எழுந்துவரும் படைப்புக்குரல்

mathangi

 

 

சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த எழுத்தாளர்கள், சிங்கப்பூருக்கு குடியேறியவர்கள் என்னும் இருசாராரையும் ஒப்பிடும்போது மொழி சார்ந்த சில அவதானிப்புகள் ஏற்படுகின்றன. சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த எழுத்தாளர்களுக்கு மொழிசார்ந்த ஒரு முக்கியமான சிக்கல் இருக்கிறது. அவர்கள் தமிழ் மொழியை பள்ளியில் ஓரளவு கற்றுக் கொள்கிறார்கள். வீட்டில் மட்டும் தமிழ் பேசுகிறார்கள். அவர்கள் புழங்கும் சூழலில் தமிழ் இல்லை. அத்துடன் அவர்களிடம் இருக்கும் ஆங்கிலமும் சிங்கப்பூருக்கே உரிய ஒருவகையான சமரச ஆங்கிலம். அதாவது சீனர், மலாயர் அனைவருக்கும் எளிய முறையில் புரியும் ஓர் நடைமுறை ஆங்கிலம் அது.

பொதுவாக ஆங்கிலத்தில் அவர்கள் சிந்தனைகளையோ கோட்பாடுகளையோ பேசுவதில்லை. ஆகவே உடைந்த சொற்றொடர்களும் பொத்தாம்பொதுவான சொற்களும் கொண்ட ஒரு மொழியாகவே ஆங்கிலம் அவர்களிடமிருக்கிறது. ஆகவே தமிழிலும் ஆங்கிலத்திலும் சிந்தனைகளைச் சொல்ல அவர்களால் முடிவதில்லை. உண்மையில் ஒருவர் ஆங்கிலத்தில் சரளமாகச் சிந்தித்து கொஞ்சம் கஷ்டப்பட்டு தமிழில் எழுதினால்கூட அது நல்ல மொழியாகவே அமையும். ஏனென்றால் மொழி என்பது சிந்தனைதானே ஒழிய சொற்கள் அல்ல. உதாரணம் சித்துராஜ் பொன்ராஜ். தமிழ் அதிகம் அறியாதவர். ஆனால் ஆங்கிலத்தில் நிறையபடிப்பவர் என்பதனாலேயே அவரது தமிழ்நடை நவீனமானதாக உள்ளது.

பிறர் எந்த மொழியிலும் சிந்திக்கத் திறனற்றவர்கள். ஆகவேதான் நடையில் அத்தனை சிக்கல் அல்லது முதிர்ச்சியின்மை. இந்த அம்சத்தைச் சிங்கப்பூர் மாணவர்களிடம் கண்டேன். சிங்கப்பூர் நெடுங்காலமாக கலை இலக்கியத்திற்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்காத நாடாக இருந்தது. 90களுக்குப் பிறகு கலை இலக்கியங்களை நோக்கி அவர்களுடைய கவனம் குவிந்தது. ஆகவே முதிரா மொழிநடை என்பது அங்கு இலக்கியத்தில் மட்டும் அல்ல சாதாரணக் கருத்துவெளிப்பாட்டிலேயே காணக்கிடைக்கிறது.

சிங்கப்பூரின் ஆரம்ப கட்ட எழுத்தாளர்களான ந.ப்ழனிவேலு, இளங்கண்ணன், கண்ணபிரான், புதுமைதாசன் போன்றவர்கள் அவர்களுடைய இளமைப்பருவத்தை ஒருங்கிணைந்த மலேசியாவில் கழித்தவர்கள். அன்று தமிழ்க் கல்வி சிறப்பாகவே இருந்திருக்கிறது என்று அவர்களுடைய தமிழ்ப் பயிற்சியிலிருந்து தெரிகிறது. மேலும் தமிழ் உணர்வை வலியுறுத்திய அக்கால அரசியல் இயக்கங்களும் தமிழகத்தில் இருந்து தமிழ் மீதான பற்றையும் பயிற்சியையும் இங்கு இறக்குமதி செய்தன. ஆரம்பகால சிங்கப்பூர்ப் படைப்பாளிகள் பலபேர் தனித்தமிழ் இயக்கத்தில் ஆர்வம் கொண்டவர்களாகவும் தூய தமிழைக் கையாளத் தெரிந்தவர்களாகவும் இருப்பதை பார்க்கிறோம். தொழில்நுட்பக்கல்வியின் வளர்ச்சியினால் அந்தத் தமிழ்ப் பயிற்சியானது தொடர்ந்த தலைமுறைகளில் இல்லாமல் ஆனது.

