கசப்பெழுத்தின் நூற்றாண்டு

unnamed (1)

 

 

நான் சிறுவனாக வகைதொகையில்லாமல் வாசித்துத்தள்ளிய காலகட்டத்தில் விந்தனின் பசிகோவிந்தம் என்னும் நூலை தற்செயலாகக் கண்டடைந்தேன். அது ‘புடைநூல்’ என்று குறிப்பிடப்பட்டிருந்ததே எனக்கு ஆச்சரியம் அளித்தது. ராஜாஜியின் பஜகோவிந்தத்தைச் சாடி எழுதப்பட்ட அந்நூல் அன்று என்னை மிகவும் கவர்ந்தது.

அதன்பின் ராணிமுத்து நாவல் வரிசையில் வெளிவந்த பாலும்பாவையும் நாவலை வாசிக்கும்போது என் ரசனை சற்று மிகுந்திருந்தது. அந்நாவல் முழுக்க ஓடிய எரிச்சல் மிக்க நையாண்டியை நான் விரும்பினாலும் அது சற்று மிகையானது, கலையமைதி கூடாதது என்றே தோன்றிக்கொண்டிருந்தது.

விந்தனின் சிறுகதைகளை நான் அதன்பின் வாசித்தேன். அவரது ஆளுமை என்னுள் மிகச்சிறியதாக ஆகிவிட்டிருந்தது. ஆனால் விந்தனைப்பற்றி அ.மா.சாமி எழுதிய ஒரு குறிப்பு பாலும் பாவையும் நூலின் முன்னுரையாக இருந்தது. அது எனக்கு எப்போதுமே நினைவில் நிற்கும் ஒரு பதிவு. விந்தனின் படைப்புகள் கலையொருமை அற்றவை.நவீனத் தமிழிலக்கியப்பரப்பில் அவருக்கு இடமில்லை. ஆனால் அவரது வாழ்க்கை ஒர் இலக்கியவாதியின் வாழ்க்கைக்குரிய அனைத்து மடத்தனங்களும் அபத்தங்களும் சரிவுகளும் பெருந்தன்மையும் இலட்சியவாதமும் கொண்டது

விந்தனின் நூற்றாண்டு இது. [1916 -2016] அவரது மகன் கோ.ஜனார்த்தனன் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள விந்தன் அறக்கட்டளை சார்பாக விந்தனின் நூல்கள் மறுபதிப்பாக வந்துகொண்டிருக்கின்றன. விந்தனின் கட்டுரைகள் கதைகளை விட இன்று வாசிப்புத்தன்மை கொண்டவையாக உள்ளன. நேரடியான தாக்கும்தன்மையும் நையாண்டியும் உடையவை அவை.

விந்தனின் நண்பரான திரு செ.து.சஞ்சீவி அவர்கள் விந்தன் நினைவுகளை சுருக்கமாக எழுதிய  விந்தன் நினைவாகச் சில பதிவுகள்ஆர்வமூட்டும் வாசிப்பு கொண்ட நூல். விந்தனின்முன்னுரை, மற்றும் கட்டுரைகளில் இருந்து சிலபகுதிகளும் அவர் எழுந்திய இரு சிறுகதைகளும் கொண்டது. இதிலுள்ள விந்தனின் வாழ்க்கைச்சித்திரம் மிகையற்றது. ஆகவே நம்பகத்தன்மை கொண்டது. ஒரு காலப்பதிவு என்றே சொல்லலாம்.

விவசாயக்குடும்பத்தைச்சேர்ந்த விந்தன் விவசாயம் நலிந்தபோது சென்னைக்கு பிழைப்புதேடி வந்த பல்லயிரக்கணக்கான மக்களில் ஒருவர். இயற்பெயர் கோவிந்தன். அன்றைய சென்னையின் அடித்தளச் சமூகத்தில் அவர்களின் வாழ்க்கை அமைந்தது. ஓவியக்கலை கற்க விரும்பினார். அதற்கான வசதி அமையவில்லை. படிப்பைத் தொடர முடியவில்லை. ஆகவே அச்சகத்தில் அச்சுக்கோப்பவராக வேலைக்குச் சேர்ந்தார்.

vindan

அச்சுக்கலை விந்தனின் அழகுணர்வை நிறைவுசெய்தது. கடைசிவரை அச்சு என்னும் மாயமோகினியில் இருந்து அவர் தப்பவே முடியவில்லை. அச்சுவேலை முடிந்த ஓய்வுநேரத்தில் ரகசியமாக அச்சுக்கோத்து விடுதலைப்போர் குறித்த துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டார். சினிமாவுக்குச்சென்று சு கையில் வந்ததுமே அச்சகம்தான் ஆரம்பிக்கிறார். அச்சகத்தை மூடியபின்னரும் அச்சகவேலைக்கே செல்கிறார்.

