பொதுவழியின் பெரும்சலிப்பு

Short Stories Full

ஜெயந்தி சங்கரின் புனைவுலகைப்பற்றி எழுதுவது மிகக்கடினமானது. குறுகியகாலத்தில் ஏராளமாக எழுதியிருக்கிறார். இணைய இதழ்களின் காலமாதலால் அவை தொடர்ந்து பிரசுரமாகியும் உள்ளன. அவரது சிறுகதைகளின் பெருந்தொகை தமிழின் மாபெரும் சிறுகதை ஆசிரியர்களின் தொகுதிகளை விடப்பெரியது. அனைத்துக்கதைகளையும் வாசித்துவிட்டு முழுமையான கருத்துச் சொல்வதே முறை என்றாலும் அவரது பெருந்தொகுதியான ஜெயந்திசங்கர் கதைகள்என்னும் நூலின் கதைகளை மட்டும் வைத்து இவ்விமர்சனத்தை முன்வைக்கிறேன்.

ஜெயந்திசங்கரின் புனைவுலகம் தமிழகம் சார்ந்தது. அவர் எழுதும் பகைப்புலம் மட்டுமே சிங்கப்பூர். தமிழில் அவருக்கு முன்னோடிகளாக எவரைச் சொல்லமுடியும்? இரு பெயர்களைச் சுட்டலாம். ராஜம் கிருஷ்ணன் மற்றும் வாசந்தி. இருவரும் இருவேறு காலகட்டங்களைச் சார்ந்த எழுத்துமுறைகளைக் கொண்டவர்கள், ஆனால் ஒரே வகையானவர்களும் கூட. இருவக்குமான ஒற்றுமைகள் புறவய லௌகீக நோக்கு, வேறுபட்ட கதைக்களங்களைத் தேடிச்செல்லும் இயல்பு என வகுத்துக்கொள்லாம். ஜெயந்திசங்கரிலும் இவ்வியல்புகள் உள்ளன

ராஜம் கிருஷ்ணன் கலைமகள் யுகத்தைச் சேர்ந்தவர். ஐம்பதுகளில் அதுவரை இலக்கிய இதழாக இருந்த கலைமகள் மாத இதழ் தன்னை குடும்ப இதழாக மாற்றிக்கொண்டது. அதில் ஏராளமான பெண்கள் எழுத ஆரம்பித்தனர். அதிகமும் பிராமணப்பெண்கள். அநுத்தமா, எம்.ஆர்.ராஜம்மா, வசுமதி ராமசாமி, கமலா சடகோபன் என பெண்ணெழுத்தாளர்களின் ஒருவரிசை உண்டு. அவர்களில் வந்தவர் ராஜம் கிருஷ்ணன். கலைமகள் எழுத்தாளர்களில் அதிக்ப்புகழ்பெற்றவரும் அவரே.

கலைமகளின் பெண்எழுத்தாளர்களின் பொது அம்சம் என்ன? அவர்கள் நேர்த்தியானஉள்ளம் கொண்டவர்கள், ‘குடும்பபெண்கள்என்று சுருக்கமாகச் சொல்லலாம். அவ்வகை எழுத்தையே கலைமகள் வளர்த்து எடுத்தது. இலக்கியத்தில் வளைந்த நோக்குதான் எழுத்தாளனை தனித்துக்காட்டுகிறது. பொதுப்பார்வையை விட்டு விலகிச் செல்வது, எவரும் பார்க்காதவற்றைப் பார்ப்பது. அந்த அம்சம் கலைமகள் கதாசிரியைகளிடம் இல்லை. அவர்களின் ஒழுக்கநோக்கு, அறவுணர்வு நாம் அனைவரும் அறிந்ததாகவும் ,ஏற்றுக்கொண்டதாகவும் இருக்கும். வாசகன் அவற்றில் ஓர் எளிய நிறைவை மட்டும் அடையமுடியும். அவனை உலுக்கும், அவனை திறக்கும் எதுவும் அவற்றில் நிகழாது

ராஜம் கிருஷ்ணன் ஒரு சிறிய அம்சத்தால் அவர்களிடமிருந்து வேறுபட்டவர். அவர் பிற கலைமகள் எழுத்தாளர்களைப் போல குடும்பத்திற்குள் நின்று எழுதவில்லை. தூத்துக்குடித் துறைமுகப் பின்னணியிலும், கோவா சுதந்திரப் போராட்டப் பின்னணியிலும், குந்தா அணைக்கட்டு கட்டும் சூழலிலும் வாழ்ந்தவர். ஆகவே அந்தந்த நிலப்பகுதிகளைப் பற்றியும் மக்களைப்பற்றியும் கள ஆய்வுசெய்து அவற்றை பகைப்புலமாகக் கொண்டு கதைகளை எழுதினார். கரிப்புமணிகள், வளைக்கரம், குறிஞ்சித்தேன் போன்ற நாவல்கள் முறையே மேற்குறிப்பிட்ட பின்னணிகொண்டவை. அவரது கள ஆய்வு என்பது புறவயமான தகவல்களை நேரில் சென்றும் நூல்களில் இருந்தும் சேகரிப்பது மட்டுமே. இந்நாவல்கள் அந்நிலப்பகுதியின் வாழ்க்கையை இதழாளர் புகைப்படச்செய்திகளாக எழுதியதுபோல அமைந்திருக்கும்

