காந்தி தோற்கும் இடங்கள் -கடிதங்கள்

05884aa23728fd8e765d73a75044fe34[1]

அன்புள்ள ஜெயமோகன் சாருக்கு

நேற்று காந்தி குறித்த உரை, ஒரு மகத்தான மானிட அறத்தை முன் வைத்த காந்தியை அவருடைய கருத்துக்களை எவ்வளவு தோற்கடித்துக் கொண்டிருக்கின்றோம் என்று உணர்த்தியது. எவ்வளவு எளிமையாக அவரை வசை பாட முடிகிறது இந்நாட்டில்.

ஜெயக்குமார் பரத்வாஜ்

***

மிக அருமையான உரை. எனது நீண்ட நாள் கேள்விக்கான பதில் இதில் கிடைத்தது; ஏன் காந்தி மீது மீண்டும் மீண்டும் மலத்தையும் முள்ளையும் போட்டு கொண்டு இருக்கிறார்கள் என்று, மிக அழுத்தமான உண்மை ஆம் ! இவர்கள் அவர்கள் என்ற பேதம் காந்திக்கு இல்லை

காந்தியை அனைவரும் நம்மவர் என்று யாரும் பார்க்கவில்லை, மாறாக அவர்கள் ” அவர்” என்று அனைவராலும் பார்க்கப்பட்டார்!!! கடைசியில் காந்தி மட்டுமே தனித்து நின்றார்–One Man Army

ராமகிருஷ்ணன்

***

ஜெ

34 நிமிட காணொளியைப் பார்க்க எனக்கு 1 மணி நேரத்திற்கும் மேலாக தேவைப் பட்டது. பல முறை நிறுத்தி சிந்தனையில் ஆழ்ந்து விட்டேன்.உங்கள் எழுத்துக்களுக்கும் பேச்சுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதைப் பல காணொளிகளில் கண்டு கொண்டிருக்கிறேன். அவ்வளவு கச்சிதம்.

காந்தியத்தை முழுவதும் எழுதி விட்டீர்கள், மேலும் சொல்ல ஏதும் இருக்கிறதா என்று தான் காணொளியைத் திறந்தேன். ஆனால் என்று தான் உங்களிடம் இருந்து அனைத்தையும் கற்றுத் தீருவோமோ? என்ற கேள்வி தான் எஞ்சியது.

இவ்வளவு வரலாற்று நிகழ்வையும், அதில் பங்கு கொள்ளும் ஆளுமைகளையும், படைத்தளிக்கக்கூடிய ஞாபக ஆற்றலைக் கண்டு மிரண்டு தான் போகிறேன் ஒவ்வொரு முறையும்.

நன்றி,

ரமேஷ்.

***

அன்புள்ள சார்!

நலம் தானே. இந்த சுட்டி உங்கள் பார்வைக்காக..

http://www.thenewsminute.com/article/andhra-pradesh-village-mahatma-gandhi-goddess-who-will-bring-good-luck-50759

மிக்க அன்புடன்,

ராஜு.

***

ஜெ

உங்கள் நல்ல உரைகளில் ஒன்று. அன்று திரண்டு வந்திருந்த உங்கள் வாசகர்களுக்கு நீண்ட சம்பிரதாயமான சில உரைகள் சலிப்பை உருவாக்கியிருக்கும். பொதுவான வாசகர்களுக்கு அவை பிடித்திருக்கும். ஆனால் நூல்வாசிப்பில் ஈடுபாடுள்ளவர்களிடம் சொல்ல அவர்களிடம் ஏதுமில்லை

ஆனால் அன்றுவெளியான இளம்தாகூர் நூல் மிக முக்கியமானது. போகும் வழியிலேயே வாசித்தேன். அதை வெளியிட்டது ஒரு பெரிய சேவை

நிறைய மேடைகளில் பேசிப்பேசி உங்கள் பேச்சும் குரலும் மிகவும் தெளிவாகி உள்ளது. பேச்சுக்கு ஒரு கட்டமைப்பை முன்னரே உருவாக்கியிருக்கிக் கொண்டு வருகிறீர்கள். ஆகவே பேச்சு அலைபாய்வதில்லை

நேற்றைய பேசிலேயே மூன்றே மூன்று கருத்துக்கள். ஒரு கருத்துக்கு சராசரியாக பத்து நிமிடம். காந்தியை எவர் அறிய முடியாது? நம்மவர் பிறர் என வகுத்து நோக்கும் பார்வை கொண்டவர்கள். நுகர்வில் ஊறியவர்கள். மையத்தை நோக்கியே சிந்திப்பவர்கள். அவ்வளவுதான் உரை

நல்ல உரைக்கு நன்றி

எஸ்.ஆர். சுரேஷ்குமார்

***

அன்பு ஜெயமோகன்,

நலம்தானே? என்னுடைய முந்தைய கடிதத்தில் ‘டின்னிடஸ்’ பிரச்சினை பற்றியும், ‘யுதனேசியா’ பற்றியும் எழுதியிருந்தேன். நேரம் கிடைக்கும்போது உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்.