அச்சுத்தொழிலாளியாகத்தான் கல்கி வார இதழுக்குள் நுழைந்தார் விந்தன். அவரது நண்பரும் அச்சுக்கோப்பாளருமான ராஜாபாதர் அவரை அங்கு அழைத்துச்சென்றார். அங்கே அவர் மொழித்திறனைக் கண்ட கல்கி சிறுவர்களுக்கான கதைகள் எழுதும்படிச் சொன்னார். அதன்பின் அவரே கோவிந்தன் என்றபெயரை விந்தன் எனச் சுருக்கி கல்கியில் கதை எழுதும்படி ஆணையிட்டார்.

விந்தன் என்னும் எழுத்தாளர் கல்கியின் உருவாக்கம். தன்னை கல்கியின் மாணவராகவே விந்தன் எண்ணினார். மொழிநடையிலும் கல்கியையே பின்பற்றினார். கல்கிக்கு தன் முதல்நூலைச் சமர்ப்பணம் செய்தார். ஆனால் கல்கியில் வேலைசெய்த பிராமண எழுத்தாளர்கள் விந்தனை சாதி நோக்கில் நடத்தினர். தொடர்ந்து அவமதிப்புக்கு உள்ளான விந்தன் தன்னை ‘நான் ஒரு லோ கிளாஸ்’ என அறிவித்துக்கொண்டார். கடுமையான போக்குள்ளவராக மாறினார்.

விந்தனுக்கும் சு.சமுத்திரத்திற்கும் நெருக்கமான உளத்தொடர்புண்டு. தனக்குப்பிரியமான முன்னோடி எழுத்தாளர் விந்தன் தான் என சு.சமுத்திரம் சொல்லியிருக்கிறார். அவரது நடையும் நையாண்டியும் விந்தனை முன்மாதிரியாகக்கொண்டதே. வாழ்விலும் பல ஒற்றுமைகள். இருவருமே காங்கிரஸ்காரர்கள். சமுத்திரம் மத்திய அரசுப்பணியில் நுழைந்து பிராமணர்களிடமிருந்து சாதிய அவமதிப்புகளை அடைந்தபோது தன்னை மூர்க்கமான எதிர்ப்புணர்ச்சியும் நக்கலும் நிறைந்தவராக மாற்றிக்கொண்டு அதை எதிர்த்துக்கடந்தார். ஈ.வே.ரா மீது ஈடுபாடு கொண்டவராக ஆனார்.

விந்தனும் காங்கிரஸ்காரராக, கல்கி பக்தராகத் தொடங்கினாலும் கடைசியில் முழு திராவிடர் கழகக்காரராக ஆனார். சமுத்திரம் கடைசிவரை காங்கிரஸை விட்டுக்கொடுக்கத் தயங்கினார். அந்தத் தயக்கங்கள் விந்தனுக்கு இருக்கவில்லை. விந்தனின்  பெரியார் அறிவுச்சுவடி திராவிடர் கழகத்தால் இன்றும் வெளியிடப்படும் முக்கியமான நூல்

ஆனால் விந்தனின் இறுதிக்காலகட்டத்தில் அவருக்கு கைகொடுத்தவர் பிராமணரான சாவி.  விந்தனுக்கு இளையவர். கல்கியின் மாணாக்கர். விந்தன் சாவியுடன் மோதிக்கொண்டே இருந்தார். ஆனால் சாவி விந்தனை பேணி தன்னுடன் வைத்திருந்தார். இல்லையேல் விந்தன் வறுமையில் இறந்திருப்பார்.

விந்தன் எழுத்தை நம்பி வாழ்ந்தார். சினிமாக்களுக்கு வசனம் எழுதும் வாய்ப்பு வந்தது. ஆகவே ஓரளவு பணமும் அவருக்கு வந்தது. ஆனால் அதையெல்லாம் அச்சகம் நடத்தியும் பத்திரிகை நடத்தியும் வீணாக்கினார். மனிதன் என்னும் அவரது பத்திரிகையை  அடித்தள மக்களுக்காகக் குரல்கொடுக்கும் ஓர் இடதுசாரிப் பத்திரிகையாகவே நடத்தினார். அதை வணிகரீதியாக வெற்றிகரமாக நிகழ்த்த அவரால் இயலவில்லை.