வாசந்தி ராஜம் கிருஷ்ணனின் அடுத்தமுகம். கலைமகள் எழுத்தாளர்களின் பெரும்பாலான இயல்புகள் வாசந்தியிடமும் இருப்பதைப் பார்க்கலாம். முக்கியமாக மரபுசார்ந்த ஒழுக்க, அற நோக்கு. மானுட இயல்பையும், வாழ்க்கைத் தருணங்களையும் பொதுப்போக்கில் வைத்து மதிப்பிடும் இயல்பு. அரசியல், சமூகச்சூழல் அனைத்திலும் பொதுவான கருத்துக்களையும் முடிவுகளையும் மட்டுமே சென்று தொடும் பார்வை. ராஜம் கிருஷ்ணனைப் போலவே பல்வேறு வாழ்க்கைச் சூழல்களுக்குச் சென்று கள ஆய்வு செய்து எழுதப்பட்டவை வாசந்தியின் நாவல்கள்.

பஞ்சாப் கிளர்ச்சி [மௌனப்புயல்], இலங்கைப்போராட்டம் [நிற்க நிழல் வேண்டும்] போன்ற அவரது நாவல்களில் ஒரு செய்தித்தாள் வாசகன் அறிந்த புறவய உண்மைகள் மட்டுமே நிகழ்வுகளாக நேர்த்தியாக விரிக்கப்பட்டிருக்கும். அவற்றுக்கு அப்பால் அகவயமான ஓர் அறிதலை அவை அளிப்பதில்லை. ஆகவே அவை ஆவணமதிப்பும் புனைவு ஒருமையும் கொண்ட ஆக்கங்களாக இருக்கையிலேயே இலக்கியப் படைப்புகள் அளிக்கும் முழுமைநோக்கை அளிக்காதவையாக, வாசகனுடன் சேர்ந்து வளராதவையாகவும் இருக்கும்.

ஜெயந்தி சங்கர் சிங்கப்பூரை மையமாகக் கொண்டவர்.  சீனப் பண்பாட்டைக் குறித்து அவர் எழுதிய பெருஞ்சுவருக்குப் பின்போன்ற நூல்கள் தமிழுக்கு முக்கியமானவை. மிதந்திடும் சுயப்பிரதிமைகள்என்னும் தலைப்பில் அவர் மொழியாக்கம் செய்த சீனக் கவிதைககளின் பெருந்தொகை குறிப்பிடத்தக்க பங்களிப்பு. தமிழ்ச்சூழலில் இப்படி விடாப்பிடியான தீவிரத்துடன் பண்பாட்டுத்தளத்தில் பணியாற்றுபவர்கள் மிகவும் குறைவு. குறிப்பாக பெண்கள் மேலோட்டமான ஓரிரு வரிக் கவிதைகளை எழுதிவிட்டு உலகை வெல்லக் கிளம்பும் இன்றைய சூழலில் இது ஒரு அபூர்வ நிகழ்வே.

மிகச்சரியாக ஜெயந்திசங்கரை ராஜம் கிருஷ்ணன், வாசந்தி ஆகியோரின் நீட்சியாக முன்வைக்கலாம். மாறுபட்ட களங்களுக்குப் பதிலாக சிங்கப்பூர் என்னும் களத்தை மட்டுமே ஜெயந்தி எடுத்துக்கொள்கிறார். ஆனால் அதற்குள் வெவ்வேறு வாழ்க்கைத் தருணங்களை அவர் உருவாக்குவதில்லை. எளிமையான அன்றாட வாழ்க்கைக் கதைகள்தான். அவை சிங்கப்பூரில்தான் நிகழவேண்டும் என்பதில்லை. அவற்றை சென்னைப் புலத்திலும் எழுதலாம். அவ்வப்போது சில லாக்களும் சில சிங்கப்பூர் பெயர்களும் மட்டுமே வந்து செல்கின்றன. சிங்கப்பூர் சீனர்களைப்பற்றிய தன் ஆய்வுகளிலிருந்துகூட அவர் கருக்களை எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை.

*

ஜெயந்தி சங்கர் தொடர்ச்சியாக எழுதுவதனால் அவரது மொழி இயல்பான ஒழுக்குடன் உள்ளது. எளிய இதழியல் தேய்வழக்குகள் இல்லாத நடை பொதுவாசகனை அவருடைய கதைகளை வாசிக்கத்தக்கவை என எண்ணச்செய்கிறது. கதைமாந்தருக்காக ஆசிரியர் குரலெழுப்புவது, கதைச் சுருக்கத்தைச் சொல்வது, கதைக்கருவை கதைக்குள் விரித்துரைப்பது போன்ற ஆரம்பகட்டப் பிழைகள் எவையும் பெரும்பாலான கதைகளில் இல்லை. பலதரப்பட்ட வாழ்க்கைச்சித்திரங்கள் என்னும் வகையில் இவை ஆர்வமூட்டும் ஆக்கங்கள்.

