இருத்தலின் இனிமை

 

 

ladakh 130

 

அமெரிக்காவில் ஒருமுறை சாலையில் நடந்து கொண்டிருக்கும்போது ஒரு வீட்டு முற்றத்தில் பெரிய சாம்பல்நிற ஓணானின் பொம்மை ஒன்றை இளவெயிலில் மேஜை மேல் வைத்திருப்பதை பார்த்தேன். அதன் அருகே நாற்காலியில் அமர்ந்திருந்தவரிடம் வணக்கம் சொன்னபின் அது என்ன என்று கேட்டேன். மரகதத்தால் ஆன ஒரு சிற்பம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் சட்டென்று அது இமைத்தது. அப்போதுதான் அது உயிருள்ளது என்று தெரிந்தது. ஒரு நிமிடம் அதிர்ந்து தான் போனேன்.

அது நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஓர் ஓணான் என்று அவர் சொன்னார். Tuatara என்றுபெயர்.பழைய டைனோசர்களின் வம்சம். அதை வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கிறார்கள். ”என்ன உணவு கொடுக்க வேண்டும்?” என்று கேட்டேன். ”மாமிசத்தை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொடுக்க வேண்டும். ஆனால் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை ஒரு துண்டு மாமிசம் கொடுத்தால் போதும்”. நான் வியப்புடன் “பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையா?” என்றேன். “ஆம் இதன் வாழ்நாள் மிக நீண்டது. சராசரியாக இருநூறு ஆண்டுகள் வாழும். எனது தாத்தா நியூசிலாந்தில் நில அளவையாளராக வேலை பார்த்தபோது இதை கொண்டு வந்தார். இப்போது நான் வைத்திருக்கிறேன் என் பேரப்பையனின் காலம் வரைக்கும் கூட இது இருக்கும்” என்றார் அவர்.

அந்த ஓணானின் நீண்ட ஆயுளுக்குக் காரணம் ஒன்றே. அது அநேகமாக அசைவதே இல்லை. அதிகபட்சம் ஒரு நாளில் இரண்டு முறை இடம் மாறி அமர்வதோடு சரி இமைகள் கூட அடிக்கடி மூடித் திறப்பதில்லை. பெரும்பாலும் அசைவற்று அரை மயக்கநிலையில் அமர்ந்திருக்கும். குளிர்காலத்தில் ஆழ்ந்த உறக்கம். செதில்கள் இருப்பதனால் உடல் வெப்பத்தை பேணும் பொறுப்பில்லை. உள்ளுறுப்புகளும் மிக மெதுவாகவே வேலை செய்கின்றன. ஆகவே அது உணவை எரிபொருளாக்குவது மிகக்குறைவு. மிககுறைவான உணவு போதும். அதிகமாக வேட்டை ஆடவேண்டிய அவசியமில்லை. தேடி வரும் உணவை மட்டும் உண்டால் போதும்.

என் நண்பர் கால்கரி சிவா கனடாவில் இருக்கிறார். அவரை அமெரிக்காவில் ஒருமுறை சந்தித்தேன். அவர் ஏற்கனவே அவர் ஐம்பது வருடம் வயதான பிரெசில்நாட்டு கிளி ஒன்றை வளர்க்கிறார். நூறு வருடம் அது உயிர் வாழும். “என் மகனுக்கு அதில் ஆர்வமில்லை. எனக்குப்பின்னால் அதை எவருக்கேனும் விற்றுவிடவேண்டியிருக்கும்” என்று சொன்னார். அதன் வாழ்நாள் ரகசியமும் அதேதான். அசைவின்றி அமர்ந்து கொண்டே இருப்பது.

