அறியாமை இறக்குமதி

Head against the Wall

 

சிங்கப்பூர் இலக்கியத்தின் சங்கடமான ஒரு நடைமுறைச் சிக்கல் அதிகம் பேசப்படுவதில்லை. இங்கு அரசாங்கத்தின் அறிவுறுத்தலால் கட்டாயத்தமிழ்க் கல்வி உண்டு. ஆனால் கல்வியின் சிறுபகுதிதான் அது. சிங்கையின் தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் வகுப்புகளில் வாரம் மூன்று மணி நேரம் மட்டுமே கற்பிக்கப்படுகின்ற தமிழ்க் கல்விக்கு அப்பால் தமிழுடன் தொடர்பற்றவர்கள். இல்லத்திலும் தமிழ் பேசுபவர்கள் மிகக் குறைவு. ஆகவே சிங்கப்பூர்ப் பின்னணியில் இருந்து தமிழ் இலக்கிய வாசிப்போ அது சார்ந்த முயற்சிகளோ அரிதாகவே நிகழ்கின்றன.

சிங்கை இலக்கிய முன்னோடிகளான புதுமைதாசன், இளங்கண்ணன், இராம கண்ணபிரான்  போன்றவர்களைக்கூட அவர்கள் பாடப்புத்தகங்களிலன்றி பெரிதாகத் தெரிந்திருப்பதில்லை. ஆகவே அவர்களில் அரிதாகச் சிலர் எழுதவரும்போதுகூட நடை பலவீனமானதாக இருக்கிறது. நடை என்பது வாழ்வின் அத்தனைதருணங்களிலும் புழங்கும் மொழியிலிருந்து திரண்டு உருவாவது. அச்சூழல் அங்கில்லை. கதைக்கருக்கள் என்பவை வாழ்க்கையின் அனைத்துத் தருணங்களிலும் இருந்து எழுவன. மொழி சமையலறைக்குள் மட்டும் புழங்கும்போது அந்த வாய்ப்பும் குறுகிவிடுகிறது.

ஆனால் கலை என்பது தன் புற எல்லைகளையே சாதகமான வாய்ப்புகளாக ஆக்கிக்கொள்வது. உதாரணமாக அமெரிக்காவில் குடியேறிய யூதர்கள் தாங்கள் மட்டுமே வீட்டில் பேசிக்கொள்ளும் இட்டிஷ் மொழியில் மகத்தான ஆக்கங்களை உருவாக்கியிருக்கிறார்கள்.என் மனம் கவர்ந்த ஐசக் பாஷவிஸ் சிங்கர் அவ்விலக்கியத்தின் உச்சம்.

சிங்கப்பூரில் உள்ள அந்த இடைவெளியை நிரப்புவது தமிழகத்தில் இருந்து பணிநிமித்தமோ அல்லது திருமணமாகியோ வரும் புதியகுடியேறிகள் எழுதும் இலக்கியம். சிங்கப்பூரிலிருந்து எழுதப்படுவதனாலேயே இவை சிங்கப்பூர் இலக்கியங்கள் என்று அறியப்படுகின்றன. இவற்றில் கணிசமானவை மிக ஆரம்பகட்ட எழுத்துக்கள். தமிழக வணிக இதழ்களை மட்டும் அறிந்தவர்களால் உருவாக்கப்படுபவை. இவற்றின் பெருக்கம் சிங்கை இலக்கியத்துக்கு மேலும் சுமையை அளிக்கிறது. இங்கு பிறந்து வாழும்  மக்கள் எழுதுவது இவர்களால் முழுமையாக மறைக்கப்பட்டுவிடுமோ என்ற ஐயம் ஏற்படுகிறது.

