அன்புள்ள ஜெ,
சிங்கை விமர்சனம் குறித்து வந்த கடிதம் கண்டு ஜெயந்தி சங்கர் பிளாக்கை படித்தேன்.
2007 ஆண்டு வரை மட்டுமே பதிவிடப்பட்டுள்ளது. படித்த சிறுகதைகள் நான்கும் சிங்கை சூழலியலை வேலை, சீனர், சொந்த ஊர், போன்றவற்றை மட்டும் பயன்படுத்தி பலவீனமாக கட்டமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் குறிப்பிட்டபடியே சம்பவ விவரணையை தேடினாலும் கிடைக்கவில்லை. இக்கதைக்கான தேவை என்பதென்ன என்றே புரியவில்லை. திராவகம் என்ற கதை குடியை பற்றியது, சாதாரணமாக எங்கும் நடக்கும் குடிகாரனின் தொடக்கம், பொய் சத்தியங்கள். காமம் கொண்டு மகளிடம் தவறாக நடக்க முயல்கிறார் தந்தை, ஏதோ பெரிதாக நிகழ போகிறது என பார்த்தால், குற்ற உணர்வில் நாளை திருந்திவிடுவார் என்று கதை முடிகிறது. உச்சத்தில் மாடிவீட்டில் குழந்தை அழ சீன பெண் சமாதானபடுத்துகிறார் (சிங்கையல்லவை??) தலைவலிக்க வைக்கும் கதை.
பொதுவாக இவர்களின் கதை யோசிக்க வைக்கும் அல்லது உணர்வெழ வைக்கும் கதைகளல்ல. சாதாரண சம்பவகதைகள், சாமான்யர்களால் நிகழ்கிறது. மனதை எழுத்தில் ஊன்றி படிக்க வேண்டிய அவசியமில்லாததே இவர்களின் வெற்றி. எங்கும் இவர்கள் இருக்கிறார்கள், சாமானியர் படிக்க கதை எழுதி கொண்டு, சிங்கையில் அவர்களே பிரதான எழுத்தாளுமைகள் என்பது வியக்கவைக்கிறது. சற்றே செலவு செய்து சிங்கை சென்றுவிட்டால் நானும் ஒர் நாட்டின் சிறந்த எழுத்தாளராக வாய்ப்புள்ளது என்று அறிகிறேன்.
சிங்கம் சிவா
*
சூர்யரத்னா குறித்த உங்கள் கருத்தும் அதற்கான அவரின் சிறுபிள்ளைத்தனமான எதிர்வினையும் பார்த்தேன்
Is this guy worth my time? என்ற பின்னும் சூர்ய ரத்னா நிறைய நேரம் செலவழித்தும், நிறைய reference செய்தும் இதை எழுதியிருக்கிறார் என்பதே பெரிய விஷயம்தான்.
this “guy ” is worth என்பதால் தான் சிங்கப்பூரில் எழுதித்தள்ளிக்கொண்டிருக்கும் இவர்களையெல்லாம் விட்டுவிட்டு இவரை அழைத்திருக்கிறார்கள?.
ஆக்கபூர்வமான விமர்சனம் என்றால் என்னவென்று தெரியுமா எனவேறு கேட்டிருக்கிறார் இதுதானே ஆக்கபூர்வமான விமர்சனம்!!
சூர்யரத்னாவிற்கு இது மட்டுமல்ல சபை நாகரீகமும் கூடத்தான்தெரியவில்லை. விமர்சனங்கள் தன்னை பண்படுத்தும் எனும் அடிப்படையைக்கூட அறியாத இவர், இதற்கு போய் காவல்துறையில் புகாரளிக்கும் அளவிற்கு குழந்தைத்தனமுள்ள இவர், விளக்கு பிடிப்பது, வெறி நாய் என்றெல்லாம் கட்டுப்பாடு இன்றி உணர்ச்சிகளை ஒரு சமூக ஊடகத்தில் கொட்டும் இவர் எப்படி, எவற்றை சிங்கை வாழ் இளைஞர்களுக்கு கற்றுத்தரப்போகிறார்?