2013 செப்டெம்பரில் லடாக் சென்றபோது அந்த ஓணானையும் கிளிகளையும் போன்ற இயல்புள்ள மனிதர்கள் அங்குள்ளவர்கள் என்று தோன்றியது. அங்குள்ள அனைவருக்குமே சும்மா இருக்கும் கலை தெரியும் கம்பளி ஆடைகளை அணிந்து கொண்டு ஒரு ஹுக்காவை இழுத்தபடி வெயில் பெருகி சரிந்திருக்கும் மலைச்சரிவுகளை பார்த்து முழு நாளும் அசைவின்றி அமர்ந்திருப்பார்கள். காரில் செல்லும்போது தியானத்தில் என்பது போல் அமர்ந்திருக்கும் முதியவர்களைப் பார்த்துக் கொண்டே செல்வோம். சுருக்கம் அடர்ந்த முகம். சிறிய மின்னும் மணிக்கண்கள்

அவர்கள் உள்ளே என்னதான் ஓடிக் கொண்டிருக்கிறது? காலம் தன்னைக் கடந்து செல்வதை அவர்கள் உணர்கிறார்களா? அதைப்பற்றிய பதட்டம் அவர்களுக்கு உண்டா? அப்பகுதியில் இளைஞர்கள் கூட அப்படித்தான் இருப்பார்கள். பெரும்பாலான இடங்களில் இளைஞர்கள் வட்டமாக அமர்ந்து சீட்டாட்டம் ஆடுபுலி ஆட்டம் போன்றவற்றில் ஈடுபட்டிருப்பதைக் காணலாம். அந்த ஆட்டம் கூட விறுவிறுப்பாக இருக்காது. நெடுநேரம் கழித்தே ஒருவர் சீட்டை விடுவார் அல்லது சோழியை நீக்கி வைப்பார். கூச்சல் சிரிப்பு எதுவுமே இருக்காது. ஒரு மந்திரவாதி தன் கோலை அசைத்து அவர்கள் அனைவருடைய பேச்சையும் செய்கைகளையும் பத்துமடங்கு மெதுவாக ஆக்கிவிட்டது போல் இருக்கும்.

 

அந்த உறைந்த நிலத்தில் நாம் மட்டும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருப்பதன் பொருத்தமின்மையை பார்க்கலாம். டீக்கடைக்கு சென்று அமர்ந்து உணவுக்கு உத்தரவிட்டால் அதன் உரிமையாளர் மிக மெதுவாக எழுந்து சென்று அடுப்பைப் பற்ற வைத்து உணவை தயாரித்து கொண்டு வந்து பரிமாறுவதற்கு ஒருமணிநேரத்திற்கு மேல் ஆகும். அதற்குள் நாம் பொறுமையிழந்து அசைவோம். எழுந்து சென்று அந்தக் கடையில் மாட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகளைப் பார்ப்போம். பொருட்களை பரிசீலிப்போம். வெளியே நின்று சாலையை பார்வையிடுவோம். இல்லை ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளத்தொடங்குவோம்.

ஏன் நம்மால்அமைதியாக இருக்க முடிவதில்லை? அவர்கள் நடந்து செல்கிறார்கள், நாம் ஒரு ஏணியில் ஏறிக்கொண்டே இருக்கிறோம். அவர்களுக்கு இன்று மட்டுமே. நாம் நாளை, நாளை என்று இன்றை கடந்து கொண்டிருக்கிறோம்.. நாம் உண்ணும் உணவு அனைத்துமே நம் பரபரப்புக்கு எரிபொருளாக மாறுகிறது.

அங்குள்ள பௌத்த மடாலயங்கள் காலத்தில் உறைந்தவை . பௌத்த மடாலயக் கட்டிடங்களே சாதாரணமாக இருநூறு வருடம் பழையவை .உள்ளமைப்புகளும் பாத்திரங்களும் அனைத்தும் பழமையானவை .பெரும்பாலான பிக்ஷுக்களின் வாழ்க்கை முறை முற்றிலும் காலமற்றது. அவர்களின் பிரார்த்தனையே ஒருமணிநேரத்திற்குமேல் ஆகும். உணவுண்பதே ஒரு மணிநேரம் ஆகும். அதன் பின் ஆங்காங்கே அமர்ந்திருப்பார்கள்.

