கோதையின் மடியில் 4

காகா காலேல்கர் காந்தியின் சீடர். சுதந்திரப்போராளி. தத்தாத்ரேய பாலகிருஷ்ண காலேல்கர் என்பது இயற்பெயர். கர்நாடகத்தில் பெல்காமில் பிறந்த காலேல்கர் ஒரு மராட்டியர். சர்வோதயா இதழாசிரியராக இருந்தார். இந்திய மொழிகளில் பயணக்கட்டுரைகள் எழுதியவர்களில் காகா காலேல்கரே முதன்மையானவர். கிட்டத்தட்ட அறுபது நூல்கள் எழுதியிருக்கிறார்.மராத்தி. இந்தி, குஜராத்தி மொழிகளில் எழுதிய காலேல்கர் இந்தியாவுக்குள்ளேயே சுற்றியலைந்திருக்கிறார். இந்தியாவின் அறியப்படாத உள்கிராமங்களின் நிலக்காட்சிகளையும் மக்களையும் அழியா ஓவியங்களாக எழுதினார். இந்தியாவின் முக்கியமான நீர்நிலைகள் மற்றும் நதிகளில் நீராடியபடி அவர் சென்ற நீண்ட பயணத்தைப்பற்றி அவர் எழுதிய ‘ஜீவன்லீலா’ என்ற புகழ்மிக்க நூல் தமிழில் சாகித்ய அக்காதமியால் வெளியிடப்பட்டிருக்கிறது.

காகா காலேல்கர்

காலேல்கரின் நூலைப்படிக்கும்போதெல்லாம் இந்தியாவின் நதிகளில் எல்லாம் நீராடவேண்டும் என்ற பெரும் கனவு என்னை ஆட்கொள்வதுண்டு. என்னால் முடிந்தவரை நானும் தொடர்ந்து இந்தியாவின் நிலங்களில் பயணம் செய்து வருகிறேன். நிலத்தில் நடந்து நீரில் குளித்தால் மண் நம்மையும் நாம் மண்ணையும் அறிகிறோம். என்னைப்பொறுத்தவரை நான் இந்தியா என்ற மகத்தான யதார்த்தத்தை என் கால்களாலேயே அறிந்திருக்கிறேன்.

ஆகவேதான் பிரிவினை பேசும் எந்த ஒரு மனிதரையும் நான் மனமார வெறுக்கிறேன். இந்த கோதாவரி என்னுடைய நதி. என் முன்னோர்களின் தெய்வவடிவம் இது. ஒவ்வொருநாளும் இதன் பெயரைச்சொல்லித்தான் அவர்கள் நாளைத்தொடங்கியிருக்கிறார்கள். இது என் ஆத்மா. இதை என்னுடையதல்ல என்று சொல்லும் எவரும் எனக்கும் என் சந்ததிகளுக்கும் நிரப்பமுடியாத பேரிழப்பையே அளிக்கிறார்கள்.

அக்டோபர் முப்பத்தொன்று காலையில் கோதையின்மீது இருள் இன்னமும் விலகியிருக்காதபோது சென்றுகொண்டிருந்த கணங்களில் அந்நினைப்பையே அடைந்தேன். இருபக்கமும் பச்சைக்குன்றுகள் வந்துகொண்டே இருந்தன. மலைமடுக்களுக்குள் இருந்து பறவைகளின் ஒலி. அந்தக்குன்றுகளை தாண்டி காடுகள் விரிந்து ஒரிசா வரைச் செல்லும் என்றார் சர்மா. பச்சைநிறம் அளிக்கும் மன எழுச்சிக்கு அளவே இல்லை. நம்முள் உறங்கும் தொன்மையான குரங்கு ஒன்று அதில் ஆழ்ந்து அமர்கிறது.

மணல்மேடு

படகை நிறுத்திய இடத்தில் குளிக்க இறங்கி விட்டோம். சமதானி பயங்கரமாக கத்தி மேலே வா என்றார். ஏன் என்று கேட்டோம். படகின் மறுபக்கம் வந்து குளிக்கும்படிச் சொன்னார். அங்கே வந்தபின்னர்தான் அதைக் கவனித்தோம். அந்த இடத்தில் நதியின் மீது செல்லும் நுரைக்குமிழிகளும் சருகுகளும் ஒரு கிலோமீட்டர் அகலம் கொண்ட மாபெரும் சுழலாக சுழித்துக்கொண்டிருந்தன. அந்தச்சுழியின் ஒரு நுனியில் மாட்டிக்கொண்டால் நம் கரங்களை விட பல்லாயிரம் மடங்கு வலிமை கொண்ட நீர்வேகம் மையம் நோக்கிக் கொண்டு செல்லும். எந்த நீச்சல்வீரனும் தப்ப முடியாது. அந்த சுழலின் கணக்குகள் தெரிந்த ஒருவர் ஒருவேளை நீந்தக்கூடும்.

