«

»


Print this Post

அமைப்பு மனிதர்களின் இலக்கியம்


அமைப்பு மனிதர்களைப்பற்றிய ஒரு மனச்சுளிப்பு இலக்கியவாதிகளிடம் எப்போதும் உண்டு. அவர்களின் அடிப்படை இயல்பு என்பது சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்வது. ஆகவே தனக்கென தனித்தன்மை ஏதும் இல்லாமலிருப்பது. கருத்துக்களில், ஆளுமையில் எப்போதும் ஒரு வளைந்து நெளியும் தன்மை அவர்களிடமிருக்கும். இந்த நிலையற்ற தன்மையை எழுத்தாளர்கள் சந்தர்ப்பவாதம் என்றும் ,கழைக்கூத்தாடித்தனம் என்றும் புரிந்துகொள்வார்கள்.

ஆனால் இந்த நெகிழ்தன்மையால் அமைப்பு மனிதர்கள் எளிதில் முக்கியமானவர்களிடம் தொடர்புகளை உருவாக்கிக்கொள்வார்கள். அமைப்புகளிடம் ஒத்துப்போவார்கள். எவரையும் சீண்டாதவர்களாகவும் எனவே ஆபத்தற்றவர்களாகவும் கருதப்படுவார்கள். அமைப்புமனிதர்களின் ஆற்றல் என்பது இவ்வாறு உருவாவதே.

அமைப்புமனிதர்களின் செயல்விசை என்பது புறவயமானது. அவர்கள் வென்றெடுக்கவேண்டிய அனைத்தும் வெளியேதான் உள்ளன. எனவே அமைப்புகளைக் கட்டி எழுப்புவது, அனைவரையும் ஒருங்கிணைத்து நிகழ்ச்சிகளை உருவாக்குவது போன்றவற்றை அவர்கள் சலிப்பில்லாமல் செய்வார்கள். தனியியல்பால் அவர்கள் ஒருவகை வணிகர்கள். இலக்கியவாதியிடம் இருக்கும் மனநிலைக்கொந்தளிப்புகள், சலிப்புகள், புண்படுத்தும் இயல்பு போன்றவை அவர்களிடமிருப்பதில்லை.

அமைப்புமனிதர்கள் மூன்று வகை. இலட்சியவாதிகளான அமைப்பு மனிதர்கள் முதல் வரிசை. அவர்களில் சிலர் வரலாற்றில் இடம்பெறுவார்கள், கல்கி சதாசிவம் போல. சிலர் நினைவுகளில் மட்டும் நீடிப்பார்கள். இலக்கியவீதி இனியவன் [சென்னை], இலக்கியவட்டம் நாராயணன் [காஞ்சிபுரம்] நெய்தல் கிருஷ்ணன் [நாகர்கோயில்] போல. கலையிலக்கியதளத்தில் அவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. அவர்களைச் சார்ந்தே சில இலக்கிய அலைகள் உருவாகியிருப்பதை ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் காணலாம்

இரண்டாவது வரிசை, வணிகர்கள். அவர்களின் நோக்கம் முதன்மையாக வணிக அமைப்புக்களை உருவாக்குவதே. கூடவே அவர்கள் தங்கள் பண்பாட்டு ஆர்வத்தாலும் இலக்கிய ரசனையாலும் பங்களிப்பையும் ஆற்றியிருப்பார்கள். எஸ்.எஸ்.வாசன், சாவி போல.

மூன்றாவது வரிசை ,அமைப்புமனிதர்கள் தங்கள் மொத்த ஆற்றலையும் பணியையும் தங்கள் எழுத்துக்களை முன்னிறுத்தவே செலவிடுவார்கள். நூல்களை எழுதுவார்கள். அதற்கு விழாக்களை ஒருங்கிணைப்பார்கள். தன் கீழே முதிராப் படைப்பாளிகளைத் திரட்டுவார்கள். அதற்கு அரசு மற்றும் தனியார் அமைப்புகளின் ஆதரவைச் சேர்த்துக்கொள்வார்கள். நிதிசேர்ப்பார்கள். காலப்போக்கில் அதிகாரமையமாக ஆகி அனைவரும அஞ்சும் ஆளுமைகளாக மாறுவார்கள்.