அங்கே மலைகளில் ஏறி இறங்குவதே போதுமான உடற்பயிற்சியாக அமைந்துவிடுவதால் அவர்கள் உடலில் மிகையான கொழுப்பு என்பதே இல்லை. லடாக்கில் எங்குமே தொப்பையுடன் ஒருவரை பார்க்க முடியாது. இத்தனைக்கும் அவர்கள் உணவு மிகக்குறைவானது ஒரு துண்டு மாமிசம். மிகக்குறைவாகவே மாவு, பெரும்பாலும் அதை நூடில்ஸ் வடிவில் கஞ்சிபோல அருந்துகிறார்கள். உணவு விடுதிகளில் சாப்பிடக் கேட்கும்போது அவர்கள் கொண்டு வருவது நமது கால்வயிற்றுக்குக் கூட போதாது என்று தோன்றும். அதுவும் பெரும்பாலும் ரசம் போன்ற திரவம். வெறுமே அமர்ந்திருக்க அவ்வளவு உணவு போதும் என்று தோன்றும்.

 

 

 

உடலை விட நம் உள்ளத்திற்கு அதிக உணவு தேவைப்படுகிறது. சாப்பிட்டபின் உணவு போதவில்லை என்று தோன்றுவது அதனால்தான். உடகாரவிடாத உள்ளம், ஓடு ஓடு என துரத்தும் உள்ளம், அமர்ந்திருந்தால் நமக்குரிய எதையோ எங்கோ எவரோ கொண்டுபோய்விட்டார்கள் என பதறும் உள்ளம்.

அவர்களின் தெய்வங்களும் அதே போல மடிமீது கைவைத்து அரைக்கண் மூடி தியானத்தில் அமர்ந்திருக்கின்றன. தன் உள்ளாழ்ந்து இதழ்களில் மெல்லிய புன்னகையுடன் தியானத்தில் இருக்கும் புத்தர் போல மலைப்பகுதிகளுக்கு பொருத்தமான தெய்வம் பிறிதில்லை. மலைச்சிகரங்களின் அமைதியும் தனிமையும் புத்தரிடம் உண்டு.

சமீபத்தில் ஸ்பிட்டி வேலி சென்றிருந்தோம். லடாக்கை A Tibet out of Tibet என்று சொல்வார்கள். ஸ்பிட்டி வேலியை A Ladakh out of Ladakh என்று சொல்வார்கள். திபெத்தின் ஒரு பகுதியாக இருந்தது, தேசப்பிரிவினையின்போது இமாசலப்பிரதேசத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. சிம்லாவிலிருந்து மேலும் ஒரு முழுநாள் மலைப்பாதையில் ஏறிச்செல்லவேண்டும். இந்தியாவுக்குள் உயரமான மக்கள் குடியிருப்புப்பகுதி இதுதான். அங்கும் அதே காலமில்லா வாழ்க்கை.

நூறாண்டுக்காலம் பழைய தானியங்கி அரைவை மில் ஒன்று இருப்பதாக எண்ணி ஒரு சிற்றூரில் நுழைந்தோம். பனி உருகி வரும் நீரை கொண்டு ஒரு சக்கரத்தை சுழல வைத்து அதில் பொருத்தப்பட்டுள்ள குழவியை இயக்கி கோதுமையை மாவாக்கிக் கொண்டிருந்தார்கள். அதுவும் மிக மெதுவாக ஓடிக் கொண்டிருந்தது. ஒரு நாள் முழுக்க அது ஓடினால்தான் ஏழெட்டு கிலோ மாவு உருவாகும்.

 

 

அதை பார்த்துவிட்டு வரும்போது லடாக்கிய தோற்றம் கொண்ட ஒரு பாட்டி தன் இரு குழந்தைகளுடன் அமர்ந்திருக்கக் கண்டோம். பேத்தியின் பெயர் ரித்திகா. அதை கையில் எடுத்து முகம் சேர்த்து கொஞ்சினேன். ரித்திகா பனி போல குளிர்ந்திருந்தாள். நான் அணைத்துக் கொண்டபோது என் தோளை கையால் வளைந்து மூக்கால் என் கன்னத்தை தொட்டாள். மஞ்சள்ஜாடி போன்ற முகம். குச்சி மூக்கு.நீர்த்துளிக்கண்கள்.