உங்கள் ‘காந்தியம் தோற்கும் இடங்கள்’ உரை பார்த்தேன். ஆழமான சிந்தனை, அதை அழகாக வெளிப்படுத்திருயிருந்தீர்கள்.

கடந்த முறை இந்தியா வந்திருந்தபோது மும்பை விமான நிலையத்தில் காந்தி சிலை ஒன்றைப் பார்த்தேன். நிஜமான காந்தியே வந்து அமர்ந்திருப்பது போல அவ்வளவு தத்ரூபமாக இருந்தது. நான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நண்பர்களிடம் பகிர்ந்தேன். அவ்வளவுதான் என்னைத் தூக்கிப் பந்தாடிவிட்டார்கள். காந்தியைப் பற்றி பல கோட்பாடுகளைக் கூறி எனக்கு அறிவொளியூட்டினார்கள். அவை பெரும்பாலும் வலைத்தளங்கள், திண்ணைப் பேச்சு, தேநீர்க்கடை விவாதங்களிலிருந்து அவர்கள் பெற்றுக்கொண்டவை. ஆர்.பி.தத் புத்தகமெல்லாம் அவர்கள் படித்திருக்கமாட்டார்கள். காந்தியின் சுயசரிதையை நிச்சயம் இவர்கள் தொட்டுக்கூடப் பார்த்ததில்லை என்பது அவர்கள் பேச்சிலிருந்தே தெரிந்தது. ஏனென்றால் இவற்றையெல்லாம் படித்திருந்தால் அவர்கள் விவாதத்துக்குத் துணைபுரிய அதில் இன்னும் நிறைய அம்சங்கள் இருக்கின்றனவே.

எனக்கும் சத்திய சோதனை படிக்கும்போது சில இடங்களில் சத்திய சோதனையாக இருந்தது. அவர்மீது விமர்சனங்கள் இருக்கிறது. ஆனால், எந்த ஒரு மனிதனையும் முழுமையாக நிராகரிக்கவோ, முழுமையாக ஏற்றுக்கொள்ளவோ என்னால் முடிவதில்லை. ஏனெனில் முழுமை என்பது சாத்தியமேயில்லாத ஒன்று என்பதே என்னுடைய கருத்து. நான் செம்மைவாதியல்ல.

ஆனால் ஒரு மனிதனைப் பற்றி முடிவெடுப்பதற்கு முன்பு அவனை புரிந்துகொள்ளவேண்டும் என்று நேர்மையாக அணுக நினைக்கிறேன். அப்படித்தான் காந்தியையும் அணுகினேன். உங்களையும் அணுகுகிறேன். படைப்பாளிகளை பற்றியும், பிற மனிதர்களை பற்றிமான உங்கள் விமர்சனக் கட்டுரைகளில் எனக்குப் பிடித்த அம்சம் அதுதான். யாரைப் பற்றி எழுதினாலும், அந்த மனிதனின் வாழ்க்கையின் நீள, அகல, ஆழங்களில் முழுவதுமாக நீந்தி அனைத்தையும் எழுதுகிறீர்கள். நுனிப்புல் மேய்ப்பவர்கள் யார் யாருக்கு என்ன வேண்டுமோ அதை எடுத்துக்கொண்டு பாராட்டுகிறார்கள் அல்லது ஏசுகிறார்கள்.

உண்மையை விடப் பொய் மனிதர்களுக்கு மிகவும் பிடிக்கிறது. காரணம் பொய் பெரும்பாலும் அவர்களது அநுமானங்களுக்கு ஒத்துப்போவதாக இருக்கிறது. அவர்களுக்குச் சாதகமானதாக இருக்கிறது. அவர்களுக்குப் பிடித்தமானதாய் இருக்கிறது. இப்படி எதுவாக இல்லாவிட்டாலும், பொய் வளைக்கக்கூடியதாக இருக்கிறது. தமக்கு வேண்டியது போல் வளைத்துக்கொள்ள முடிகிறது. இப்படி வளைக்கும் முயற்சியில் உண்மையின் அழகை சிறிது சிதைக்கவும் அவர்கள் தயங்குவதில்லை. உண்மையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள், வெறுக்கிறார்கள், நிராகரிக்கிறார்கள், முடிவில் விலகிச் சென்றுவிடுகிறார்கள்.