இந்தியாவில் இருந்து நிரந்தரக் குடியுரிமை பெற்று இங்கு வந்து தமிழகத்தில் கல்வி கற்றவர்கள். எங்கும் தமிழ் புழங்கும் சூழலில் பிறந்து வளர்ந்தவர்கள். இவர்கள் சரளமான மொழியை எளிதில் அசையமுடிகிறது.உதாரணமாக சிங்கப்பூர்த் தமிழிலக்கியத்தின் தொடக்கப்புள்ளி என்று நான் நினைக்கும் நா.கோவிந்தசாமியைவிட தமிழகத்தில் இருந்து இங்கு குடியேறி முதிராத எழுத்துக்களை எழுதுபவர்கள் இன்னும் மேலான மொழித்திறன் கொண்டிருக்கிறார்கள். அதை சிங்கப்பூர் மொழிவளர்ச்சியாகக் கொள்ள ஒரு விமர்சகனாக நான் மறுக்கிறேன். ஆகவே மொழிநடையின் சரளத்தை புறமொதுக்கியே இந்த மதிப்பீடுகளைச் செய்கிறேன்.

*

மாதங்கி தமிழகத்திலிருந்து சிங்கப்பூருக்குக் குடியேறியவர். திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்து திருச்சியில் கல்வி முடித்து பெங்களூரில் வங்கியில் பணி புரிந்தபின் இருபது ஆண்டுகளுக்கு மேலாக சிங்கப்பூரில் வசித்து வருகிறார். மாதங்கியின் சிறுகதைத் தொகுதிகளைப் படிக்கும்போது தமிழகத்தில் இருந்து எழுதும் ஓர் எழுத்தாளரைப் படிக்கும் உணர்வுதான் பெரிதும் ஏற்படுகிறது.மேலோட்டமான ஒரு சிங்கப்பூர் சூழல்சித்தரிப்பு மட்டுமே இவற்றை சிங்கப்பூர்க்கதைகளாக எண்ணவைக்கிறது

இக்கதைகள் தமிழகத்தில் தொடர்ந்து புனைகதைகளை படித்துக் கொண்டிருக்கும் ஒருவருக்கு உரிய வகையில் அடிப்படையான வடிவத்தேர்ச்சியும் இயல்பான மொழிநடையும் கொண்டுள்ளன. ஆகவே சரளமான வாசிப்புத்தன்மையை அளிக்கக்கூடியவையாக அனைத்து கதைகளுமே உள்ளன. இயல்பாக தமிழகத்திலோ இலங்கையிலோ இந்தியாவிலோ சிங்கப்பூரிலோ உள்ள எந்த ஒரு இதழிலும் பிரசுரமாகக்கூடியவை இந்தக்கதைகள்.

மாதங்கியின் இந்த தொகுப்புகளைப் படிக்கும்போது அவரிடம் இருவகையான பாதிப்பு இருப்பதை பார்க்க முடிகிறது. ஒன்று தமிழகத்தின் புகழ் பெற்ற வணிக எழுத்தாளர்களாகிய சுஜாதா மற்றும் வாசந்தி சிவசங்கரி முதலியவர்களின் நேரடிச்செல்வாக்கு. இரண்டு தொடர்ச்சியாக அவர் வாசிப்பில் வந்தடைந்த அசோகமித்திரனை முன்மாதிரியாகக் கொண்ட எழுத்துமுறையின் பாதிப்பு. இந்தப்பயணத்தில் இருப்பவராக நான் மாதங்கியை மதிப்பிடுகிறேன்