ஆகவே சிங்கப்பூர் இலக்கியவிமர்சனத்தில் அவ்வெழுத்து சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவரால் எழுதப்பட்டதா இல்லை தமிழகத்தில் பிறந்து வளர்ந்து அங்கே குடியேறியவரால் எழுதப்பட்டதா என்ற பிரிவினை விமர்சகனால் செய்யபடவேண்டும். அங்கே பிறந்து வளர்ந்தவர்களுக்குச் சலுகை காட்டப்படவேண்டும் என்றோ இங்கிருந்து குடியேறியவர்களின் எழுத்தை குறைத்துப்பார்க்கவேண்டும் என்றோ சொல்லவரவில்லை. இலக்கியத்திற்குல் அப்படி குறைத்தலுக்கோ கூட்டலுக்கோ இடமில்லை. இலக்கியப்படைப்பு படைப்பாளியின் புற அடையாளத்தால் நிலைகொள்வது அல்ல, அவன் உள்ளம் நாடு இன மொழியடையாளங்களுக்கு அப்பாற்பட்டது. நான் சொல்வது பண்பாட்டுரீதியாக ஓர் அடையாளப்படுத்தல் நிகழ்த்தப்படவேண்டும் என்று மட்டுமே

ஏனென்றால் தமிழ் காதில் விழுந்துகொண்டே இருக்கும் சூழலில் பிறந்து வளர்ந்து தமிழ் வணிகஎழுத்துக்களை அறிமுகம் செய்துகொண்டவர்கள் சரளமாகத் தமிழ் எழுதிவிடமுடியும். அதைச் சிங்கைச்சூழலில் வைத்து ஒரு மேலதிகத் தகுதியாகக் கொண்டு அவர்கள் எளிய புகழைப் பெற்றுவிடமுடியும். அதை விமர்சகன் சாதக அம்சமாகக் கருத வேண்டியதில்லை. அவர்களின் படைப்பின் இலக்கியத்தன்மை மட்டுமே கருத்தில்கொள்ளப்படவேண்டும். அங்கு பிறந்துவளர்ந்தவர்கள் அங்கிருந்து உருவாக்கும் மொழியும் அழகியலும் தமிழுக்கு புதியகொடையாக எழுந்து வரக்கூடும். நான் சிங்கை இலக்கியத்தில் தேடுவது அதைத்தான்.

சரியான உதாரணமாகச் சொல்லவேண்டும் என்றால் ஷோபா சக்தியை குறிப்பிடலாம். அவரது மொழியும் கலைத்தன்மையும் முற்றிலும் யாழ்ப்பாணத்தன்மை கொண்டவை. அது தமிழ்தான். ஆனால் இருபத்தைந்து வயதில் இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்குக் குடியேறிய ஒருவர் அதை எழுதிவிடமுடியாது.அது பேச்சுமொழியில் ஊறி ஒரு படைப்பாளியின் அகத்தில் கனிந்து உருவாகும் ஒன்று.

சிங்கப்பூர் இலக்கியத்தில்கூட அத்தகைய அழகியல் உருவாகி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உதாரணம் சித்துராஜ் பொன்ராஜின் கதைகள் . ஆனால் அதற்கு  இந்தியாவிலிருந்து வந்தவர்கள் எழுதும் சிங்கப்பூர்ப்பின்னணி மட்டுமே கொண்ட எழுத்திலிருந்து அவ்வெழுத்துக்களைப் பிரித்துப்பார்க்கவேண்டியுள்ளது. கூடவே அங்கேயே பிறந்துவளர்ந்த கமலாதேவி அரவிந்தன், சூர்யரத்னா போன்றவர்கள் உருவாக்கும் எந்த முயற்சியும் இல்லாத அசட்டு எழுத்துக்களை புறமொதுக்கி எது தங்கள் மொழியும் வடிவும் என அடையாளம் காணும் கண் அங்குள்ள வாசகர்களுக்கும் விமர்சகர்களுக்கும் அமையவும்வேண்டும்.