சமதானியிடம் அரங்கசாமி இங்கே எல்லாருமே பயங்கரமான நீச்சல் வீரர்கள் என்றார். நீச்சல் தெரிந்தாலும் தப்பமுடியாது என்றார் சமதானி. மற்றவர்கள் காப்பாற்றுவார்கள் என்றார் அரங்கசாமி. சரி, என் மகனை சுழலில் விழச்சொல்கிறேன், காப்பாற்றச்சொல்லுங்கள் பார்ப்போம் என்றார். அரங்கசாமி ‘கொல்றார் சார்’ என்று திரும்பிவிட்டார்.


நடுவிலிருப்பர் சமதானி

அந்த நாள் முழுக்க குளியல்தான். படகில் ஓய்வு. மணல் கண்ட இடத்தில் குளியல். நாள்முழுக்க தூறல் இருந்துகொண்டிருந்தமையால் மேலே செல்ல முடியவில்லை. இசை பற்றியும் இலக்கியம் பற்றியும் பேசிக்கொண்டோம். மீண்டும் குளித்தோம். மழையில் குளிப்பதென்பது ஓர் அபாரமான அனுபவம். நாளெல்லாம் ஈரத்திலேயே இருந்துகொண்டிருப்பதும் அப்படித்தான்.

இன்பக்கவிஞர் யுவன்

நெடுந்தூரத்திற்கு இருபக்கமும் வெறும் காடுதான். ஊர்களே இல்லை. காடும் ஆறும் மட்டும் ஒருவரை ஒருவர் அறிந்து அமைதியில் நிற்கும் இடம் அது. மலைகளைப்பார்த்துக்கொண்டு அமர்ந்திருப்பதே தியானநிலையை உருவாக்கியது. சபரி நதி கோதையில் சங்கமிக்கும் ஸ்ரீராம்கிரி முனைக்குசென்றபோது மதியமாகிவிட்டிருந்தது. ஒரு பெரிய ஆறு இன்னொன்றுடன் கலக்குமிடத்தில் நீரின் அலைகள் ஒன்றுடன் ஒன்று மோதிச்சுழலும். ஆனால் கோதாவரியின் வேகம் காரணமாக எதுவும் தெரியவில்லை

’ஏந்திவிடய்யா’

அதுதான் எங்கள் எல்லை. அங்கிருந்து திரும்பினோம். இம்முறை நீரோட்டம் வழியாகவே வந்ததனால் வேகம் அதிகம். மணல் மேடுகளில் இறங்கி பார்த்துவிட்டு மீண்டும் படகில் ஏறி மீண்டும் மணல்மேடுகளை தேடினோம். மனிதக்கால் படாதவை போலத் தோன்றிய வெண்மணல் விரிவுகள். சிறு குழந்தையின் கன்னங்கள் போல மாசுமருவற்ற பொன்மணல் கதுப்புகள். மீண்டும் நானும் வினோதும் ஓடிப்பார்த்தோம். பரவாயில்லை, இளமை மிச்சமிருக்கிறது என்று தோன்றியது

மீண்டும் மீண்டும் குளியல்

இன்னொரு இடத்தில் குளிப்பதென முடிவெடுத்தோம். அங்கே படகு போகாது என்றார் சமதானி. ஏன் போனால் என்ன, பணம் கொடுக்கிறோமே போகவேண்டும் என்றார் சர்மா. சரி என்று அவர் படகை அங்கே கொண்டு சென்றார். சர்ர் என்று மணலில் செருகி நின்றுவிட்டது. இயந்திரம் ஓட தள்ளுவான் சுழல ஆரம்பித்தன். ஐந்துபேரும் இறங்கி தள்ளியும் படகு நகரவில்லை. கடைசியில் அத்தனைபேரும் இறங்கி தள்ள ஆரம்பித்தோம். ‘ஏந்திவிடய்யா தள்ளி விடய்யா’ என்று கூவியபடி முழங்கால் அளவு நீரில் நின்று தள்ளினோம்.

’கோதாவரிக்கு ஜே ’

கூவி உந்தி சமதானியின் ஆணைக்கு ஏற்ப பலவகைகளில் படகை அசைத்து அசைத்து ஓட்டத்துக்கு கொண்டுசெல்ல ஒருமணிநேரம் தள்ல வேண்டியிருந்தது. ஆனால் உற்சாகமான அனுபவம். அத்தனைபேரும் சிரித்துக்கொண்டே இருந்தார்கள். படகு நகரவில்லை என்றால் அன்றைய பொழுதுக்கு என்ன செய்வதென யாரும் யோசிக்கவில்லை.

