ருத்ரை

nodes3

 

ஆந்திரம் எனக்கு என்றுமே ஒரு வியப்பை அளிக்கும் நிலம். அதை ஒரு மாநிலம் என்று சொல்வதைவிட தனி நாடு என்று தான் சொல்லவேண்டும். கிட்டத்தட்ட பிரான்சுக்கு சமம் என்று நினைக்கிறேன். முற்றிலும் வேறுபட்ட பல நிலப்பகுதிகள் கொண்டது. தெற்கே ராயலசீமாவும் சரி, அதற்குமேல் கோதாவரியும் சரி, வடக்கே தெலுங்கானா பகுதிகளும் சரி, ஒன்றுக்கொன்று முற்றிலும் சம்பந்தமற்றவை. பண்பாட்டிலும் நிலக்காட்சியிலும்.

கி.மு.ஒன்றாம் நூற்றாண்டில் சாதவகனப்பேரரசின் காலம் தொடங்கி ராஷ்டிரகூடப்பேரரசு, ஹொய்சாளப்பேரரசு, சாளுக்கியப்பேரரசு, நாயக்கர் பேரரசு என தொடர்ச்சியான வெவ்வேறு அரசகாலகட்டங்கள் அங்கு அமைந்துள்ளன. ஒவ்வொரு பேரரசும் அவர்களுக்குரிய கலை மரபையும் பண்பாட்டையும் தனித்தன்மைகளையும் உருவாக்கி நிலைநிறுத்தின.

முதல் முதலாக நான் ஆந்திரத்திற்குள் நுழைந்த போது எனக்கு 23 வயது. அதற்கு முன்பு பலமுறை அவ்வழியாக கடந்து சென்றிருந்த போதும் கூட ஆந்திரத்தில் இறங்கி அந்நிலப்பகுதியை அலைந்து சுற்றிப்பார்த்தது அப்போதுதான். அன்று தொடங்கி கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக அனேகமாக வருடந்தோறும் ஆந்திரத்திற்குள் சென்று கொண்டிருக்கிறேன். இன்னும் அப்பண்பாட்டுவெளியில் பத்தில் ஒன்றைக்கூட நான் பார்த்திருக்கவில்லை என்ற சோர்வு எனக்கு உண்டு.

உண்மையில் அதற்கு பொருளே இல்லை. எந்த ஒரு பண்பாட்டையும் எவரும் முழுக்க அறிந்துவிட முடியாது. ஒரு பண்பாட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே தன் ஆய்வை அமைத்துக் கொண்டு முழு வாழ்வையும் செலவிட்ட அறிஞர்கள் கூட  அதன் பல பகுதிகள் தங்களுக்குப் புரியவில்லை. பல பகுதிகள் தங்களுக்குப் பிடிபடவில்லை என்று சொல்வதை நாம் பார்க்கலாம்.

நான் முதன்முதலாக வரங்கலுக்கு சென்றிறங்கினேன். எதிர்படும் நபரிடம் “வாரங்கல் கோட்டை அருகில் தான் இருக்கிறதா?” என்று கேட்டேன். எட்டாவது பாடப்புத்தகத்தில் திப்பு சுல்தான் ’வாரங்கல்’ கோட்டையைக் கைப்பற்றினார் என்று படித்த நினைவில் அவரிடம் வாரங்கல் என்று கேட்டேன். அவர் வாய்விட்டு சிரித்து ’வரங்கல்’ என்று என்னைத் திருத்தினார். நான் ’வாராங்கள்’ என்று சொல்வது போன்று உச்சரித்தேன்.’ஒரங்கல்’ அதாவது ’ஒற்றைக்கல்’ என்பதன் மரூஉ தான் வரங்கல்.

அது காகதீயப்பேரரசின் தலைநகரம். ராணி ருத்ரம்மா இருந்து ஆண்டது அப்பகுதி. இந்திய வரலாற்றின் மாபெரும் அரசிகளில் ஒருவர். தன் நாட்டை எழுபத்திரண்டு பாளையப்பட்டுக்களாக பிரித்து முறையான நீர் நிர்வாகமும், நீதி நிர்வாகமும், நிதி நிர்வாகமும் அமைத்தார். அந்த முன்னுதாரணத்தைத்தான் பின்னர் நாயக்க மன்னர்கள் தொடர்ந்தனர். தமிழகத்தை நாயக்கர்கள் ஆண்டபோது இங்கும் அந்த பாளையப்பட்டு முறை கொண்டுவரப்பட்டது.