மாதங்கி சிறுகதையின் பொது வடிவத்தை பெரும்பாலான கதைகளில் இயல்பாகவே வந்தடைந்திருக்கிறார். நேரடியான தொடக்கமும், புறவயமான சித்தரிப்பும், இயல்பான மொழி நடையும் முதிர்வும் கொண்ட கதைகளாகவே பெரும்பாலான படைப்புகள் உள்ளன. மெல்பகுலாசோ என்னும் தலைப்புக்கதை தமிழில் பெண் எழுத்து தொடங்கிய நாள் முதலே பலகோணங்களில் எழுதப்படும் ஒரு கதைதான். இருபெண்களில் ஒருத்தி இன்னொருத்தியை தேடிச் செல்வது. அனேகமாக அவர்கள் கல்லூரித்தோழிகள். தேடிச்செல்லப்படுபவள் வாழ்க்கையில் சரிந்துவிட்டிருப்பாள். அத்துயரை தொட்டுக் காட்டி கதை முடியும்.

இது இந்தியாவின் பெண்களின் இயல்பான வாழ்க்கைத் துளிகளில் ஒன்று. ஏனெனில் கல்லூரி வாழ்க்கை என்பது இந்தியப்பெண்ணின் பொற்காலங்களில் ஒன்று. குடும்பப் பொறுப்போ பிற அழுத்தங்களோ இல்லாமல் வாழ்க்கையை அவர்கள் கொண்டாடும் சில வருடங்கள் அவை. அதன் பிறகு குடும்பப் பொறுப்பு, திருமண உறவு, குழந்தைகள் என்று வாழ்க்கை வளர்ந்து நீளும் போக்கில் வென்றவர்களும் தோற்றவர்களும் என்ற ஒரு பிரிவு உருவாகிறது. அனைத்துத் தகுதிகளும் இருந்தும் தோற்றவர்கள் எப்போதும் இருக்கிறார்கள். ஒளிமிக்க ஒர் இறந்தகாலத்தை மட்டும் நெஞ்சில் ஏந்திக் கொண்டு நிகழ் காலத்தை நீந்திக் கடப்பவர்கள்.

அந்தக்கால அநுத்தமா முதல் அனைவருமே இந்தக்கதையை எழுதியிருக்கிறார்கள்.இந்தக் கதைகள் நேரடியாகவே வாசகிகளின் சொந்த அனுபவத்தை தொடுபவை என்பதனால் ஆம் எனக்கும் இப்படி ஒரு தோழி இருந்தாள் என்று அவர்களை சொல்ல வைப்பதனால் எப்போதும் இது கவனத்தை ஈர்க்கின்றன. விரும்பப்படுகின்றன. ஆனால் இவை மிகப்பொதுவான அனுபவம் என்பதனாலேயே அவற்றில் சிறுகதைக்கு இருக்க வேண்டிய அபூர்வத்தன்மை அற்றுப்போகிறது. இலக்கியத்தின் அழகுகளை அமைக்கும் முதல் விதி பிறிதொன்றிலாமை என்பதே.

மெல்பஹுலாசாவைச் சென்று காணும் கதைசொல்லிப் பெண்மணி தன் தோழியின் வாழ்க்கையின் சரிவை கண்டு துயருறுவதுடன் நிற்கும் இந்தக் கதை மேலதிகமாக எதையாவது ஒன்றை கண்டடைந்திருந்தால், சொல்வதற்கு இன்னும் ஒரு படி அதிகமான ஏதோ ஒன்று இருந்திருந்தால் மட்டுமே இலக்கியப்படைப்பு என்று ஆகியிருக்க முடியும். இப்போது இது ஒரு வகையான வாழ்க்கைச் சித்திரமாகவே நின்றுவிடுகிறது.

