ஒழுக்கப்பார்வையும் கலையும்

pon1
பொன் சுந்தர ராசு [நன்றி பொன் சுந்தர ராசு இணையதளம்]

தமிழகத்தில் 1960-70களில் எழுதிய எழுத்தாளர்களில் நா.பார்த்தசாரதி ஒருமுக்கியமான ஆளுமையாக இருந்தார். இன்றைய வாசகன் நா.பாவின் படைப்புகளைப் படிக்கும்போது அவருடைய புகழுக்குக் காரணம் அறியாமல் திகைக்கக் கூடும். அவருடைய பெரும்பாலான படைப்புகள் மிக எளிமையான நேரடிநடையில் சொல்லப்பட்டிருக்கும். கதையின் வாழ்க்கைக்களமோ, கதைமாந்தரின் சமூக அடையாளங்களோ, சிறப்பான தன்னியல்புகளோ கதைகளில் இருக்காது. அவை மராட்டிய எழுத்தாளர் வி.எஸ்.காண்டேகரின் லட்சியவாத படைப்புகளின் வழி வந்தவை.

ஒரு லட்சியவாத கருத்தை மட்டுமே முன்வைக்கக்கூடியவை அவ்வகை எழுத்துக்கள். அவை அக்கருத்துக்கு உரிய ஒரு தருணத்தை கண்டடைகின்றன. எளிமையாக நாடகப்படுத்தி அக்கருத்தை நேரடியாக வெளிப்படுத்தி முடிகின்றன. கதைகளின் இறுதியில் பெரும்பாலும் யாரோ யாரிடமோ கண்ணீர் மல்க மன்னிப்புக் கோருவார்கள். காலில் விழுவார்கள். யாரோ யாரையோ புரிந்துகொண்டு நிறைவடைவார்கள்.

இத்தகைய கதைகளுக்கு இன்று எந்த மதிப்பும் இல்லை என்றாலும் இப்போதும் இவை ஏராளமாக எழுதப்படுகின்றன. எழுபதுகள் வரை இக்கதைகளுக்கு ஏன் அத்தனை பெரிய செல்வாக்கு இருந்தது என்று யோசிப்பவர்களுக்கு ஒன்று தெரியும். அது ஒருவகையான பண்பாட்டு மாற்றத்தின் காலம். முந்தைய நிலப்பிரபுத்துவகால விழுமியங்களிலிருந்து நவீன முதலாளித்துவ விழுமியங்களை நோக்கி தமிழ்ச்சமூகம் தன்னை உடைத்து உருமாற்றிக் கொண்டிருந்த பொழுது.

ஆகவே பெரும்பாலான கதைகளின் உள்ளடக்கம் ஒரு பழமையான மதிப்பீடு ஒன்றிலிருந்து ஒரு புதிய மதிப்பீடு ஒன்றுக்கு கடந்துவரும் பயணமாக இருக்கும். அல்லது சீர்குலைந்த ஒரு சமகால விழுமியத்தை முன்வைத்து அதற்கு மாற்றாக தொன்று தொட்டே இருக்கக்கூடிய ஒரு விழுமியத்தை சொல்லக் கூடியதாக இருக்கும். விழுமியங்களின் உருமாற்றம் என்ற ஒற்றை வரியில் இந்த அத்தனை கதைகளையும் வரையறுத்துவிட முடியும்.

அகிலன், நா.பா இருவரும் இக்காலகட்டத்தின் நாயகர்கள். இன்று அகிலன் கதைகளில் அநேகமாக எவையுமே நினைவுகூரப்படுவதில்லை. நா.பாவின் கதைகளைப்பற்றி சென்ற முப்பதாண்டுகளில் தமிழிலக்கிய விமர்சனச் சூழலில் எவரேனும் எங்கேனும் ஒரு வரியேனும் பேசி நான் கேட்டதில்லை. அக்கதைகளை இன்று திரும்பிப் பார்க்கையில் அவற்றின் கலைமதிப்பு நமக்கு பெரிதாகத் தோன்றாது. உணர்வுரீதியாகவும் அவை நம்மை வந்தடையா. ஆயினும் அவை பேசிய அந்த விழுமியங்களின் மாற்றத்தை ஒட்டி இன்றைய சூழலில் நின்றுகொண்டு நிறைய அவதானிப்புகளை நிகழ்த்த முடியுமென்று தோன்றுகிறது.

