சிங்கப்பூர் -கடிதங்கள் 5

unnamed

 

வணக்கம்.

ஒரு படைப்பு பொதுவெளிக்குள் வரும்போது விமர்சனங்கள் வருவது இயல்புதான். அதுவும் நேர்மையான.. நியாயமான விமர்சனங்கள் நம்மை வளர்த்துக் கொள்ள ஏதுவாக உள்ளவை.

ஆனால் இந்த சூழல்களுக்குள் அறிமுகமேபடாமல் புகழ்ச்சி என்ற பொய்யுலகில் இருப்பது இலக்கியம் என்றில்லாதவரை யாருக்கு என்ன பிரச்சனை..? ஆனால் தாங்கள் சொல்வதுபோல இது நல்லிலக்கியங்களை மூடிவிடும் அபாயம் கொண்டுள்ளது.

யாருமே ஊதாத சங்கை நீங்கள் துணிச்சலாக எடுத்து ஊதுகிறீர்கள்..  வாழ்த்துகள். (இதில் ஒரு விஷயம்.. தங்களுக்கு அந்த எழுத்தாளர் மீது காழ்ப்புணர்வாம்.. இப்படி ஒரு பின்னுாட்டம்.. இதற்கு மேல் ஒரு நகைச்சுவை உண்டா இவ்வுலகில்..?)

அன்புடன்

கலைச்செல்வி.

***

அன்புள்ள ஜெ

சிங்கை இலக்கிய போக்குகள் குறித்து தாங்கள் எழுதிய கட்டுரைகள் எவ்வாறு எதிர்கொள்ளப்படுகின்றன என கவனித்து வருகிறேன் .நமது அறிவு ஜீவிகள் திறனாய்வு கட்டுரைகளை முதல் தகவல் அறிக்கை வாயிலாக எதிர்கொள்வதை குறித்து என்ன எண்ணுகிறார்கள்? கூட்டு கண்டன அறிக்கை ஏதும் தயாராகி கொண்டு இருக்கிறதா? யாராவது விருதுகளை திருப்பிக் கொடுப்பார்களா? ஓடி வந்து, பறிபோகும், கருத்து சுதந்திரத்தை காப்பார்களா? எனக்கு தெரியவில்லை? இணையத்தில் பல போராளிகளும் பிரம்படியின் மகிமைகளை குறித்து களிப்புடன் சர்சை செய்து கொண்டு இருந்தனர் .அவர்களை சிங்கை அரசு ஏமாற்றி விட்டது .எல்லாம் ஆரிய ஹிந்துத்துவா சதிதான் .

நன்றி
அனீஷ் க்ருஷ்ணன்

***

அன்புள்ள ஐயா திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். உங்களின் சிங்கப்பூர் கடிதங்களுக்கான மறுவினையினைப் படித்தேன்.

“நல்லுபதேசங்களுக்கு நன்றி. ஆனால் நான் செய்வதென்ன என்பது எனக்குத் தெரியும். அதன் விளைவுகள் என்னவென்றும் அறிவேன். இத்தனை ஆண்டுகளாக இலக்கியம் எழுதி வாசித்து விமர்சிப்பதனால் சுயபுத்தி என்பதும் கொஞ்சம் இருக்கிறது. தயவுசெய்து அதையும் கொஞ்சம் நம்புங்கள்”

கடைசி வரி தேவை இல்லை. இல்லாவிட்டால் ‘ஏலி ஏலி லாமா சபக்தானி’ வரை செல்ல வேண்டிஇருக்கும். முடிந்த வரை இந்த ஞானப் பழங்களை மன்னித்து விட்டு உங்கள் எழுத்தை தொடருங்கள். அடுத்த வெண்முரசு அத்தியாயத்தை விரைவில் எதிர்பார்க்கிறோம். (பன்மை உண்மையில் ஒரு இதுக்காக மட்டுமே).

வாசகன்?

தயானந்த்

***

அன்புள்ள ஜெ.மோ,

உங்களுடைய சூர்யரத்னா விமர்சனத்தையும் அதற்கு அவரின் எதிர்வினையையும் வாசித்தேன். ஒரு வளரும் எழுத்தாளரை ஊக்குவிக்காமல் நசுக்கிவிட்டீர்களோ என்று எண்ணினேன் அவருடைய இந்த http://malaigal.com/?p=9023 ”விதையில்லாமல் வேரி(றி)ல்லை”  என்ற சிறுகதையைப் படிக்கும்வரை. Soft porn படிப்பது போலுள்ளது. பாலியல் உறவு மீறல்களை எழுத்தாள ஜாம்பவான்கள் எப்படிக் கையாண்டிறுக்கிறார்கள் என்று இவர் படித்திருக்கிறாரா என்பதே சந்தேகம்தான். நடை, நீங்கள் சொன்னதுபோல, எழுதப்பட்ட பேச்சுதான். அதையும் ரசித்து வரும் பின்னூட்டங்கள் அவருக்கு மேலும் இவை போல எழுதத்தூண்டுகின்றன என நினைகிறேன்.

-முருகன் கண்ணன்

***

அன்புள்ள ஜெமோ

மாலன் முகநூலில் எம்பிக்குதிப்பதை நீங்கள் பார்த்திருக்கமாட்டீர்கள் என நினைக்கிறேன். அவருக்கு நீங்கள் எழுதுவது உண்மையிலேயே புரியவில்லையா, இல்லை சும்மா கால்பிடித்து காசுபார்க்க முயல்கிறாரா என்றே சந்தேகமாக இருக்கிறது. சிங்கப்பூர் இலக்கியத்தை இங்கிருக்கும் இலக்கியத்தில் இருந்து பிரித்து அங்குள்ள சமூகச் சூழலில் வைத்துப் பார்ப்பதற்கும் , அந்த மண்ணுக்குரிய அழகியல் என்ன என்று காண்பதற்கும் நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். பக்கம் பக்கமாக அதை எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். அங்குள்ள முன்னோடிகளை முன்னிறுத்துகிறீர்கள். இந்த ஆசாமி ‘அங்குள்ள அழகியலே வேறு’ என பிலாக்கணம் வைக்கிறார். இந்தமாதிரி ஆசாமிகள்தான் தமிழிலக்கியத்தின் கௌரவத்தையே சீரழித்துவருகிறார்கள்

சாரங்கன்

***

அன்புள்ள சாரங்கன்,

மாலன் நவீனத்தமிழிலக்கியத்தைச் சேர்ந்தவர் அல்ல. அவர் இதழாளர். பல்லாண்டுக்காலமாக அரசியல்வாதிகளுக்கு ஜால்ரா அடிக்கும் பிழைப்புவாதி. அவர் குரல் எப்போதும் அப்படித்தான் ஒலிக்கும். அங்கே அவருக்கு கிடைக்கப்போகும் சில்லறைக்காகப் பேசுகிறார்.

நவீனத்தமிழிலக்கியத்தின் குரலாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டியவர்கள் இங்கே ஏதாவது உருப்படியாக எழுதியவர்கள். இங்குள்ள வாசகர்களால் கருத்தில்கொள்ளப்பட வேண்டியவர்கள்.

ஜெ

 

முந்தைய கட்டுரைகேதார்நாத் பயணம்
அடுத்த கட்டுரைகைநழுவிய கலைக்கணங்கள்