ஆழத்தின் முகங்கள்

முகங்களின் தேசம் குங்குமம்

 

lothal 7

 

குஜராத் சுற்றுலாப்பயணிகளின் கனவு பூமி .நமது தொன்மையான பண்பாட்டு அடையாளங்களில் பலவும் ராஜஸ்தானிலும் குஜராத்திலும் தான் உள்ளன. பல காரணங்கள். முதன்மையானது, இவை அரைப்பாலைவனங்கள். அடர்ந்த காடுகள் பெரிய நாகரீகங்களை உருவாக்குவதில்லை. ஏனென்றால் நவீனச் சாலைகளும் எந்திரங்களும் வருவதற்கு முன்பு மழைக்காடுகளை அணுகுவதோ அழிப்பதோ அவ்வளவு எளிதல்ல. ஓரளவுக்கு மழை பொழிவுள்ள அரைப்பாலைவனங்கள்தான் இரும்பு கண்டுபிடிக்கப்படாத வெண்கலக்காலத்தில் மக்கள் குடியேறி வாழ்வதற்கும் விவசாயம் செய்வதற்கும் மிக ஏற்றவை.

ஆகவே தான் இந்திய பண்பாட்டின் தொடக்க கால அடையாளங்கள் அனைத்தும் சிந்து சமவெளியிலும், ராஜஸ்தான் பாலைவனத்திலும், குஜராத்தின் கட்ச் பாலைவனத்திலும் காணப்படுகின்றன. அவை ‘மறைந்த நாகரீகங்கள்’ என்று சொல்லப்படுகின்றன. ஆனால் தொல்பண்பாட்டின் அடையாளங்கள் எந்நிலையிலும் அழிவதில்லை. அந்த நாகரீகம் மறையும், ஆனால் அந்த பண்பாட்டு அடையாளம் ஏதோ ஒரு வகையில் மறுபிறப்பு எடுத்தபடியே இருக்கும்.

2012 ஜனவரி 28 ஆம்தேதி ஏழுநண்பர்களுடன் குஜராத்திற்குள் நுழைந்து அகமதாபாத் வழியாக குஜராத்தின் கடற்கரை பகுதியை சுற்றிக் கொண்டு கட்ச் நோக்கிச் சென்றோம். முதலில் தொன்மையான நகரமாகிய லோத்தலைப் பார்த்தோம். பள்ளிக்கூட பாடபுத்தகங்களில் சிந்து சமவெளி நாகரிகம் என்று படிக்கும்போது மொகஞ்சதாரோ ஹரப்பா என்று மனப்பாடம் செய்திருப்போம். அவை இந்தியாவில் ஆரியர்கள் புகுவதற்கு முன்பிருந்த மக்களின் நாகரிகம் என்றும் திராவிட நாகரிகமாக அவை இருக்கலாம் என்றும் நாம் சொல்லிக்கேட்டிருப்போம்.

ஜான் மார்ஷலும் அலக்ஸாண்டர் கன்னிங்ஹாமும் ஆர்.டி.பானர்ஜியும் மொகஞ்சதாரோவையும் ஹரப்பாவையும் 1870களில் அகழ்ந்து எடுத்த போது அந்த இரு தொல்நகரங்களே அறிய வந்தன. அவற்றைக் கொண்டு அந்தப் பண்பாடு ஆரியர்களின் வருகைக்கு முன்பிருந்த ஒரு மிகச் சிறிய நகரப்பண்பாடு என்ற வாதத்தை அவர்கள் முன்வைத்தார்கள். அந்த பண்பாடு அத்தனை வளர்ச்சி அடைந்திருந்ததைக் கண்டு அவர்கள் எப்படி வாழ்ந்திருக்கக்கூடும் என்பதை ஊகிக்க முயன்றார்கள். அப்படித்தான் அன்றைய குறைந்த தகவல்களைக்கொண்டு அவர்கள் ஆரியரல்லாத நகரநாகரீகத்தினர் என ஊகித்தனர்.

ஆனால் சென்ற ஐம்பதாண்டு காலத்தில் மொகஞ்சதாரோ ,ஹரப்பா நாகரிகத்தை சேர்ந்த அதைவிடவும் காலத்தால் முந்தைய பல தொல்நகரங்கள் இந்தியாவில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் குஜராத்திலும் ராஜஸ்தானிலும் அமைந்துள்ளன. அவற்றில் முக்கியமானவை லோத்தல், டோலவேரா, காலிஃபங்கன் ஆகியவை. இவ்வளவு பெரிய நாகரீகம் போரால் அழிந்திருக்காது, சூழியல் மாற்றமே காரணம் என்று இன்று ஊகிக்கிறார்கள். ஆயிரம் ஆண்டுகளாக மெல்லமெல்ல அந்த நிலம் வரண்டு பாலைவனமாகியபோது அந்த நாகரீகம் அழிந்தது. ஆனால் அந்த மக்கள் மறையவில்லை, அவர்கள் வேறுநிலங்களில் குடியேறி வேறுவகையில் வளர்ந்தனர். அவர்கள்தான் நாம்.

