உலகெலாம் எனும் கனவு

images

அன்புள்ள ஜெ,

வெண்முரசின் இடைவெளி நாட்களை கடத்துவது பெரும் பிரயத்தனமாக உள்ளது. நேற்றுதான் நீண்ட நாட்களாக வாசிக்காமல் விட்டிருந்த ‘வெண்முரசு விவாதங்கள்’ தளத்தை மேய்ந்தேன். சொல்வளர்காட்டில் தவறவிட்ட பகுதிகள் முகத்திலரைந்துகொண்டே இருந்தது. இன்னும் எழுதப்படாத விவாதக் குறிப்புகள் அனைத்தும் தவறவிட்ட நுட்பங்களே என எண்ணியபோது உளம் சோர்வடைந்தது. சரி ‘கற்றது மந்தனளவு கல்லாதது தர்மர் அளவு’ என எண்ணி சமாதானம் கொண்டேன் (மந்தன் அறிந்தால் மண்டையை பிளக்கக் கூடும்).

இந்நிலையில் நீங்கள் சமீபத்தில் விகடனில் எழுதிய ‘சூரியனுடன் தொற்றிக்கொள்ளுதல்’ சிறுகதையை இன்று வாசித்தேன். பிரிட்டன் வெளியேற்றம் சமயத்தில் தங்களிடம் முன்பு கேட்க எண்ணிய சில கேள்விகளை இக்கதை நினைவூட்டியது. அதைக் கேட்கவே இக்கடிதம்:

இதுவரை அண்டை மாநிலங்களைத் தாண்டி பயணித்திராதவன் நான். இருப்பினும் கால்நடையாகவோ அல்லது மிதிவண்டியிலோ இலக்கோ முடிவோ இல்லாத ஒரு பயணத்தை மேற்கொள்வதாக கற்பனை செய்து ஆழ்ந்திருப்பது என் விருப்பத்திற்குரிய பகற்கனவு.

அவ்வாறு பயணிக்கும் போது ஏதோ ஒரு நாட்டு எல்லையில் சாலையில் நிறுத்தி, கடவுச்சீட்டு இல்லாததன் பொருட்டு அதிகாரிகள் என்னை தடுத்தாட்கொள்வார்கள். ‘உயிர்கள் அனைத்திற்கும் பொதுவான இப்பூமியை கூறுபோடும் உரிமையை உனக்கு அளித்தது யார் மனிதகுலமே?’ என தயங்கிய குரலில் முழங்கியவாறு என் பகற்கனவுகள் முடிவடையும்.

இளமையில் ‘முற்போக்கு’ என்பதன் அடையாளமாக சில கருத்துக்கள் கற்பிக்கப்படுகின்றன. அவற்றை இப்படி சொல்லலாம். சாதி கடந்து சிந்திப்பது, மதம் கடந்து சிந்திப்பது, மொழி அல்லது இனம் கடந்து சிந்திப்பது என. இதன் இயல்பான நீட்சியாக வந்து சேரும் இடம் நாடு அல்லது புவியியல் ரீதியான எல்லைகள் கடந்து சிந்திப்பது.. பெரும்பாலும் தேசஎல்லைகள் கடந்து சிந்திப்பது ஒரு ஆரம்பக்கட்ட சிந்தனையளவில் நின்றுவிடும். என்னளவில் இச்சிந்தனைக்கு முழுமையான வடிவம் கொடுத்தது தங்களின் ‘உலகம் யாவையும்’ சிறுகதைதான். வாசிக்கும்தோறும் ‘மகத்தான கனவு’ என்பதையே மனம் அரற்றிக் கொண்டிருந்தது.

‘சூரியனுடன் தொற்றிக்கொள்ளுதல்’ சிறுகதை சுமார் எண்பது வருடங்கள் கழித்து 2100 வாக்கில் நடக்கிறது. இக்கதையில் படிப்படியாக நாடுகள் இணைந்து ஒற்றை உலகம் உருவாகும் முன்நகர்தலுக்கான குறிப்புகள் கதையினுடே ஆங்காங்கே இருப்பதை கண்டேன். ஆனால், என் கேள்வியெல்லாம் அப்படி ஒற்றை உலகத்திற்கான கனவோ அதை நோக்கிய நகர்வோ தற்காலத்தில் ஊக்கத்துடன் இருந்து வருகிறதா என்பது தான்.