தமிழகத்திலிருந்து சென்று அங்குள்ள சூழலை மாசுபடுத்தும் எழுத்துக்கு மிகச்சிறந்த உதாரணம் மலர்விழி இளங்கோவனின் சொல்வதெல்லாம் பெண்மை என்ற சிறுகதைத்தொகுதி. தமிழகத்தில் இந்தக் கதைகள் எழுதப்பட்டிருந்தால் மிக மிகத் தரமற்ற சிறுகதைகளை வெளியிடும் ராணி, தேவி, தினமலர் வாரமலர் போன்ற இதழ்கள் கூட இவற்றை பொருட்படுத்தியிருக்கமாட்டா.  மலர்விழி இளங்கோவனுக்கு தமிழ் இலக்கியத்தில் மட்டுமல்ல தமிழ் வணிக இலக்கியத்தில் கூட எந்த வாசிப்பும் இல்லையென்று தெரிகிறது.

ஒரு கதை ஏன் எழுதப்படவேண்டும், ஒரு கதையினுடைய வடிவம் என்ன என்பது கூட தெரியாமல் சிங்கப்பூர் வந்த பிறகு இப்படி ஒரு வாய்ப்பு இங்கு இருப்பதை அறிந்துகொண்டு   ‘எழுதிப்பார்த்த’ கதைகள் இவை. எழுதக்கூடாது, பிரசுரிக்கக்கூடாது என்றில்லை. ஆனால் அவை வைக்கவேண்டிய இடத்தில் வைக்கப்படவேண்டும். ஆனால் இந்த நூலிலேயே திருமதி மலர்விழி இளங்கோவன் பெற்ற பத்துக்கு மேற்பட்ட விருதுகளின் பட்டியல் உள்ளது.

வாசகன் என்ற முறையில் இந்தக் கதைகள் பெரும் எரிச்சலைக் கிளப்புகின்றன. ஏனெனில் இந்தக் கதைகளுக்குள் உள்ள மனநிலை என்பது வாசகன் ஒன்றுமறியாத மூடன் என்ற முன்முடிவு. ஒரு கதையை அவனுக்காக எழுதும்போது அவனிடம் என்னதான் சொல்ல வேண்டுமென்று விரும்புகிறீர்கள், அவன் இதை எப்படி புரிந்துகொள்ள வேண்டுமென்று எண்ணுகிறீர்கள் என்ற கேள்வி நமக்குள் எழுகிறது.

விமர்சகன் என்ற வகையில் உருவாவது அதைவிட பெரிய எரிச்சல். மேடையில் ஏறிப் பாடும் ஒருவன் குறைந்த பட்சம் குளியலறையில் பாடும் தகுதியையாவது கொண்டிருக்க வேண்டும் அல்லவா? ஓவியர் என்று ஒரு கண்காட்சி நடத்துபவர் பிசிறின்றி ஒரு வட்டம் போடவாவது தெரிந்திருக்க வேண்டுமல்லவா? கதை எழுத வேண்டுமென்றால் மட்டும் எந்த அடிப்படைத் தகுதியும் தேவையில்லை என்ற முடிவுக்கு இவர்கள் எப்படி வருகிறார்கள்?

இந்த தொகுதியில் உள்ள அனைத்து கதைகளுமே மிக ஆரம்பநிலை ஆக்கங்கள். தலைப்புகள் கூட வளர்த்த கடா, அனிச்ச மலர்கள், தன்வினை, அன்பின் வழியது என அக்கதையின் மையக்கருத்தை ஓங்கிச் சொல்லும் பாடப்புத்தகத்தன்மை கொண்டவை. எல்லாக் கதைகளும் ஒரு வசனத்துடன் ஆரம்பிக்கின்றன. “அம்மா என்ற மகிழ்ச்சித் துள்ளலுடன் வீட்டுக்குள் நுழைந்தான் அவன். அவனுக்கிருந்த மனநிலையில் தாயை அப்படியே தூக்கி தட்டாமாலை சுற்றினான்.’’ என்று ஆரம்பிக்கின்றது ஒரு கதை. வெளிநாட்டுக்குச் சென்று குடியேறும் மகனுக்கு தாய்நாட்டின் பெருமைகளைப் பற்றி படிக்காத அம்மா ஒரு பெரிய நல்லுபதேசத்தை சொல்லும்போது கதை முடிகிறது. கதாபாத்திர கட்டமைப்பிலோ சூழல் சித்தரிப்பிலோ ஒரு அடிப்படை பயிற்சி கூட தெரியவில்லை