ஆரம்பகட்டக் கதைகளுக்குரிய மெல்லிய ஜோடனைத்தன்மை கொண்ட கதைகளாகவே மெல்பகுலாசா தொகுதியின் பல கதைகள் உள்ளன. உதாரணமாக, முப்பத்தெட்டு நாட்களில் வரையப்பட்ட ஒரு சிவப்பு புள்ளி மிக எளிமையான ஒரு தேசபக்திக்கதை. தென் துருவத்திற்குப் போகும் ஒரு பெண்மணி தன் குடும்பத்தையே நினைத்துக் கொண்டிருக்கிறாள். திரும்பி வரும்போது தன் கணவனிடமும் குழந்தைகளிடமும் சொல்லவேண்டியவற்றை எண்ணி மனப்பாடம் செய்கிறாள். ஆனால் அங்கு சென்றதனாலேயே ஒரு சிங்கப்பூர் குடிமகளாக மாறி ‘’வெள்ளைப்பனியில் சிவப்புப் புள்ளியாக சிங்கப்பூர் கொடியை நாட்டினேன் என்ற ஒரு வாக்கியத்தை மட்டும் சொல்கிறாள். அதாவது குடும்ப்பப்பெண் என்னும் ‘கீழ்நிலை’யில் இருந்து சிங்க்ப்பூர் ‘குடிமகள்’ என்னும் மேல்நிலையை அடைகிறாள்.

இத்தகைய கதைகள் எப்போதும் ஒரு பொது உண்மை அல்லது பொது புரிதல் சார்ந்து எழக்கூடியவை. உண்மையிலேயே ஒரு பெண் இப்படி சொல்லியிருக்கக்கூடும் என்றாலும் இலக்கியம் அதற்கு மேல் என்ன என்ற கேள்வியைத்தான் எப்போதும் கேட்கும். அன்றாட மனநிலைகள், ஏற்கனவே கூறப்பட்ட மனநிலைகள் இலக்கியத்திற்கு முக்கியம் அல்ல. அதைவிட இன்னொரு தளத்தில் முன்வைக்கப்பட்ட விடைகளை இலக்கியம் திரும்பச்சொல்லும்போது அது வெளிறிவிடுகிறது. அரசியல், தத்துவம், மதம் எதற்கும் இலக்கியம் பிரச்சாரவாகனம் ஆகமுடியாது.

ஒருவேளை இக்கதை இந்த தேச பக்தியை நோக்கிச் செல்லாமல் குடும்பத்திலிருந்து கிளம்பும் ஒரு பெண் பூமியை தன் குடும்பமாக கண்டடைவதாக சென்று முடிந்திருந்தால் அதன் தளமே வேறு. ஒரு இல்லத்தரசி பென்குயினைப்போல ஒரு எளிய உயிர்மட்டுமாக தன்னை உணர்ந்து கொண்டிருந்தால் அது ஒரு மேலும் பெரிய தரிசனத்தை முன் வைக்கிறது. அப்போது கூட அந்த தரிசனம் படைப்பில் வாசகன் கண்டடைவதாக இருக்க வேண்டுமே ஒழிய ஆசிரியரால் சொல்லப்படுவதாக இருக்கக்கூடாது.

இரு கதைகள் ஆர்வமூட்டும் கதைக்கருக்கள் கொண்டவை. தாதி சிங்கப்பூருக்கு இருக்கும் பணிப்பெண் பிரச்னையில் இருந்து உருவானது. [பணிப்பெண் பிரச்சினைபற்றி எழுதாத சிங்கப்பூர் பெண்கள் எவரேனும் இருக்கிறார்களா என வியக்கிறேன்] பணிப்பெண்களாக எந்திரங்களை அமர்த்திக் கொள்ளும் ஒரு காலகட்டத்தைக் காட்டும் இக்கதை எந்திரங்களிலும் மனிதத்தை தேடும் குழந்தையை சித்தரித்து முடிகிறது. சிறுகதை என்ற அளவில் சரியான வடிவமும் மொழியொழுக்கும் கொண்டது. ஆனால் இந்தக்கரு வெவ்வேறு வகையில் வணிக எழுத்திலேயே கையாளப்பட்ட ஒன்று. அந்த சாதாரணத்தன்மையே இக்கதையின் குறை

