்டுகிறது. பெயர்களின் வழியாகவே இந்த வர்க்கவேறுபாட்டைச் சித்தரிக்க சித்துராஜால் முடிந்திருக்கிறது.

கலைஞனின் வருகையை அடையாளப்படுத்துவது ஒரு அம்சமே, நாம் வாழ்க்கையில் அறிந்து ஆனால் தெளிவாக உணரப்படாத ஒன்றை அவை துல்லியமாக சொல்லில் வடிக்கக்காண்பதுதான். இரு இடங்களை உதாரணம் காட்டுவேன். ஒன்று கர்ணயட்சிணி கதைகுறித்துச் சொன்னதுபோல வேடிக்கையாகச் சொல்லிச்சென்று உணர்வுநிலை மாற்றத்தை இயல்பாக நிகழ்த்தும் கதைத்தருணம். இரண்டு லௌகீக வாழ்க்கையின் நுட்பம் ஒன்றை, வேறு ஒரு உலகின் கூரிய முனை ஒன்றை எழுதிக்காட்டுவது. மாறிலிகளில் அந்தப்பெண் திருமணமுடிவை எடுக்கும் கணம் போல

இந்த இரு நுணுக்கமான கூறல்களை வைத்தே இன்றைய தமிழின் முதன்மையான இளைய தலைமுறை படைப்பாளிகளில் ஒருவர் என்று சித்துராஜ் பொன்ராஜை அழுத்தமாக சொல்லலாம்.

சித்துராஜின் இக்கதைகள் கலைடாஸ்கோப்பைத் திருப்பியது போன்ற விரைவுடன் முற்றிலும் சம்பந்தமில்லாத உலகங்களைக் காட்டி மாறிக்கொண்டே இருக்கின்றன. இந்தியாவில் எழுதப்படும் கதைகளில் பெண்களின் பணியிடச்சிக்கல்கள் மிகக்குறைவாகவே பதிவாகியுள்ளன. துளசிமாடம் பணியிடத்தில் வெல்வதற்காக இருபெண்களிடையே நடக்கும் சதியை அல்லது சதுரங்க விளையாட்டை மிக எளிதான சித்திரங்கள் வழியாக சொல்லிச் செல்கிறது. முதல்நோக்கில் அது பெண்களின் தொழில்போட்டி. ஆனால் நீண்ட ஒரு பார்வையில் அது காலகாலமாக பெண்களிடையே நிகழும் ஆண்களை வென்றெடுப்பதற்கான போட்டிதான்.

அதில் வெல்லும், தோற்கும் பெண்களின் இயல்புகளை எவ்வகையிலும் வகைமாதிரிக் கதாபாத்திரங்களாக ஆக்காமல் சித்துராஜ் சித்தரிக்கிறார். ஒருத்தி நுண்ணுணர்வு கொண்டவள். உணர்ச்சிகரமானவள். ஆனால் ஒரு நெருக்கடியில் வெடியோசை கேட்ட மான் போல ஸ்தம்பிப்பவள். இன்னொருத்தி நுண்ணுணர்வு அற்றவள். ஆனால் இக்கட்டுகளில் நிதானமாக இருப்பவள். ஆகவே எளிதாகச் சூழ்ச்சி செய்யமுடிகிறது. வென்று செல்லவும் முடிகிறது.

சிங்கப்பூர் படைப்பிலக்கியத்தைப்பற்றி நான் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியபோது எழுந்து வந்த மறுகுரல்களில் ஒன்று ஒரு தமிழக எழுத்தாளனுக்கு இருக்கும் பல்வேறு வாய்ப்புகள் சிங்கப்பூர் எழுத்தாளனுக்கு இல்லை என்பதுதான். அவன் ஒரு வயல்வெளியைப் பார்த்ததில்லை. அவனுக்குக் கிராமிய வாழ்க்கை தெரியாது. தொன்மையின் நீட்சி அவனுக்கில்லை. ஆகவே வரலாறோ பண்பாடோ ஒரு பின்புலமாக நின்று கொண்டிருக்கவில்லை. அவன் எழுதக்கூடிய விஷயங்கள் திரும்பத் திரும்ப அடுக்கு மாடி வீடுகள் அலுவலகங்கள் என்னும் இரு எல்லைகளுக்குற்பட்டவை.

ஆனால் நான் புறச்சூழல் கலையைத் தீர்மானிக்காது என்ற கருத்து கொண்டவன். பெருங்கலைஞன் ஒருவனை நான்கு சுவர்கள் கொண்ட அறைக்குள் நாற்பதாண்டுகாலம் அடைத்துப் போட்டால் கூட அவனால் மாபெரும் இலக்கியங்களைப் படைக்க முடியும். அதற்குள் ஊர்ந்து வரும் எறும்புகளோ பறந்து வரும் ஈக்களோ கூட அவனுக்கு எழுதுவதற்கு போதுமான புறவாழ்க்கையைக் காட்ட முடியும்.