ருத்ரம்மா என்றால் கருங்காளி. ருத்ரனின் துணைவி. ஆனால்ராணி ருத்ரம்மா பெரும்போர்களில் ஈடுபட்டவரல்ல. மாபெரும் வெற்றிக்கதைகள் அவர் வரலாற்றில் இல்லை. அவர்கள் ஒரு அன்னை. குடிமக்களை தன் மைந்தர்களாக எண்ணினார். ருத்ரம்மாவின் சாதனை என்பது வறண்ட வரங்கல் பகுதி முழுக்க அவர்கள் அமைத்த மாபெரும் ஏரிகள் தன் மொத்த ராணுவத்தையும் எப்போதும் ஏரிவெட்டும் பணியிலேயே ஈடுபடுத்தியிருந்தார் என்று அவர்களைப்பற்றி வரலாறு சொல்கிறது. வரங்கல் அருகே உள்ள ராமப்பா கோயில் போகும் வழியில் உள்ள ’ருத்ரமகாசாகரம்’ என்னும் மாபெரும் ஏரி இன்றும் அன்னையின் நினைவுச்சின்னமாக நீடிக்கிறது.

ராமப்பா கோயில் இந்தியாவின் மாபெரும் கலைப்பொக்கிஷங்களில் ஒன்று. வரங்கல் அமைந்துள்ள நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள கோயில்கள் அனைத்துமே கரிய சலவைக்கல்லால் கட்டப்பட்டவை. தார் உருக்கி வடித்தது போன்றிருக்கும் சிற்பங்கள். ஒளியில் மின்னும் கருமுத்து போன்ற பெண்கள். கரிய உலோகத்தில் செதுக்கி எடுத்தது போன்ற ஆலயங்கள் ஒவ்வொன்றையும் பிரம்மாண்டமான ஆபரணங்கள் என்று தான் சொல்ல முடியும்.

வரங்கல் பகுதியின் ஒரு ஆலயத்தின் சிற்பங்களை உண்மையாகப் பார்த்து முடிப்பதற்கு ஒரு மாதமோ அதற்கு மேலோ கூட ஆகும். ஒவ்வொரு கணுவிலும் சிற்பங்களும் செதுக்கு வேலைகளும் நிறைந்த கனவுவெளிகள் அவை. முதன்முறை நான் சென்றபோது இணையம் போன்ற வசதிகள் இல்லாததனால் ராமப்பா கோயிலைப்பற்றியோ அங்குள்ள பிற ஆலயங்களைப்பற்றியோ எனக்குப் பெரிதாக எதுவும் தெரிந்திருக்கவில்லை. ஆந்திர மாநிலம் தொல்பொருள்துறை வெளியிட்ட சாணித்தாள் வழிகாட்டி ஒன்றே என்னிடம் இருந்தது. அதில் ராமப்ப கோயிலைப்பற்றி வெறும் நான்கு வரிகள் மட்டும்தான் இருந்தது. அதைச் சுற்றியுள்ள பிற ஆலயங்களைப்பற்றி அந்த அளவுக்குக் கூட தகவல்கள் இல்லை.

அங்கு சென்றபின் அந்த ஆலயத்தில் நுழைந்தபோது கால் தவறி குளிர்ந்த ஏரிக்குள் விழுந்தது போல உணர்ந்தேன். என் உடல் சிலிர்த்தபடியே இருந்தது. உண்மையில் நான் பார்ப்பது ஒரு கனவோ, பிரமையோ அல்ல என்று நெடுநேரம் நம்பமுடியவில்லை. அதன் பிறகு 2008-ல் நண்பர்களுடன் மீண்டும் ஒரு முறை ராமப்பா கோயிலுக்குச் சென்று பார்த்தேன். முதல் முறை அடைந்த அதே பிரமிப்பு இன்னும் பல மடங்கு அதிகரித்தது. ராமப்பா கோயில் கரிய சிலைகள் இன்றும் கனவுகளில் எழுந்து வருகின்றன.

நமது தென்னிந்திய மனம் கருமையின் அழகை காணப்பழகியது. செதுக்கி எடுக்கப்பட்ட அழகிய கரிய முகம் நமக்கு மானுட முகமல்ல, நம்மை ஆளும் அன்னை முகம். ருத்ரமாதேவி எப்படி இருப்பாள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் கரிய ஓங்கிய உடல் கொண்ட ஒர் அன்னையாக நான் அவர்களை உருவகித்திருந்தேன். சமீபத்தில் ருத்ரமாதேவி என்று ஒரு படம் வந்தபோது அதில் வெண்ணிறமான அனுஷ்கா கதாநாயகியாக நடித்திருந்தார். நூற்றுக்கணக்கான முறை அந்த விளம்பரங்களை பார்த்தும் கூட அது ருத்ரமாதேவி என்று எனக்குத் தோன்றவே இல்லை.