மேலதிகமாக ஒன்று நிகழ்ந்திருக்கலாம். அந்த இயந்திரம் என்பது அளிக்கும் குறியீட்டுச்சாத்தியங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கலாம். தாதியின் பணி இயந்திரத்தால் செய்யப்படும்போது மேம்படுவதும் சில இருக்கலாம் அல்லவா? இப்படி யோசிக்கிறேன். குழந்தை அன்னையைத்தேடுகிறது. ஆனால் அன்னையில் ஓர் இயந்திரத்தை அது தேடுகிறது என்றால் என்ன ஆகும்? மானுடத்தின் ஒரு பரிணாமத்தில் இயந்திர அம்சம் இல்லாத அன்னையைக்கூட ஏற்க முடியவில்லை என்றால்? எத்தனையோ கோணங்கள் விரிகின்றன. எளிமையாக ‘என்ன இருந்தாலும் அம்மா போல வருமா?’ என்பதல்ல நவீனச்சிறுகதை. அதில் பொதுப்புத்திப்புரிதல்களைச் சீண்டும், கடக்கும் ஓர் அம்சம் எப்போதும் இருந்தாகவேண்டும்.

வங்காள தேசத்தில் இருந்து கண்டெய்னர் லாரியில் சிங்கப்பூருக்கு ஒளிந்து உள்ளே வரும் உடலுழைப்புத் தொழிலாளர் சித்திரத்தை அளிக்கிறது நீர். சிட்டகாங் துறைமுகத்தில் கண்டெய்னரில் ஏற்றப்பட்ட உயிர் ஒன்று அங்கிருந்து சிங்கப்பூர் வருவதற்கு பதிலாக சிங்கப்பூர் வழியாக வியட்நாம் செல்கிறது. நேரக்கணிப்பில் ஏற்பட்ட பிழை காரணமாக உள்ளே உருகி மூச்சடைத்து அது இறப்பது ஒரு கதை. அந்த ஆத்மாவின் பரிதவிப்பு, வெளியே நின்று தவிக்கும் அதன் நுண்வடிவம் வழியாகச் சொல்லப்படும் இக்கதை புதியகோணத்தில் நன்றாகவே உள்ளது.

இவ்விரு கதைகளுமே சிங்கப்பூர்ச் சூழலில் புதிய கதைகளுக்கான சாத்தியக்கூறுகளை காட்டுபவை. எழுதப்பட்டுள்ள விதத்தால் சற்று மிகையுணர்ச்சி வெளிப்படுகிறது. கதை அமைப்பில் ஆசிரியையின் கைகள் வெளித்தெரிகின்றன. இருப்பினும் இவற்றை குறிப்பிடத்தகுந்த முயற்சியே என்றே சொல்வேன்.

மாதங்கியின் ஒரு கோடி டாலர்கள் தொகுதியில் அவரது அடுத்தகட்ட வளர்ச்சியைக்காட்டும் படைப்புகள் உள்ளன. சாதாரணாமான அன்றாடக் கருத்தை சற்று மாறுபட்ட ஒரு வடிவம் வழியாகச் சொல்லும் தோழன் குறும்படமும் ஒரு பின்குறிப்பும் முந்தைய பயிற்சிக்காலகட்ட கதை போன்றிருக்கிறது. சொல்ல வரும் கருத்தை உறுத்தும்படியாக மேலோட்டமாகவே இறுதியில் சொல்லும் கதை அது. மார்ஃபி விதி என்னும் கதையும் அந்தப் பயிற்சி காலகட்டத்திலிருந்து ஒரு முதிர்ந்த கதைவடிவிற்கு வருவதற்கான ஒரு எத்தனமாகவே நின்றுவிட்டிருக்கிறது.

அறிவார்ந்த ஒரு பெண்ணை உதறிவிட்டு ஊருக்குச் சென்று படிக்காத பெண்ணை திருமணம் செய்துகொண்டு வரும் ஒருவனின் வழக்கமான கதை அது.மார்ஃபி விதி என்ற அம்சத்தை உள்ளே கொண்டு வந்தால் மட்டுமே எளிமையான ஒரு வம்புக்கதை என்ற தளத்திலிருந்து அது மேலெழுகிறது. அந்த எளிமையான கிராமத்துப்பெண் மார்ஃபி விதி ஒன்றை தன்னை அறியாமலே சொல்லிவிடும்போது அதுவரை சொல்லப்பட்ட தளத்திலிருந்து கதை சற்று மேலெழுகிறது. அவளுக்குள்ளும் வெளிப்படாத அறிவுஜீவி ஒருத்தி இருக்கக்கூடும் என்பது அக்கதையின் நுண்தளம் என்பதனால் தவிர்க்க முடியாத கதையாகவும் அது ஆகிறது.