அதுவும் அவரின் ஆங்கிலப்புலமை அபாரம். இவர் ஆங்கிலக்கதைகளும் கூட முயற்சிக்கலாம் (அதையும் ஏன் விட்டு வைக்கணும்?)
எழுத்துலகில் தடம் பதிக்க தடுமாறும் பெண்கள்குறித்த இவரது அக்கறையும் கவலையும் மிகவும் போற்றுதலுக்குரியதே!!
இதில் அந்த கதகளி எங்கு வந்தது ?
அவருக்கும் அவரது பதிப்பகத்தாருக்கும் உள்ள புரிதலும் மிக மிக பாராட்டப்படவேண்டிய ஒன்றே
‘எல்லா தரப்பு வாசகர்களும் படிக்கக்கூடியதாக எளிமையாக இருக்க வேண்டும்’..! அது எப்படி? அந்த எல்லா தரப்பிலும் தீவிர இலக்கிய வாசகர்களில்லையா என்ன? ஏன் இப்படி அவரின் திறமைகளையெல்லம் சுருக்கி எளிமையான ஒரு வட்டத்திற்குள் சூரியரத்னா இருக்கவேண்டும்? உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்ல அவர் உண்மையில் அதற்கும் மேலே எழுதுவார் என்பதை அவரின் இந்த ஆகச்சிறந்த எதிர்வினை நமக்கு தெரியப்படுதுகிறது. சூர்யரத்னாவின் கதைகளை படிக்கவே வேண்டாம். இந்த எதிர்வினையொன்றே போதும் அவரின் எல்லா ‘படைப்புக்களையும் (!)’ படித்த அனுபவத்தை நமக்கு கொடுக்க.
உண்மையில் சூரியரத்னா மனது வைப்பின் வருங்காலத்தில் எளிமையான கதைகளைப் படைக்க முடியும் என்ற நம்பிக்கையை மட்டுமல்லாது மிக தீவிரமான அழியாக்காவியங்களையும் இலக்கியப்படைப்புகளையும் படைக்கும் நம்பிக்கையை மாணவர்களிடையே ஊட்ட முடியும், ஊட்டுவாராக!
அடிப்படை அறிவு `இல்லை என்று சொல்வதன் வழியாக அந்த விருதைக் கொடுத்தவர்களுக்கும் அந்த அறிவு இல்லை என்று சொல்ல நினைக்கிறீர்களா? என்று உங்களைக்கேட்கும் இவர் நீங்கள் சிங்கப்பூர் அரசின் விருந்தினர் உங்களை நாய் என்றும் விளக்குப்பிடிப்பவர் என்றும் அவமதிப்பது சிங்கை அரசை அவமதிப்பதாகும் என்று தெரியாதா?
நீங்கள் அவரின் எழுத்துக்களின் குறை நிறைகளை சுட்டிக்காட்டி மேம்படும் வழியைத்தானே சொல்லி இருக்கிறீர்கள்? ஏன் இவர் உங்களை இப்படிக் கடித்துக்குதறுகிறார்?
காமாலைக்கண்ணர்களுக்கு அவர் காட்டும் வண்ணமயமான உலகம் நிஜமாலுமே அற்புதமானது ஆனால் அவர் நிறக்குருடு என்பதுதான் இதில் விஷேசம!’
சிங்கப்பூர்ச் சூழலைப் பற்றி you know nuts என்கிறார். அதனால் தான் அந்த அரசு உங்களைக்ககூப்பிட்டு 2 மாதம் தங்க வைத்ததா?
இத்தனையும் கொஞ்சமாவது என்னால் புரிந்து கொள்ள முடிந்தது சார் ஆனால் இதுதான் சுத்தமாக புரியவில்லை
If you have issues that you can’t handle, please don’t bring your war to my doorstep? என்ன சொல்ல வருகிறார்?