வடிவரீதியாக ஜெயந்தி சங்கரின் கதைகளில் உள்ள முக்கியமான குறை என்பது இவை பெரும்பாலும் இரண்டாம்கட்டக் கண்டடைதல் நிகழாத வாழ்க்கைச்சித்தரிப்புகள் மட்டுமே என்பதுதான். இக்காரணத்தால் பெரும்பாலான கதைகளில் சிறுகதைக்கு இன்றியமையாத இறுதிக்கணம், உச்சம் , திருப்பம், மேலெழல் நிகழ்வதே இல்லை. வாழ்க்கையின் ஒரு கணத்தை கதை சுற்றிச்சுற்றி வந்து சித்தரிக்கிறது. வாசகன் அவற்றில் தனக்கென ஒரு வாசல் திறக்கக்கூடும் என எதிர்பார்க்கும் தருணத்தில் கதை எளிமையான கருத்து ஒன்றை, அல்லது சாதாரண உணர்வுநிலை ஒன்றைச் சொல்லி முடிந்துவிடுகிறது. மீண்டும் மீண்டும் இவர் கதைகளில் இந்த ஏமாற்றம் நிகழ்வதனால்தான் இத்தனை எழுதிய இந்தப் படைப்பாளி வாசகர்களின் கவனத்தில் நிற்காமல் போகிறார்

இந்த அம்சத்தை வெறும் வடிவச்சிக்கல் என்று சொல்லிவிடமுடியாது. ஆசிரியையின் வாழ்க்கைநோக்கு சார்ந்த பிரச்சினை இது. அவருக்கு வாழ்க்கைமேல் மையச்சாலை சார்ந்த பார்வை மட்டுமே இருக்கையில் கதையில் மேலதிகமாக ஒன்று வெளிப்படமுடியாது. அன்றாட வாழ்க்கை சார்ந்த எளிய சிக்கல்களும் தீர்வுகளுமே அவர் உள்ளத்தை நிறைத்திருக்குமென்றால் கதையை கவித்துவம் நோக்கி, தத்துவார்த்தமான முழுமைநோக்கு நோக்கிக் கொண்டுசெல்லும் எழுச்சி நிகழமுடியாது.

ஜெயந்தி சங்கரின் கதைகளில் இருக்கும் இன்னொரு முக்கியமான அழகியல் குறைபாடு அவை கட்டற்ற செய்தியோடைகளாக இருக்கின்றன என்பது. கதைமாந்தரின் பார்வை வழியாக, எண்ண ஓட்டம் வழியாகச் சொல்லப்படும் புறச்சூழல் எவ்வகையில் கதையின் உணர்வுகளுக்கோ கதைமையத்திற்கோ சம்பந்தமுள்ளது என்பதை வாசகன் திணறத் திணற யோசிக்க வேண்டியிருக்கிறது. பெரும்பாலான கதைகள் ஒரு சூழலில் உள்ள அனைத்தையும் சொல்லிச் செல்கின்றன. அவற்றுடன் இணைந்த எண்ணங்கள் அனைத்தும் வந்து செல்கின்றன. கதை அலைபாய்ந்து பலவகையான குரல்களில் முட்டித் திரும்பி மீண்டு வந்து முடிவை அடைகிறது.

வாசந்தியின் கூறுமுறைக்கு மிக அணுக்கமானது ஜெயந்தி சங்கருடையது. புறக்காட்சிகளும் கூடவே நினைவுகளும். இந்த வடிவம் எல்லாவற்றையும் உள்ளே கொண்டு வரும் வசதியை அளிக்கிறது. ஆனால் கதைமையம் சார்ந்து செயல்படாவிட்டால் அனைத்தையும் அள்ளி அடைத்த பை போல கதையை ஆக்கிவிடும் அபாயம் உண்டு. ஜெயந்தி சங்கரின் கதைகள் பெரும்பாலும் அனைத்துமே இக்காரணத்தால் சரிவடைந்தவை என நினைக்கிறேன்.

ஜெயந்தி சங்கரின் கதைகளின் உள்ளடக்கம் சார்ந்து ஒரு விரிவான விவாதம் நிகழ்த்துவது எளிதல்ல, அத்தனை கதைகள் உள்ளன. மேலே குறிப்பிட்ட பொதுமைப்படுத்தலை அடையாளம் காணும் சிலகதைகளை மட்டும் சுட்டிச் செல்லலாம் என நினைக்கிறேன். முகங்கள் கதையில் சார்ஸ் நோய் சிங்கப்பூரைத் தாக்கும் சித்திரம் உள்ளது. அதற்கு பொது மக்கள் காட்டும் எதிர்வினை, செவிலியரை அவர்கள் நோயைப் பரப்பிவிடுவார்களோ என எண்ணி அருவருப்பது என விரிந்து விரிந்து செல்லும் கதை செவிலியரின் பணியை அம்மக்கள் உணர்வதைக் குறித்த குறிப்புடன் பன்னிரண்டு நீண்ட பக்கங்களுக்குப் பின் முடிகிறது.

சிறுகதையின் களம் சார்ஸ் என்றால் அதன் அனைத்து உளநிலைகளையும் கதைக்குள் சொல்லிவிடவேண்டும் என்பதில்லை. அந்நோய் நோய் என்பதற்கு அப்பால் என்னவாக ஆழ்மனப்பொருள் கொள்கிறது என்பதே கதையில் முக்கியம். உண்மையில் அக்கதை தொடங்கியதும் சீனப்பக்கத்து வீட்டுக்காரி கதைநாயகியான செவிலியின் வீட்டு முகப்பில் கிருமிநாசினி தெளிக்கும் சித்திரம் வந்தபோது நான் அக்கதை மானுட உள்ளத்தை நிறைத்திருக்கும் பிரிவினை எண்ணம், ஐயம் ஆகிய நோயை நோக்கி நீளப்போகிறது என்றே எதிர்பார்த்தேன். ஆனால் சார்ஸ் அப்படியே புறவயமாக விரிவாகி செவிலியரின் சேவைமகத்துவம் வரை சென்று முடிந்தது.