புரை அதே போல குடும்பப் புலத்திற்குள் வைத்து எழுதப்பட்ட எளிய உளநிலை ஒன்றைக் கொண்ட கதை. சாரம்சமாக ஒற்றை வரியில் சொல்லப்போனால் அலுவலகத்தில் மிகச்சிறந்த நிர்வாகி என்று கருதப்படும் ஒருவர் வீட்டில் பதற்றம் மிக்க,எதையும் உணரமுடியாத தந்தையாக எப்படி இருக்கிறார் என்ற மனைவியின் வியப்பு மட்டும் தான் அந்தக் கதை. அவ்தர்ற்கு மகளின் சுதந்திரத்தன்மை இன்னொரு மையம். அடதை நோக்கி கதை குவியவில்லை. எழுதப்பட்ட கதைச் சந்தர்ப்பம் மிகவும் பிந்தித் தொடங்கி தேவையற்ற தகவல்களை உருவாக்கி அந்த மையத்தை சென்றடைவதாக அமைந்துள்ளது.

முதல் கதையான அவன் மிக எளிமையான ஒரு பெண்பார்வையின் வெளிப்பாடு. ஆண்பெங்குயின்களுக்கு தங்கள் குழந்தைகளுடன் உள்ள உறவு ஒரு குறியீடாக கதையில் கையாளப்பட்டுள்ளது. கதைக்கு இப்படி ஒரு எளிமையான பிரச்சனையை எடுத்துக்கொண்டு சலிப்பை அல்லது கோபத்தை அதற்கு விடையாக்கும்போது கதை ஒரு கருத்திலிருந்து முளைத்து வாசகனை அக்கருத்தை நோக்கி இழுத்துச் செல்வதாக அமைந்துவிடுகிறது. ஆயினும் எளிமையான கதையாக அல்லாமல் இதை ஆக்குவது இதிலுள்ள பெங்குயின் உலகம்

தேர்ந்த எழுத்தாளர்களின் படைப்புகளில் கூட இத்தகைய கதைகள் உள்ளன எனும்போது தொடக்க நிலை எழுத்தாளர்களால் அதை எளிதில் கடந்து செல்ல முடியாது. ஆனால் முதிர்ந்த வாசகர்களுக்காக எழுதப்படும் ஒரு படைப்பு அவ்வாசகனுக்கு ஏற்கனவே தெரிந்த ஓர் தளத்திற்கு அவனை கொண்டு சென்று நிறுத்துவது ஒரு பெரிய சரிவாகவே கருதப்பட வேண்டும்.

இத்தொகுதியின் நான்கு கதைகள் வெவ்வேறு வகையில் முக்கியமானவை. இவ்ன்றுை இன்றைய நிலையிலேயே நல்ல கதைகள்தான். தமிழின் சிறந்த சிறுகதைகளாக ஆக இவற்றுக்கு மேலதிகமான என்ன தேவை என்ற அளவிலேயே அணுகியிருக்கிறேன்

முதல்கதை தீர்வை. இதனுடைய வடிவம் சற்று சம்பிரதாயமானது. உளவியல் ஆலோசனை நிலையத்திற்கு வரும் ஒருவர் தன் அன்னையின் இருப்பினால் பாதிக்கப்பட்ட தன் மனைவியைப்பற்றி சொல்லும் ஒரு சித்திரம் அது. ஆனால் வழக்கமாக அமைவதுபோல ஒர் உளவியல் விசித்திரத்தையோ அல்லது சிடுக்கையோ சொல்லி அதற்குரிய ஒரு எளிய தீர்வை சொல்லி முடியாமல், இந்தக் கதை இயல்பாகவே வாழ்க்கையின் விளக்க முடியாத புதிர் ஒன்றை தொட்டு நிற்கிறது.