1954ல் லோதல் பற்றிய முதல் தடயம் கிடைத்தது. 1955இல் பெப்ருவரி 13 ஆம் தேதி லோதல் எஸ்.ஆர்.ராவ் தலைமையிலான குழுவால் முதல்முறையாக அகழ்ந்தெடுக்கப்பட்டது. ஐந்தாண்டுக்கால ஆராய்ச்சிக்குப்பின் 1960 இல் இந்தியத் தொல்லியல் துறை அந்நகரைப் பாதுகாக்க ஓர் அமைப்பை உருவாக்கியது. அதைப்பற்றிய ஆய்வேடுகள் வெளியிடப்பட்டன.

கிமு இருபத்துநான்காம் நூற்றாண்டைச்சேர்ந்த தொல்நகரம் இது. லோதல் என்றால் மரணமேடு என்று குஜராத்தி மொழியில் பொருள். மொகஞ்சதாரோவுக்கு சிந்தி மொழியில் அதே பொருள்தான். இன்று ஒரு மேடாக இருக்கும் இந்த இடம் வரை சமீபகாலம் வரை கடல் இருந்திருக்கிறது. லோதல் நெடுங்காலம் ஒரு துறைமுகமாக இருந்திருக்கிறது.

லோதலின் ஆச்சரியங்களில் முதலானது அங்குள்ள நுட்பமான சுடுமண் முத்திரைகளும் எழுத்துக்களும். பாடநூல்களில் மட்டுமே கண்ட சிந்துசமவெளி எழுத்துக்களை நேரில் கான்பது பிரமிப்பூட்டும் அனுபவம். பெரும்பாலான முத்திரைகளில் சிந்துவெளிக்காளையும் ஒற்றைக்கொம்பு மிருகமும் இருந்தன.

லோதல் நகருக்குள் நடந்தோம். உறுதியான சுட்டசெங்கற்களால் ஆன அடித்தளங்கள். சுவர்கள். அவை நாலாயிரத்தைநூறு வருடம் முந்தையவை எனக் கற்பனை செய்யவே பிரமிப்பாக இருந்தது. உயர்ந்த நகர்மையம். அங்கே பெரிய மாளிகைகளுக்கான அடித்தளங்கள். குளியலறைகள். அங்கிருந்து நீர் வழிந்தோடும் கச்சிதமான சாக்கடை அமைப்புகள். நகர் நடுவே சதுக்கபீடங்கள்.

லோதலின் முக்கியமான அமைப்பு என்பது அங்கே அமைக்கப்பட்டிருந்த பெரிய துறைமுகக்குளம்தான். ஒரு பெரிய படகுத்துறை இது. அறுபதடி நீளமான படகுகளைக்கூட லோதல் மக்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். அவற்றில் ஏறி நெடுந்தூர கடற் பயணங்களைச் செய்திருக்கிறார்கள். சுமேரியாவுடன் வணிகம் செய்திருக்கிறார்கள். அக்காலத்தில் கடல் மிக அருகே இருந்தது, கடல்பாசிகளின் புதைவடிவத் தடம் வழியாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

படிப்படியாக இறங்கி சென்று ஆழத்தில் மண்ணுக்கு அடியில் ஆழத்தில் நமது தொல்வரலாற்றில் இருப்பது போன்ற ஒரு அனுபவம். அக்கால மக்கள் தங்கள் குழந்தைகளுக்காக செய்த சிறிய களிமண் பொம்மைகளை பார்த்தபோது பெருவியப்பே ஏற்பட்டது.

கட்ச் பகுதியின் ஆச்சரியங்களில், ஒன்று சிந்து சமவெளியின் இலச்சினைகளில் இருக்கும் அதே காளையை அங்கே அரைப் பொட்டலில் மேய்ந்து கொண்டிருப்பதாக காணமுடியும் என்பது. காலம் நான்காயிரம் வருடம் ஓடிப்போய்விட்டதை அது அறியவே இல்லை என்று தோன்றும். உயர்ந்த புள்ளிருக்கையும் தாழ்ந்த கழுத்து மடிப்புகளும் குட்டைக் கால்களுமாக அது சிலிர்த்தபடி நம்மைப் பார்க்கையில் ஹரப்பா நாகரிகம் நம்மை திகைப்புடன் நோக்குவதாகத் தோன்றும்.