மிக இயல்பாகவே பெருவழியுண்மைகளின் தடம்நோக்கித்தான் கதை எழுதும்போது ஆசிரியனின் மனம் செல்லும். எழுத்தாளன் எண்ணவேண்டியது அவை ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டனவே, இதழியலில் அவை மேலும் சிறப்பாக எழுதப்படமுடியுமே என்றுதான். உதாரணம் கணக்கு’. பணிப்பெண்ணைச் சுரண்டும் உரிமையாளரின் கதை. பணிப்பெண்களின் துயரங்கள். இறுதியில் அவள் கொள்ளும் எதிர்ப்பு. ஐம்பதாண்டுகளுக்கு முன்பு மலேயா தோட்டங்களில் நிகழ்ந்த சுரண்டலும் இப்படித்தான் எழுதப்பட்டது. இன்றும் அதே பாணியில் வேறு களத்தில் ஒரு கதை என்பது சலிப்பூட்டுவது. [ஆனால் மலேயா தோட்டம் முதல் இன்றைய கணிப்பொறி காலம் வரை அதே சுரண்டல் தொடர்வதை ஒரு கதை சுட்டமுடியும் என்றால் அதன் தளம் வேறு]

அந்தரகாந்தாரத்தைக் காதலிப்பவள் இறந்த மகளின் வீணையைக் கொண்டு சென்று எங்காவது கொடுத்துவிட முயலும் தந்தை, கலங்கிப் போன தாய் ஆகியோரின் கதை. அதை கொடுத்துவிட முடியாது என்பதும், கொடுத்தாலும் அதன் இசை நீடிக்கும் என்பதும்தான் அக்கதை என்பதை இலக்கிய வாசகன் எளிதில் ஊகித்துவிட முடியும். ஜானகிராமன் காலம் முதலே எழுதப்பட்ட கதைதான். அந்நிலையில் அதில் பிறிதொன்றைக் கண்டடைய வேண்டியிருக்கிறது. அந்த வீணை என்னவாக விரிய முடியும் என்பதே அக்கதையின் புதிய சவால்

ஜெயந்தியின் ஒவ்வொரு கதையை வாசிக்கும் போதும் இதில் அந்த பிறிதொன்று நிகழாதா என்னும் ஏக்கமும் இறுதி ஏமாற்றமும்தான் மிஞ்சுகிறது. தம் மக்கள் இன்னொரு உதாரணம். சிங்கப்பூரில் இருக்கும் தந்தை தன் மகளை பார்க்க இந்தியா செல்லவே முடியவில்லை. ஒருவருடம் கழித்து செல்லும்போது குழந்தை தவழும் வயதைக் கடந்துவிட்டாள். அவளை வலுக்கட்டாயமாகத் தவழவைக்க அவர் முயல்கிறார். கதை அங்கே முடிகிறது

இக்கதையை வாசிக்கும் போது ஜெயந்தியின் எழுதுமுறையில் அல்ல மையப்பிரச்சினை, அவர் கதையை உருவகிக்கும் முறையில்தான் என்ற எண்ணம் எழுந்தது. அவர் கதைக்கரு தன்னில் வந்ததுமே எழுத ஆரம்பிக்கிறார். ஆகவே வழக்கமான ஒரு தடத்தில் சென்று விழுந்து விடுகிறது கதை.  கதையின் பல்வேறு வாய்ப்புகளை அவர் தவறவிட்டுவிடுகிறார்

தம்மக்கள் கதையின் மையம் குழந்தை தவழ்வதுதான். தவழ்தல் என்னும் அனுபவத்தை மட்டுமே கதை மையமாக்கிருக்கவேண்டும். தவழும் குழந்தை தந்தைக்கு என்னவாகப் பொருள் கொடுக்கிறது என்பதே கதைவிரிவு. அதைத்தான் அவர் இழக்கிறார். அவ்விழப்பின் பல தளங்களே அதை இலக்கியமாக ஆக்கும். மாறாக ஊருக்கு வரமுடியாத சிக்கல், ஊரும் உறவும் பேசும் புறணி, கணவன் மனைவி உரையாடல், சிங்கப்பூரின் குடியேற்றச் சிக்கல்கள் என அக்கதையின் அத்தனை லௌகீகத்தளங்களையும் சொல்லிச் சென்று சாதாரணமாக முடிகிறது கதை. தவழ்தல் சந்தடிசாக்கில் வந்துசெல்கிறது.

