காந்தி கடிதங்கள் 2

unnamed

சென்னை ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் இன்று உங்களின் பேச்சு அருமை. வித்தியாசமான தலைப்பு. (காந்தியம் தோற்கும் இடங்கள்) ஆற்றொழுக்கான உங்களின் பேச்சும், கவனம் சிதறாத எங்களின் கேட்பும் ஒத்திசைவுடன் இருந்தது.

அதிகார குவியம் மையப்படுத்துதலை காந்தி எதிர்கொண்ட விதம் குறித்த உங்களின் தொகுப்பு சிறப்பு. வரலாற்றை தொன்மங்களின் துணையுடன் அணுகாமல், கூரிய கத்தி கொண்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென கூறியது முக்கியத்துவம் வாய்ந்தது.

என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அப்படியே விலகிவிட்டேன். மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் நீண்டநேரம் உங்களுடன் செலவிடவேண்டும்.

அன்புடன்,

எம்.எஸ். ராஜேந்திரன்

திருவண்ணாமலை

***

அன்புள்ள ஜெ,

காந்தி உரை சிறப்பாக இருந்தது. நீங்கள் ஆரம்பித்த விதம் முக்கியமானது. அங்கே வழக்கமாகப்பேசப்படும் உரைகளில் இருந்து உங்கள் அணுகுமுறையை முழுமையாக வேறுபடுத்திக்கொண்டீர்கள். அவர்கள் புராணக்கதைகளை உருவாக்குகிறார்கள் என்று சொல்லி நீங்கள் இரக்கமற்ற வரலாற்றுநோக்கை முன்வைப்பதாகச் சொன்னீர்கள். காந்தியின் ஆராதகன் அல்லாத நான் என்னும் உங்கள் வரி மிக முக்கியமானது.

காந்தியைப் புரிந்துகொள்வதில் உள்ள முக்கியமான கேள்வி எனக்கும் இருந்தது. என் நண்பன் காந்தியை கண்டபடி விமர்சிப்பான். எல்லாமே உயர்ந்த அறநிலையில் நின்றபடித்தான். ஆனால் அவன் மு கருணாநிதியின் பரமரசிகன். முகவின் ஊழல், குடும்பப்பற்று , மோசடிகள், பசப்புகள் எல்லாமே அவனுக்குத்தெரியும். இந்த முரண்பாட்டை இப்போதுதான் ஓரளவு புரிந்துகொள்கிறேன்

கவி. கண்ணன் சென்னை

***

அன்புள்ள ஜெ

காந்தியம் தோற்கும் இடங்கள் சுருக்கமான அழகிய உரை. இன்னும் கொஞ்சம்கூட நீங்கள் பேசியிருக்கலாம் என்பதே என் எண்ணம். இத்தனை சுருக்கமான உரை மேலும் பல கேள்விகளை எழுப்பியபடி நின்றிருக்கும். காந்தி மையங்களுக்கு எதிரானவர் என்றீர்கள். அவரே ஒரு மையமாக ஆன காந்திய அரசியலை நீங்கள் எப்படிப்பார்க்கிறீர்கள் என அறிய ஆவல்

ஜெயக்குமார் பொன்னம்பலம்

 

முந்தைய கட்டுரைஇணையத்தில் சுபமங்களா
அடுத்த கட்டுரைஎழுந்துவரும் படைப்புக்குரல்