இன்னும் சில எட்டுகள்…

kanagalatha

 

சிறுகதை தன்னளவிலேயே விசித்திரமான ஒரு இக்கட்டைக் கொண்டுள்ளது. ஏறத்தாழ புகைப்படம் கொண்டுள்ள இக்கட்டுக்கு நிகரானது அது. ஒரு கண நேர வெளிச்சத்தையே அது வீழ்த்த முடியும், வாழ்வின் ஒரு துளியையே அள்ள முடியும். இது அதன் அனைத்து வடிவ சாத்தியங்களையும் வரையறுத்துவிடுகிறது. வாழ்வுக்கணங்களைக் காட்டும் கலை என சிறுகதையை வரையறுக்கும்போது சட்டென்று ஒரு சலிப்பு வந்து சேருகிறது. அப்படி எத்தனை வாழ்க்கைக் கணங்களைப் பார்த்திருக்கிறோம், மீண்டும் மீண்டும் அதே சித்திரங்கள் தானா என்று.

அந்நிலையில் சிறுகதை தன் வடிவஎல்லைக்குள் நின்றபடி தன் இயல்பைக்கடந்து சென்று அச்சலிப்பை வெல்ல வேண்டியிருக்கிறது. சிறுகதை என்னும் வடிவம் உருவான உடனேயே கணநேர வாழ்க்கைச் சித்திரங்கள் வந்து குவியத்தொடங்கின. மறக்க முடியாத பல பெரும் படைப்புகள் வந்தன என்பதை மறுக்க முடியாது. ஒரு காட்சித்தீற்றலில் இருந்து முழு வாழ்க்கையை, ஒட்டுமொத்த வரலாற்றை, மாபெரும் தத்துவ தரிசனத்தையு முன்வைக்க முடியுமென்று சிறுகதை காட்டிவிடும்.

ஆனால் ஏதோ ஒரு எல்லையில் அது தன்னை தான் கடக்க முயல்கிறது. அதன்பொருட்டே அது தன்னைக் கவிதையை நோக்கி நகர்த்திக்கொண்டது. குறியீடுகளையும் படிமங்களைக் கையாளத்தொடங்கியது. குறிப்புணர்த்தல்களின் பல்வேறு சாத்தியங்களை நோக்கி அதன் மூலம் சிறுகதையால் நகர முடிந்தது. இன்றைய சிறுகதையை வாசிக்கும் வாசகன் அதில் ஒரு வாழ்க்கைச் சித்திரம் நிகழ்ந்திருந்ததென்றால் அது சிறுகதையாகிவிட்டது என்ற நிறைவை அடைவான். கூடவே மெல்லிய ஒரு சலிப்பும் அடைவான். கதைகள் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டுமென்ற விழைவு அவனில் ஏற்படும்.

காணும் ஒவ்வொன்றுமே ஏதோ ஒரு வகையில் படிமங்களே எனும்போது ஒரு காட்சியை நிலைக்க காட்டும் புகைப்படமும் சரி ,சிறுகதையும் சரி, மிக எளிதில் படிமங்களை உருவாக்க முடியும். உலகின் மகத்தான கதாசிரியர்கள் அதை சாதித்திருக்கிறார்கள். நவீனச் சிறுகதையின் இன்றைய அறைகூவல் அதுவே.

லதாவின் நான் கொலை செய்யும் பெண்கள் என்ற இத்தொகுப்பில் கணநேர வாழ்க்கைச் சித்திரம் என்னும் இலக்கணமே பொருந்தியுள்ளது. சிங்கப்பூர் வாழ்க்கையின் ஒருகீற்றை நுணுக்கமாக வெட்டி குருதியுடனும் கண்ணீருடனும் முன்வைப்பதில் பெரும்பாலும் எல்லா கதைகளும் வெற்றி பெறுகின்றன. வடிவம் சார்ந்து இக்கதைகள் பிழைபுரிவதில்லை. மிகச்சரியான வாழ்க்கைத் தருணத்தை தொட்டு எடுத்து முன்வைப்பதனால் வாசகன் மேலும் முன்சென்று முழுவாழ்க்கையின் அனுபவத்தையும் தான் அடையவும் வாய்ப்புள்ளது. ஆகவே இச்சிறுகதைத் தொகுதியின் அனைத்து கதைகளையுமே பொதுவாக நல்ல கதைகள் என்று சொல்லிவிடலாம்.