பெரும்பாலான கதைகள் சம்மந்தமில்லாமல் எங்கோ ஆரம்பிக்கின்றன. ’’இப்ப எழுப்பினாதான் இன்னும் அரைமணி நேரத்திலாவது எந்திரிப்பா எழுப்பிவிடுங்க அபியை’’ என்று கணவனிடம் கூறியபடி தன் மகளுக்குப்பிடித்த ஆப்பமும் தேங்காய் பாலும் தயாரிக்க ஆரம்பித்தாள் புவனா என்று ஆரம்பிக்கும் கதை சம்மந்தமே இல்லாமல் ஒரு கிழவி நன்கொடைச் சீட்டை தூக்கி வீசும் இடத்தில் முடிகிறது.

கதைகளின் ஊடாக செல்லும்போது மலர்விழி இளங்கோவன் எளிமையான அன்றாட வாழ்க்கைச் சித்திரங்களை எடுத்து அதில் மேலும் அன்றாட கருத்துக்களைச் சேர்த்து திறனற்ற உரைநடையில் சுருட்டி வைப்பதைத்தான் காண முடிகிறது. ஒரு சிறுகதையில் இருக்கக்கூடாதென்று இலக்கியவடிவம் அறிந்தவர்கள் சொல்லும் அனைத்தும் ஒன்றுவிடாமல் அடங்கிய சிறுகதைகள் என்று இவற்றைச் சொல்ல முடியும்.

சம்பந்தமே இல்லாத செயற்கையான உரையாடலைத் தொடர்ந்து சில நிகழ்ச்சிகளைச் சுருக்கிச் சொல்லி இறுதியில் எல்லாருக்கும் தெரிந்த ஒரு நற்கருத்தை புகுத்தி இவை முடிக்கப்படுகின்றன. கதைகளின் உரையாடல்கள் விவரணைகள் அனைத்திலுமே தமிழின் நாலாந்தர வார இதழ்களில் வரும் கதைகளில் தென்படும் அனைத்து தேய்வழக்குகளும் ஒன்றுவிடாமல் அடுக்கப்பட்டுள்ளன.

மலர்விழி இளங்கோவனுக்கு விமர்சகனாக நான் சொல்ல ஒன்றுதான் இருக்கிறது. இலக்கியம் என்பது மிகப்பெரிய ஒரு மானுட இயக்கம். வாழ்வின் நுண்மைகளைக் கண்டு சொல்வதும் கனவுகளை நிறுத்திச் செல்லவும் முயன்று கொண்டிருக்கும் ஒரு தளம் அது.  உலகின் மாபெரும் படைப்பாளிகளுக்கு நிகரான எழுத்தாளர்கள் எழுதிய, எழுதிக் கொண்டிருக்கும் மொழி தமிழ். நானும் ஒரு எழுத்தாளன் என இதில் எழுதவரும்போது தயவு செய்து கொஞ்சமேனும் இலக்கியத்தை அறிமுகம் செய்து கொள்ளுங்கள். தயவு செய்து கொஞ்சமேனும் பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒரு ஊருக்குச் செல்லும்போது அந்த ஊரைப்பற்றிய ஐந்து பக்க அளவிலேனும் ஒரு வழிகாட்டி நூலைப்படிக்காமல் இருக்க மாட்டீர்கள். இலக்கியம் என்னும் உலகுக்குள் நுழையும்போது அதற்குரிய ஒரு பத்துப்பக்கத்தையாவது படித்துப்பார்த்தால் உங்களுக்கு என்ன குறைந்துவிடுகிறது?

[சொல்வதெல்லாம் பெண்மை. மலர்விழி இளங்கோவன் ]

 

முந்தைய கட்டுரைசிங்கப்பூர் விமர்சனம் குறித்த அறிவுரைகள்
அடுத்த கட்டுரைசிங்கப்பூர் கடிதங்கள் 4