லோத்தலில் இருந்து டோலவேராவுக்கு கட்ச் வளைகுடாக்கரை வழியாகச் செல்லும் போது வழியில் ஒரு உப்பு வளைகுடாவை பார்த்தோம். கடல் நீர் தேங்கி கடுமையான வெயிலில் ஆவியாகி வற்றி கீழிறங்கி செல்கிறது. பல கிலோமீட்டர் தொலைவுக்கு வெண்ணிற உப்பு மட்டுமேயான கடல். கண்ணாடி பரப்பு போல அதில் படர்ந்த வெயில் கண்களை கூசி நீர்வழியச் செய்தது. எங்கள் எவரிடமும் கறுப்புக்கண்ணாடிகள் இருக்கவில்லை. ஆகவே கண்களை மூடியபடி அந்த உப்புப் பரப்பின் மேல் ஏறி நடந்தோம். மீன்களும் நண்டுகளும் உப்புக்குள் செத்து கலந்திருந்தன. சேறும் உப்புமாக காலடியில் மிதிபட்டு குழம்பின. உள்ளே செல்லச் செல்ல உப்புக் குவியல்கள் கால்பட்டவுடன் நொறுங்கி உள்ளே இழுத்துக் கொண்டன. மேலும் செல்வதற்கு அஞ்சி திரும்பிவிட்டோம்.

உப்பு வளைகுடாவிலிருந்து செல்லும் பாதை எங்களுக்குத் தவறிவிட்டது. இந்த நிலம் உயரமற்ற குட்டை மரங்களும் முட்புதர்களும் மட்டும் கொண்டது. தொலைவிலிருந்து பார்க்கையில் வண்டிச்சாலைகள் கூட ஒற்றையடிப்பாதை என்று தோன்றும் அளவுக்கு விரிந்து பரந்தது. சாலை அடையாளங்கள் என ஏதுமில்லை. சாலையில் எவரிடமும் வழி கேட்கவும் முடியாது. ஏனெனில் மனிதர்களைப்பார்ப்பதே மிக அரிது. பார்க்கும் மனிதர்களுக்கும் அவர்களின் உள்ளூர் குஜராத்தி தவிர எந்த மொழியும் தெரிவதில்லை. அவர்கள் வாழும் மிகச்சிறிய வட்டத்திற்கு அப்பால் வழியும் தெரிவதில்லை.

ஒரு இடத்தில் வழி தவறிவிட்டால் கூட மீண்டும் ஒரு சாலையை பிடிப்பதற்கு முன்னூறு கிலோமீட்டருக்கு மேல் சென்றாக வேண்டும். நெடுந்தொலைவு சென்ற பிறகுதான் வழி தவறிவிட்டது என்பதை உணர்ந்தோம். அன்றெல்லாம் GPS இல்லை என்பதனால் வழியை வரைபடத்தை வைத்து தான் கண்டுபிடிக்கவேண்டும். வரைபடங்களோ இருபது முப்பது வருடம் பழையவை. ஒரு வழியாக ஊகித்து திரும்பி ஓட்டினோம். மாலையில் பலநூறாண்டுகளுக்கு முன்பு வற்றிப் போன பிரம்மாண்டமான ஏரி ஒன்றுக்குள் சென்று இறங்கினோம்.

என் வாழ்வின் மிக அற்புதமான காட்சிகளில் ஒன்று அந்த ஏரி. மழைக்காலத்தில் அது நனைந்து சேறாகிவிடுகிறது. மழை முடிந்ததும் அந்தச் சேறு வெடித்து பாளங்களாகிறது. கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை களிமண் ஓடுகளைப் பரப்பி தரையிட்டதைப் போல் இருந்தது.

அந்தி சாய்ந்துகொண்டிருந்தது. திடீரென்று வண்டியின் டயர் பொத்தலாகி சரிந்து நின்றுவிட்டது. ஓட்டுநர் சபித்தபடி அதை மாற்ற ஆரம்பித்தார். அதைப்பற்றி கவலையே படாமல் இறங்கிச் சென்று அந்தப்பாளங்களை எடுத்து சுழற்றி வீசி விளையாடினோம் ஒரு இஞ்சு கனம் கொண்ட களிமண் பாளங்கள். தொலைவில் நின்று பார்க்கையில் பிரம்மாண்டமான தோல்பையின் மேல் பகுதி போலவோ மாபெரும் முதலை ஒன்றின் தோல் போலவோ மரப்பட்டையின் பரப்பு போலவோ பிரமை தட்டியது. அல்லது வேறு ஏதோ கிரகத்தில் சென்று அங்குள்ள நிலப்பரப்பில் நடப்பது போல