கனகச்சிதமான ஒரு ராஜம் கிருஷ்ணன் கதை சுநாதர்’. தான் போகும் புதிய இடங்களில் உள்ள விசித்திரமானமனிதர்களைப்பற்றி ஒரு கோட்டுச்சித்திரத்தை அளிப்பது அவர் பாணி. பெரும்பாலான கதைகளில் அந்தக் கோட்டுச்சித்திரம் ராஜம் கிருஷ்ணனின் பிரமையாகவே இருக்கும். புதுநிலத்தின் புதுமைக்கவர்ச்சிகளில் ஒருபகுதியே அவருக்கு அங்குள்ள மக்களும்கூட. ஜெயந்தியின் இந்தக்கதை தமிழில் அரைநூற்றாண்டுக்கு முன் எழுதப்பட்டது என்று சொல்லியிருந்தால் வாசகன் எளிதில் நம்பிவிடுவான்

பொது உண்மைகளை அன்றாட வாழ்க்கைச்சித்திரங்கள் வழியாகச் சொல்லும்போது கதைககளில் வகைமாதிரிக் கதாபாத்திரங்கள் வரத்தொடங்குகின்றன. வெறுப்புக்குரியவை, அன்புக்குரியவை என எளிதில் வகைப்படுத்தத் தக்கவை அவை. ஆழங்களற்றவை. சிக்கல்களும் ஊடுபாவுகளும் இல்லாதவை. வகைமாதிரிக் கதாபாத்திரங்களில் இருவகை. அரசியல் சார்ந்து எழுதுபவர்கள், கருத்துக்கள் சார்ந்து எழுதுபவர்கள் கொள்கைகளையோ கருத்துக்களையோ பிரதிநிதித்துவம் செய்யும் வகை மாதிரிகளை உருவாக்குகிறார்கள். ஜெயந்தி போன்றவர்கள் பொதுப்புத்தியில் உள்ள வகை மாதிரிகளை எடுத்துக் கொள்கிறார்கள்

உதாரணம் நிழலின் குரல்’. தந்தை, மகன், அம்மா ஆகியோரின் கடிதங்களால் ஆன கதை. கடிதவரிகளே மிகச் சம்பிரதாயமானவையாக உள்ளன. கடிதம் வழி கதை என்னும் உத்தியேகூட பழமையானது. இந்தக்கதையில் வரும் மகன் அப்பாவுடன் கொள்ளும் உரசல் மிகமிக வழக்கமானது. வழக்கமான தியாக அப்பா ஒரு வகைமாதிரி. இதில் சுயநலம் மிக்க இன்னொரு அப்பாவின் வகைமாதிரி தோன்றுகிறது.

இத்தகைய கதைகளுக்கு ஒரு பயன்மதிப்பு சந்தையில் உள்ளது. ஆகவேதான் வணிக இதழ்களில் இவை எழுதிக் குவிக்கப்படுகின்றன. இவை வெகுஜன நுண்ணுணர்வுகளை பிரதிநிதிகரிக்கின்றன, வெகுஜன விழைவுகளை நிறைவுசெய்கின்றன. உதாரணம் செம்பாதி என்னும் கதை. கணவன் மனைவியைவிட அதிகமாக செடிகளுடன் நேரம் செலவிடுகிறானோ என அவள் எண்ணுகிறாள். தூக்கமாத்திரையை விழுங்கி தற்கொலை செய்ய முயல்கிறாள். அவன் அவள் தனக்குத்தேவை என்று உணர்ந்து அச்செடிகளை வேண்டாமென முடிவுசெய்கிறான்.

காலையில் எழுந்ததும் சமையலறைக்குள் போய் மீனாவைப் பார்த்ததைக் கவனித்தவள் மேலும் பிரகாசமானாள். அதேபோல மாலையிலும் இனி மீனாவை அடிக்கடி வெளியே கூட்டிக்கொண்டு செல்லவேண்டும் என்று மனதுக்குள் தீர்மானித்துக்கொண்டேன். அவளோடு என் நேரத்தையெல்லாம் செலவிடவும்தான். அவளுக்காக, அவள் யதார்த்ததை உணரும்வரை. அதைவிட முக்கியமாக கவிதாவுக்கும் சவிதாவுக்கும் அம்மா வேண்டுமே, அதற்காகஎன அந்தக் கணவன் எண்ணும்போது கதை முடிகிறது.

இக்கதை குடும்பமனைவிகளுக்குப் பிடிக்கும். ஏனென்றால் அவர்களுக்குரிய எளிய மெல்லுணர்ச்சி நேரடியாகவே இதிலுள்ளது. ஆனால் எந்தக்கணவனும் நேரத்தை எல்லாம்மனைவிக்காகச் செலவிட முடியாது. செலவிட்டான் என்றால் அவன் மனநோயாளி ஆகக்கூடும். கணவன் செடிகளுடன் நேரம் செலவிட்டான் என தற்கொலைக்கு முயலும் மனைவிக்குத் தேவை அன்பு அல்ல, நல்ல உளவியல் சிகிழ்ச்சை. இந்த அசட்டுத்தனமான உலகப்பார்வையைத்தான் நம் வார இதழ்களில் பெண் கதாசிரியைகள் எழுதித்தள்ளுகிறார்கள். ரமணி சந்திரனும் முத்துலட்சுமி ராகவனும் எழுதும் கதைகளின் உலகிலேயே ஜெயந்தியின் பெரும்பாலான கதைகள் உலவுவது மீண்டும் மீண்டும் ஏமாற்றமளிக்கிறது