ராமப்பா கோயில் தூண்களில் கரிய அழகிகளின் சிலைகளைப் பார்த்துக் கொண்டு வண்டுபோலச் சுற்றிவந்தேன். செவிகளும் தோலும் மூக்கும் நாவும் செயலிழந்துவிட விழிகள் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு நிலை அது. சிற்பங்களைக் கூர்ந்து பார்க்கும் போது சிற்பங்கள் நம்மை பார்க்க ஆரம்பிக்கும் கணம் ஒன்று வரும், அதன் பிறகு சிற்பங்களிலிருந்து விடுபடுவது அவ்வளவு எளிதல்ல. ஒவ்வொரு சிற்பமும் ஓர் உணர்வைக் கொண்டிருக்கும். அவற்றின் உதடுகளில் ஒரு சொல் உறைந்திருக்கும். அவர்களின் விழிகளில் உயிரின் ஒளி வந்து நிற்கும்

அழகிகள்! திரண்ட தொடைகள், இறுகி ஒல்கிய சிற்றிடைகள், வனமுலைகள், பணைத்தோள்கள், நீண்ட பெருங்கைகள். மலரிதழ்கள் போல் நெளிந்து முத்திரை காட்டும் விரல்கள், குமிண் உதடுகள், ஒளி பரவிய கன்னங்கள், குழையணிந்த காதுகள், சரிந்த பெருங்கொண்டைகள். பெண்ணுடலின் அழகு குழைவுகளில் நதி போல. ஒவ்வொரு வளைவும் அணைத்துக் கொள்ள விரும்பும் அழைப்பு. காமம் என்றும் அன்னையின் கனிவு என்றும் ஒரே சமயம் தம்மைக்காட்டும் கற்பெண்கள்.

மானுடப்பெண்ணின் உடலில் அவ்வழகு இருக்கக்கூடும். ஆனால் எப்போதும் அல்ல. அவள் உண்பதும் உறங்குவதும் சலிப்பதும் துயர் கொள்வதும் இருக்கலாம். அவள் அழகு அவ்வுடலில் உச்சம் கொள்ளும் ஒரு கணத்தை அழியாது நிலைக்க வைத்தவை இச்சிற்பங்கள். கோபுரத்தின் கலசம் மட்டும் என. மானுடப் பெண்ணை நாம் இப்படி தூய அழகு வடிவில் பார்க்க முடிவதில்லை. கலை அவளிடம் இருந்த மானுடத்தன்மை அகற்றி அவ்வழகை மட்டும் எடுத்து கல்லில் அமைத்த பின்னர் அவள் பெண்ணல்ல, தெய்வம்.

ராமப்பா கோயிலிலிருந்து நான் திரும்ப வரங்கலுக்கு வருவதற்காக வந்து சாலையோரமாக நின்றேன். அங்கு அக்காலத்தில் பேருந்து வசதிகள் மிகவும் குறைவு. இன்று கூட தமிழ்நாட்டுடன் ஒப்பிடும்போது ஆந்திரப்பகுதிகளில் பேருந்துகளை நம்பிப் பயணம் செய்வதென்பது நம்மை பெரிய இக்கட்டுகளில் மாட்டி விடக்கூடியது. சற்று நேரம் நின்றபிறகு தெரிந்தது, பேருந்துகள் வராது என்று. அங்கே தனியார் வண்டிகளை கைகாட்டி நிறுத்து ஏறிக்கொள்ள முடியும்.

ஒருலோடு ஆட்டோ குலுங்கி ஒலியெழுப்பியபடி வந்தது. நான் கைகாட்டியதும் நிறுத்தி, “எங்கு செல்ல வேண்டும்?” என்று கேட்டார். வரங்கல் என்றதும் “வரங்கலுக்கு இது போகாது வழியிலேயே நீங்கள் இறங்கிக் கொள்ளுங்கள். அங்கே வேறு வண்டிகள் உண்டு.” என்றார்.  “பஸ் உண்டா?” என்று நான் கேட்டேன். “பஸ் இந்நேரத்தில் இருக்காது. வேன்கள் வரும் நீங்கள் ஏறிக்கொள்ளலாம். அதுவரைக்கும் போவதற்கு ஆறு ரூபாய் “என்று அவர் சொன்னார்.