அந்நிலையில் சூழலின் தரத்தைக் கீழிறக்கும் சக்திகளாக, ஆக்கபூர்வப் பண்பாட்டுச்செயல்பாட்டுக்கு எதிரானவர்களாக அவர்கள் ஆகிவிடுவார்கள். எதிர்க்கப்படவேண்டியவர்கள் அவர்கள் மட்டுமே. அவர்கள் உருவாக்கியிருக்கும் புகழ்மொழிகளின் பெரிய வளையத்தைக் கடந்து அவர்களின் உண்மைத்தரத்தை அடையாளம் காட்டுவது சாதாரணமான வாசகர்களால் இயல்வது அல்ல. ஆனால் அது நிகழ்ந்தாகவேண்டும். இல்லையேல் அங்கே இலக்கிய இயக்கமே தேக்கம் கண்டுவிடும்,

*

மா.அன்பழகனின் கதைகளை வாசிப்பதற்கு முன்னரே அவருடைய ஆளுமையைப்பற்றி அறிந்துகொண்டேன். சிங்கப்பூரில் முக்கியமான இலக்கிய அமைப்புகளை வழிநடத்துபவர். இலக்கியவிழாக்களை ஒருங்கிணைப்பவர். அவர் தன் படைப்புகளையும், தன்னை ஏற்பவர்களின் படைப்புகளையும் மட்டுமே முன்னிறுத்துகிறார்.

அந்த அறிதலை ஒதுக்கி வைத்து வாசகனுக்குரிய நல்லெண்ணத்துடன் அவருடைய இரு சிறுகதைத் தொகுதிகளை வாசித்தேன். மா.அன்பழகனின் அளந்துபோட்டச் சிறுகதைகள், விடியல் விளக்குகள். முழுக்கமுழுக்க அமைப்புமனிதரால் எழுதப்பட்ட மிக ஆரம்பநிலை ஆக்கங்கள் இவை. எவ்வகையிலும் இலக்கியரீதியாகப் பொருட்படுத்தத் தக்கவை அல்ல. வணிகஎழுத்தாகக் கொள்ளத்தக்கவை அல்ல. கல்வித்துறைசார்ந்த அடிப்படைத்தகுதியும் இவற்றுக்கில்லை.

இக்கதைகளில் ஒருசிலவற்றையேனும் எடுத்து ஏன் இவை இலக்கியமாக ஆகவில்லை என விவாதிக்கலாமென்னும் எண்ணம் எழுந்ததுமே சலிப்பும் வந்துசூழ்ந்துகொண்டது. இருநூல்களில் இருந்து ஒரு வரிகூட பொருட்படுத்தும்படி இல்லை என்னும்போது என்னதான் சொல்வது?

மிக எளிய முறையிலேனும் வாசிப்புடன் அறிமுகம் உடைய எவருக்கும் இவற்றின் தரம் பற்றி எதுவும் சொல்லவேண்டிய தேவை இல்லை. சர்வசாதாரணமான நிகழ்வுகள் செயற்கையான, தேய்வழக்குகளால் ஆன ஒரு மொழிநடையில் சொல்லப்பட்டு ஒரு எளிய அன்றாடக்கருத்தில் சென்று முடிகின்றன இக்கதைகள்.

நெடுங்காலமாக எழுதிவருகிறார் அன்பழகன். நாவல்கள் கவிதைகள் என எழுதிக்குவித்திருக்கிறார். அமைச்சர்கள், கல்வித்துறை உயரதிகாரிகள் போன்றவர்களை அழைத்து கொத்துக்கொத்தாக நூல்களை வெளியிட்டிருக்கிறார். ஆனால் தமிழில் வெளிவந்த இலக்கியநூல்கள் எவற்றுடனும் அவருக்கு எளிய அறிமுகம்கூட இல்லை என்பதை இக்கதைகள் காட்டுகின்றன.

வேறெந்த துறையிலும் இப்படி மிக ஆரம்பநிலைப் பயிற்சிகூட இல்லாமல் படைத்துவிட்டு மன்றில் நிற்கமுடியும் எனத் தோன்றவில்லை. வண்ணங்களை அள்ளி தாளிதில் தெளித்துவிட்டு ஓவியனாக சிங்கப்பூர் கலைக்கழகத்தில் ஒரு கண்காட்சி வைத்தால் அது எவ்வளவு கேலிக்குரியதாக இருக்கும். அதற்கு அதிகாரிகளும் அமைச்சர்களும் வந்து வாழ்த்துரை வழங்கினால் அதை எப்படி எடுத்துக்கொள்வோம்?