ஒரு கட்டத்தில் பொய்களே உண்மையாகவும் ஆகிவிடுகிறது. தனிமரமாய் இந்த வேடிக்கையை அதுதரும் வலிகளைத் தாங்கிக்கொண்டு நின்று புன்னகைப்பதைத் தவிர, உண்மைக்கு வேறு வழியில்லை என்று நான் ஒருமுறை எழுதியிருந்தேன். உங்கள் கட்டுரைகளில் பல இப்படித்தான் அணுகப்படுகிறது என்பது என் கருத்து. நானுமே உங்களுடைய கட்டுரைகள் சிலவற்றை அப்படித்தான் அணுகியிருக்கிறேன். ஏனெனில் நானுமே பல நேரங்களில் நுனிப்புல் மேய்பவன்தான். ஆனால், நான் ஆழமாகப் பார்த்திராத விஷயங்களில் என் மூக்கை விடுவதில்லை. அமைதியையே கடைப்பிடிக்க விரும்புகிறேன்.

காந்தியைப் பற்றிய உங்கள் உரை சிறிய உரைதானென்றாலும் பல விஷயங்கள் சுவாரசியமாக இருந்தது. குறிப்பாக ‘Decentralization’ பற்றி நீங்கள் பேசியிருந்ததை மிகவும் ரசித்தேன். இன்றைக்கு என்னுடைய வேலையே அதுதான். :-) It is about Reinventing the Organizations by applying the principles of ‘Decentralization’ and forming ‘Self-organizing’/’Self-managing’ teams. அதைப் பற்றியெல்லாம் நீங்கள் பேசியிருந்தது மிகவும் பிடித்தது. எங்களுடைய அணியில் இன்னும் சில Change Managers தேவை. எங்களுடன் செய்ந்துகொள்ள விருப்பமிருந்தால் தெரிவிக்கவும்.

இன்றைக்கு இன்றைய சிந்தனைகளை ஆஹா ஓஹோ என்கிறார்கள். உண்மையில் ஐரோப்பாவிலேயே அதிகம் சம்பளம் வாங்குபவர்கள் இந்தக் கொள்கைகளையெல்லாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த Agile Consultant-கள்தான். ஏனெனில் இந்த மாற்றங்களையெல்லாம் கொண்டுவருவதற்கு பகீர பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கிறது. “Change, or Become Extinct!” என்று கோஷங்கள் எழுப்ப வேண்டியிருக்கிறது. இதையெல்லாம் மாற்ற இந்த காலத்திலேயே முடியவில்லை.

காந்தி தொலைநோக்குப் பார்வையுடன் அன்றைக்கே பேசியிருக்கிறார், கிராம சுவராஜ்ஜியம் பற்றி ஏற்கனவே படித்திருந்தாலும் உங்கள் உரையைப் பார்த்த பிறகே இப்படி என்னுடைய பணியுடன், இன்றைய நிறுவனங்களில் நிகழ்ந்து வரும் தவிர்க்கவே முடியாத மாற்றங்களுடன் இணைத்துப் பார்க்க முடிந்தது. எந்தத் தலைப்பில் நீங்கள் பேசினாலும், எழுதினாலும், அது வேறொரு பரிமாணத்தைத் தருகிறது.

இன்று காலைக்கூட என்னுடைய பெல்கிய நண்பரிடம் அலுவலகத்தில் உங்கள் உரையின் கடைசிப் பகுதியைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். ‘தீவிரவாத அமைப்புகள் கூட இன்றைக்கு பரவலாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் காவல்துறையைப் பாருங்கள்? ஒரு மையப்படுத்தப்பட்ட அமைப்பு எப்படி பரவலாக்கப்பட்ட அமைப்பை எதிர்கொள்ளமுடியும்?’ என்று கூறினார். நல்ல வேலை அவருடனாவது இப்படி ஆழமாக விவாதிக்க முடிந்தது. ‘ஆங்கிலேயர்கள் அவர்களாகவே வெளியேறிவிட்டார்கள். விடுதலை போராட்டமே தேவையற்ற ஒன்று.’ என்றெல்லாம் நேற்று கேட்டுக்கொண்டிருந்தது சலிப்பாக இருந்தது.

காந்தியில் தொடங்கி தீவிரவாதம் வரைக்கும் வந்துவிட்டேன். உங்கள் உரையைப் பற்றிய என்னுடைய எண்ணங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று தோன்றியதால் எழுதினேன்.

தொடர்பிலிருக்க வேண்டுகிறேன். நன்றி.

அன்புடன்,

மாதவன் இளங்கோ

பெல்ஜியம்

 

முந்தைய கட்டுரைமின்னங்காடி
அடுத்த கட்டுரைஅமைப்பு மனிதர்களின் இலக்கியம்