நான் சிங்கப்பூரில் பார்த்த முக்கியமான விஷயம் அங்குள்ள பலகணித்தோட்டங்கள். சில கட்டிடங்களைச் செங்குத்தான பூங்காக்கள் என்றே சொல்லலாம். கட்டிடக்காடான சிங்கப்பூரில் இந்தச்சிறு பூங்காக்கள் என்னவாகப் பொருள்படுகின்றன என்பது மிகமுக்கியமான கேள்வி. அவை அளிக்கும் ஆறுதல் என்ன? அவை அவற்றை வளர்ப்பவர்களுக்குள் வாழும் காட்டின் துளிகள்தானா? எத்தனை கவித்துவச் சாத்தியங்கள். ஆனால் செடிகளை தூக்கிப் போட்டு மனைவியை கொஞ்சு என்னும் எளிய ஆணையாக ஒரு கதை எழுதப்படுமென்றால் அதை எப்படி எடுத்துக் கொள்வது?

கிட்டத்தட்ட நூறு கதைகள். மூன்று குறுநாவல்கள் கொண்ட இத்தொகுதியை இரண்டு நாட்கள் மொத்தம் எட்டு மணிநேரம் எடுத்துக்கொண்டு வாசித்தேன். [அதிவேக வாசகனாகிய எனக்கு இது மிகநீண்டநேரம்] என் வாசிப்பை அடுத்தகட்டம் நோக்கிக் கொண்டுசெல்லும் ஒருகதைக்காகத் தேடித்தேடி எரிச்சல் எழப்போன தருணத்தில் என்னை வென்று மீட்டேன். ஒரு கட்டத்தில் இயல்பானேன். ஜெயந்தி சங்கரின் அளவே இதுதான் என தெளிந்தேன்.

ஜெயந்தி சங்கர் எழுதிக்கொண்டிருப்பவை தமிழ் வணிக எழுத்தின் எளிய வகைமாதிரிகள் என அவர் உணராமல் முன்னகர்தலே சாத்தியமில்லை. இன்றைய நிலையில் இக்கதைகள் எவற்றுக்குமே நவீனத் தமிழிலக்கியப் பரப்பில் குறிப்பிடத்தக்க இடம் இல்லை. மீண்டும் மீண்டும் உதாரணங்களைக் காட்டலாம். மறுபக்கம் விவாகரத்தான பெண்ணை அவள் மகளுடன் மணந்து கொண்ட ஒருவரின் கோணத்தில் விரிகிறது. தன் பெண்ணை சிங்கப்பூருக்கு அழைத்துவந்து படிக்கவைக்க அவள் தந்தை விரும்புகிறார் என்பது முடிச்சு

அதைச்சூழ்ந்து எல்லா உணர்ச்சிகளையும் மிகமிகப் பழக்கமான வகையில் உருவாக்கிக் கொண்டு செல்கிறார் ஜெயந்தி சங்கர். அவள் தாயின் கணவர் அவள் தன்னை விட்டுச் சென்றுவிடுவாரோ என பதற்றமடைகிறார். மகள் நீதான் என் அப்பா. இன்னொருவரை அப்பா என்று அழைக்கமுடியாதுஎன கண்கலங்குகிறாள். கடைசியில் அந்த அப்பா அவரது இரண்டாம் மனைவி முதல் மனைவியின் மகளை வீட்டில் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லும் இடத்தில் கதை முடிகிறது.

இந்தக்கதையின் முடிச்சே மிகச்சாதாரணமானது, முன்பும் பலரால் மீளமீள எழுதப்பட்டது. அந்த முடிச்சைக்கூட ஜெயந்தி கையாண்டிருக்கும் விதம் இலக்கியத்திற்குரிய வழி அல்ல. பிரச்சினைக்கு முடிவு கதையில் ஒரு கதாபாத்திரம் மனம் மாறுவது அல்ல. அல்லது அந்தப் பிரச்சினை ஒத்திப்போடப்படுவது அல்ல. குருதியுறவுக்கும் ஏற்புறவுக்குமான முரண்பாடு. உறவு என்பது உண்மையில் என்ன என்னும் வினா. ஒரு மனம் உறவில் விரிய இன்னொன்று உறவில் சுருங்கும் வாழ்க்கையின் எதிரெதிர் நகர்வு. எதுவுமே நிகழவில்லை இக்கதையில்.

பெருந்தொகையாக கதைகளைச் சேர்க்கும்போது நிகழும் அபத்தங்களும் இத்தொகுதியில் உள்ளன. பார்வை ஒன்றே போதுமே என்னும் கதை பள்ளிக்குழந்தைகள் எழுதியது போலிருக்கிறது. ஒரு பெண் பார்வையிழக்கிறாள். அப்பா அம்மா கஷ்டப்படுகிறார்கள். இப்படி பல வருட வாழ்க்கையை சுருக்கி தட்டையாகச் சொல்லிவிட்டு அவள் பார்வையிழந்தவர் பள்ளியில் வேலைக்குச்செல்கிறாள் என்று நீள்கிறது கதை. அங்கே ஒரு குழந்தை வெள்ளை என்றால் என்ன என்று கேட்டபோது என்ன சொல்வது என தடுமாறுகிறாள். பஞ்சைப்போல என்று சொல்லமுடியும். வெள்ளையாய் சிரித்த அவன் சிரிப்பைப்போல என்று சொன்னால் ஒருவேளை புரிந்துகொள்வானோ?’ என முடிகிறது ஆசிரியையின் ஆர்வம்

