அன்புள்ள ஜெ
சூரியனுடன் தொற்றிக்கொள்ளுதல் வாசித்தேன். இரவு நாவலுக்கு நேர் எதிரான படைப்பு. பலவகையிலும் சிந்தனையை சுழலவைத்தது
ஒளி என்ற பெயர் கொண்ட பெண் விளக்குகளை அணைக்கச்சொல்லும் இடம் தான் கதையின் தொடக்கம். இருளுக்குள் அவள் சென்று காத்திருக்கிறார். காதலன் இரவிலிருந்து தப்பி ஓடிக்கொண்டே இருக்கிறான்.
ஆனால் எவ்வளவு ஓடமுடியும்? எப்படியானாலும் இருட்டுதானே முழுமையானது? அங்கே சென்றுதானே ஆகவேண்டும்? மிச்ச எல்லாமே வெறும் பாவனைகள்தானே?
அதைத்தான் கதை முடிவில் சுட்டுகிறது. ஆச்சரியமென்னவென்றால் இரவு நாவலும் அதைத்தான் சொல்கிறது
மதி
***
அன்புள்ள ஜெ,
ஆனந்த விகடனில் வந்துள்ள இக்கதை உங்களின் படைப்புகளில் முக்கியமான ஒன்று. நீங்கள் வருங்காலத்தில் நடைபெறும் வகையில் எழுதிய கதைகள் குறைவே. சட்டென்று நினைவுக்கு வருவது நம்பிக்கையாளன். பொதுவாக இத்தகைய வருங்காலக் கதைகள் ஏதேனும் ஒரு அறிவியல் முன்னேற்றம், இயந்திரங்களுக்கு அடிமையாகும் மானுடம், மானுட அழிவிற்குப் பிறகு இணைந்து வாழும் ஒரு சிறு குழு, மானுட நன்மைக்கென இடப்பட்ட சட்டங்கள் மற்றும் அதை மீற விழையும் ஒரு சிறு குழு அதன் சாகசங்கள் என ஒரு சில குறிப்பிட்ட வகைமைகளிலேயே நிகழும். அவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்ட, கிட்டத்தட்ட எதார்த்தத்தை நெருங்கிய ஒரு படைப்பைத் தந்திருக்கிறீர்கள்.
இதில் வெளிப்படும் சீனாவுடன் இணையும் ஜப்பான் பற்றிய அரசியல் பார்வையும், அணுவெடிப்பு விசை (Nuclear fission) விமானமும் அபாரம். கதை நடப்பதாகச் சொல்லப்படும் 2௦95 ம் வருடத்தில் இவை சாத்தியமாகக் கூடிய வாய்ப்புகள் அதிகம். (என்னளவில் அணு இணைவு விசை (Nuclear Fusion) விமானங்களுக்கான சாத்தியம் இருப்பதாகவே படுகிறது)
ஆனால் இக்கதையின் முக்கியமான அம்சம் இவையெல்லாம் அல்ல. சூரியனைத் தொற்றிக் கொள்வதன் வாயிலாக தன் பகலை மீட்டு அதன் மூலம் உயிரைத் தக்க வைத்துக்கொள்ள முயலும் ஒருவரின் போராட்டமே. அப்போராட்டத்தை நடத்துபவர் ஒரு ஜப்பானியர் என்பதே இக்கதையை மிக மிக முக்கியமான ஒரு படைப்பாக ஆக்குகிறது. கதை நடக்கும் காலத்தில் ஜப்பான் என்றொரு அரசியல் தேசம் இல்லை. ஆனால் ஜப்பான் என்றொரு பண்பாட்டு தேசம் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதன் வளைந்த பணிவான குரலும், அதன் பின்னால் இருக்கும் மேட்டிமைத் தனமும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இது முக்கியமான பார்வை.
ஜப்பான் தற்போது எதிர்கொண்டு கொண்டிருக்கும் சரிவுக்கு முக்கியமான ஒரு காரணமாக சமூகவியலாளர்கள் கருதுவது அவர்களின் மரபிலிருந்தான விலக்கமே. இது ஜப்பான் என்று மட்டுமல்ல பொருளாதார முன்னேற்றத்துக்காக ஆன்மாவை, ஆன்மீகத்தைத் தொலைத்து இயந்திரமாகி, தொழில்நுட்ப கருவிகளின் கைப்பாவையாகி, நேரத்தை ஆன்மா அற்ற உழைப்பிலேயே கொன்று, பொழுது போக கட்டற்ற நுகர்வைச் சாத்தியாமக்கி, அந்த நுகர்வையே ஒரு பொருளாதார இயக்கத்தின் அச்சாக மாற்றி வைத்துள்ள எந்த ஒரு சமூகமும் எதிர்கொண்டேயாக வேண்டிய ஒரு சரிவு. முக்கியமாக நமது கீழைத்தேசங்களில் இதைக் கண்டு கொண்டு தான் இருக்கிறோம்.