அதாவது எப்படி தமிழ்ச்சமூகம் தன்னை ஒரு பொது விவாதம் மூலம் மாற்றிக் கொண்டது என்று அவற்றை வைத்து சொல்ல முடியும். அந்தப் பொது விவாதம் பலவகையான இடக்கரடக்கல்கள் நிறைந்தது. எந்த கூரிய விமர்சனங்களும் இல்லாமலேயே அந்த விழுமிய மாற்றத்தை அது செய்து கொண்டது. உதாரணமாக நா.பா அல்லது அகிலனின் ஆண் பெண் உறவு பற்றிய கதைகள் எவற்றிலும் அந்த ஆணும் பெண்ணும் எந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என்பது இருப்பதில்லை. அந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள சமூக பின்புலமே இருப்பதில்லை. அவை எந்த மக்களையும் குறிப்பாகச் சீண்டக்கூடாது என்பதில் அவர்கள் கவனமாக இருந்தனர்.

பெரும்பாலும் அக்கதாபாத்திரங்கள் ஆணும் பெண்ணுமாக மட்டுமாக இருக்கும். அவர்கள் வாழும் சூழல் ஆசிரியரால் செயற்கையாக கட்டமைக்கப்பட்டதாக இருக்கும். இது சரி, இது தவறு என்பதற்கு அப்பால் சென்று இப்படி பார்க்கலாமே, இதுதான் சிறந்ததாக இருக்ககூடுமோ என்ற அளவிலே அந்தக் கதைகள் நின்றுவிடும்.

அவை வெகுஜன தளத்திலே எழுதப்பட்ட கதைகள். வெகுஜன ஏற்பு அவற்றுக்குக் கட்டாயம். ஆகவே அவை நுணுக்கமான வாசகப் பின்னூட்டம் வழியாக மெல்லமெல்ல உருமாற்றிக்கொண்டு தங்களை உருவாக்கிக் கொண்டவை. வாசகர்கள் அத்தகைய கதைகளை விரும்பியிருக்கிறார்கள். தங்கள் விழுமியங்களை மறுபரிசீலனை செய்யவும் தங்களை மறுகட்டமைப்பு செய்யவும் அவர்கள் ஆசைப்படும்போதே, தங்கள் சமூகப்பின்புலத்தையோ மதத்தையோ விமர்சனம் செய்ய அவர்கள் ஒப்பவில்லை. தங்கள் பழமையை விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. இன்றியமையாத புதுமையை மட்டும் வசதிகருதி ஏற்க விரும்புகிறார்கள்.

அதாவது தங்கி வாழ்வதற்கு ஏற்ற சுயநலம் சார்ந்த மாறுதல்களை மட்டுமே தங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திக் கொள்ள விரும்புகிறார்கள். அவை என்ன என்றுதான் அகிலனிடமும் நா.பாவிடமும் கேட்கிறார்கள். அகிலனும் நா.பாவும் அவற்றை புரிந்துகொண்டு அந்த தளத்திற்குள் நின்று எழுதியதால்தான் அவர்கள் அத்தனை புகழ் பெற்றார்கள்.

அவர்களைத் தொடர்ந்து வந்த ஜெயகாந்தன் எழுத்தாளனின் ஆண்மையுடன் அவ்வாசகர்களின் அனைத்து பாவனைகளையும் மோதி உடைத்தார். அவர்களை அறைந்து திருத்த முயன்றார். மிக மென்மையான சில பாலியல் – குடும்பஉறவு மாற்றங்களை மட்டுமே பேசிக் கொண்டிருந்த நா.பாவுக்கும் அகிலனுக்கும் மாறாக ஜெயகாந்தன் ஒட்டுமொத்தமான மாற்றத்திற்காகவும் ஆன்மீகமான பரிணாமத்துக்காகவும் அறைகூவினார். இந்த ஒரு அம்சமே ஜெயகாந்தனை பிறரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது என்று தோன்றுகிறது.