விழியிழந்தோரின் உலகம் பற்றி விழியுடையவர் சொல்லும் அத்தனை தேய்வழக்குகளும் கொண்டிருக்கிறது இக்கதை. உண்மையில் அவர்கள் சொற்பொருள் கொள்ளும் விதமே வேறு. பார்த்துநாளாச்சேஎன விழியிழந்தோர் சாதாரணமாகச் சொல்வார்கள். பச்சை இலைஎன அவர்கள் குறிப்பிடுவார்கள். பிறிதொருவகையில் அவர்கள் அதை வகுத்து வைத்திருப்பார்கள். மொழியை விழியின்மை சந்திப்பது மானுட உள்ளத்தின் சாத்தியங்கள் வெளிப்படும் தருணம்.

ஜெயந்தியின் கதைகளில் விவாகரத்தும் அதற்குப்பின் உள்ள வாழ்க்கையும் அடிக்கடி பேசுபொருள் ஆகின்றன. சுயம் விவாகரத்தான ஒரு பெண் இனி எனக்காகவும்தான் வாழ்ந்து பார்க்கலாமேஎன நினைக்கத் தொடங்கும் எளிய வரியில் முடிகிறது. அதுவும் அவள் தொலைபேசியில் அந்த எண்ணத்தை தன் அப்பாவிடம் சொல்வதுபோல. நான் இதே கதையை ஐம்பதுதடவைக்குமேல் வெவ்வேறு பெண்கள் எழுதி வாசித்திருக்கிறேன் . இதே முடிவைக்கூட!

உண்மையில் இது எவ்வளவு சிக்கலானதாக இன்றும் உள்ளது. நம் பண்பாடு பெண்ணுக்கு அவள் உடலே அவள் என கற்பிக்கிறது. உடல் சார்ந்த பிரக்ஞையே பெண்ணின் சுயமாக உருவாகி வருகிறது இங்கு. அவள் ஒரு திருமணத்திலிருந்து வெளியேறும்போது உடலை மீட்டுக்கொள்வது எப்படி என்பதே மிகப்பெரிய அறைகூவலாக உள்ளது. தனிப்பட்ட முறையில் எனக்கு வாசகியர் பலர் இதைச் சொல்லியிருக்கிறார்கள். அவள் உடல் திருமணத்திற்கு முந்தையது அல்ல என்னும் உணர்வு அவளை படுத்துகிறது. அவள் அதை வெல்லாமல் தன் சுயத்தை அடைவதில்லை.

ஓர் உறவைக் கடந்துசெல்லும்போது கசப்பும் உவப்புமான நினைவுகளை என்ன செய்வது என்னும் கேள்வி இன்றும் உள்ளது. சிறிய விடைகளைச் சொல்லிவிடமுடியாது அதற்கு. விவாகரத்தான என் வாசகி ஒருத்தி எழுதினாள். அவள் மிகமிக வெறுக்கும் முன்னாள் கணவனின் செயல்கள் அல்ல அவளைப் படுத்தி எடுக்கும் நினைவாகத் தொடர்வது. அவனுடன் அவள் கொண்ட காமத்தின் கணங்களில் அவள் உண்மையாகவே மகிழ்ந்து திளைத்திருந்தாள் என்பதுதான். ஒற்றைச்சொல்லில் கடந்துசெல்லும் எளிய உளச்சிக்கல் அல்ல இது. அதற்குள் கன்னிமையை, உடலொழுக்கத்தை, பால் அடையாளத்தை வரையறுத்துப்பேணிய ஆயிரமாண்டுப் பண்பாட்டின் அழுத்தம் உள்ளது

இன்று ஒருபக்கம் இத்தகைய கடும் இக்கட்டுகள் வாழ்க்கையை அலைக்கழிக்கும்போது ஏன் எழுதப்படும் கதைகள் இத்தனை எளிமையான உணர்வுநிலைகளும் தீர்வுகளும் கொண்டவையாக உள்ளன? ஏனென்றால் நான் முன்னரே சொன்ன அந்த நேர்வழி நோக்குதான். கலைமகளில் இருந்து ஜெயந்தி சங்கர் வரை அது வந்து கொண்டிருக்கிறது. பொதுவான அறங்களையும் ஒழுக்கங்களையும் எல்லாரும் ஏற்கும்படிச்சொல்வது. அது கலைமகள் கதைகளுக்குத்தான் சரிவரும், இலக்கியத்திற்கு அல்ல.

கிட்டத்தட்ட சிங்கப்பூர் வாழ்க்கையின் அத்தனை நடைமுறைச் சிக்கல்களையும் கருவாக்கியிருக்கிறார் ஜெயந்தி சங்கர். பிம்பம் கருப்பாக பிறந்தமையால் தாழ்வுணர்ச்சி கொண்ட ஒரு பெண்ணின் கதை. அவளுக்குத் தாழ்வுணர்ச்சி என்று மட்டும் கதையில் மீண்டும் மீண்டும் வருகிறது. அந்தப் பெண்ணுக்கு ஏற்படும் ஒவ்வொரு அவமானமும் சொல்லப்படுகிறது. அப்பா அம்மா சொல்லும் அத்தனை உபதேசங்களும் விரிவாக எழுதப்பட்டுள்ளன