நான் லோடு ஆட்டோவின் பின்பக்கம் ஏறிக்கொண்டேன். நான் மட்டுமே இருந்தேன். மிகப்பழைய வண்டி ஒரு ரங்கராட்டினத்தில் செல்வது போல அல்லது ஒட்டகத்தின் மேல் அமர்ந்திருப்பது போல உடற்பயிற்சி செய்யவைத்தது என்னை. சற்று நேரத்தில் வண்டியை நிறுத்தி புளியமரத்தடியில் காத்து நின்றிருந்த ஒரு பெண்ணை ஏற்றிக் கொண்டார்.

அவள் பாய்ந்து ஏறி என் முன்னால் அமர்ந்த போதுதான் சரியாக அவளைப்பார்த்தேன். ஒரு கணம் திகைத்துவிட்டேன். ராமப்பா கோயிலில் நான் பார்த்த அதே கற்சிலை. கன்னங்கரிய பளபளப்புடன் கன்னங்கள். கனவு நிறைந்த விரிந்த கண்கள். கனத்த குழற்சுருள். இறுகிய நீண்ட கழுத்து. உருண்ட கைகள். சிற்றிடை. பெருத்த பின்னழகு . செதுக்கி வைத்தது போன்ற முலைகள் ஒரு பிசிறு கூட இல்லாமல் சிற்ப முழுமையுடன் ஒரு மனித உடல் அமைவதை அப்போதுதான் பார்த்தேன்.

பின்னர் என் கதைகளில் அவளை பல்வேறு கதாபாத்திரங்களாக மாற்றி திரும்பத் திரும்ப வர்ணித்திருக்கிறேன். அப்படி ஒரு பெண்ணை கூர்ந்து பார்ப்பது தவறு என்று நான் உணர்ந்து விழிகளைத் திருப்புவதற்கே அரைமணி நேரத்திற்கு மேலாயிற்று. அவள் என் பார்வையை பொருட்படுத்தவில்லை. இயல்பாக என்னைப்பார்த்து சீராக அமைந்த வெண்ணிற பற்கள் காட்டி சிரித்து தனக்குள் ஏதோ பாடியபடி கைவிரல்களால் வண்டியின் இரும்பு விளிம்பில் தாளமிட்டபடி உடலை மெல்ல அசைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

நான் மீண்டும் அவளைப்பார்த்தவுடன், இயல்பாகச் சிரித்து   “எந்த ஊர்?” என்று தெலுங்கில் கேட்டாள்.  “தெலுங்கு தெரியாது” என்றேன்.  “தமிழா?” என்று மறுபடியும் கேட்டாள். ”ஆம்” என்றதும் தெலுங்கு கலந்த தமிழில் என்னிடம் பேசத் தொடங்கினாள்.

”உனக்கு எப்படித்தமிழ் தெரியும்?” என்று கேட்டேன். ”சினிமாவில் நடிப்பதற்காக நான் சென்னைக்குச் சென்றேன். அங்கே நான்கு வருடம் இருந்தேன்.” என்றாள்.”எப்போது?” என்று நான் திகைப்புடன் கேட்டேன். “நான் சென்னைக்குச் செல்லும் போது எனக்குப்பதினைந்து வயது.” என்றாள் . எனக்கு சிரிப்பாகவும் இருந்தது.”சினிமாவில் நடித்தாயா?” என்றேன். ”நிறைய படங்களில் பின்னணியில் நடனமாடியிருக்கிறேன்” என்றாள்.

”அதன்பின் ஏன் இங்கு வந்தாய்?” என்றேன். ”அதன் பின் என் தாய்மாமன் என்னைத் திருமணம் செய்து கொண்டார். அவர் தான் இங்கு அழைத்து வந்தார்” என்றாள். “இங்குதான் இப்போதும் இருக்கிறாயா?” என்றேன். “ஆமாம் இங்கே என் அக்காவுடன் இருக்கிறேன்” என்றாள். அதன்பிறகு ”அவளே என் அக்காவையும் என் தாய்மாமன் தான் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்” என்றாள்.