இலக்கியத்தில் மட்டும் இது ஏன் சாத்தியமாகிறது? பிரச்சினை உண்மையில் எங்கே இருக்கிறது? இந்தக்கதைகள் இத்தனை ஆர்ப்பாட்டமாக ஒரு சமூகத்தின் மையத்தில் நிறுத்தப்படவில்லை என்றால் காகிதவிரயம் என்பதோடு நிறுத்திக்கொண்டிருக்கலாம்

ஒருவர் எழுதுவது அவரது சுதந்திரம். ஆனால் அவர் அமைப்பு மனிதராக இருக்கையில் தன் அனைத்து ஆற்றல்களையும் கொண்டு தன் போலிப்படைப்புகளை உயர்த்தி முன்வைப்பார். அதன் மறுபக்கமாக உண்மையான ஆக்கங்களை மறைக்கவும் ஒடுக்கவும் முயல்வார். அந்த இடத்தில்தான் அவர் தீமைபயப்பவராக ஆகிறார்.

தமிழகத்தில் நமக்கு ஒரு அசட்டுநோக்கு உண்டு. ஒரு விருதோ பரிசோ ஒருவருக்கு அளிக்கப்படும் என்றால் அது அவர் லாட்டரியில் பரிசுபெற்றதற்கு நிகராகவே எண்ணுவோம். அவரது தகுதியை, அப்படைப்பின் தரத்தைப்பற்றி பேச்சு எழுமென்றால் ‘அடுத்தவனுக்கு கிடைச்சதை குறை சொல்லலாமா?’ என்ற அப்பாவிக்குரல் உடனே எழும்.

இலக்கியத்தில் படைப்புகள், அதற்கான அங்கீகாரங்கள் கறாராகவே அணுகப்படவேண்டும். அந்த நோக்கு இந்தியாவில் தமிழின் அண்டைமாநிலங்களான கேரளத்திலும் கர்நாடகத்திலும் மிகவலுவாகவே உள்ளது. அங்கு தகுதியற்ற ஒருவர் எவ்வகையிலேனும் அங்கீகரிக்கப்படுவார் என்றால் பொதுக்கண்டனம் மிகக்கடுமையாக எழுவது வழக்கம். ஆகவே அவ்வாறு நிகழ்வது மிகமிக அபூர்வம். தமிழில் அந்தக்குரல் க.நா.சுவாலும் சுந்தர ராமசாமியாலும் வன்மையாக முன்வைக்கப்பட்டது. ஆனால் அது பொதுப்போக்காக எழவில்லை. சிங்கப்பூர் இலக்கியத்தில் அது நிகழவேண்டும்.

அதைவிட முக்கியமான அமைப்புகளில் பொறுப்பிலிருப்பவர்கள் உண்மையான கலை இலக்கிய முயற்சிகளுக்கும் அமைப்புமனிதர்களின் ஏற்பாடுகளுக்கும் நடுவே வேறுபாடு காணும் குறைந்தபட்ச நுண்ணுணர்வுடன் இருக்கவேண்டும். தங்களை எளிதில் வந்தடைகிறார்கள், இணக்கமாக இருக்கிறார்கள் என்பதனாலேயே அமைப்பு மனிதர்களை படைப்பாளிகளின் இடத்தில் அவர்கள் வைப்பார்கள் என்றால் மிகப்பெரிய பிழை செய்கிறார்கள்.

இலக்கியத்தின் அடிப்படையே ரசனைதான். அது கூரிய பாகுபாடுகளால்தான் உருவாகும். எல்லாம் இலக்கியமே என்னும் வரி இலக்கியம் தேவையில்லை என்ற வரிக்குச் சமானமானது.

 

அளந்துபோட்ட சிறுகதைகள் – மா. அன்பழகன்

விடியல் விளக்குகள். – மா அன்பழகன்

 

சிங்கப்பூர் தமிழிலக்கியத்தின் செல்நெறிகள்

இராம கண்ணபிரான் கதைகள் பற்றி

நா கோவிந்தசாமி

சூர்யரத்னா கதைகள் நூர்ஜகான் கதைகள்

கமலாதேவி அரவிந்தன்

உதுமான் கனி

புதுமைதாசன்

பெண் எழுத்தாளருகளின் ஆக்கங்கள் பற்றி

சிங்கப்பூர் இலக்கியம் கடிதங்கள் 1

சிங்கப்பூர் இலக்கியம் கடிதங்கள் 2

ந.பழனி வேலு  பற்றிய கட்டுரை

சிங்கை இளங்கண்ணன் பற்றிய கட்டுரை

பொன் சுந்தரராசு பற்றிய கட்டுரை

மலர்விழி இளங்கோவன்கட்டுரை

சிங்கப்பூர் விமர்சனம் அறிவுரைகள்

அழகுநிலா கதைகள் பற்றி

சிங்கப்பூர் கடிதங்கள் 3

சிங்கப்பூர் கடிதங்கள்: 4

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: https://www.jeyamohan.in/91105