கடைசியில் அந்தப் பெண் தாழ்வுணர்ச்சியை ஒரு நிகழ்ச்சி வழியாக வெல்கிறாள். காரணம் புற்றுநோய் வந்து படுக்கையில் இருக்கும் ஒரு பெண்ணைப் பார்த்துப் பேசுவது. அதாவது அவளை விட தான் மேல் என்னும் எண்ணம் வருவது. உடனே படிக்கவேண்டும் என்னும் எண்ணம் வருகிறது. ஆங் மோ கியோவில் தமிழ்ப்படம் பார்க்கவேண்டாம் லைப்ரரி போகவேண்டும் என முடிவெடுக்கிறாள். கருப்புதான் எனக்குப்பிடிச்ச கலருஎன பாடவேறு செய்கிறாள்

மகளின் பிரச்சினை எவ்வாறு தீரும் என்று பயந்தப்டி இருந்த வந்தனாவுக்கு அந்த ஆண்டவனே சின்யீ உருவில் வந்தது போல சுலபமாகத் தீர்ந்தது குறித்து மிகவும் மகிழ்ச்சி. கூன்குருடு செவிடுபேடு நீங்கி பிறந்த இந்த அரிய மானுடப்பிறவியில் ஞாலமும் கல்வியும் நயத்தல்வேண்டும் என்று புவனாவுக்கு சின்யீ என்னும் அந்த தேவதை போதித்ததில் வந்தனா பேருவகை அடைந்தாள்என்கிறார் ஆசிரியை.

ஆனால் வாசகனாக எனக்கு பெரும் எரிச்சலையே இக்கதை அளித்தது. ஒரு பெண்ணுக்கு வாழ்க்கையில் நம்பிக்கை வர இன்னொருத்திக்கு புற்றுநோய் வரவேண்டுமா என்ன? நல்லவேளை அவளாக நான் இல்லை என்பதா வாழ்க்கையைப் பற்றிய புரிந்துணர்வு? எத்தனை சிறுமை நிறைந்த உலகியல்நோக்கு இது! ஜெயந்தி சங்கரின் கதைகளின் பிரச்சனை அவரது ஆன்மிக வறுமைதான் என்று வரையறுக்கலாமா என எண்ண வைத்தது இக்கதை.

பிற வாழ்க்கைக்குள் செல்லும் கதைகள் இத்தொகுதியில் மிகக்குறைவு. ஒரே கேள்வி போல ஓரிரு உதாரணங்கள் சொல்லலாம். அவையும் மிக எளிமையான புரிதல்களைக் கொண்டவை. ஒர் இளைஞன் தாழ்வுணர்வால் பெண்நட்புகளில் இடருறுவதைச் சொல்லும் கதை அவனைப்பற்றி அவன் நண்பன் அறிந்துகொண்டு, எண்ணிக்கொள்ளும் பாணியில் நேரடியாக எழுதப்பட்டிருக்கிறது.

இப்பெருந்தொகுதியின் எந்தக்கதையையுமே இலக்கியத் தரமான படைப்பு என்று சொல்லமுடியவில்லை என்றே உணர்கிறேன். ஒரு பெருந்தொகுதி அப்படி இருக்க வாய்ப்பில்லை என மீண்டும் மீண்டும் தேடி கடைசியில் 99 கதைகளையுமே படித்துமுடித்தபோது பெரும் சோர்வையே சென்றடைந்தேன். ஜெயந்தி சங்கர் தமிழின் நவீன இலக்கியப் படைப்புகளை வாசிக்கிறாரா அல்லது வாசந்தி சிவசங்கரி கதைகளுடன் நின்றுவிட்டாரா என்னும் ஐயம்தான் ஏற்பட்டது.

வாசித்திருந்தார் என்றால் தமிழ்நவீனச் சிறுகதை வாழ்க்கையின் பொதுவான உண்மைகளைச் சொல்வதை முழுமையாகத் தவிர்த்துவிடுவதை அவர் கவனித்திருக்கமாட்டாரா? இலக்கியம் எப்போதும் அசாதாரண வெளிப்பாடுகளையே தேடிச்செல்வதை அறிந்திருக்கமாட்டாரா? சொல்வதை விட குறிப்புணர்த்துவதையே அது இலக்காக கொண்டிருப்பதை உணர்ந்திருக்கமாட்டாரா?

ஜெயந்தி சங்கர் அவர் இதுவரை எழுதிய எந்தக்கதைக்கும் இலக்கிய மதிப்பு இல்லை என்றும் அவை எளிய வணிகப் படைப்புகளின் கட்டமைப்பும் மனநிலையும் கொண்டவை என்றும் உணர்ந்தார் என்றால், இதுவரை எழுதிய அனைத்தையும் நிராகரித்துவிட்டு இலக்கிய வாசிப்பினூடாக சிறுகதையின் சாத்தியங்களை உணர்ந்தபின் அடுத்த அடியை எடுத்து வைக்கத் துணிந்தார் என்றால் மட்டுமே அவர் நவீன இலக்கியத்தினுள் புகமுடியும்.

 

[ஜெயந்திசங்கர் கதைகள் . காவ்யா பிரசுரம்]

முந்தைய கட்டுரைகிராதம் பற்றி
அடுத்த கட்டுரைஎன் மலையாளக்குரல்