உண்மையில் புலம் பெயர்ந்த எழுத்து என்பது தமிழக எழுத்தாளனுக்கு இல்லாத எத்தனையோ புதிய வாய்ப்புகளை திறந்து தரக்கூடியது. தமிழின் மிகச்சிறந்த உதாரணம் அ.முத்துலிங்கம்தான். அவருடைய படைப்புகள் சென்று தொடும் களங்கள் நேற்றுவரை தமிழுக்கு அமையாதவை. முத்துலிங்கத்தின் அளவுக்கு இல்லையென்றாலும் ஆசி.கந்தராசா பொ.கருணாகர மூர்த்தி போன்றவர்களும் புலம்பெயர்ந்த புதிய அனுபவ தளங்களைத் தமிழுக்கு திறந்து தந்திருக்கிறார்கள். அது மேலும் மேலும் சாத்தியங்களை அளிப்பது.

சிங்கை எழுத்தாளர்களின் பிரச்னை என்பது அவர்கள் அந்த புதிய வாழ்க்கைக்களம் நோக்கித் திறந்து கொள்ளவில்லை என்பது தான். அதிலும் குறிப்பாகப் பெண் எழுத்தாளர்கள் சலிப்பூட்டும் அளவுக்கு சின்ன வாழ்க்கைக்குள் சிக்கி உழன்று கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு சுட்டிக் காட்டப்படவேண்டிய எழுத்தும் சித்துராஜ் பொன்ராஜின் படைப்புகள் தான்.

முத்துலிங்கத்தைபோலவே முற்றிலும் வேறுபட்ட கதைக்களங்களை நோக்கித் திறக்கும் பல கதைகள் இதில் உள்ளன. தொழில் -வேலைச் சூழலைச் சித்தரிக்கும் தேவேந்திரன் பண்ணிய டிராமா, துளசி மாடம் போன்ற கதைகளை ஒருபக்கம் சொல்லலாமென்றால் கலாச்சார சந்திப்புமுனைகளைத் தொடும் விடியல் தவம், தாளோர நாரைகள்,இரண்டாம் வாய்ப்பாடு போன்ற கதைகள் இன்னும் ஒருபடி மேலாகக் குறிப்பிடத்தகுந்தவை.

உண்மையில் சிங்கப்பூரில் நிகழ்வது இந்த கலாச்சாரஉரசல் தான் முற்றிலும் மாறுபட்ட நாடுகளை இனங்களைச் சேர்ந்த மக்கள் ஒரு நகரில் தொழிலுக்காக, கல்விக்காக ஒன்று கூடுகிறார்கள். அவர்களின் பண்பாடுகள் ஐயத்துடன் ஆர்வத்துடன் ஒன்றையொன்று தொட்டு விலகியும் முயங்கியும் தங்களைக் கண்டு கொள்கின்றன. முடிவிலாது விரியும் இத்தருணங்கள் அற்புதமான பல்லாயிரம் கதைகளுக்கான கதைக்களங்கள் அங்கு வாழ்ந்தும் அந்த ஒரு தருணத்தையும் சுட்டாத கதைகளை நோக்கித் தான் என்னுடைய ஒவ்வாமையை மிக வலுவாக பதிவு செய்தேன்.

அதே உணர்வு நிலையில் நின்று இத்தொகுதியில் உள்ள கதைகளை பெரும்பரவசத்துடன் தழுவிக் கொள்கிறேன். ஆயிரம் நாரைகளில் ஒரு நாரை தன் வேண்டுதலைக்கேட்குமென்னும் சீன நம்பிக்கையில் தொடங்கி அறியாத தேசமொன்றின் கடல் கொண்ட ந கிராமத்தில் இருந்து வந்த ஜப்பானிய பெண் மேல் கொள்ளும் காதலின் கதையைச்- சொல்லும் தாளோர நாரைகள் புத்தம்புதுக் கவித்துவம் ஒன்றைக் கொண்டிருக்கிறது.

அந்தக்கதைக்கு நேர் மாறான திசையில் செல்கிறதுஇரண்டாம் வாய்ப்பாடு. ஜப்பானியப்பெண்ணுக்காக ஏங்கும் தமிழன் பிலிப்பைன் பெண்ணை ஏன் கீழாக நடத்துகிறான் என்பதற்கான பண்பாட்டு உட்குறிப்பில் உள்ளது சமகால இன அரசியலின் , பொருளியலின் நுண்தளங்கள். இன்றைய புலம்பெயர் எழுத்து எழுதவேண்டிய சவால்கள் அங்கேதான் உள்ளன

பாலியல் மாற்றமடைந்த பெண்ணுக்கும் ஆணுக்கும் உறவைச்சொல்லும் மோகவல்லி– சித்துராஜின் கதைகளுக்குப்பொருத்தமில்லாதபடி சற்றே மிகையான குரல் கொண்டிருக்கிறது. எனினும் தமிழில் பேசப்படாத ஒரு தளத்தை சென்று தொடுகிறது என்ற அளவில் குறிப்பிடத்தக்க கதையாக இருக்கிறது.