பாட்டிக்கு தன் பேரக்குழந்தையை பற்றி அவ்வளவு பெருமை. லடாக்கிய மொழியில் அவளைப்பற்றி நிறையச் சொல்லி சுருங்கிய முகம் வலைபோல இழுபட சிரித்தாள். “என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டோம். அந்தக் குழந்தை பாட்டியின் கொள்ளுப்பேத்தியின் மகள் என்று தெரிந்தபோது பெரிய ஆச்சரியம் ஏற்படவில்லை. மலைப்பகுதிகளில் நூறுவயதுக்கு மேல் வாழ்க்கை என்பது சாதாரணமானது.

பாட்டி காலையிலேயே பேரக்குழந்தையுடன் அங்கு வந்து அந்த சிறிய முற்றத்தில் அமர்ந்திருக்கிறாள். பகல் முழுக்க இளவெயிலில் அங்குதான் அமர்ந்திருப்பார்கள் .அந்த இளவெயிலை தன் ரத்தத்தில் சேர்த்துக் கொண்டால் அடுத்து வரப்போகும் ஏழு மாத கால பனிப்பருவம் முழுக்க அந்த சூரிய வெப்பம் அவர்கள் ரத்தத்தில் இருக்கும்.

விடை பெற்று கிளம்பும்போது கிருஷ்ணன் சொன்னார். ”எது நல்ல வாழ்க்கை என்று எப்படி சொல்வது சார்? கடுமையாக உழைக்க வேண்டும். நாட்டை முன்னேற்ற வேண்டும், சொத்து சேர்க்க வேண்டும், இதெல்லாம் தான் நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது. நமது குழந்தைகள் இரண்டுவயதிலேயே ஒரு நாளைக்கு ஐந்து மணிநேரம் மூளை உழைப்புக்கு பழக்கப்படுத்தப்படுகிறார்கள். வெ றி பிடித்ததுபோல் ஒரு நாளின் பன்னிரண்டு மணி நேரம் உழைப்பவரே வெற்றி அடைகிறார். உழைப்பு கொண்டாடப்படும் பண்பாடு மலைகளுக்குமேல் இல்லை. நம் தலைக்குமேல் இப்படி ஒரு வாழ்க்கை இருக்கிறது. இங்கு வாழ்தல் என்பது உயிருடன் இருப்பதன் இனிமையை அனுபவித்தபடி உட்கார்ந்திருப்பதுதான். இதை சோம்பல் என்று நம் மக்கள் சொல்வார்கள். நான் இதை இயற்கையில் ஒன்றி அமர்ந்திருப்பது என்று தான் பொருள் கொள்கிறேன். என்னால் இப்படி வாழமுடியாது. ஆனால் வாழ முடிந்தால் இதுதான் நல்ல வாழ்க்கை”

 

“ஆமாம் அது தெரிந்துதானே கடவுள் அவர்களை நூறுவயதுக்கு மேல் வாழ வைக்கிறார்,. நம்மையெல்லாம் அறுபது எழுபது வயதுகளில் எடுத்துக் கொள்கிறார்?’ என்று சொன்னேன். கீழிருந்து மேலே நோக்கி ராஜமாணிக்கம் சொன்னார்.  “அந்த பாட்டி பகல் முழுக்க வெறுமே அமர்ந்திருப்பது பரவாயில்லை சார். ஆனால் மடியில் அந்த குழந்தையும் அப்படி அமர்ந்திருக்கிறது அதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. அதுவும் அப்படியே வளர்கிறது. நம் குழந்தைகள் ஐந்து நிமிடம் அப்படி உட்காருமா?”. அந்தக்குழந்தை நூறாண்டுவாழ பயிற்சி எடுக்கிறது என நினைத்துக்கொண்டேன்.

முந்தைய கட்டுரைவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது: கடிதங்கள்
அடுத்த கட்டுரைகாந்தி கடிதங்கள் -3