இணையத்தில் சுபமங்களா

suba

வணக்கம்.

திரு கோமல் சாமிநாதனை ஆசிரியராகக் கொண்டு சுபமங்களா இலக்கிய இதழாக 1991 முதல் 1995 வரை வெளிவந்தன. அந்த 59 இதழ்களையும் இணையத்தில் PDF வடிவில் கிடைக்க திருமதி.தாரிணி (கோமல் அவர்களின் மகள்) ஏற்பாடு செய்து வருகிறார். இன்னும் ஒரு வாரத்திற்குள் அவ்வேலை முடிவடைய உள்ளது.

அதனை வெளியிடும் நிகழ்வை வரும் அக்டோபர் 15 அன்று சென்னை மயிலையில் குவிகம் இலக்கிய வாசல் நடத்துகிறது.

நீங்கள் தற்சமயம் சிங்கப்பூரில் இருப்பதாகத் தெரிவித்து இருந்தீர்கள். நிகழ்வில் கலந்துகொள்ள வாய்ப்பு இல்லை என்று தெரிவித்திருந்தீர்கள். நிலைமையில் ஏதேனும் மாறுதல் உள்ளதா?

நிகழ்ச்சிக்கு நேரில் வர இயலவில்லை என்றால் இந்த முயற்சி குறித்த தங்கள் கருத்தினை ஓரிரு நிமிடங்களாவது ஒரு ஒளி அல்லது ஒலி வடிவத்தில் (VIDEO OR AUDIO) அனுப்பிவைக்க முடியுமா?

அந்த காலகட்டத்தில் சுபமங்களாவின் இலக்கியப்பணியில் தங்கள் பங்களிப்பு குறிப்பிடத் தக்கது என்பதால் இந்த வேண்டுகோள்.

அன்புடன்

கிருபானந்தன்

குவிகம்

இலக்கிய வாசல்

அன்புள்ள கிருபானந்தன்,

சுபமங்களா தமிழில் ஒரு திருப்புமுனை இதழ். அதில் தமிழ் நவீன எழுத்தாளர்களின் நீண்ட பேட்டிகள் வெளிவந்தபோது எழுந்த பதற்றத்தையும் பரபரப்பையும் நினைவுகூர்கிறேன். அதில் வண்ணதாசனின் பேட்டி வெளிவந்தபோது என் நண்பர் ஒருவர் “யார் இவர்?” என திகைத்தார். அவர் பாலகுமாரனின் பெரும் வாசகர் அன்று.

நான் எழுத்தாளனாக மலர்ந்தது அதன் வழியாகவே. அதன் இரண்டாவது இதழிலேயே என் ‘ஜகன்மித்யை’ என்னும் சிறுகதை பிரசுரமாகியது. பல பெயர்களில் அதில் எழுதியிருக்கிறேன். கோமல் சுவாமிநாதனை வணக்கத்துடன் நினைத்துக்கொள்கிறேன்

மிகச்சிறந்த முயற்சி வாழ்த்துக்கள்

ஜெ

 

முந்தைய கட்டுரைஅமைப்பு மனிதர்களின் இலக்கியம்
அடுத்த கட்டுரைகாந்தி கடிதங்கள் 2