இறந்து போன முதியவளிலிருந்து வாழும் பெண்மணிக்கு வந்து சேர்ந்தது என்ன? எது அவளுடைய உளவியலைத் திரிய வைத்தது? அந்தக் கொடுக்கல் வாங்கல் உறவுக்குள் எப்படி நிகழ்ந்தது? அவ்வினாக்களை பல்வேறு குறிப்புகள் மூலமாக வாசகனுக்கே விட்டுவிடுவதனால் வலுவான சிறுகதையாக மாறி நிற்கிறது தீர்வை.

எஃப்.கே. லிம்மின் மூன்றாவது கண் அவர் ஆவிகளை பார்க்கும் வல்லமை அடைவதைப்பற்றிய கதை. அந்த வல்லமையை அவர் அடைவதும் அதன் மூலம் அவர் அடையும் இழப்பும் தனிமையும் ஒரு நல்ல கதைக்குரிய வாய்ப்புகள் கொண்டிருக்கின்றன. ஆனால் மிக எளிமையான ஒரு முடிச்சில் அக்கதை சென்று முடிவதனால் அதுவரைக்கும் சொல்லப்பட்டவற்றுக்கு இருந்த கற்பனை சாத்தியங்களைச் சற்றே இழந்துவிடுகிறது.

தன் காலடிகளையே பார்த்துக் கொண்டு நடக்கும் ஒருவர் பிறர் பார்ப்பதை விட இருமடங்கு உலகத்தைப் பார்க்கிறார் என்பதும் இரண்டு உலகங்களிலாக செல்ல முடிவதனால் இரண்டு உலகத்தையும் இழந்து தனிமைப்பட்டிருக்கிறார் என்பதும் பல கற்பனை வாய்ப்புகளையும் பல உருவக சாத்தியங்களையும் கொண்ட கதை. அவர் அப்படி ஆனதற்கான ஒரு காரணத்தை சொல்லும் போது கதை கீழே வந்துவிடுகிறது. ஆயினும் இதை ஒரு கவனிக்கத்தக்க கதையாகச் சொல்ல எனக்குத்தயக்கமில்லை.

இத்தொகுதியின் இன்னொரு முக்கியமான முயற்சி ஒரு கோடி டாலர்கள். மாதங்கி தனது எழுத்துப் பயணத்தின் ஊடாக தனது சிறந்த சாத்தியம் ஒன்றை சென்றடைந்திருப்பதை இக்கதை காட்டுகிறது. ஒரு புதிய சிறுகதைக்கான சிக்கலான உட்கட்டமைப்பும், வாசகனின் கற்பனையை சிதறவிடாத ஒருமையும், கதை முடிந்த பின் அவனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் எழுச்சியும் கொண்ட ஆக்கம்.

இரு சரடுகளாகச் செல்லும் இக்கதையில் ஒன்று விளையாட்டாகவும் ஒன்று யதார்த்தமாகவும் உள்ளது. யதார்த்திற்குள்ளிருந்து விளையாட்டிற்குள் வந்து சிக்கிக் கொள்ளும் இந்த வடிவத்தின் சாத்தியங்கள், இலக்கியவாசகன் பல கோணங்களில் விரிவாக்கிக் கொள்ளத் தக்கவை. ஆனால் ஆசிரியர் சொல்லிச்செல்லும் தகவல்களில் சிக்கித்திணறும் எண்ணமும் ஏற்படுகிறது

இனிய அழகிய சிறுகதை விழிப்பு. சிறந்த சிறுகதைக்குரிய இயல்பான கோட்டுருவம் சாத்தியமாகியிருக்கிறது. விழிப்பை ஒரு வதையாகக் கொண்ட ஒருவனின் உள்ளுறையும் தவிப்பை உறங்க வைக்கும் கனிவு ஒன்று நிகழ்கிறது. எளிய மொழிநடைமூலம் அழகிய கவித்துவம் வெளிப்படும் கதை இது புனைவெழுத்தாளராக அவரது வெற்றி என்றே சொல்வேன்.