“கொக்கென்று எண்ணினாயோ கொங்கணவா ?” உச்சகட்ட நகைச்சுவை சார் இது. இரண்டு மாதமாக நீங்களும் சிங்கப்பூரில் இருந்ததால் நகைச்சுவையாக ஒன்றும் எங்களுக்கும் படிக்கக் கிடைக்கவில்லை. ஏதோ இதுவாவது கிடைத்ததே இலுப்பைப்பூ சர்க்கரையைபோல
என் வருத்தமெல்லாம் நீங்கள் இந்த சூர்யரத்னாவிற்கு மிக அதிகமான publicity கிடைக்கும் படி செய்துவிட்டீர்கள். மேலும் உங்கள் மோதிரக்கையால் குட்டுப்படவும் ஒரு தகுதி வேண்டாமா சார்?
நான் பலவருடங்களாக தமிழ் முனைவர் பட்ட ஆய்வேடுகள் ஏன் மற்ற துறைகளில் உள்ளது போல வெளிநாடுகளுக்கு மதிப்பீட்டிற்கு அனுப்பப்படுவதில்லை. சிங்கப்பூருக்கெல்லாம் அனுப்பலாமே என்று பேசிக்கொண்டிருந்தேன் இனி வாயையே திறக்கமாட்டேன்
லோகமாதேவி
***
அன்புள்ள ஜெ
உங்கள் கட்டுரைகளில் இங்கிருந்து peer review அளிக்கும்பொருட்டு செல்லும் இந்த ஊர் எழுத்தாளர்கள் சிங்கப்பூரில் பல்லிளித்துவிட்டு வருவதைப்பற்றி எழுதியிருந்தீர்கள். மாலன் பாய்ந்துவந்து அவரே வாக்குமூலம் கொடுத்துவிட்டார்
உண்மையில் இலக்கியத்தில் மட்டும் அல்ல ஆய்வுகளிலும் நிகழ்வது இதுதான். peer reviewக்காக சிங்கப்பூர் மலேசியா இலங்கை போன்ற ‘அயல்நாட்டுப் பல்கலை’ கழகங்களுக்கு ஆய்வேடுகளை அனுப்புவார்கள். அங்கிருந்து இங்கே ஆய்வேடுகள் வரும். எல்லாம் ஒரு ஒத்துவேலையாகவே முடியும். எந்தக்கருத்துநேர்மையும் இருக்காது. இருசராரும் சேர்ந்துகொண்டு அரசுகளை ஏமாற்றுவதுதான் இது.
அங்கிருந்து இங்கே வரும் அசடுகளை உட்கார வைத்து குளிரக்குளிரப் புகழ்ந்து ‘international conference முடிப்பார்கள். இவர்கள் அங்கே சென்று international conference முடிப்பார்கள். சூர்யரத்னாவுக்கு தஞ்சைப்பல்கலைகழகம் இலக்கியவிருது அளித்திருக்கிறது, கவனித்திருப்பீர்கள்.
இந்த பரஸ்பர அயோக்கியத்தனம் ரொம்பநாளாக நடந்துகொண்டிருக்கிறது. இழுத்து தெருவிலே விட்டுவிட்டீர்கள். நல்லது
கல்யாணராமன்
அன்புடன் ஆசிரியருக்கு
சிங்கப்பூர் இலக்கியச் சூழல் குறித்த விமர்சனங்களை படித்து வருகிறேன். குறுகிய காலத்தில் இவ்வளவு அதிகமான படைப்புகளை படித்து ஒரு சூழலின் ஒட்டுமொத்தத்தை காண்பது வியக்க வைக்கும் பேருழைப்பு. சிங்கப்பூர் எழுத்தாளர்களும் இலக்கிய வாசகர்களும் தங்களை அறிந்து கொள்வதற்கும் சூழலில் ஏற்பட வேண்டிய ஒட்டுமொத்த மாற்றத்தை புரிந்து கொள்வதற்கும் உங்கள் கட்டுரைகள் நிச்சயம் நல்ல தொடக்கமாக அமைந்திருக்கும். நம்மூர் அளவிற்கு அவர்கள் “புண்பட” மாட்டார்கள் என நம்புகிறேன்.
அன்புடன்
சுரேஷ் ப்ரதீப்