ஆனால் இன்றைய சிறுகதைவாசகனுக்கு இவை இலக்கிய அனுபவமாக ஆவதற்கு மேலும் ஒன்று தேவைப்படுகிறது. உதாரணமாக இத்தொகுதியில் முதல் கதையான அடையாளம். சிங்கப்பூரின் இந்தியாவிலோ இலங்கையிலோ வாழும் ஒரு சாதாரண குடும்பத்தலைவியின் வாழ்க்கையை வாழ்பவனின் கதையே அவளுக்கும் இருக்கிறது .சிங்கப்பூரியன் என்ற சட்டபூர்வ அடையாளம் அவளுக்கும் உண்டு. ஆனால் அதை அவளே ஒவ்வோரிடத்திலும் வலியுறுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆன்மாவால் சென்ற காலத்திலும் உடலால் நிகழ் காலத்திலும் வாழும் திகைப்பு அவளுக்கு இருக்கிறது.

இக்கதையின் குடும்ப சித்திரமும் சரி, இதில் குடும்பத்தலைவி அடையும் அந்நியமாதலும் சரி, தன் அடையாளத்தை வெகுதூரத்தில் இருந்து அவள் நோக்கும் தருணமும் சரி நாற்பதாண்டுகளுக்கு முன்பு அசோகமித்திரன் தன் கதைகளில் மேலும் வலுவாக எழுதிவிட்டவை. அசோகமித்திரனைக் கடந்து அன்றி இச்சித்திரத்தை ஒரு புத்திலக்கிய ஆக்கமாக முன்வைக்க முடியாது.

மழை-அப்பா என்னும் கதையும் பெருமளவு அசோகமித்திரனின் உலகத்திற்குள் செல்வது. அந்த அப்பாவின் கதாபாத்திரம் கூட எதோ ஒருவகையில் அசோகமித்திரனின் தந்தையைப்போலிருக்கிறார். புற உலகில் பிறரிடமிருந்து மிக விலகி அதனாலேயே அக உலகில் மிக அணுகி இருக்கும் ஒருவர். அந்த இணை கோடுகள் எங்கோ ஒரு இடத்தில் மெல்ல தொடும்போது மட்டுமே அந்த அணுக்கத்தின் தீவிரம் புலப்படுகிறது மொத்த வாழ்க்கையிலும் பத்துப் பதினைந்து இடங்களில் மட்டுமே அந்தத் தீண்டல் நிகழ்கிறது. அத்தருணங்களை திறமையுடன் கோர்த்து கதையை அமைத்திருக்கிறார் லதா.

ஆனால் இக்கதையில் அந்த நிலவுப்பயணம் ஒரு நிமித்தம் என்பதற்கு அப்பால் என்ன பொருள் கொள்கிறது என்றே வாசகன் உள்ளம் தேடி சலிக்கிறது. அது கதையின் அன்றாட உண்மையின் தளத்திலிருந்து மானுட உண்மைநோக்கிச் செல்வதற்கான ஒரு வாய்ப்பு. தட்டினால் அங்கு ஒரு சுரங்கம் இருப்பது தெரிகிறது. ஆசிரியையால் திறக்கப்படவே இல்லை.

லதாவின் ‘தமிழுக்கு அமுதென்று பேர்’ மிக்கச்சாதாரணமான கதை. எதிர்காலத்தில் தமிழ் அழிந்துபடக்கூடும் என்னும் ஊகம் மட்டுமே இக்கதையில் உள்ளது. தமிழ் பேச்சுமொழியாக மட்டுமே எஞ்சும் ஒரு சூழலில் அதை கற்கவிழையும் ஏக்கம் மட்டுமே பதிவாக எளிமையான கதை. இத்தகைய ஊகங்கள் வெறும் பிரச்சாரமாக மட்டுமே எஞ்சுகின்றன. எதிர்காலத்தின் அதிபிரம்மாண்ட தகவல்சேமிப்பில் எதுவுமே அழிந்துபடாது என்னும் எளிய அறிவியலுண்மைகூட இந்த தமிழ்ப்பதற்றத்திற்குத் தடையாக இல்லை

லதாவின் இத்தொகுதியில்  வெறும் புனைவு உத்தி மட்டுமேயான இதுவரை போன்ற கதைகளும் சில உள்ளன. அன்றாட வாழ்க்கைச்சித்திரத்தை அளிக்கும் வீடு போன்ற கதைகள் இன்னொருவகையான போதாமையுணர்வை அளிக்கின்றன. இன்றைய கதை இத்தகைய கதைகளை வாசித்துச்சலித்த வாசகனுக்காக எழுதப்படுவது என்பதையே மீண்டும் சொல்லவேண்டியிருக்கிறது.