பழுதை நீக்கி புதிய சக்கரத்தை மாட்டியவுடன் கிளம்பியபோது சிவப்பு வானம் குடைபோலச் சூழ்ந்திருந்தது. செல்லச் செல்ல எதுவுமே தென்படாமல் நான்கு பக்கமும் அந்த மாபெரும் களிமண் பரப்பே வந்து கொண்டிருந்தது. நிலம் மாறுபடாத போது உண்மையில் நாங்கள் சென்று கொண்டிருக்கிறோமா இல்லை ஒரே இடத்தில் காற்றில் ஆடிக்கொண்டிருக்கிறோமா என்ற ஐயம் வந்துவிட்டது.

நூறு கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் புழுதியுடன் விரைந்து கொண்டிருந்தது கார். ஒருமணி நேரம் ஆகியும் எதிரே எந்த வண்டியும் வரவில்லை. எந்த ஊரும் தெரியவில்லை. “இதன் மறுபக்கத்தில் கடல்தான் இருக்க போகிறது திரும்பிவிடுவோம்” என்றார் கிருஷ்ணன். சேற்று வெளிக்கு அப்பால் சூரியன் குழம்பி சிவந்து அணைந்தது. “இருட்டாகிறது. நம்மிடம் குடிநீர் கூட இல்லை” என்றார் கடலூர் சீனு. “திரும்புவோம்” என்று பல குரல்கள் எழுந்தன. ஓட்டுநர் “அவ்வளவு தூரம் திரும்பிப் போனால் அங்கும் பாலைவனம் தான் இருக்கிறது. எங்கு போவது?” என்றார்.

”மிகச்சரியாக நடுவில் வந்து மாட்டிக் கொண்டுவிட்டோம்” என்றார் ராஜமாணிக்கம். “வேறு வழியே இல்லை முன்னால் சென்றுகொண்டே இருக்க வேண்டியதுதான். எப்படியும் இதன் மறுபக்கம் ஒன்று இருக்கும்” என்றார் டிரைவர். “செல்வோம்” என்று துணிந்தோம். வேறுவழியே இல்லை.

மிக விரைவிலேயே காற்று இருட்டாகிவிட்டது. வானத்தில் மட்டும் மெல்லிய ஒளி இருந்தது. சற்று நேரத்தில் வேறெங்கும் பார்க்க முடியாதபடி வானம் விண்மீன்கள் செறிந்து ஒளி கொண்டது. விண்மீன்களின் ஒளியை நிலவொளி போல பார்க்க முடியும் என்று அப்போது தான் உணர்ந்தேன். அந்த வெளிச்சத்தில் தகடுகளாக அடுக்கப்பட்டிருந்த நிலம் லேசாக மின்னியபடி எங்களைச் சுழன்று வந்தது.

நெடுநேரம் கடந்தபின் மிகத் தொலைவில் ஒரு சிவந்த புள்ளியை பார்த்தோம். ”நெருப்பு! நெருப்புதான் அது!” என்று நண்பர்கள் கூவினார்கள். ”யாரோ விளக்கு ஏற்றி வைத்திருக்கிறார்கள்” என்றார் கிருஷ்ணன். “விளக்கென்றால் அவ்வளவு தூரம் தெரியாது” என்றார் கடலூர் சீனு. “காட்டுத்தீயாக இருக்குமோ?” என்றார் கே.பி.வினோத். “அதற்கு இங்கே காடு எங்கே இருக்கிறது?” என்றேன் நான். “அங்கு மனிதர்கள் இருக்கிறார்கள் தானாக தீ எரிய வாய்ப்பே இல்லை. மட்டுமல்ல, அந்த தீ பரவவும் இல்லை. அதை நோக்கி செல்வோம்” என்றேன்.

கார் அதை நோக்கி சென்றது எவ்வளவு ஓடியும் அந்நெருப்பு கூடவோ குறையவோ இல்லை என்று தோன்றியது. ஆனால் மெல்ல அத்தீக்கு சுற்றும் மாடுகள் நிற்பதை மெல்லிய நிழலுருவமாக கண்டோம். மேலும் அணுகியபோது உயரமற்ற துணிக் கூடாரங்களை கண்டோம். ”மனிதர்கள்! மனிதர்கள்!” என்று உற்சாகத்துடன் கூவினோம். நாங்கள் அணுகிய போது அவர்கள் நெருப்பை தணித்து கனலாக்கி வைத்திருந்தார்கள்.