மலேசிய, இலங்கை, சிங்கப்பூர்ச் சூழலில் ஜெயகாந்தனின் செல்வாக்குள்ள படைப்பாளிகள் பலர் உள்ளனர். அகிலன் மற்றும் நா.பாவுடைய செல்வாக்கு இங்கு இருந்துள்ளது. ஆனால் அவர்கள் ஒரு மரபாக முன்னெழவில்லை. அகிலன் , நா.பாவின் மரபில் வந்த எழுத்தாளர் என்று பொன்.சுந்தரராசுவை கணிக்கிறேன். 1981-ல் அவரது சிறுகதைத் தொகுதி அகிலனுடைய முன்னுரையுடன் வெளிவந்துள்ளது. சிங்கப்பூர் மலாய் இதழ்களில் தொடர்ந்து எழுதியவர் பொன்.சுந்தரராசு. தொடர்ந்து அவர் படைப்புகளை எழுதினாரா என்பது இப்போது தெரியவில்லை.

முதல் கதை ‘என்னதான் செய்வது’. நா.பாவும், அகிலனும் சிங்கப்பூர் சூழலில் எழுதியிருந்தால் என்னவகையான இக்கட்டுகளைச் சந்தித்திருப்பார்கள் என்பதை எனக்குக் காட்டியது. கதாநாயகன் விருந்துக்குச் செல்கிறான். அங்கொரு அழகிய இளநங்கையை கண்டு உடனே அவளுடன் இடை கோத்து நடனமிடுகிறான். பார்த்த முதல் நாளிலேயே அவனுடைய தோளில் முகம் புதைத்து அவனிடம் ரகசியம் பேசும் அளவுக்கு அவளால் நெருங்கவும் முடிகிறது. அது அங்கே எவராலும் தவறாக பார்க்கப்படாத ஒரு வாழ்க்கைச் சூழல் அங்கு இருக்கிறது.

ஆனால் அவளை மணந்து கொண்ட முதலிரவில் அவள் தான் ஏற்கனவே ஒருவனை காதலித்திருப்பதாகச் சொல்கிறாள். அது கதாநாயகனை உடைந்து சிதற வைக்கிறது. பொன்.சுந்தரராசு அதற்கு பயன்படுத்தியிருக்கும் வார்த்தைகள் முக்கியமானவை. ”எவ்வளவு பெரிய ஏமாற்றம்! அவன் மட்டுமே அருந்த வேண்டிய பால் !அவன் மட்டுமே முகர வேண்டிய மலர் !அவன் மட்டுமே மீட்ட வேண்டிய வீணை! ஏற்கனவே எச்சிலாக்கப்பட்டு முகரப்பட்டு மீட்டித் தந்தியறுந்த அவலநிலை.

உண்மையின் இதுதான் கதையின் முடிச்சாக தென்படுகிறது. புலம்பெயர்ந்து ஓர் அதிநவீன நாகரிகச் சூழலில் வாழும் தமிழனின் உள்ளே இருக்கும் கண்ணகிச் சீக்கு இங்கு வெளிப்படுகிறது. விருந்தில் சந்தித்து இடைவளைத்து நடனமாடும் பெண் தான்மட்டுமே முகரவேண்டிய மலராகவும் இருந்தாகவேண்டும் என்கிற அவனுடைய பிடிவாதம் . ஆனால் அது சாத்தியமும் அல்ல. ஆகவே ஓர் இரவு முழுக்க துன்புற்றுவிட்டு அவளுக்கு அவன் ‘வாழ்வு கொடுக்கிறான்’. அவளை ‘இனிமேல் நீ எனக்கு மட்டுமே சொந்தம்’ என சத்தியம் செய்யச்சொல்லிவிட்டு ஏற்றுக் கொள்கிறான். கதைமுடிவில் என்னதான் செய்வது என்று ஆசிரியர் கேட்கும் கேள்வி புன்னகை வரவழைக்கிறது.