எனக்கு அவள் மேலும் என்னிடம் பேசுவது பிடித்திருந்தது. பேச்சைக் கேட்கும்பொருட்டு அவளை நான் பார்க்கமுடியுமே.. ”இங்கு என்ன செய்கிறாய்?” என்று கேட்டேன். ”மெட்ராசில் செய்து கொண்டிருந்ததைத்தான்” என்றாள். எனக்குப்புரியவில்லை. ”மெட்ராசில் நட்னம்தானே ஆடினாய்?” என்றேன். ”நடனம் எங்கே ஆடினேன்? அது எப்போதாவது தான் பெரும்பாலும் என் அத்தை என்னை அழைத்துக் கொண்டு செல்வாள்.”

திகைப்புடன் ”எங்கே?” என்று கேட்டேன். ”மகாபலிபுரத்திற்கு கழுகுமலைக்கு அங்கே நிறைய வாடிக்கையாளர்கள் வருவார்கள் அவர்களுடன் இருப்பேன்” என்றாள். ஒருகணம் கழித்துத்தான் அவள் என்ன சொல்கிறாள் என்று எனக்குப்புரிந்தது. எனக்குக் கைகள் நடுங்க ஆரம்பித்தன. அப்போதும் நம்பிக்கையிழக்காமல் ”வாடிக்கையாளர்கள் என்றால்…?” என்றேன்.

”எங்கள் குடும்பத்தில் எல்லாரும் இதே தொழில் தான் செய்கிறார்கள். இப்போதும் அதே தொழில் தான் செய்கிறோம். இப்போதுகூட இங்கு ஒரு பண்ணையாரின் வீட்டுக்குப்போய்விட்டுத் திரும்பிப் போகிறேன்” என்றாள். ”என்ன செய்வாய்?” என்றேன். ”நடனமாடுவேன். அவருடன் இரவில் இருப்பேன். நேற்று இரண்டு பேர் இருந்தார்கள்.”

”என்ன நடனம்?” என்றேன். ”இவர்களுக்கெல்லாம் ஆடையில்லாமல் ஆடினால் தான் பிடிக்கும்” என்று சொல்லிச் சிரித்தாள். என்னுடைய படபடப்பை பார்த்து ”பயப்படாதீர்கள். சும்மா தான் சொன்னேன்” என்றாள். ”சும்மா என்றால் என்ன?” என்றேன். ”நீங்கள் எப்படி படபடப்படைகிறீர்கள் என்று பார்ப்பதற்காகத்தான்” என்றாள்.

பிறகு என்னைப்பற்றிக் கேட்டாள். நான் காசர்கோட்டில் தொலைபேசித்துறையில் பணியாற்றுகிறேன். ஆந்திராவில் கோவில்கள் பார்ப்பதற்காக அங்கு வந்தேன் என்றேன். அவள் அங்குள்ள ஆலயங்களைப்பற்றிச் சொல்ல ஆரம்பித்தாள். நான் அதுவரை பார்க்காத பல நூறு அற்புதமான ஆலயங்கள் அங்கிருப்பதை அவள் சொன்னாள்

”இதெல்லாம் உனக்கு எப்படித்தெரியும்?” என்று கேட்டேன். ”எனக்கும் கோயில்களில் சிற்பங்களைப்பார்ப்பதில் ஆர்வமுண்டு. கையில் கொஞ்சம் பணம் இருந்தால் உடனே கிளம்பி கோயில்களைப் பார்ப்பேன்” என்றாள். அதன் பிறகு இளவயதில் முதன் முதலாக அவள் ராமப்பா கோயில் வந்ததை பற்றிச் சொன்னாள்.

அவளுடைய குடும்பம் நல்கொண்டா மாவட்டத்தைச் சார்ந்தது. பரம்பரையாக துணி துவைக்கும் வேலையை செய்து வந்தார்கள். ஆண்டைகளுக்கு பாலியல் அடிமைகளாகவும் அவர்கள் இருந்தாகவேண்டும். அதன்பிறகு பாலியல் தொழில் செய்பவர்களாக அவர்கள் மாறினார்கள். நிறைய பேர் சினிமாவில் நடிக்கப்போய் திரும்பி வந்திருக்கிறார்கள். சிலர் சென்னையிலேயே பணக்காரர்களாக மாறித் தங்கிவிட்டார்கள்.

தன்னுடைய குடும்பம், அம்மா, அக்காக்கள், இப்போது அக்காவுக்கு இருக்கும் மூன்று குழந்தைகள், வீட்டில் வளரும் இரண்டு ஆடுகள், அவள் விரும்பி வாங்கி வளர்த்துக் கொண்டு வரும் இரண்டு வான்கோழிகள் என்று பேசிக் கொண்டே இருந்தாள். அவளே மகிழ்ந்து சிரித்தாள். சிரிக்கும்போது கைகளைத் தட்டிக்கொண்டு கால்களுக்கு நடுவே கைகளைப்புதைத்துக் கொண்டு நெளியும் வழக்கம் அவளுக்கு இருந்தது. சிறிய அழகிய நடனம் போல.