குறிப்பாக பிரிட்டனின் வெளியேற்றத்திற்கு பிறகு இச்சந்தேகம் எனக்கு வலுத்து வருகிறது. நவீன ஜனநாயகத்தின் லட்சிய உருவாக்கமான ஐரோப்பாவுக்கே இந்நிலையென்றால் நாள்தோறும் ஏதோவொரு மூலையில் பிரிவினைக் குரல்கள் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் நம் தேசத்தில், தெற்காசிய நாடுகளின் கூட்டு போன்ற அடுத்தகட்ட நகர்வுகளுக்கு வாய்ப்பேயில்லை எனத் தோன்றுகிறது. பிரெக்சிட் சமயத்தில் இந்தியாவும் சார்க் அமைப்பிலிருந்து வெளியேற வேண்டுமென்ற (எக்காரணமுமில்லாமல்) ஒரு அன்பரின் கோரிக்கையை இணையத்தில் பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.

காஷ்மீர் விவகாரம், காவிரி விவகாரம் என எது தலையெடுத்தாலும் ‘ஆளாளுக்கு அத அத பிரிச்சு கொடுப்பதை’ சர்வரோகநிவாரிணியாக முன்வைக்கும் குரல்கள் ஒலிப்பதை காண முடிகிறது. இதற்காகவே காத்திருக்கும் சீறும் சீமான்கள் ‘அப்பவே சொன்னோம் பாத்தீங்களா..’ என கிளம்பிவிடுகிறார்கள். எந்தவொரு சிறு பிரச்சனைக்கும் பிற மாநில/நாட்டுடனான கூட்டுறவே காரணம் என்றும் தனித்தால் சொர்க்கபூமியாக மாறிவிடலாம் என்றும் எளிதில் சத்தியம் செய்கிறார்கள்.

அமெரிக்க தேர்தலிலும் இம்முறை பிற நாட்டினருக்கு அமெரிக்காவின் வேலைவாய்ப்பு பறிபோவது குறித்து பேசப்படுகிறது (ஒருவேளை இது அனைத்து தேர்தல்களிலும் பேசப்படுவது தானோ?).

எங்கும் சுய அடையாளம் சார்ந்த தேடல் தீவிரமடைந்திருப்பதாக நினைக்கிறேன். அதன் நீட்சியாக சுய இனத்தின் மீதான போலிப் பெருமிதங்களும் நாசூக்காக மாற்று இனத்தின் மீதான காழ்ப்புகளும். ஒருவேளை கலாச்சார ரீதியான காழ்ப்புகள் இல்லையெனில் வேலைவாய்ப்பு, பொருளாதாரம் போன்ற காரணங்களை முன்வைத்து பிரிவினை பேசப்படுகிறது.

ஒவ்வொரு நாட்டின் பிரச்சனைக்கும் பல்வேறுபட்ட வரலாற்றுக் காரணிகள் இருக்குமென்றாலும் இந்த பொதுப்போக்கை எவ்வாறு விளங்கி கொள்வதென தெரியவில்லை. உலகமயமாக்கலின் நிறைச்செறிவு புள்ளியை (saturation point) அடைந்து விட்டோமா? இனி வெளியுறவு என்பது வெறும் வர்த்தகத்துக்கு மட்டுமென எஞ்சுமா? அல்லது உலகமயமாக்கலின் பயணத்தில் இவை தவிர்க்கமுடியாத கட்டங்களா? எனில், என்றேனும் ஒருநாள் எல்லைக்கோடுகளுக்கு பொருளில்லா உலகம் உருவாகும் எனும் கனவோடு நாம் மரிப்பதற்கு ஏதேனும் வாய்ப்புள்ளதா?

அன்புடன்,
பாரி.