இந்தக் கதையில் ‘என்னை மன்னிப்பீர்களா? எனக்கு வாழ்வு கொடுப்பீர்களா?’ என்று கதாநாயகி கேட்பது இன்னும் சுவாரசியமானது. சந்தித்த முதல் நாளே ஒருவனுடன் இடை வளைத்து நடனமாடக்கூடிய பெண்தான் அவள். ஏற்கனவே ஒரு காதல் அனுபவம் உள்ளவளும் கூட. ஆனால் களங்கப்பட்டுவிட்ட ஒருத்தியாகவே அவள் தன்னை எண்ணிக் கொள்கிறாள். அவன் ஏற்றுக்கொள்ளமாட்டான் என்பதனால் தன் காதலை மறைக்கிறாள். நாண் அறுந்த தந்தி என அவளை எண்ணும் அவன் அவளை ஏற்றுக்கொண்டாலும் அவ்வுறவு என்னவாக இருக்கும் என்றே எண்ணத்தோன்றுகிறது.

முற்றிலும் மாறுபட்ட ஒரு அந்நிய வாழ்க்கைச்சூழலில் தமிழ்ச்சமூகம் தங்களை பலவகையாகத் தகவமைத்துக் கொள்வதைக் காட்டும் இந்தக் கதை ஒரு கலைப்படைப்பாக முக்கியத்துவம் உடையதல்ல. நேரடியான உரத்தகுரலும் செயற்கையான கதைத்தருணங்களும் இதன் கலைமதிப்பைக் குறைக்கின்றன. ஆனால் ஒரு காலகட்டத்தின் வாழ்க்கையைக் காட்டுவது இது. இத்தொகுதியின் கதைகள் அனைத்தையுமே இப்படி வரையறைசெய்யலாம்

பொன்.சுந்தரராசுவின் பல கதைகளில் இந்தப் பிரச்னை ஓடிக் கொண்டிருக்கிறது. தெரிந்தும் தெரியாததும் கதை இதற்கிணையான ஒன்று. பெண்கள் தங்கள் கணவர்களைத் தாங்களே தேர்ந்தெடுக்கும் ஒரு காலகட்டம் வந்திருக்கிறது, உடலழகை பார்த்து அவர்கள் ஆண்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று சலித்துக்கொள்கிறது இக்கதை. வீட்டில் அமர்ந்து பாலியல் விஷயங்களை சகஜமாக பேசிக் கொள்ளும் அண்ணன் தம்பிகளின் குடும்பம். அந்த வீட்டுக்கு வாழ்க்கைப்பட்டு வந்த வசந்தி அவர்கள் அனைவரையும் ஒழுக்கம் தவறியவர்களாகவே பார்க்கிறாள். அருவருப்பு கொள்கிறாள்.

வசந்தியின் பார்வையில் இந்தக் கதை சொல்லப்படுவதால் உண்மையில் அவர்கள் ஒழுக்கம் தவறியவர்களா என்ற கேள்வி கதைக்கு வெளியே இருந்து கொண்டு தான் இருக்கிறது. தன் தங்கையை கணவனின் தம்பி திருமணம் செய்யும்போது அவள் அதைக் கடுமையாக எதிர்க்கிறாள். ஆனால் தங்கையின் கட்டாயத்துக்கு ஏற்ப அந்த திருமணம் நடக்கிறது. அதை ஒருவழியாக ஏற்றுக்கொள்ளும்போது அடுத்த தங்கை இன்னொரு தம்பியை திருமணம் செய்யும் முடிவை எடுக்கிறாள். இந்தப் பொட்டைக்கழுதைகளுக்குகாதல் பண்ணத்தான் தெரியுதே ஒழிய கண்ணியமான ஒருத்தனைத் தேர்ந்தெடுக்கத் தெரியுதா? என்று வசந்தி அங்கலாய்ப்பதில் இக்கதை முடிகிறது.

சாதாரணமாக பெண்களின் தன்முடிவுகள் தவறாகவே இருக்கின்றன என்று ஆசிரியர் கருதுவது போல இக்கதை அமைந்திருந்தாலும் கூட வேறொரு காலகட்டத்தைச் சேர்ந்த பெண்மணி புதுயுகப்பெண்மணிகளைப் பார்த்து அடையும் பதற்றமே இக்கதைகளில் உள்ளது என்று தோண்றுகிறது.