இங்கே அந்த ஜப்பானியர் கொண்டிருக்கும் ‘ஒரே பகல்’ – மிக முக்கியமான குறியீடு. இது அவரின் மீட்சிக்கான கடைசி வாய்ப்பு. இதன் பிறகு வரும் இருள் மொத்தமாக அவரின் இருப்பை அழித்து விடும். இங்கே அவர் என்பதை மரபை நோக்கிச் சென்று, தன் இழந்த அடையாளங்களை மீட்டுக்கொண்டு, மீளுருவாகத் துடிக்கும் ஜப்பானிய சமூகம் என்று வாசித்தால் மிக உக்கிரமான ஒரு சித்திரம் நம் முன் விரியும். இக்கதையில் வரும் ஒரே பெயர் கொண்ட கதாபாத்திரம் அவரின் இளமைக் கால காதலி – அகேமி. அதன் பொருளும் சுடர் என்றே!!
ஜப்பான் – சூரியன் உதிக்கும் தேசம் என்று அழைக்கப்படுவது. அத்தேசம் தன் சூரியனை இழக்காமல் அவனைத் தொற்றிக் கொண்டாவது மீளத் துடிப்பதே இக்கதையின் அடிநாதம். இங்கிருந்து இவ்வாறு சரிவை நோக்கிச் செல்லும் நமது சமூகமும் நாளை தம்மை மீட்டுக் கொள்ள உலகத்திடம், யார் யாரென்றே தெரியாதவர்களிடம் மீள மீள மன்னிப்பு கேட்டுக்கொண்டே இருந்தாக வேண்டும் என்பது நம் குழந்தைகளுக்கு நாம் எதை விட்டுச் செல்லப்போகிறோம் என்பதற்கான முன்னறிவிப்பு.
உண்மையில் அமெரிக்கா எறிந்த அந்த அணுகுண்டு ஹிரோஷிமாவில் விழவில்லை, ஜப்பான் என்ற பண்பாட்டின் ஆன்மாவில் விழுந்திருக்கிறது. இயந்திர கதியில் மீண்டு வரத் துடித்த ஒரு தேசம் அதற்கு விலையாகத் தன் ஆன்மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டே வந்து, அந்த அழிவுகளையும், இழப்புகளையும் உணரவே இயலாத எல்லைக்குச் சென்று இருந்த ஒரே கடைசிச் சுடரையும் அணைத்து முடிவிலா இருளில் மூழ்குமிடம் உக்கிரம்.
நான்கு முறை கழுவப்பட்ட சுமி-இ ஓவியம் என்பது அபாரமான படிமம். சுமி-இ முறை என்பது தூரிகையில் தோய்க்கப்பட்ட வண்ணங்களின் அடர்வின் வேறுபாட்டால் ஓவியங்களைத் தீட்டுவது. நீரில் தோய்க்கப்பட்ட வண்ணங்கள் மேலும் மேலும் அடர்வு குறைந்து வெளிறிச் சென்று கொண்டிருக்கும் ஒரு சித்திரத்தை நல்கும் இப்படிமம் மையக்கதைக்கு மட்டுமல்ல, மேலும் மேலும் பல தளங்களுக்குக் கொண்டு சென்று விரித்தெடுக்கக் கூடியது.
குறைந்த பட்சம் மீண்டு வர வேண்டும் என்ற உணர்வை அடைந்த ஓர் பண்பாடு அதை நோக்கிச் செல்லும் ஒரு ஒளிமயமான பாதையில் இக்கதை முடிகிறது. ஆம், பண்பாடுகள் ஆழ்மனத்தில் இருப்பவை. அழிய விரும்பாதவை. தன்னை அழித்தவரின் ஆழுள்ளத்தில் இருந்து ஓர் ஒளித் தெறிப்பாகவேனும் வெளிவந்து பரவத் துடிப்பவை. எவரேனும் ஒருவர் அதைப் பற்றிக் கொண்டு, தொற்றிக் கொண்டால் செவ்வாய்க்குச் சென்றாலும் இறவாமல் தொடர்பவை. அவற்றைத் தொடர்புறுத்தும் இலக்கியங்கள், குறியீடுகள், சடங்குகள் அனைத்தின் தேவையும் வேறு எக்காலத்தை விடவும் இப்போதே தேவை. இல்லாவிட்டால் தொற்றிக் கொண்டு பறப்பதைத் தவிர வேறு வழியில்லை நமக்கு.
அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்
***
ஜெ
சூரியனுடன் தொற்றிக்கொள்ளுதல் ஒரு கதை வடிவை கொண்டிருந்தாலும் அதன் கவித்துவம் மூலமே நிற்கிறது
இருட்டிலிருந்து தப்பி ஒளிக்காகத் தவித்துக்கொண்டே இருக்கும் ஆத்மா. அதை ஒரு குறியீடாகவே நினைக்கிறேன்
ஆனால் சாஸ்வதமான ஒளியை சூரியன் அளிக்கமுடியாது இல்லையா?
கணேசமூர்த்தி
8
அன்புள்ள நண்பர் ஜெயமோகன் அவர்களுக்கு,