இத்தொகுதியில் சொல்லப்பட்ட எல்லைக்கு அப்பால் செல்லும் கதைகள் இருவகைப்பட்டவை. ஒன்று ,நாளை ஒரு விடுதலை. அது பணிப்பெண்ணின் அவலத்தைச் சொல்லும் வழக்கமான கதையாகவே ஆரம்பிக்கிறது. ஆனால் முடிவில் வாசகனின் முன்கணிப்பை தாவிக் கடக்கிறது. பாலியல் சுரண்டலை விரும்பும் அப்பணிப்பெண்னின் உளவியலை அவன் ஒரு திகைப்புக்கணமாக உணர்கிறான். தன் அருகே எவருமே அமரத்தயங்குவதை அவள் உணர்ந்துகொண்டிருக்கிறாள். அந்த இல்லத்துப்பெண்மணியால் அவமதிக்கப்படுகிறாள். பாலியல்கவற்சியாகக்கூட எவருக்கும் தோற்றமளிக்க அவளால் முடியவில்லை. வழிநடையில்கூட ‘என்ன ரேட்?’ என்றுதான் சீண்டுகிறார்கள். அந்நிலையில் அந்த பாலியல் உறவு அவளுக்கு ஒரு விடுதலை. ஒரு தாண்டிச்செல்லல். ஒரு சுய உறுதி.

ஆனாலும் இத்தகைய கதைகள் முந்தைய ‘துளிச்சித்திரம்’ என்னும் கதைமுறைமைக்குள் நிற்பவையாகவே உள்ளன. அவற்றில் ஒரு புதிய வாழ்க்கைக்கூறை இணைப்பவற்றினூடாக அவை கடந்துசெல்கின்றன அவ்வளவுதான். ஆனால் பயணம், அறை, படுகளம் போன்ற கதைகள் நவீனக்கதைக்குரிய படிமத்தன்மையை நோக்கிச் செல்கின்றன. படுகளம் கூறுமுறையால் சற்று மிகையாகிவிட்டிருக்கிறது. படிமம் என்பது சொல்லப்படாத நிலையிலேயே பொருள் அளிப்பது. சொல்லப்படும்போது அது வெறும் அடையாளமாக ஆகிவிடுகிறது. செண்பகவள்ளியில் உக்கிரம் கொண்டு எழும் தொன்மையை இன்னதென்று சொல்லாமல் நிறுத்திவிட்டிருக்கலாம்.

அனைத்துவகையிலும் கச்சிதமான கதை பயணம். ஒரு டாக்ஸியில் தமிழ்ப்பெண்ணும் சீன ஓட்டுநரும் பயணிக்கிறார்கள். இருவேறு பண்பாடுகள். அவை உரையாடிக்கொள்கின்றன. சிங்கப்பூரில் சீனரும் தமிழரும் பெரும்பாலும் சந்தித்துக்கொள்ளும் இடம் டாக்ஸி மட்டுமே என்பதனால் மிக நம்பகமாக அமைந்த கதை இது. அந்த உரையாடல் பரஸ்பரம் அறிவதற்காக நிகழ்த்தப்படுகிறதா இல்லை ஒருவரை ஒருவர் தவிர்ப்பதற்காகவா என்னும் வினாவை எஞ்சவைத்தபடியே  கதை முடிகிறது. கடைசியில் மிக இயல்பான ஒரு கூலிபேரம்பேசல் கதையின் அந்த ’பண்பாட்டுப்பரிமாற்ற’த்தை மண்ணுக்குக் கொண்டுவந்துவிடுகிறது.

நட்பான உரையாடல் மூலம், எளிய பரஸ்பரப்புரிதல்கள் மூலம் எப்படி திறமையாக வேலியிட்டுக்கொள்ளமுடிகிறது என்று காட்டுவதனாலேயே முக்கியமான கதையாக அமைந்துள்ளது பயணம்.

லதாவின் கதைகள் சிற்றிதழ்களில் எழுதப்படும் பொதுவான  ‘நல்ல சராசரி’ கதைகள். ஒரு வாசகன் அவரை நினைவுகூர்வது அவருடைய தனித்தன்மையால்தான் இருக்கும். அது இன்னும் உருவாகாமல் சற்று முன்னால் எங்கோதான் உள்ளது.

முந்தைய கட்டுரைசேவை மோசடிகள்
அடுத்த கட்டுரைமலேசியச் சிறுகதைப்பட்டறை குறித்து…