பொன்.சுந்தரராசின் பெரும்பாலான கதைகள் ஒழுக்கம் சார்ந்த இக்கட்டுகளை பேசுவனவாகவே இருக்கின்றன. இருநூறு வெள்ளி என்றொரு கதை. நடுத்தர வயதில் வெள்ளைக்கார மாதுவுடன் உடலுறவு கொள்வதற்காக இருநூறு வெள்ளியை இயல்பாகச் செலவழிக்கும் ஒருவர் சற்றே கஞ்சப்புத்தியுடையவர். தமிழர்களுக்குரிய பொதுத் தேவை ஒன்றுக்காக இருநூறு வெள்ளி கொடுப்பதை அவர் எப்படிப்பார்க்கிறார், அவருடைய மகன் அதை எப்படி பார்க்கிறான் என்பதுதான் கதை. அன்றைய ஒரு மனநிலைக்கீற்று கடந்துசெல்வதனாலேயே நேரடியான பிரச்சாரமாகிய இக்கதை என்னைக் கவர்ந்தது.ஸ்பைரோஸ் என்னும் கப்பல் விபத்துக்குள்ளான தகவல் இக்கதைக்குள் வருகிறது. அந்த எளிமையான தகவல் சட்டென்று ஒரு காலச்சித்திரம் தருவதை ஆச்சரியத்துடன் வாசித்தேன்.

இத்தொகுதியின் ஒரே நல்ல கதை என்று நான் எண்ணுவது பட்டுச் சேலை. அகிலனும் அதையே சிறந்த கதையாக சொல்கிறார். அகிலன் சொல்லும் அதே காரணத்துக்காகவே நான் நல்ல கதை என்று சொல்வேன். ஐநூறு வெள்ளிக்கு ஒரு பட்டுப்புடவை திருமணத்துக்கு எடுக்கவேண்டுமென்று ஆசைப்படும் ஒரு குடும்பம், அது படும் வேதனைகள், அந்தப்பெண்ணின் கனவு என கதை செல்கிறது. அதை உணர்ந்துகொண்டு அவளுக்கு மாப்பிள்ளையே ஐநூறு வெள்ளி பணம் கொடுத்து புடவையை எடுக்க வைக்கிறார்.

அந்தக் காலத்தில் எழுதப்பட்ட கதைகள் பலவற்றில் பெண்ணின் உள்ளத்தை புரிந்து கொள்ள கணவன் இவ்வாறு செய்வது இறுதித் திருப்பமாக வந்திருக்கிறது. ஆனால் இக்கதையில் நான் இதன் நுட்பமாக பார்ப்பது முற்றிலும் மாறுபட்ட சிங்கைச் சூழலிலும் கூட பெண் அதே பட்டுப்புடவையைத்தான் ஆசைப்படுகிறாள் என்ற தகவல் தான்.

ஒரு சிறந்த சிறுகதையை இத்தொகுதியில் என்னால் காணமுடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் நா.பார்த்தசாரதியும் அகிலனுமே என் நோக்கில் சிறந்த கதை எதையும் எழுதவில்லை. அவர்களைப்போலவே இத்தொகுதியின் எல்லாக் கதைகளுமே எளிமையான முடிப்புகளும் எளிமையான தீர்வுகளும் கொண்டவை. ஆனால் இவை சிங்கப்பூரின் ஒரு காலகட்டத்தைக் காட்டுகின்றன. சமூக சீர்திருத்த நோக்கமும் மனிதாபிமானத்தை வலியுறுத்தும் தன்மையும் கொண்ட கதைகள். அவ்வகையில் அவை ஒரு வரலாற்று முக்கியத்துவம் உடையவை.

[என்னதான் செய்வது? பொன் சுந்தரராசு]

பொன் சுந்தர ராசுவின் வலைத்தளம்

முந்தைய கட்டுரைசிங்கப்பூர் கடிதங்கள் 4
அடுத்த கட்டுரைகாந்தியம் தோற்கும் இடங்கள் உரை – வீடியோ