இத்தொகுதியில் சாதாரணமான கதை என்று சொல்லத்தக்கது களங்கம் மட்டுமே சிங்கப்பூரின் இலக்கிய அரசியலுக்குள் நுழைந்து செல்லும் ஒரு கூரிய அங்கதம் மட்டும்தான் இது. தமிழகத்தில் கூலிக்கு ஆள்வைத்து இலக்கியம் எழுதி சிங்கையில் புகழும் பட்டங்களும் பெற்று வாழும் ஒருவரின் சித்திரத்தைக் காட்டுகிறது அது. கதைத்திருட்டுக்கு சிக்கிக் கொள்கிறாள். அதிலிருந்து தப்பவேண்டுமென்றால் ஆள்வைத்து எழுதியதை ஒப்புக்கொள்ளவேண்டும்.

சிங்கப்பூரின் போலிஎழுத்தாளர்களுக்குள் நிகழும் உள்குத்துகளை சுட்டிச் செல்லும் இக்கதைக்கு சாதாரணமாக ஒரு முக்கியத்துவம் உண்டென்றாலும் இத்தொகுப்பில் உள்ள அனைத்து கதைகளுமே குறிப்பிடத்தகுந்த இலக்கியப்படைப்புகள் என்னும் போது இக்கதை மட்டும் சற்று பின் தங்கியிருப்பது போல் தோன்றுகிறது.

*

சென்ற இருபதாண்டுகளில் தமிழில் வெளிவந்த மிகச்சிறந்த சிறுகதைத் தொகுதி என்று சித்துராஜ் பொன்ராஜின் மாறிலிகளைச் சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. தமிழில் சில சிறுகதைத் தொகுதிகள் முதன்மையான படைப்பாளிகளின் வரவை அறிவித்ததனால் இன்றும் நினைக்கப்படுபவையாக உள்ளன. சுந்தர ராமசாமியின் அக்கரைச்சீமையிலே அசோகமித்திரனின் வாழ்விலே ஒருமுறை வண்ணத்தாசனின் தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள் போன்றவை. அவ்வரிசையில் வைக்கத்தகுந்த தொகுப்பு மாறிலிகள்.

சிங்கப்பூரின் அரை நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட எழுத்து அதன் இயல்பான முதிர்ச்சியை இத்தொகுதியில் அடைந்திருக்கிறது. இது ஒரு தொடக்கப்புள்ளியாக அமையுமென்றால் தமிழ் இலக்கியத்தின் ஒளி மிக்க ஒரு பகுதியாக சிங்கப்பூர் இலக்கியம் வளரும் என்று எண்ணுகிறேன்.

சிங்கப்பூரின் சூழலில் புனைவிலக்கியம் எழுதுவதில் சித்துராஜ் பொன்ராஜ் ஆர்வமிழக்க்க்கூடும் என்று எனக்குப்பட்டது. நான் முக்கியமான எழுத்தாளராக எண்ணும் உதுமான் கனி அவ்வாறு விலகிச்சென்றார். எழுத்தால் உடனடியான பொருளியல் லாபம் அல்லது உலகியல் நன்மைகளோ அவருக்கு விளையாது போகலாம். ஓடும் செம்பொன்னும் ஒப்பவே நோக்கப்படும் சூழல் சிங்கப்பூர் தமிழிலக்கியக் களம். அது அவருக்குச் சலிப்பூட்டலாம்.

ஆனால் இலக்கியமென்பது மிக அந்தரங்கமாக ஒருவர் தனக்குத் தானே செய்து கொள்ளும் சேவை. தான் பிறந்த மொழிக்கும் பண்பாட்டுக்கும் அளிக்கும் கொடை. சித்துராஜ் இப்போது இலக்கியத்திற்கு தன் நேரத்தையும் கனவையும் அளிப்பாரென்றால் பல ஆண்டுகளுக்கு பின்பு அதை நிறைவுடனேயே அவர் நினைத்துப்பார்ப்பார். உலகியல் சார்ந்த பிற எவற்றில் அவர் ஈடுபட்டாலும் என்றோ ஒருநாள் அவற்றுக்காக அவர் ஏமாற்றம் அடைவார். ஏனென்றால் உலகியலில் எதை ஈட்டினாலும் ஒருவர் இறுதியாக ஏமாற்றத்தை அடைந்தே ஆகவேண்டுமென்பது ஒரு மாறாவிதி.

 

[மாறிலிகள். சித்துராஜ் பொன்ராஜ், அகநாழிகை பதிப்பகம் ,சென்னை]

முந்தைய கட்டுரைசித்துராஜ் பொன்ராஜ் -கடிதம்
அடுத்த கட்டுரைசிங்கப்பூர் இலக்கியம் பற்றி…நவீன்