என்ன ஒரு கருமை என்றுதான் நான் வியந்து கொண்டிருந்தேன். ”உனக்கு குழந்தைகள் இல்லையா?” என்று கேட்டேன். ”எனக்குக் குழந்தைகள் பிறக்காது என்று டாக்டர் சொன்னார்?” என்றாள். ”என் அக்காவுக்கு மூன்று குழந்தைகள் மூன்று பேரும் பள்ளிக் கூடத்தில் படிக்கிறார்கள். எனக்குக் குடைக்கும் பணத்தை அவர்களுக்கு தான் கொடுக்கிறேன்” என்றாள். செல்லும் வழியிலேயே ஒவ்வொரு சாலை திருப்பத்தை சுட்டிக் காட்டி அங்கு சென்றால் இருக்கும் கோயில்களைப்பற்றிச் சொன்னாள்.

இறங்குமிடம் வந்தபோது நான் அவளிடம் ”நீ ஏன் இவ்வளவு தூரம் உன்னைப்பற்றி சொல்கிறாய்?” என்றேன். ”சும்மா எனக்குப்பிடித்திருக்கிறது. யாரிடமாவது இதையெல்லாம் நிறைய சொல்ல வேண்டும் என்று தோன்றியது”. நான் அவளை புண்படுத்த வேண்டுமென்று சிறிய குரூரம் கொண்டு ”நீ போகும் வாடிக்கையாளரிடம் சொல்ல வேண்டியது தானே?” என்றேன்.

”அவர்கள் இதையெல்லாம் கேட்கமாட்டார்கள். அவர்கள் எதையாவது சொல்வார்கள். அதைக் காதுகொடுத்துக் கேட்கவேண்டும். அவர்களை நான் கொஞ்ச வேண்டும் அல்லது அழவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்” என்றாள். அதன்பின் ”பெண்களிடம் சொல்ல முடியாது. என்னைப்போன்ற பெண்கள் இதையெல்லாம் கேட்க மாட்டார்கள். வேறு பெண்களிடம் நான் பேசுவதில்லை” என்றாள்.

அவளும் என்னுடன் இறங்கிக் கொண்டாள். ”நீ இங்கா இறங்க வேண்டும்?” என்றேன். ”இல்லை.நான் வேறு வண்டி பிடித்து போய் கொள்கிறேன். இங்கிருந்து இந்த இருளில் நீங்கள் வண்டி பிடித்து வரங்கல் செல்வது கஷ்டம் நான் ஏற்றிவிடுகிறேன்” என்றாள்.

நான் மறுத்தும் என்னுடன் நின்றுகொண்டள். இன்னொரு வண்டி வந்ததும் அவளே கைநீட்டி என்னை ஏற்றிவிட்டு வரங்கலில் இறக்கிவிடும்படி சொன்னாள். நான் அவளிடம் விடைபெற்றுக் கொண்டேன். ”உன்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது” என்றாள். ”ஏன்?” என்றேன். ”தெரியவில்லை. சும்மா பேசிக் கொண்டிருப்பது எனக்குப்பிடிக்கும்” என்றாள். அவள் என்ன சொல்கிறாள் என்பது எனக்குப் புரியவில்லை.

நீண்ட நாட்களுக்குப்பிறகு நினைத்துக் கொண்டேன். மொத்த வாழ்நாளிலேயே வேறெந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் அவளிடம் பேசிய ஒருவனாக இருக்கலாம் வழிப்போக்கர்களைப்போல நமக்கு அணுக்கமானவர்கள் எவருமில்லை. அவர்களை நாம் மீண்டும் சந்திக்கவே போவதில்லை என்றால் அவர்கள் வெறும் மனிதர்களாக ஆகிவிடுகிறார்கள்.

 

என் உள்ளத்தில் அவளுக்கு ’ருத்ரமாதேவி’ என்று பெயரிட்டேன். கடைசி வரை அவள் பெயரை நான் கேட்டுத்தெரிந்து கொள்ளவே இல்லை.

முகங்களின் தேசம் குங்குமம்

 

 

முந்தைய கட்டுரைசூரியனுடன் தொற்றிக்கொள்ளுதல் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇலக்கிய வாசிப்பும் பண்படுதலும்