ஒன்றென்றாவது…

Housewarming-15

 

அன்புள்ள ஜெயமோகன்,

வணக்கம். உங்களின் நெடுநாள் வாசகன் நான். ரப்பர் நாவலை எனது அலுவலக நூலகத்தில் இருந்து வாசித்தது முதல் உங்கள் எழுத்துக்கள், இணயதளம் மூலம் தினமும் வாசித்து வருகிறேன். தறபோது விஷ்ணுபுரம் மூன்றாம் முறையாக வாசித்து கொண்டு இருக்கிறேன்.

உங்களது அனைத்து படைப்புகள், புனைவுகள், கட்டுரைகள், பத்திகள் ஆகியவற்றில் காணும் நுட்பமான சொல்லாடல்கள், சிந்தனையை மென்மேலும் வளர்க்கும் தகவல்கள் போன்றவற்றை பார்க்கும் போது தோன்றிய கருத்துக்களை நான் பகிர விரும்பியதால் இக்கடிதம்.

மிக ஆழமான அறிவு, அதிகமான வாசிப்பு நுண்மாண் நுழைபுலம் காணும் திறன் ஆகியவை கொண்டே இது போன்ற ஆக்கங்களை அளிக்க முடியும் என்பது அனைவருக்கும் தெரியும். எனது ஐயம் என்னவென்றால் மக்கள் கூட்டத்தில் பல்வேறு அறிவுத்தளங்களில் உள்ளவர்கள் இதை போன்ற உண்மைகளை கண்டடைவது எப்படி என்பதே. மேலும் வரலாற்றில் ஏதாவது ஒருகால கட்டத்தில் (உதாரணமாக நாளந்தா பல்கலைக்கழகம் இருந்த நாட்களில்) வாழந்த அனைத்து மக்களும் ஒரே அளவு அறிவுத்திறன் கொண்டு வாழ்ந்திருக்க வாய்ப்பு இருந்திருக்குமா? இந்த சிந்தனையே உங்களது காடு நாவலை வாசித்த பின்புதான் வந்தது. அதில் ஒரு இடத்தில் மரம், புள், விலங்கு போன்ற அனைத்து விதமான உயிரினங்களுக்கும் ஒரே ஒரு பிரம்மாண்டமான பெரிய “மனது” இருந்ததாகவும் எனவே ஒரு சிந்தனை என்று வரும்போது அனைத்து உயிரினங்களும் ஒரே வேதிவினை ஆற்றும் எனவும் கூறியிருந்தீர்கள்.

அதனை யோசித்து பார்க்கும் போது, சரியாக மாமரங்கள் அனைத்தும் ஏப்ரல் மாதத்தில் பூப்பதை நான் மாமரங்களுக்கு என ஒரு பெரிய பொது மனதும், சிந்தனையும் இருப்பதாக கற்பனை செய்து கொண்டேன். அது போன்ற ஒரு பெரிய பொது மனது உலகில் வாழும் அனைத்து மனிதருக்கும் இருந்துவிட்டால் எப்படி இருக்கும் என்றும் நினைத்தேன். மூச்சு விட வேண்டும் என அந்த பெரிய பொது மனது நினைத்தால் உலகின் 400 கோடி மனிதர்களும் மூச்சு விடுவதாகவும், நீர் குடிக்க அந்த மனது நினைத்தால் அனைவரும் நீரை குடிப்பதாகவும் நினைத்து பார்த்தேன், மலைப்பாக இருந்தது. அது போன்ற பொது மனது கொஞ்ச காலமெனும் இருந்து உங்கள் சிறந்த படைப்புகள் அனைத்தும் அந்த பொது மனது மூலம் உள்வாங்கப்பட்டால் எப்படி இருக்கும் எனவும் நினைத்தேன்.

சமீபத்தில் நாளிதழில் வந்த சேதி வழியாக நாம் உலகில் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையே அறிவியலில் மிக முதிர்ந்த ஒரு எதிர்கால உயிரினங்கள் வாழும் ஓர் (dream of the future world of much civilised aliens) உலகின் மிகப்பெரிய கனவு என ஸ்டீவன் ஹாக்கிங்ஸ் எனும் அறிவியலாளர் கூறியதாக அறிந்த போது மிகவும் வியப்பு அடைந்தேன்.

மு நேசராஜ் செல்வம்

தொலைத்தொடர்பு துறை

புது டெல்லி

***

அன்புள்ள நேசராஜ்,

அறிவியலில் இரு பகுதிகள் உண்டு. ஒன்று ஊக உருவாக்கம். இரண்டு நிரூபணம் மற்றும் கொள்கை உருவாக்கம். ஊக உருவாக்கத்தளத்தில் எல்லாவகையான கட்டற்ற சிந்தனைப்பாய்ச்சல்களுக்கும் இடமுண்டு. அது ஒருவகை கனவுத்திறப்புதான். காலப்பயணம், பிரபஞ்சத்துளைகள் போன்ற பல அறிவியல் ஊகங்கள் இன்றும் வெறும் கற்பனைகள் மட்டுமே. அவை அறிவியல் புனைகதைகளில் மட்டுமே வாழ்கின்றன. அறிவியலாக அல்ல. ஆனால் அப்படி அறிபுனைகளின் உலகில் நெடுங்காலம் இருந்த ஒன்று, கருந்துளை, பின்னர் நிரூபணமானதும் உண்மை.

ஸ்டீவன் ஹாக்கிங்ஸின் அந்த வரிகளை அத்தகைய ஒரு கனவாகவே நான் காண்கிறேன். ஆனால் மானுட சிந்தனை, உயிரிகளின் ஒட்டுமொத்தச் சிந்தனை, பூமியின் முழுமை இயக்கம் ஆகியவற்றை தொகுத்து ஒரே பெருக்காக, ஒரே நோக்கு கொண்டதாக அணுகும் ஆய்வுநோக்கிற்கு ஆழமான சாத்தியங்கள் உண்டு என்றே நினைக்கிறேன். அதில் ஆன்மீகமாக ஒன்றுள்ளது. நான் என எண்ணும்போது அந்தச்சொல்லே பிரபஞ்சமாகவும் ஆகும் ஒரு பெருநிலை.

ஜெ

 

முந்தைய கட்டுரைசுபமங்களா, நினைவுகளின் தொலைவில்…
அடுத்த கட்டுரைவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 4