மாதங்கியின் பலவீனங்கள் இரண்டு. ஒன்று, வழக்கமாக பெண்கள் எழுதும் கதைக்கருக்களில் சிக்கி கொள்வது. பிள்ளைகளை படிக்க வைப்பது, அதன் பொருட்டு வீட்டில் எவராவது ஒருவர் வேலையை விட்டுவிடுவது, பணிப்பெண் பிரச்னை, ஊரிலிருந்து யாராவது வருவது, திரும்பிச் செல்வது போன்று திரும்பத் திரும்ப அத்தனை சிங்கப்பூர்ப் பெண்களுக்கும் உரிய சிக்கல்களை அவர் தவிர்த்துவிடலாம்.

அதைப்போல அறிவியல்சாத்தியங்களை விரிவான ஆய்வோ கற்பனையோ இல்லாமல் சொல்வதையும் மறுபரிசீலனை செய்யலாம். இரு உதாரணங்கள் புரு ஓர் உன்னத தினம். அவை மீண்டும் சமூக களங்களில் பேசப்படும் கருத்துக்களை ஒருவகையான அறிவியல் பார்வையிலிருந்து விளக்க முயல்கின்றன. அவற்றின் சாத்தியங்கள் மிக எல்லைக்குட்பட்டவை. ஆரம்பத்திலேயே வாசகன் ஒருவகையான உருவக நீதிக்கதை என்று அவற்றை எண்ணத் தலைப்பட்டுவிடுகிறான்.

சிங்கப்பூரைக் களமாகக் கொண்டு எழுதும், சிங்கப்பூரில் பிறக்காத எழுத்தாளர் என்ற வகையில் மாதங்கியையே முதன்மையான எழுத்தாளராகச் சொல்வேன். தமிழ்ச்சூழலிலேயே அவர் ஒரு நம்பிக்கைக்குரிய படைப்பாளி என்பதும் மேலும் வலுவான படைப்புகளை அவரால் உருவாக்க முடியும் என்பதும் இக்கதைகளில் தெரிகிறது. புதிய கதைக்களங்களில் மட்டும் கவனம் செலுத்தி, அவற்றினூடாக வெளிப்படும் வாழ்க்கைத் தரிசனங்களை நோக்கி தன் பார்வையை அவர் திருப்பிக் கொள்ளும் தருணங்களில் தான் அவருடைய சாத்தியங்கள் வெளிப்படுகின்றன. அயல்மண்ணில் நிகழும் வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவச் சிக்கல்களை, வரலாற்று முரண்பாடுகளை நோக்கி மாதங்கி நகரும்போது மேலும் வலுவான படைப்புகளை எழுதக்கூடும்.

[மாதங்கி சிறுகதைகள் ‘ஒருகோடி டாலர்கள்’ [சந்த்யா பதிப்பகம்] மெல்பகுலாஸோ [சந்த்யா பதிப்பகம்]

சிங்கப்பூர் தமிழிலக்கியத்தின் செல்நெறிகள்

இராம கண்ணபிரான் கதைகள் பற்றி

நா கோவிந்தசாமி

சூர்யரத்னா கதைகள் நூர்ஜகான் கதைகள்

கமலாதேவி அரவிந்தன்

உதுமான் கனி

புதுமைதாசன்

பெண் எழுத்தாளருகளின் ஆக்கங்கள் பற்றி

சிங்கப்பூர் இலக்கியம் கடிதங்கள் 1

சிங்கப்பூர் இலக்கியம் கடிதங்கள் 2

ந.பழனி வேலு  பற்றிய கட்டுரை

சிங்கை இளங்கண்ணன் பற்றிய கட்டுரை

பொன் சுந்தரராசு பற்றிய கட்டுரை

மலர்விழி இளங்கோவன்கட்டுரை

சிங்கப்பூர் விமர்சனம் அறிவுரைகள்

அழகுநிலா கதைகள் பற்றி

சிங்கப்பூர் கடிதங்கள் 3

சிங்கப்பூர் கடிதங்கள்: 4

முந்தைய கட்டுரைகாந்தி கடிதங்கள் 2
அடுத்த கட்டுரைகேதார்நாத் பயணம்