அந்த இடம் குளியலுக்கு ஏற்றது. இடுப்பளவு ஆழம். அழகான மணல். நீந்தி குதித்து குளித்துக்கொண்டிருந்தோம். சமதானியும் நிம்மதியாக படகில் இருந்துவிட்டார். அவரது மகன் மட்டும் குடையுடன் இடுப்பளவு ஆழத்தில் நின்று எங்களைக் கண்காணித்தார். மீண்டும் படகில் ஏறி சூடான டீ குடித்தோம். ஒருமணிநேரத்தில் அடுத்த குளியலிடத்தை கண்டுகொண்டோம். குளிக்கத்தான் வேண்டுமா என்றார் சமதானி. ஆமாம் என்று சொன்னதும் ‘நானும் இம்மாதிரி பைத்தியங்களை பார்த்ததே இல்லை’ என்றார்

காப்டன்

அங்கே ஓட்டம் அதிகம். ஆழமில்லை. இருட்டு ஏறுவதுவரை குளித்தோம். கொஞ்சம் நடுக்க ஆரம்பித்தது. படகில் ஏறியதுமே இரவுணவு. இம்முறை நான் தயிருடன் திருப்தி அடைந்தேன். பின்நவீனத்துவச் சிக்கல் தாங்க முடியவில்லை. இரவில் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்தது. அறையில் சூழ்ந்து அமர்ந்துகொண்டு பொதுவாகப் பேசிக்கொண்டோம். மனக்கொந்தளிப்பை தாங்க முடியாமல் மாத்திரைகள் எடுக்கும் நிலைவரை யாரேனும் சென்றிருக்கிறார்களா, அந்த அனுபவங்கள் என்ன என்று கேட்டேன். ஒவ்வொருவராக அந்த அனுபவங்களைச் சொன்னார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொருவகையில் உக்கிரமாக இருந்தன.


இரவு

இரவு பன்னிரண்டுமணிக்கு தூங்கினோம். காலை மூன்றரை மணிக்கு எழுந்து கரையிறங்கி அங்கே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வேனில் ஏறி ராஜமுந்திரிக்குக் கிளம்பினோம். சமதானியை கட்டிப்பிடித்து ஆயிரம் ரூபாய் அளித்தேன். அவரைப்போல செய்யும்வேலையில் அபாரமான ஈடுபாடுகொண்ட மனிதர்கள் எந்த சமூகத்துக்கும் பெரும் செல்வங்கள்.

கோதையின் மடியில்

ராஜமுந்திரியில் ஏழுமணிக்கு எங்களுக்கு ரயில். அது மாலை ஐந்து மணிக்கு சென்னையை அடையும். மாலை ஏழரைக்கு எனக்கும் ரவிக்கும் ரயில். ஆனால் கொரமெண்டல் எக்ஸ்பிரஸ் வந்ததே இரண்டு மணிநேரம் தாமதமாக. அது கிளம்பி பல இடங்களில் பொறுமையாக நின்று சென்றது. நாகர்கோயில் ரயிலை விடப்போகிறேன் என்று உறுதியாயிற்று. தனசேகர் போனிலேயே பேருந்து இடம்போட்டுக்கொடுத்தார்

ரயிலில் ராமச்சந்திர சர்மாவும் யுவனும் ஜி.என்.பியின் இசையைப்பற்றிப் பேசிக்கொண்டார்கள். நான் இன்றைய குறியியல்-மொழியியல் அணுகுமுறை எப்படி இசை,ஓவியம், இலக்கியம் அனைத்தையும் ஒரே வகையில் குறிகள் மற்றும் குறியீடுகளாகக் கண்டு விளக்க முயல்கிறது என்று பேசினேன். சென்னையை ஏழரை மணிக்கு அடைந்தோம்

கிருஷ்ணன் உற்சாகமாக ’ரயில் போச்சா?’ என்றார். ‘ஒருத்தருக்கு ரயில் மிஸ்ஸாறது நல்லது. மத்தவங்களுக்கு நல்லவேளை நம்ம ரயில் மிஸ்ஸாகலைன்னு சந்தோஷமா இருக்கும்’ என்று விளக்கினார். நான் தனசேகர் ரவி மூவரும் கோயம்பேடுவந்து பஸ்பிடித்தோம். சாதாரண பஸ். நின்று நின்று மறுநாள் காலை பத்து மணிக்கு நாகர்கோயில் வந்தது

கிருஷ்ணனை கூப்பிட்டேன். ‘சார் ஒரு தப்பு நடந்துபோச்சு’ என்றார். சர்மாவும் அவரும் இரவு பத்துமணிக்கு ரயில் என நினைத்து சாவகாசமாகச் சென்று சாப்பிட்டுவிட்டு ஓட்டல் வாசலில் அமர்ந்து பேசிவிட்டு ரயில்நிலையம் வந்தார்களாம். ரயில் ஒன்பது மணிக்கு. கிருஷ்ணனிடம் போன் இல்லை. சர்மாவின் போன் அணைக்கப் பட்டிருந்தது.ரயில் சென்று விட்டது. ‘பரவாயில்லை. அதுகூட ஜாலியாத்தான் இருந்தது’ என்றார் சற்றும் மனம்தளராத கிருஷ்ணன்

மேலும் படங்கள் ஒளித்துணுக்குகள் : கோதாவரி பயணம் – படங்கள்,வீடியோக்கள்

[முற்றும்]


கோதாவரி பயணம் பற்றி சிறில் அலெக்ஸ்

முந்தைய கட்டுரைகோதையின் மடியில் 3
அடுத்த கட்டுரைபின்தொடரும் நிழலின்குரல்-கடிதம்