வண்டியை நிறுத்தினோம். நூறு மாடுகளுக்கு மேல் அங்கே பட்டி கட்டப்பட்டிருந்தன. எல்லாமே சிந்துசமவெளியின் இலச்சினையில் உள்ள மாடுகள். அவற்றின் உரிமையாளர்கள் ஐவர் அந்தக் கனலைச் சுற்றி கம்பளிகளைப்போர்த்தியபடி அமர்ந்து குளிர் காய்ந்து கொண்டிருந்தனர். அவர்களின் மூன்று துணிக்குடில்களுக்குள் குழந்தைகளும் பெண்களும் தூங்கிக் கொண்டிருந்தனர். நாங்கள் இறங்கி அவர்களை நோக்கி சென்றோம்.

எங்களைப்பார்த்ததுமே ”ஆவோ பாய்” என்று ஒருவர் உரக்க வரவேற்றார். ”வாருங்கள்! சகோதரனே!” என்று முற்றிலும் முகமறியாத ஒருவரை அழைக்க மனிதர்களை காண்பதே அரிதாக உள்ள பாலைவனத்தில் வாழவேண்டும்போல. நாங்கள் எதுவும் கேட்பதற்குள்ளேயே ”அமருங்கள் டீ குடியுங்கள்” என்றார். நாங்கள் ‘அமுதம் அருந்துங்கள்’ என்ற அழைப்பாகவே அதை எடுத்துக் கொண்டோம். நெருப்பை சுற்றி உடல் குறுக்கி அமர்ந்தோம்.

ஒருவர் ஒரு பெரிய அலுமினிய கெட்டிலை அந்தக் கனல் மேல் இருந்த கம்பியில் கட்டித்தொங்கவிட்டு நீர் ஊற்றினார். கொதிக்கும் ஒலி கேட்டதும் எடுத்து மண் கோப்பைகளில் ஊற்றி சூடான பால்விட்டு தேநீர் தயாரித்து எங்களுக்கு அளித்தார். ”மன்னிக்கவேண்டும் உண்பதற்கு ஏதும் இல்லை” என்றார். ”இல்லை நாங்களே வைத்திருக்கிறோம்” என்றோம். கிருஷ்ணன் சென்று காரிலிருந்து பிஸ்கட்டுகளையும் ரொட்டியையும் எடுத்துக் கொண்டு வந்து அவர்களுக்கு கொடுத்தார்.

நாங்கள் வழி தவறிவிட்டதைச் சொன்னோம். ”நீங்கள் வழி தவறவே இல்லை இதுதான் அந்த வழி” என்றார் ஒருவர். “இங்கிருந்து இடமாக சென்றால் அரை மணி நேரத்தில் முதல் ஊர் வரும் அங்கிருந்து தார் சாலை இருக்கிறது அதில் மேலும் ஒரு மணி நேரம் சென்றால் நீங்கள் தங்குவதற்கு விடுதிகள் உள்ள சிறிய ஊர் வரும்” என்றார்.

“நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” என்றேன். ”நாங்கள் இப்பகுதியில் மாடுமேய்க்கிறோம். இங்கு மாடுகளை நெடுந்தொலைவுக்கு கொண்டு சென்றால் மட்டும்தான் புல் கிடைக்கும்” என்றார். மேலும் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விடை பெற்று வண்டியில் ஏறிக் கொண்டோம்.

சென்று அடுத்த ஊரை அடைந்த போதுதான் ராஜமாணிக்கம் சொன்னார். “அவங்க முகமே நாம பாக்கலை சார்!” அவர்கள் எவருடைய முகமும் எங்களுக்குத் தென்படவே இல்லை. அவர்கள் குனிந்து அமர்ந்திருந்தமையாலும் தலையை கம்பளியால் மூடிக் கொண்டிருந்தமையாலும் முகங்கள் இருளுக்குள் இருந்தன.

“அவங்க சிந்துசமவெளியிலே வாழ்ந்தவங்களா இருப்பாங்களோ? மாடுகளைப்பாத்தீங்கல்ல?” என்று கிருஷ்ணன் சொன்னார். வாய்விட்டுச் சிரித்தாலும் அப்படிக் கற்பனைசெய்வது நெகிழ்வூட்டக்கூடியதாக இருந்தது

 

 

முகங்களின் தேசம் குங்குமம்

 

 

முந்தைய கட்டுரைகிராதம்,அய்யனார்,கதகளி
அடுத்த கட்டுரைசூரியனுடன் தொற்றிக்கொள்ளுதல் -கடிதங்கள்