எம்.ஆர்.ராதாவை விந்தன் நீண்ட பேட்டி கண்டு நூலாக வெளியிட்டார். ராதா விந்தன் மீது பிரியம் கொண்டிருந்தார். விந்தனுக்காக ஒரு மணிவிழா நடத்தி நிதி திரட்டி அளிக்கும் திட்டம் ராதாவுக்கு இருந்தது. ஆனால் மணிவிழாவுக்கு சிலநாட்களுக்கு முன்னரே விந்தன் மாரடைப்பில் காலமானார்

விந்தனின் குணாதிசயங்கள் பற்றி சஞ்சீவி சுருக்கமாகச் சொல்லிச் செல்கிறார். அவர் கையிலிருப்புப் பணத்தை அவ்வப்போதே செலவிடுபவர். நண்பர்கள்கூட அவர் பையில் கைவிட்டு பணத்தை எடுத்துச்செல்வதுண்டு. சேர்த்துவைக்கத் தெரியாதவர். சினிமாக்காசில் ஒரு வீடு வாங்கினார். ஆனால் கடன்களை முறையாகக் கட்டாமல் வட்டியில் வீடே முழுகிப்போகும் நிலை வந்தது

அவருடைய நூல்களுக்கு அன்று நல்ல சந்தைமதிப்பு இருந்தது. ஆகவே பதிப்பாளர்கள் பணம் கொடுக்க முன்வந்தனர். அதை முறைப்படுத்தவும் விந்தனால் இயலவில்லை. ஆகவே அவ்வப்போது கடும் வறுமையும் நடுநடுவே செல்வச்செழிப்புமாக அவர் வாழ்ந்தார். பேரா. கல்கி இறந்த்போது கல்கி வார இதழுக்கு ஆசிரியராக விந்தன் அழைக்கப்பட்டார். குறிப்பிட்ட சிலரை நீக்கினால் மட்டுமே பணியாற்றமுடியும் என அவர் கடுமையாகச் சொன்னார். அவ்வாய்ப்பு பறிபோனது. அந்தப்பிடிவாதம் காரணமாகவே தினமணிகதிர் ஆசிரியராக ஆகும் வாய்ப்பும் இல்லாமலாயிற்று. சாவி உதவாவிட்டால் நடுத்தெருவில் நின்றிருப்பார்.

கல்கியில் ஆசிரியராக ஆகி தன் இன்றியமையாமையை நிறுவியபின் பிடிக்காதவர்களை மெல்லமெல்ல வெளியேற்றியிருக்கலாம். அதுதான் திட்டமிட்டுச் செயல்படுபவர்களின் இயல்பு. விந்தனிடம் அவ்வியல்பே இருக்கவில்லை. அவர் கொந்தளிப்பும் நிலையின்மையும் கொண்டவராகவே கடைசிவரை இருந்திருக்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் கல்கி இதழுக்கு விந்தனால் தனி வாசகர் வட்டம் உருவானபோது கல்கியால் அதை ஏற்கமுடியவில்லை என்பதை விந்தன் இயல்பாக எடுத்துக்கொண்டிருக்கிறார்.

அன்றைய அச்சகச்சூழல், பதிப்புச்சூழல், இதழியல்சூழல் பற்றிய ஒரு எளிய கோட்டுச்சித்திரம் இந்நூலில் உள்ளது. அன்று எழுதுவது ஓரளவு பதிப்புரிமைப்பணம் அளிக்கும் தொழிலாகவே இருந்துள்ளது. இன்றுபோல வெற்று உழைப்பு அல்ல. இதில்  ஜெயகாந்தன் பற்றி வரும் பகுதிகள் சுவாரசியமானவை. சஞ்சீவி ஜெயகாந்தனை நன்கு அறிந்தவர். ஜெயகாந்தன் காரியவாதியாகவும் நன்றி மறப்பவராகவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறார். அதை ஐயப்படவும் தோன்றவில்லை. அதுவும் எழுத்தாளனின் முகமே.

விந்தனின் நூற்றாண்டு இது. அவரது நூல்கள் முறையாகத் தொகுக்கப்படவேண்டும். திராவிட இயக்க ஆதரவு எழுத்தாளர்களின் பட்டியலிடுபவர்கள் விந்தனின் பெயரை விட்டுவிடுவது வழக்கம். விந்தன் கல்கியில் தொடங்கி ஈ.வே.ராவை வந்தடைந்தவர். அவ்வகையில் அவரை ஒரு திராவிட இயக்க எழுத்தாளர் என முழுமையாகச் சொல்லமுடியாவிட்டாலும் திராவிட இயக்க ஆதரவு எழுத்தாளர் எனலாம். அவர்களில் அவரே முக்கியமானவர் என ஐயமின்றிச் சொல்லலாம்.

 

விந்தன் நினைவாகச் சில பதிவுகள்

செ து சஞ்சீவி

விந்தன் எண்டோவ்மெண்ட் டிரஸ்ட் 17 அருணாச்சலம் தெரு ஷெனாய் நகர் சென்னை 30

 

முந்தைய கட்டுரைசிங்கப்பூர் இலக்கியம் பற்றி…நவீன்
அடுத்த கட்டுரைசூரியனுடன் தொற்றிக்கொள்ளுதல் -கடிதங்கள்