***

அன்புள்ள பாரி,

எனக்கு ஒரு விசித்திர அனுபவம். இந்தியாவிலிருந்து தமிழகம் பிரியவேண்டும் என வாதிட்டவர்களின் தர்க்கம் எவவ்ளவு மேலோட்டமானது என்பதைக் காட்டுவதற்காக நான் ஒரு குறிப்பை எழுதினேன். அதே தர்க்கப்படி தமிழகத்தில் குமரிமாவட்டம் இருக்கவேண்டிய தேவை இல்லை. ஏனென்றால் எங்கள் பண்பாடு வேறு. எங்கள் வரலாறு தமிழகத்துடன் இணைந்ததல்ல. சுதந்திரம் கிடைத்தபின் வன்முறைமூலம் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட இந்நிலம் அதுவரை தனி நாடுதான். அத்தனைக்கும் மேலாக குமரிமாவட்டம் நீர், மின்சாரம், மீன், விளைபொருட்கள், சுங்கவரி என தமிழகத்திற்குக் கொடுப்பது அதிகம். பெறுவது நூறில் ஒருபங்கு மட்டுமே

அதை எழுதி, அதன் கீழேயே அது எத்தனை அபத்தமானது என்றும் சொல்லியிருந்தேன். ஆனால் எனக்குத் தொடர்ச்சியாகக் கடிதங்கள் வந்தன, இன்றும் வருகின்றன. அது எவ்வளவு பெரிய உண்மை என சொல்லி எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். தமிழகத்திற்கும் நமக்கும் என்ன உறவு என இங்கே ஒருவர் மேடையில் பேசுவதைக் கேட்டேன். அது ஒரு முக்கியமான பேச்சாகவே இன்று இங்கே உள்ளது.

ஒரு குறும்பு எண்ணம் ஏற்பட்டது. குமரிமாவட்டத்தில் விளவங்கோடும் கல்குளமும் ஏன் இருக்கவேண்டும் என்று ஒரு குறிப்பு எழுதினேன். விளவங்கோடு கல்குளம் பகுதிகள் மிக வளமானவை. முக்கியமான அணைகளும் துறைமுகங்களும் அவற்றில்தான் உள்ளன. அவற்றை தனிமாவட்டமாக ஆக்கவேண்டும் என அதில் வாதிட்டிருந்தேன். அதை மார்த்தாண்டத்தில் இருந்து வரும் பத்திரிகைக்கு அனுப்பினேன். அவர்கள் பரவசத்துடன் அதைப்பிரசுரிக்க முன்வந்தனர். அய்யய்யோ அது நையாண்டி என்று சொல்லி கையைக்காலைப்பிடித்து தடுத்துவைத்தேன்.

அதாவது ‘நாம்வேறு’ என்று சொல்லும் எந்தச்சிந்தனைக்கும் மக்களாதரவு எளிதில் கிடைக்கும். நம்மை பிறர் சுரண்டுகிறார்கள், நாம் ஏன் அவர்களுக்குக் கொடுக்கவேண்டும் என்று பேசினால் உடனே ஆமாம் என்பார்கள். சொந்தச் சகோதரனுடன் வாய்க்கால் தகராறு செய்பவர்கள்தானே நாம்? பேச்சிப்பாறை தண்ணீரை தேங்காய்ப்பட்டினத்திற்கு விடமாட்டோம் என இங்கே ஒரு பெரிய போராட்டம் நடந்தது. திருநெல்வேலிக்கு தண்ணீர் செல்வதற்கு எதிராக பல கட்டங்களாக போராட்டம் நடந்தது.

இது மனிதகுணம். பிரிந்து நிற்கவும் குழுக்களாகச் சேர்ந்து போரிடவும் அவர்கள் பல்லாயிரமாண்டுகளாக பழகியிருக்கிறார்கள். வெறுப்புதான் இயல்பாக மக்களை ஒன்றுசேர்க்கிறது. வெறுப்பைப் பேசுபவர்கள் எளிதில் புகழ்பெறுகிறார்கள். ’நம்மவர்’ என ஒருவரை நினைத்துவிட்டால் அவரை முழுமையாக ஏற்க நாம் தயாராக உள்ளோம்.

வசுதைவ குடும்பகம் என்பது ஒரு தத்துவ இலட்சியம். அதைநோக்கி மானுடம் செல்கிறதா என்று கேட்டால் ஆம் என்று சொல்ல நடைமுறைமனம் ஒப்பவில்லை. ஆனால் தத்துவார்த்தமாக யோசித்தால் அப்படித்தானே நிகழக்கூடும் என்றும் படுகிறது

ஜெ

 

முந்தைய கட்டுரைபிச்சகப் பூங்காட்டில்
அடுத்த கட்டுரைவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது: கடிதங்கள்